Published:Updated:

`பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' - எடப்பாடியின் அதிரடிக்குப் பின்னால் அக்கறையா... அரசியலா?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதாவின் இடத்தை நோக்கிய எடப்பாடி பழனிசாமியின் இந்த நகர்வுகளைப் புரிந்துகொள்ள சில ஆண்டுகள் நாம் பின்னோக்கிச் செல்லவேண்டும்...

நவம்பர் 1 - தமிழ்நாடு தின அறிவிப்பு, பொங்கலுக்கு ஒரு ரேஷன் அட்டைக்கு இரண்டாயிரம் ரூபாய், ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கோரிக்கை, எட்டு ஆண்டுகளாகக் கிடப்பில் கிடந்த கலைச்செம்மல் விருதுகள் வழங்கியது, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து, காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு... எனப் பல அதிரடியான அறிவிப்புகளால் தமிழக மக்களையும் தனது அரசியல் எதிரிகளையும் ஒருங்கே திணறடித்து வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த அறிவிப்புகளில் பெரும்பாலானவை மக்கள்நலன் சார்ந்தவை என்றாலும் அதற்குப் பின்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆடும் அரசியல் பகடை ஆட்டம் வியப்பானது... அதை யாரிடமிருந்து அவர் கற்றுக்கொண்டார், அதை எப்படிச் செயல்படுத்துகிறார் என்பதையெல்லாம் ஆராய்ந்தால் ஒரே ஒரு விடைதான் நமக்குக் கிடைக்கும்...அந்த விடை ஜெ.ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் இடத்தை நோக்கிய எடப்பாடி பழனிசாமியின் இந்த நகர்வுகளைப் புரிந்துகொள்ள சில ஆண்டுகள் நாம் பின்னோக்கிச் செல்லவேண்டும்...

ஜெயலலிதா
ஜெயலலிதா

``இலவசங்கள்தான் நாட்டைச் சீரழிக்கின்றன, மக்களைச் சோம்பேறிகளாக்கி உழைக்க விடாமல் செய்கின்றன''

இரண்டாயிரத்தின் ஆரம்பங்களில் தமிழகத்தில் இப்படியாகச் சில குரல்கள் ஒலித்தன. குறிப்பாக 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் உள்ள இலவச அறிவிப்புகள் குறித்து உயர் / மத்திய தர மக்களின் எண்ணவோட்டங்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருந்தன. இப்போதும் இலவசங்கள் குறித்த விமர்சனங்களும் அதன் நியாயமான நோக்கங்களும் விவாதிக்கப் பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்புவரை, முன்னாள் முதல்வரும், அ.தி.மு.கவின் நிரந்தரப்பொதுச்செயலாளருமாகச் சொல்லப்பட்ட ஜெயலலிதாவின் எண்ணமும் அப்படித்தான் இருந்தது. 2006 தேர்தல் முடிவுகள் பேரிடியாக அந்த எண்ணத்தை மாற்றியது.

அந்தத் தேர்தலில் கதாநாயகனாக இருந்தது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைதான். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, விவசாயிகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி எனப் பல இலவச அறிவிப்புகள் வாக்குகளை அள்ளிக்கொடுத்தன. அப்போது சுதாரித்தவர்தான் ஜெயலலிதா. அதுவரை இலவசங்களையும் இதுபோன்ற நலத்திட்டங்களிலும் பெரிதாக கவனம் செலுத்தாத அவர், 2006 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டார். மக்களின் மனவோட்டம் என்னவாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் அந்த வித்தையை கருணாநிதியிடம் இருந்துதான் அவர் கற்றுக்கொண்டார். பின்னாளில் கருணாநிதியை வெல்லவும் அதே ஆயுதத்தைப் பயன்படுத்தினார். அதில் வெற்றியும் கண்டார். 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், இலவச மிக்ஸி, ஃபேன், முதியோர் உதவித்தொகை உயர்வு, திருமண உதவித்தொகை உயர்வு எனப் பல அறிவிப்புகளை வெளியிட்டது தி.மு.க.

இலவச கலர் டிவி வழங்கும் கருணாநிதி
இலவச கலர் டிவி வழங்கும் கருணாநிதி

ஆனால், 2006-ம் ஆண்டு முதலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மாதிரி இந்த முறை செய்யவில்லை ஜெயலலிதா. தி.மு.கவின் அறிக்கைக்காகக் காத்திருந்து, அதைவிடக் கூடுதலாக, இலவச மிக்ஸி, ஃபேன் மட்டுமல்லாது கிரைண்டர், மாணவர்களுக்கு லேப்டாப் எனப் பல அதிரடி அறிவிப்புகளை அள்ளிவீசினார். அது தேர்தலில் அவருக்குக் கைகொடுக்கவும் செய்தது. தொடர்ச்சியாக அந்த யுக்தியைத் தேர்தல் அல்லாத காலங்களிலும் பயன்படுத்திவந்தார். கருணாநிதியிடமிருந்து ஜெயலலிதா கற்றுக்கொண்ட வித்தையை, அ.தி.மு.க `அம்மா' விடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அ.தி.மு.க ஆட்சியின்மீது கடுமையான புகார்கள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது. டார்க்கெட் ஃபிக்ஸ் செய்து ஒவ்வொரு துறையும் படுபயங்கரமாகச் சுரண்டப்படுகின்றன. நூறு கோடியில் தொடங்கி 2000 கோடி, 2500 கோடி ரூபாய் என எண்களிலும், துறைரீதியாக ஊழலின் வழிமுறையிலும்தான் வித்தியாசம் இருக்கிறதே தவிர ஊழல் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. தங்களுக்குச் சாதகமானவர்களுக்கு டெண்டர் கொடுக்கவில்லை என ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்து, அவரை விருப்பஓய்வு பெற்று வீட்டுக்கு அனுப்புவது எனத் தமிழகம் இதுவரை கண்டிராத பல பகீர்க் காட்சிகள் இப்போது அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இவை எதுவுமே தமிழக மக்களிடம் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. ஒரே காரணம் இதுபோன்ற அறிவிப்புகள்தான். ஜெயலலிதாவிடம் கற்றுக்கொண்ட அதே யுக்திதான். அவ்வப்போது மக்களின் மனதில் நிற்க, சில இலவச அறிவிப்புகள், நலத்திட்ட அறிவிப்புகள் இருந்தால் போதும், மக்கள் அனைத்தையும் மறந்துவிட்டு வாக்களித்து விடுவார்கள் என்கிற அதே நம்பிக்கையில்தான் அரசியலில் அசராமல் பயணித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி.

ஊழல் புகார்
ஊழல் புகார்

மக்களைக் கவர இலவசத் திட்டங்கள் சரி... போராட்டம் ஆர்ப்பாட்டம் எனக் கொடி பிடிப்பவர்களை எப்படி அடக்குவது... அதற்கும் அதே ஜெயலலிதா பாணிதான். காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப மாறிக்கொள்வதுதான் அந்த பாணி.

ஈழப்போராட்டம் குறித்துப்பேசும்போது, `அங்கே போராடிய தலைவரைத் தூக்கிலிடவேண்டும்’ என்கிற அளவுக்குக் கடுமையான எதிர்கொள்கையைக் கடைப்பிடித்து வந்த ஜெயலலிதா, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சட்டமன்றத்திலேயே தீர்மானம் போட்டார். இலங்கைக்கு தமிழகத்தில் பொருளாதாரத்தடை விதித்தார். ஒருகாலத்தில் `போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்று மனிதாபிமானம்(!) காட்டிய ஜெயலலிதாவின் குரல், `ராஜபக்‌ஷே ஒரு கொலைக்குற்றவாளி, இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்’ என்று தேர்தல் மேடைகளில் ஓங்கி ஒலித்தது. சட்டமன்றத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.

ஈழத்தமிழர்களின் மீது ஜெயலலிதாவுக்கு ஏன் திடீர் கரிசனம்... 2009 காலகட்டத்தில் இறுதிப்போரில் தமிழ் மக்கள் அடைந்த துயரம், அங்கே போராடிய புலித்தலைவரின் மரணம் என்று வெளியான செய்திகள் காரணங்களாக இருந்திருக்கலாம்... ஆனால் அவற்றையெல்லாம்விட முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அது ஈழத்தமிழ் உணர்வாளர்கள் எல்லாம் 2009-க்குப் பிறகு கருணாநிதிக்கு எதிராகத் திரண்டதுதான். அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தார் ஜெயலலிதா. கருணாநிதிக்கு எதிரான அந்த எதிர்ப்பு 2016 தேர்தலிலும் தொடரவேண்டும் என நினைத்தார் ஜெயலலிதா. எழுவர் விடுதலை ஆகட்டும், காவிரி விவகாரமாகட்டும் மக்கள் நலன், எதிர்பார்ப்பு என்பதையும் தாண்டி கருணாநிதிக்கு எதிரான அஸ்திரமான அதைப் பயன்படுத்திக்கொண்டார்.

தமிழ்நாடு நாள் விழா
தமிழ்நாடு நாள் விழா

இன்று எடப்பாடியும் அதே பாணியைத்தான் கடைப்பிடிக்கிறார்... நவம்பர் ஒன்று அறிவிப்பின் மூலம், 2009-க்குப் பிறகு எழுந்த தமிழர்களின் எழுச்சியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். 11 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தஞ்சைப் பெரியகோயில் குடமுழுக்கையும் நடத்திக் காண்பித்து விட்டார். அதிலும், இதுவரை தமிழ் ஒலிக்காத இடங்களிலும் தமிழை ஒலிக்கச்செய்த பெருமையும் அவர் ஆட்சியைச் சென்றடைந்துவிட்டது. ஹைட்ரோகார்பன் திட்ட அறிவிப்பின் மூலம் சூழலியல் போராளிகள் போராட்ட இயக்கங்களின் ஆதரவைத் தனதாக்கிக் கொண்டுள்ளார். எழுவர் விடுதலை விவகாரத்திலும் நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்து வருகிறார் என்கிற செய்திகளும் வெளியாகி வருகின்றன. பொதுவாக இதுபோன்ற இயக்கங்கள், உணர்வாளர்கள் மிகச்சிறுபான்மையினராக இருக்கலாம். வாக்கு எண்ணிக்கையில் பார்த்தால் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகக் கூட இருக்கலாம். ஆனால் இவர்கள் எழுப்பும் சத்தம் அதனால் உண்டாகும் தாக்கம் என்பது மிகப்பெரியது. அதுவும் சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் அது அதிக தாக்கத்தை உண்டாகும். அப்படி ஒன்று எள்ளளவுக்குக் கூட தனது அரசியல் வெற்றியைப் பாதித்துவிடக்கூடாது என்பதில் மிகத்தெளிவாகவே இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் இதுபோன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறார்.

மக்களைக் கவர நலத்திட்ட உதவிகள் தருவதும் இலவச அறிவிப்புகள் வெளியிடுவதும், போராடும் இயக்கங்களைக் கவர அவர்களின் நெடுநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதும் மட்டும் தேர்தலில் வெற்றிபெற போதுமான காரணிகளாக இருக்கமுடியாது. தமிழக அரசியலில் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியமான அம்சம் கூட்டணிதான். மிகமுக்கியமாக தங்களின் பக்கம் வலுவான கூட்டணி இல்லாவிட்டாலும் எதிரிகளின் பக்கம் வலுவான கூட்டணி உருவாகிவிடக் கூடாது என்பதில் தெளிவாகவே இருப்பார்கள் தமிழக அரசியல்வாதிகள். தமிழக அரசியல் வரவாற்றை ஒருமுறை திருப்பிப் பார்த்தால் கடந்த முப்பது ஆண்டுகளில் தி.மு.க வலுவான கூட்டணி அமைத்த தேர்தல்களில் எல்லாம் மெகா வெற்றியைப் பெற்றிருக்கிறது. தவறிய தேர்தலில் எல்லாம் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. ஆனால், அ.தி.மு.கவுக்கு அப்படியல்ல, தனித்து நின்றாலும் தி.மு.க எதிர்ப்பு வாக்குகளையும் தங்களின் கட்சி வாக்குவங்கியின் மூலமாகவே வெற்றிக்கனியைச் சுவைத்திருக்கிறது. ஆனால், அந்தத் தேர்தல்களில் எல்லாம் தி.மு.க, கூட்டணி எக்ஸ்பிரஸைத் தவற விட்டிருக்கும். 2001 சட்டமன்றத் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றை நாம் உதாரணமாகச் சொல்லமுடியும். ஆனால், இந்தமுறை வலுவான கூட்டணியோடு இருக்கிறது தி.மு.க.

ராமதாஸ் - எடப்பாடி
ராமதாஸ் - எடப்பாடி

அந்தக் கூட்டணி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதனால்தான், பா.ம.க விஷயத்தில் மிகக்கவனமாக நடந்து கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி. எக்காரணம் கொண்டும் பா.ம.கவை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். இன்னும் சில கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்கவும் முயற்சிகளை எடுத்துவருகிறார்.

இப்படி அதிரடி அறிவிப்புகள் மூலமாகவும் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் வாயிலாகவும் மிகச்சிறப்பான காய் நகர்த்தல்கள் மூலமாக தனக்கென ஒரு இமேஜை உருவாக்கி தனிப்பெரும் தலைவனாவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் எடப்பாடி.

ரஜினிக்கு எதிராகத் தீர்மானம்... விண்ணைப் பிளந்த பறை இசை... கோவையைக் குலுங்கவைத்த நீலச்சட்டைப் பேரணி!

ஆனால், எடப்பாடியின் எல்லா அரசியல் நகர்வுகளையும் பி.ஜே.பி தலைமை பார்த்துக்கொண்டுதானிருக்கிறது. அவர் தங்களின் வளையத்துக்கும் இருக்கும்வரை, அவரை ஒரு தலைவராக, தமிழகத்தின் முதல்வராகத் தொடர அனுமதிப்பதில் பி.ஜே.பி தலைவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு மாபெரும் ஆளுமைகளின் மறைவுக்குப் பின், தமிழகத்தில் தங்களுடைய சிந்தாந்தத்துக்கு ஒத்துப்போகாத ஒரு தலைவன் உருவாகிவிட அனுமதிக்கக்கூடாது என்பதில் பி.ஜே.பி தலைமை தெளிவாகவே இருக்கிறது. ரஜினியை உருவாக்குவதிலும், உருமாற்றுவதிலும் அதன் பங்களிப்பை இப்படித்தான் அரசியல் விமர்சகர்கள் கணிக்கிறார்கள்.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

அப்படியிருக்கையில் தனியொரு தலைவனாக உருவெடுப்பதற்கு எடப்பாடி எடுக்கும் முயற்சிகளை மோடியும் அமித் ஷாவும் எந்தளவுக்கு ரசிப்பார்கள் என்பது கேள்விக்குறி. தன்னுடைய அறிவிப்புகளாலும், விலையில்லாத் திட்டங்களாலும் மக்களின் மனதில் எந்தளவுக்கு எடப்பாடி இடம் பிடித்தாலும் அவருடைய தலைக்கு மேல் ஊழல் வழக்குகள், சொத்துக்குவிப்பு எனப் பல கத்திகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் எதை எப்போது எப்படி இறக்க வேண்டுமென்பது பி.ஜே.பிக்கு கைவந்த கலை என்பதை அ.தி.மு.க.வினருமே உணர்ந்திருக்கிறார்கள். ஒரே ஒரு ரெய்டு, இரண்டு வழக்குகள், மூன்று ஆதாரங்களை பொதுவெளியில் போட்டு எடப்பாடி என்கிற இமேஜை ஒரே நாளில் துவைத்துத்தொங்கப்போடும் வித்தை, பி.ஜே.பி.க்கு நன்றாகவே தெரியும். அப்படி ஏதாவது நிகழ்ந்தால் எடப்பாடிக்கு ஆதரவாக தெருவில் இறங்கிப்போராடுவதற்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதற்கு இப்போது விடை தெரியாது. கருணாநிதி, ஜெயலலிதாவைப் போல ஒரேயோர் அறிக்கையிலும் பேட்டியிலும் தமிழகத்தைத் தகிக்கவிடும் அளவுக்கு எடப்பாடிக்கு எந்த வசீகரமும் ஈர்ப்பும் கிடையாது. அப்படியொரு பிணைப்பைத் தமிழக மக்களிடம் அவர் ஏற்படுத்தவுமில்லை. ஆக...எடப்பாடி ஒரு தலைவனாக முழு முயற்சி எடுக்கலாம். ஆவது சாதாரண விஷயமில்லை!

அடுத்த கட்டுரைக்கு