Published:Updated:

`எப்டி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!' உள்ளாட்சி ரிசல்ட் - தேய்பிறையாகும் தே.மு.தி.க

உள்ளாட்சித் தேர்தலுக்காக அ.தி.மு.க.,வை வலிந்து ஆதரித்துக் கொண்டிருந்தது தே.மு.தி.க. மக்கள் எதிர்ப்புத் திட்டங்களில்கூட எடப்பாடி ஆட்சிக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்தது. இப்போது உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க பெற்ற இடங்கள் மிகவும் சொற்பமே.

தே.மு.தி.க
தே.மு.தி.க ( Illustration by Hasifkhan )

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்திருந்த தே.மு.தி.க, உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணியைத் தொடர்ந்தது. கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க தனித்துப் போட்டியிட்டது. அப்போது, தே.மு.தி.க பெற்ற இடங்களை ஒப்பிடும்போது, இப்போது கூட்டணியில் வெற்றி பெற்ற இடங்கள் மிகவும் குறைவு.

2019 நாடாளுமன்றத் தேர்தலில்...
2019 நாடாளுமன்றத் தேர்தலில்...

மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவியில், இப்போது மூன்று இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது தே.மு.தி.க. ஆனால், 2011-ம் ஆண்டு தனித்துப் போட்டியிட்டு, 5 இடங்களைப் பிடித்தது. இதே நிலைதான் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவியும். அ.தி.மு.க கூட்டணியில் இப்போது 96 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களைப் பிடித்திருக்கிறது தே.மு.தி.க. ஆனால், 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, 339 இடங்களை ஜெயித்தது.

மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஆகிய இரண்டு பதவிகளையும் சேர்த்துக் கணக்கிட்டால், தற்போது 99 இடங்களில் வென்றிருக்கிறது தே.மு.தி.க. ஆனால், 2011 உள்ளாட்சித் தேர்தலில் இந்த இரண்டு பதவிகளுக்கும் சேர்த்து 344 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. தனித்துப் போட்டியிட்டிருந்தால், ஒற்றை இலக்கத்தில்கூட முடிவுகள் வந்திருக்க வாய்ப்பு உண்டு.

விஜயகாந்துடன் பன்னீர்செல்வம்
விஜயகாந்துடன் பன்னீர்செல்வம்

2006 சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, விஜயகாந்த் எம்.எல்.ஏ ஆனதுடன், எடுத்த எடுப்பிலேயே 8.45 சதவிகித வாக்குகளை வாங்கி, அரசியல் அரங்கைத் திரும்பிப்பார்க்க வைத்தது தே.மு.தி.க. அதன்பிறகு வந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தன் செல்வாக்கைக் காட்டியது. 40 தொகுதிகளில் தனித்துக் களமிறங்கி, பெரும்பாலான தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகளை வாங்கிக் குவித்தது. 31.26 லட்சம் ஓட்டுகளை அள்ளி 10.08 சதவிகித வாக்குகளைப் பெற்றது.

பாடம் கற்றுத் தந்த உள்ளாட்சித் தேர்தல்... பாதையை மாற்றுமா நாம் தமிழர் கட்சி?

2011 சட்டசபைத் தேர்தலில், தே.மு.தி.க-வுடன் கூட்டணி வைத்தது அ.தி.மு.க. 41 தொகுதிகளைப் பெற்று, 29 இடங்களில் வென்றது தே.மு.தி.க. எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் விஜயகாந்த். ஆனால், அதைத் தக்கவைத்துக்கொள்ளத் தவறினார். தே.மு.தி.க எம்.எல்.ஏ-கள், `தொகுதிப் பிரச்னைக்காக' (!) அம்மாவைப் பார்த்தார்கள். அடுத்தடுத்து தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள் முகாம் மாற, கட்சியும் கரைய ஆரம்பித்தது. விஜயகாந்த்தை ஆளுங்கட்சியினர் பேச்சில் கிண்டல் அடிக்க... சட்டசபைக்கு மட்டம் போட்டார் கேப்டன். அமைச்சருக்கு நிகரான எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் பவரைக்கூட பயன்படுத்தாமல் உதாசீனப்படுத்தினார்.

முரசு
முரசு

தே.மு.தி.க. எம்.எல்.ஏ விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. ஆளும்கட்சியான அ.தி.மு-வின் சதிராட்டத்தில் கட்சியும் லேசாக ஆட்டம் காண ஆரம்பித்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் டிமாண்டு கூடியது. கடைசியில் பேரம் எல்லாம் முடிந்த பிறகு, பி.ஜே.பி கூட்டணிக்கு `ஓகே' என்றார். பி.ஜே.பி, ம.தி.மு.க, பா.ம.க கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து, 2014 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த விஜயகாந்த், ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. தே.மு.தி.க-வின் சரிவு இங்கே தொடங்கியது.

2016 சட்டசபைத் தேர்தலில், பி.ஜே.பி, தி.மு.க மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகள் விஜயகாந்த்தைத் தேடி படையெடுத்தன. கடைசியில், மக்கள்நலக் கூட்டணியும் தே.மு.தி.க-வும் கை கோத்துக்கொண்டன. 104 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒன்றில்கூட தே.மு.தி.க ஜெயிக்கவில்லை. 103 இடங்களில் டெபாசிட் இழந்தது. கிட்டத்தட்ட தே.மு.தி.க சரிந்தேபோனது. தனித்துப் போட்டியிட்டபோது, 10.08 சதவிகிதத்தைத் தொட்ட தே.மு.தி.க வாக்கு சதவிகிதம், கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது 2.39 ஆகக் குறைந்தது.

தே.மு.தி.க.
தே.மு.தி.க.

2019 நாடாளுமன்றத் தேர்தலில், பழைய மிதப்பில் அ.தி.மு.க -வுடன் கூட்டணி பேரம் பேசியது தே.மு.தி.க. ஆனால், நான்கு இடங்களுக்கு மேல் கிடைக்கவில்லை. தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வி அடைந்தபோது, தே.மு.தி.க-வுக்கு ஒரு தொகுதியில்கூட வெற்றி கிடைக்கவில்லை. அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலுக்காக அ.தி.மு.க.,வை வலிந்து ஆதரித்துக் கொண்டிருந்தது தே.மு.தி.க. மக்கள் எதிர்ப்புத் திட்டங்களில்கூட எடப்பாடி ஆட்சிக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்தது. இப்போது உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க பெற்ற இடங்கள் மிகவும் சொற்பமே. இப்படியாக, கிட்டத்தட்ட தேய்பிறையாகிக் கொண்டிருக்கிறது தே.மு.தி.க.