Published:Updated:

ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருப்பாரா செல்லூர் ராஜு?

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

``ஒரு பெண் நாப்கின் இல்லாம இருந்தாங்க...'' என செல்லூர் ராஜு சொன்ன மந்திரமும் வைகை அணையில் போட்ட தெர்மாக்கோல் எந்திரமும் ஏப்ரல் மாதத்தில் நடந்தவை. `சொல்லின் செல்வ'ராக முயற்சி செய்யும் செல்லூராரின் அதகளமும் ரணகளமும் இங்கே!

2002 ஆகஸ்ட் 29

தலைமைச் செயலகத்துக்கு வந்து, வழக்கமான பணிகளை மேற்கொள்கிறார் ஊரகத்தொழில்துறை அமைச்சர் வில்வநாதன். பதட்டத்தோடு வந்த பி.ஏ, அமைச்சரின் காதில் ``அம்மா உங்களை அமைச்சரவையிலிருந்து நீக்கிட்டாங்க சார்!'' எனச் சொல்ல... அதிர்ச்சியோடு தலையைக் குனிந்தபடியே காரில் ஏறி அவசரமாக வீட்டுக்குக் கிளம்பிப்போய்விடுகிறார் வில்வநாதன்.

ஜெயலலிதா அமைச்சரவையில் மந்திரிகள் மியூசிக்கல் சேர் ஆடுவது ஒன்றும் ஆச்சர்யமில்லை. ஆனால், வில்வநாதனின் பதவி பறிப்புக்குக் காரணம் விநோதமானது.

வில்வநாதன்
வில்வநாதன்

1965-ம் ஆண்டு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்தபோது, பிரதமராக இருந்தவர் லால்பகதூர் சாஸ்திரி. போர் நிதி திரட்டுவதற்காக நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த ஜெயலலிதாவும் பங்கேற்றார். லால்பகதூர் சாஸ்திரியிடம் பலரும் நிதி கொடுத்தார்கள். பலரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் ஜெயலலிதா, தான் அணிந்திருந்த தங்க நகைகள் அனைத்தையும் கழற்றி லால்பகதூர் சாஸ்திரியிடம் அளித்தார்.

லால்பகதூர் சாஸ்திரியிடம் நகையை கழற்றித் தரும் ஜெயலலிதா
லால்பகதூர் சாஸ்திரியிடம் நகையை கழற்றித் தரும் ஜெயலலிதா

தீவிர அ.தி.மு.க தொண்டர்கள் அனைவருக்கும் இந்த வரலாறு தெரியும். அ.தி.மு.க மேடைகளில் இந்த விஷயத்தைப் பேசாத பேச்சாளர்களே இருக்க முடியாது. லால்பகதூர் சாஸ்திரியிடம் ஜெயலலிதா நகைகளை கழற்றிக் கொடுக்கும் போட்டோ பிரபலம். இந்தச் செய்தியை அ.தி.மு.க மேடையில் பேசிய அமைச்சர் வில்வநாதன், ``அம்மா தாலியைக் கழற்றிக் கொடுத்தார்'' எனத் தவறாகச் சொல்லிவிட்டார். `செல்வி'யை `திருமதி'யாக்கிய விவகாரம் கார்டனுக்குப் போனது. அவ்வளவுதான். வில்வநாதனை `முன்னாள் அமைச்சர்' ஆக்கிவிட்டார் ஜெயலலிதா.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

இப்போது விஷயத்துக்கு வருவோம்.

கொரோனா தடுப்பு நிவாரணமாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் அளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜு, ``ரேஷன் கடை பணியாளர்களுக்கு நாப்கின், சானிடைசர் வழங்கப்பட்டுள்ளது. இங்கே ஒரு பெண் நாப்கின் இல்லாம இருந்தாங்க. கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ எனச் சொல்லி அதிர வைத்திருக்கிறார். மாஸ்க்கை நாப்கின் என மாற்றிச் சொன்ன செல்லூர் ராஜு, ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்திருந்தால் என்ன ஆகியிருப்பார் என்பது அடிமட்ட அ.தி.மு.க தொண்டனுக்குக்கூடத் தெரியும்.

``ஒரு பெண் நாப்கின் இல்லாம இருந்தாங்க...'' என செல்லூர் சொல்லிவிட்டு, அந்த இடத்தைவிட்டு நகர்ந்திருக்க முடியுமா? அப்படிச் சொல்வதற்கான தைரியம்கூட செல்லூர் ராஜு-க்கு வந்திருக்காது. ஜெயலலிதா தன் உயிரை இழந்து இரண்டு விஷயங்களை செல்லூர் ராஜு-க்காகச் செய்துவிட்டுப் போயிருக்கிறார். ஒன்று, அவருக்கு தைரியத்தைக் கொடுத்திருக்கிறார். இரண்டு, மந்திரி பதவியைக் காப்பாற்றியிருக்கிறார். ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த இரண்டும் செல்லூர் ராஜு-க்கு வாய்த்திருக்காது.

எடப்பாடி அமைச்சரவையை `மங்குனி மந்திரிசபை' என்று நெட்டிசன்கள் சட்டி இல்லாமலே வறுவறுவென்று வறுத்து எடுக்கிறார்கள். ஆனால், யார் எவ்வளவு உளறினாலும், ஊர் உலகமே கிண்டலடித்தாலும் மந்திரியாக மட்டும் தொடர்கிறார்கள். இந்த உளறலுக்கு எல்லாம் கட்டம் கட்டியிருந்தால், எடப்பாடி அமைச்சரவை பாதிக்கும் மேலே காலியாகியிருக்கும்.

`இம்சை அரசன் 23-ம் புலிகேசி'யில் வடிவேலு சொல்வதுபோல `மங்குனி மந்திரிகள் என்பதை மணிக்கொரு தடவை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள் அமைச்சர்கள். இதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் செல்லூர் ராஜுதான். வடிவேலுவால்கூட தர முடியாத அளவுக்கு பர்ஃபாமன்ஸ் செய்கிறார் செல்லூர் ராஜு.

தெர்மாக்கோல் செல்லூர் ராஜு
தெர்மாக்கோல் செல்லூர் ராஜு

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் உலர்ந்துபோயிருந்த மந்திரிகளின் உதடுகள் திறக்க ஆரம்பித்தன. அப்போது முதலில் திறந்தது செல்லூராரின் உதடுகள்தாம். ஜெயலலிதா இருந்தபோது பால் காவடி, பன்னீர் காவடி என அதிரிபுதிரி விஷயங்களை அரங்கேற்ற, பலரின் கவனத்தை ஈர்த்த செல்லூர் ராஜு, அரசு விழாக்களில் அளந்துதான் பேசுவார். ஜெயலலிதா இறந்த பிறகு சுதந்திரப் பறவை ஆகிவிட்டார்.

மாஸ்க்கிற்கு நாப்கின் என்று புதிய நாமகரணத்தை செல்லூர் ராஜு சூட்டியதும் இந்த ஏப்ரல் மாத துவக்கத்தில்தான். இதே ஏப்ரல் மாதத்தில்தான் அகிலமே வியக்கும் ஓர் அறிவியல் அற்புதத்தையும் அவர் நிகழ்த்திக்காட்டினார். வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாக்கோலை செல்லூர் ராஜு மிதக்க விட்டது இதே ஏப்ரல் மாதத்தில்தான்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

வைகை அணை தண்ணீரை தெர்மாக்கோல் போட்டு மூடியது 2017 ஏப்ரல் 22-ம் தேதி. அதாவது ஜெயலலிதா இறந்த நான்காவது மாதத்தில் இதை நிகழ்த்தினார். ``142 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்தக் கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதனால், அணைகளில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது'' என சொல்லி வேட்டியை மடித்துக்கட்டி தண்ணீர் மீது தெர்மாக்கோல் அட்டைகளை விட்டார். பிளான், அட்டர் ஃபிளாப் ஆனது. அணையின் தண்ணீர் மேல் மூடப்பட்ட தெர்மாக்கோல் அட்டைகள் அனைத்தும் கரை ஒதுங்கின.

இந்தத் திட்டத்துக்கு 10 லட்சம் ரூபாய் செலவானதாக அப்போது அதிகாரிகள் சொன்னார்கள். அந்த சம்பவத்துக்குப் பிறகு, செல்லூர் ராஜு-க்கு `தெர்மாக்கோல் ராஜு' என்றே நெட்டிசன்கள் பெயர் வைத்துவிட்டனர்.

ஆனால், இடையிடையே அரசியல் களத்தில் அவர் கொளுத்திப் போடும் சரவெடிகள் கவனம் ஈர்க்கவும் தவறியதில்லை. அவற்றில் சில...

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

``அரசியல் களத்தில் நகைச்சுவை நடிகராகிவிட்டார் கமல்'' என ஆகஸ்ட் மாதத்தில் சொன்னார் செல்லூர் ராஜு.

``தி.மு.க, ஸ்டாலினுடைய குடும்பக் கட்சியாகவே மாறிவிட்டது. இப்போது கனிமொழியைப் பேச அனுமதித்திருக்கிறார்கள். ஆனாலும் கனிமொழி சூதானமா இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மு.க. அழகிரி நிலைதான் அவருக்கும் ஏற்படும்'' என்றும் எச்சரித்தார். அழகிரி, கனிமொழி ஆதரவாளர்களே அதை ரசித்தார்கள்.

``தமிழக முதல்வரைக் கண்டு இயற்கை சீற்றங்களே அஞ்சுகின்றன'' என்று செல்லூர் ராஜு சொன்னதும்கூட, இவர்மீது ஈ.பி.எஸ். காட்டும் பரிவுக்குக் காரணமாக் இருக்கலாம்.

அணையை தெர்மாக்கோலால் மூடமுயன்று, ஊர் உலகமே நையாண்டி செய்தபோதும் கொஞ்சமும் கூச்சப்படாமல் ``மதுரையை சிட்னியாக்குவேன்... வீட்டு வாசலில் சாணம் தெளியுங்கள், டெங்கு கொசு வரவே வராது'' என அடுத்தடுத்து தன் அரசியல் வாக்குறுதிகளையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் சர்வதேசத்துக்கும் பறைசாற்றிக்கொண்டிருந்தார் செல்லூரார்.

டெங்கு வந்தபோது, செல்லூர் ராஜு சாணத்தைக் கொண்டுவந்தார். கொரோனாவுக்கு அடுத்து என்ன மருந்தைச் சொல்லப்போகிறார் என்று மலைப்போடு காத்திருக்கிறது மருத்துவ உலகம். அவர் போகும் இடங்களில் எல்லாம் மீடியா, ஆட்களைப் போட்டு வைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக கன்டென்ட் ஹிட் அடிக்கும் என்பதால்.

எடப்பாடியுடன்
எடப்பாடியுடன்

``மறுபடியும் நடிக்கப் போயிருங்க கமல். அதுதான் உங்களுக்கு சரிப்பட்டு வரும்'' என்று சொல்லிவிட்டு, ``கமல்ஹாசனுக்கு மூளையில் கோளாறு'' என்கிறார் செல்லூர் ராஜு. இப்படிச் சொல்லும் செல்லூர் ராஜுவின் மூளையை அறிவுசார்ந்த சொத்துரிமையாக்க வேண்டுமென்கிறார்கள் நெட்டிசன்கள்.

``விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்பதன் மூலம் அவர்களுக்கு ஒழுக்கம் கிடைக்கிறது. சிறுவயதில் நான் விளையாட்டு வீரர் என்பதால் இப்போது வரை ஒழுக்கத்துடன் இருக்கிறேன். ஒழுக்கத்திற்கு நான்தான் உதாரணம்'' என்று கடந்த ஜனவரி மாதம் மதுரையில் நடந்த விழா ஒன்றில் சொன்னார் செல்லூர் ராஜு.

உடலில் மட்டும் ஒழுக்கம் இருந்தால் போதுமா... வாய்க்கு வேண்டாமா அமைச்சரே?

அடுத்த கட்டுரைக்கு