Published:Updated:

``காங்கிரஸ் விலகிச் சென்றால் ஒரு நஷ்டமுமில்லை..!'' - துரைமுருகனின் கருத்து சரிதானா? - ஓர் அலசல்

இந்தமுறை காங்கிரஸுக்குக் குறைவான இடங்களையே ஒதுக்கவேண்டும் என முடிவு செய்த தி.மு.க, அதற்காகவே இவ்வளவு கடுமை காட்டியது. அதேநேரம் இந்தமுறை 60 இடங்களுக்கு மேல் தி.மு.கவிடம் கேட்டுப் பெறவேண்டும் என்கிற முடிவில் இருக்கிறது காங்கிரஸ் கட்சி.

கூட்டணி தர்மத்தை மீறி நடந்துகொண்டது தி.மு.க- கே.எஸ் அழகிரி (10.01.2020)

.

.

.

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை-கே.எஸ்.அழகிரி (18/01/2020)

.....

கே.எஸ்.அழகிரியின் இந்த இருவேறு கருத்துகளுக்கு இடைப்பட்ட காலத்தில், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்குள் மிகப்பெரிய யுத்தமே நடந்து ஓய்ந்திருக்கிறது. அதுவும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமை நேரில் அழைத்து எச்சரித்ததற்குப் பிறகே, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து சமாதானம் பேசி வந்திருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி.

ஸ்டாலின் - கே.எஸ்.அழகிரி
ஸ்டாலின் - கே.எஸ்.அழகிரி

இந்த யுத்தத்துக்குக் காரணம் என்ன?

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்களில் ஒன்றியக் கவுன்சிலர்களாக 132 பேரும் மாவட்டக் கவுன்சிலர்களாக 15 பேரும் வெற்றி பெற்றனர். அதைத் தொடர்ந்து, யூனியன் சேர்மன், மாவட்ட சேர்மன் பதவிகளை சில இடங்களில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்தது. குறைந்தபட்சம் துணைத் தலைவர் பதவிகளையாவது கிடைக்கும் என நினைத்தது. ஆனால், அதிகமான ஒன்றியக் கவுன்சிலர்களையும், மாவட்டக் கவுன்சிலர்களையும் வென்றெடுத்த தி.மு.க, ``நாங்கள் ஏன் காங்கிரஸுக்குப் பதவிகளைக் கொடுக்க வேண்டும்?'' என மறுத்துவிட்டது. இதுதான் தி.மு.க - காங்கிரஸுக்கு இடையிலான களேபரத்துக்கு முதற்புள்ளி. மறுபுறம்  தி.மு.க எளிதாக வெல்லவிருந்த ஒன்றியச் சேர்மன் பதவிகளை அ.தி.மு.க தட்டிப் பறித்தது. அதற்கு உதவியது காங்கிரஸ் கட்சி. இதனால் தி.மு.க தொண்டர்கள் கடும் கொந்தளிப்புக்கு ஆளானார்கள். `துரோக காங்கிரஸுக்கு, எதிரி பா.ஜ.க எவ்வளவோ மேல்' என்கிற பதிவுகளை எல்லாம் சமூக வலைதளங்களில் காணமுடிந்தது.

இந்தநிலையில்தான், ``27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியைக்கூட தி.மு.க எங்களுக்கு வழங்கவில்லை. கூட்டணி தர்மத்தை மீறி நடந்துகொண்டது'' எனக் காட்டமான அறிக்கை ஒன்றை சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியுடன் இணைந்து வெளியிட்டார், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி. தி.மு.க எளிதாக வெல்ல வேண்டிய ஒன்றியச் சேர்மன் இடங்களை அ.தி.மு.க வெற்றிபெற உதவியதோடு மட்டுமல்லாமல், இப்படியோர் அறிக்கையும் வெளிவர, தி.மு.க தொண்டர்கள் மட்டுமல்லாது, தி.மு.க தலைவர் ஸ்டாலினையும் அது கோபமுறச் செய்தது. அதைத் தொடர்ந்து, தி.மு.க சார்பிலும் எதிர்வினைகள் வரத் தொடங்கின. முதல்கட்டமாக, குடியுரிமை திருத்த சட்டத் திருத்தத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் குறித்து விவாதிக்க, காங்கிரஸ் கட்சி டெல்லியில் கூட்டிய கூட்டத்தைப் புறக்கணித்தது தி.மு.க.

டி.ஆர்.பாலு - ஸ்டாலின் - துரைமுருகன்
டி.ஆர்.பாலு - ஸ்டாலின் - துரைமுருகன்

``எங்களுக்கு எதிராக வெளிப்படையாக அறிக்கை வெளியிடும் காங்கிரஸ் கூட்டியுள்ள கூட்டத்தில் நாங்கள் எப்படிக் கலந்துகொள்ள முடியும்'' என மிகக் காட்டமாக பத்திரிகையாளர்களிடம் கேட்டார் தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு. ``எங்களை இழந்தால் தி.மு.கவுக்குத்தான் நஷ்டம். எங்களிடம் 5 சதவிகித வாக்கு வங்கி இருக்கிறது. எங்கள் அளவுக்கு பலமுள்ள வேறொரு கட்சி தி.மு.க கூட்டணியில் இல்லை'' என காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அறிக்கை விடுக்க, ``காங்கிரஸ் விலகிச் சென்றால் எங்களுக்கு ஒரு நஷ்டமுமில்லை'' என வேலூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பதிலடி கொடுத்தார் தி.மு.க பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகன்.

அவரின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோகன் குமாரமங்கலம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இதேநிலை நீடித்தால் கண்டிப்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தி.மு.க கூட்டணியிலிருந்து கழற்றிவிடப்படுவோம் என அறிந்த காங்கிரஸ் தலைமை, உடனடியாக கே.எஸ்.அழகிரியை அழைத்துப் பேசியதன் விளைவாக நேற்று தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து சமாதான நடவடிக்கையில் இறங்கினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஒருவார காலத்தில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அதிகமாக விவாதித்தது காங்கிரஸ் கட்சியினுடைய வாக்குவங்கியைப் பற்றித்தான். 

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கிதான் என்ன?

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியால் லாபமடைவது இரண்டில் எந்தக் கட்சி?

உடனடியாக டெல்லி தலைமை அழைத்துப் பேசக் காரணம்தான் என்ன?

துரைமுருகன்
துரைமுருகன்

தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் நடந்த பொதுத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகளைப் பற்றிப் பார்ப்போம்.

முதலாவதாக, 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்... தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்தது காங்கிரஸ் கட்சி. 63 இடங்களில் போட்டியிட்டு வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. வாக்குவங்கி 9.3 சதவிகிதமாகக் கணக்கிடப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சி. 17 மாநகராட்சி உறுப்பினர்கள், 166 நகராட்சி உறுப்பினர்கள் உட்பட 743 இடங்களைக் கைப்பற்றியது. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை 5.71 சதவிகித்ததைப் பெற்றது. தி.முக கூட்டணியில் இருக்கும்போது பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட குறைவான அளவே பெற்றது.

அதேவேளை, மாநகர மற்றும் நகரசபைத் தலைவர்கள் தேர்தல், கவுன்சிலர்களின் வாக்குகளால் அல்லாமல் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் நடந்தது. அதில், பா.ஜ.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் 2 இடங்களிலும் ம.தி.மு.க ஒரு இடத்தையும் கைப்பற்றிய நிலையில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் படு தோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ் கட்சி. அதைத் தொடர்ந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துக் களம் கண்டது காங்கிரஸ் கட்சி. 30 தொகுதிகளில் போட்டியிட்டு, 17 லட்சத்து 51 வாக்குகளைப் பெற்றது. அந்தத் தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 4.3. அதற்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதத்தை விடக் குறைவான அளவே பெற்றது.

ஒரு இடத்திகூட காங்கிரஸ் கட்சியோ, தி.மு.கவோ வெற்றிபெற முடியவில்லை. 37 தொகுதிகளை அ.தி.மு.கவும், தேசிய ஜனநாயக் கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க, பா.ம.க தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன.

ஜெயலலிதா
ஜெயலலிதா

இந்தத் தேர்தல் முடிவுகள் தி.மு.கவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மிகப்பெரிய பின்னடைவைத் தந்தது. தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலிலும் இதே நிலை நீடிக்கக் கூடாது என நினைத்து இரண்டு கட்சிகளும் மீண்டும் கூட்டணி உடன்பாட்டை எட்டின. கடைசிவரை தே.மு.தி.கவுடனான கூட்டணிக்காகக் காத்திருந்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி.  ஆனால், அந்தக் கட்சி மக்கள் நலக் கூட்டணியில் சேர, தி.மு.க, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் போட்டியிட முடிவு செய்தது தி.மு.க.

முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சிக்கு 41 இடம் வழங்கியது தி.மு.க. அப்போது, தி.மு.கவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மத்தியிலே அது கடும் அதிருப்தியை உருவாக்கியது. தே.மு.தி.கவும் கை கழுவிவிட்ட நிலையில், தி.மு.கவுக்குக் கடைசி வாய்ப்பாக இருப்பது காங்கிரஸ்தான் என அப்போது சமாதானம் சொல்லப்பட்டது. தனித்துப் போட்டியிட்டதால், 2014 தேர்தலில் ஏற்பட்டதுபோல மாபெரும் தோல்வியைச் சந்தித்துவிடக் கூடாது என்பதிலும் அதைவிட அ.தி.மு.க மாபெரும் வெற்றியைப் பெற்றுவிடக் கூடாது அந்தக் கட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதிலும் தி.மு.க உறுதியாக இருந்தது.

ஆனால், தேர்தல் முடிவுகளே தி.மு.க எதிர்பார்த்ததற்கு எதிராக அமைந்தது. 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் எட்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அ.தி.முக 134 தொகுதியில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்காமல் தி.மு.க போட்டியிட்டிருந்தால் தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியும் என்றும் அப்போது சொல்லப்பட்டது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சிக் கட்டிலில் அமர முடியாமல் போனது தி.மு.க தொண்டர்கள் மத்தியில் கடும் சோர்வை உருவாக்கியது.

மோடி
மோடி

அதைத் தொடர்ந்து 2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்தது... 2014-ல் எழுந்த மோடி அலையை மட்டும் நம்பாமல், மத்தியில் வலுவான கூட்டணியை உருவாக்கியது பா.ஜ.க. ஆனால், மறுபுறம் காங்கிரஸ் கட்சியோ கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் நழுவவிட்டுக் கொண்டிருந்தது. செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் கூடவே கண்டிப்பாக பிரதமர் ஆகிவிடலாம் எனப் பகல் கனவு கண்டு கொண்டிருந்தார் ராகுல்காந்தி.  குறைந்தபட்சம் அப்படியொரு கனவாவது அவருக்கு இருந்ததா என்பதே சந்தேகம்தான். அந்தளவுக்கு இலகுவாக அந்தத் தேர்தலை எதிர்கொண்டது காங்கிரஸ் கட்சி.

அகில இந்திய அளவில் பா.ஜ.கவை மிகக்கடுமையாக எதிர்க்கும் மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் உட்பட பலரும் காங்கிரஸிடமும் அதே போக்கைத்தான் கடைப்பிடிக்கின்றனர். தயவு தாட்சண்யமே பார்க்காமல் மிகக் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள். மாறாக தி.மு.க, மட்டுமே அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை மாற்றாக அங்கீகரிக்கும் மிகப்பெரிய கட்சியாக இருக்கிறது. அதுவே வாக்கு, தேர்தல் கூட்டணிகளையும் தாண்டி, தி.மு.கவை இழக்காமல் இருப்பதற்கு, உடனடியாக கே.எஸ். அழகிரியை டெல்லி காங்கிரஸ் தலைமை அழைத்துப் பேசியதற்கு முக்கியக் காரணம் .

ஆனால், மம்தா, மாயாவதி, அகிலேஷ், அர்விந்த் கெஜ்ரிவால் என யாருமே ஏற்றுக்கொள்ளாத ராகுல்காந்தியை இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். 2016 சட்டமன்றத் தேர்தல் தி.மு.கவுக்கு நல்லதொரு பாடத்தைக் கொடுத்த போதும், நடப்பது நாடாளுமன்றத் தேர்தல். பி.ஜே.பியுடன் கூட்டணிக்குப் போக முடியாது, மாறாக பி.ஜே.பி இப்படியொரு மகத்தான வெற்றிபெறும் என யாருமே அப்போது நினைக்கவில்லை. மூன்றாவது அணிக்கான வாய்ப்புகளும் சாதகமாக இல்லாமல் போகவே  காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார் ஸ்டாலின். ஒருவேளை மேலே காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் அதிக அமைச்சர் இடங்களைப் பெறமுடியும் என்பதே ஸ்டாலினின் கணக்காக இருந்தது. அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு பத்து இடங்கள் ஒதுக்கப்பட்டன. தேனி தொகுதியைத் தவிர ஒன்பது இடங்களில் வெற்றிபெற்று 12.76 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு தி.மு,.கவின் கூட்டணி பலமும் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் களப்பணியும் மோடிக்கு எதிரான அலையுமே காரணம் எனச் சொல்லப்பட்டது.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

சரியாகக் கவனித்தால் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் மிககுறைவான அளவே வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 2009-க்குப் பிறகு ஈழத் தமிழர் பிரச்னையொட்டி எழுந்த எதிர்ப்பலை, குறைவான களப்பணி ஆகியவை அதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.  தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துக்கொள்வது மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமான ஒன்றாக இருக்கிறது. இந்தநிலையில்தான் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்து, தேர்தலும் முடிந்துவிட்டது. மாவட்ட கவுன்சிலர் இடங்களில் காங்கிரஸ் 15 இடங்களில் வெற்றிபெற்று 2.91% வாக்கு சதவிகிதத்தையும் ஒன்றியக் கவுன்சிலர் இடங்களில் காங்கிரஸ் 132 இடங்களில் வெற்றிபெற்று 2.59 வாக்கு சதவிகிதத்தையும் பெற்றது.

`திமு.க., காங்கிரஸ் கூட்டணி குறித்து இரண்டு கட்சியினரும் பொது வெளியில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்’
மு.க.ஸ்டாலின்

இந்தநிலையில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணிக்குள் பூகம்பம் வெடித்தது. உள்ளாட்சித் தேர்தல்களில் நெருக்கடி தரும் காங்கிரஸ் கட்சி, சட்டமன்றத் தேர்தலிலும் அதைத் தொடர்ந்தால் அது மீண்டும் 2016 சட்டமன்றத் தேர்தலைப்போல் ஆகிவிடும். இந்தமுறை காங்கிரஸுக்குக் குறைவான இடங்களையே ஒதுக்கவேண்டும் என முடிவு செய்த தி.மு.க, அதற்காகவே இவ்வளவு கடுமை காட்டியது. அதேநேரம் இந்தமுறை 60 இடங்களுக்கு மேல் தி.மு.கவிடம் கேட்டுப் பெறவேண்டும் என்கிற முடிவில் இருக்கிறது காங்கிரஸ் கட்சி. ஆனால், வெறும் 2 முதல் 3 சதவிகித வாக்குகளை மட்டுமே வைத்துக்கொண்டு 60 இடங்கள் எல்லாம் அதிகம், முக்கியமாக தி.மு.க ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்படாத வகையில்தான் இந்தமுறை கூட்டணிக்கட்சிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யவேண்டும். கூட்டணிக்கட்சிகள் முரண்டுபிடித்தால் கழற்றிவிடவும் முடிவு எடுத்திருக்கிறது தி.மு.க தலைமை. ஆக மொத்தத்தில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் வாக்கு வங்கிகளின் அடிப்படையில் யாருக்கும் லாபம் என்று பார்த்தால் நிச்சயமாக அது காங்கிரஸ் கட்சிக்குத்தான் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. துரைமுருகன் சொல்வதைப் போல ``காங்கிரஸ் விலகிச் சென்றால் எங்களுக்கு ஒரு நஷ்டமுமில்லை'' என்பதே எதார்த்தமாக இருக்கிறது .

ஸ்டாலின் - காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு
ஸ்டாலின் - காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு
"தி.மு.க-வுக்கு வயதாகிவிட்டது!”

ஆனாலும் இன்னமும் ஸ்டாலின் காங்கிரஸைக் கழற்றிவிடாமல் இருப்பதற்கு ராகுல், சோனியா காந்தியுடனான நட்பே காரணமாக இருக்கிறது. கடந்தவாரம் ஒரு பேட்டியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு ``இந்தக் கூட்டணி என்பது சோனியாகாந்தி, கருணாநிதி ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ராகுல்காந்தியும் மு.கஸ்டாலினும் இதே கூட்டணியைத் தொடர்கிறார்கள். இந்தக் கூட்டணி இனிமேலும் தொடரும்; அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.'' எனத் தெரிவித்திருந்தார். அரசியலைப் பொறுத்தவரை காலச் சூழலுக்கேற்ப முடிவெடுத்து கூட்டணியை அமைத்துக் கொள்ளாமல் வெறும் உணர்வு ரீதியாக ஒரு கூட்டணி அமையுமாயின் அது வெற்றியை எட்டுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு