Election bannerElection banner
Published:Updated:

`கொங்கு மண்டலத்தை தி.மு.க அசைக்க முடியாதது ஏன்?' - ஓர் அலசல்

பழனிசாமி - ஸ்டாலின்
பழனிசாமி - ஸ்டாலின்

''அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி... இப்படி கொங்குப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமே... 'இது நமக்கான கட்சி' என்ற மனநிலையை அந்தப் பகுதி மக்களிடையே உருவாக்கிவிட்டது'' என்கிறார் அரசியல் விமர்சகரான கணபதி.

கொங்கு மண்டலத்தில், வழக்கம்போல் பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பதில் அ.தி.மு.க-வுக்கு ஆனந்தம் என்றால், தி.மு.க-வுக்கோ கடும் அதிர்ச்சி!

கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோவை வடக்கு, கோவை தெற்கு, சூலூர் கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, வால்பாறை, பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் என மொத்தம் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் கோவை தெற்குத் தொகுதியை மட்டும் பா.ஜ.க கைப்பற்றியிருக்கிறது. மீதமுள்ள ஒன்பது தொகுதிகளிலும் அ.தி.மு.க-வே வெற்றிபெற்றிருக்கிறது! ஒட்டுமொத்தத்தில், அ.தி.மு.க கூட்டணியே கோலோச்சியிருக்கிறது.

கடந்தமுறை, சிங்காநல்லூர் தொகுதியில் மட்டும் வெற்றிக்கொடி நாட்டியிருந்த தி.மு.க., இந்த முறை அந்த ஒரு தொகுதியையும் தக்கவைக்க முடியாமல், பறிகொடுத்து பரிதாபமாக தோற்றிருப்பது, 'கொங்கு மண்டலம் அ.தி.மு.க-வின் கோட்டை!' என்பதை மீண்டும் நிரூபணமாக்கியிருக்கிறது.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

2019 நாடாளுமன்றத் தேர்தலில், கொங்கு மண்டலத்திலும் பெரும் வெற்றிபெற்ற தி.மு.க., சட்டமன்றத் தேர்தலில் மட்டும் தொடர்ந்து சறுக்கி வருவதற்கான காரணம் என்னவென்பது அந்தக் கட்சியினருக்கே புரியாத புதிராக இருந்துவருகிறது. 'உட்கட்சித் தகராறுகள், எதிர்க்கட்சியினரின் பணப்பட்டுவாடா, சாதி வாக்குகள்' எனப் பல்வேறு காரணங்களை தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொண்டு சமாதானமடைந்துவருகிறார்கள்.

இது குறித்துப் பேசுகிற அரசியல் ஆர்வலர்கள், 'அ.தி.மு.க அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகளை வகித்துவந்தவர்கள் அனைவரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். தொடர்ந்து 10 வருடங்களாக ஆட்சிப்பொறுப்பில் இருந்துவரும் இவர்கள், தங்கள் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்திருப்பதன் எதிரொலியே இந்தச் சாதனை' என்கிறார்கள். உண்மை நிலவரம்தான் என்ன?

'கொங்கு மண்டலத்தில், அ.தி.மு.க-வின் தொடர் வெற்றிக்கான காரணம் என்ன...' என்றக் கேள்வியை அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரான கோவை சத்யனிடமே கேட்டேன்.

''கொங்கு மண்டலம் தொழில் நிறுவனங்களால் நிறைந்த பகுதியாக இருக்கிறது. கடந்த 2006 - 2011 வரையிலான தி.மு.க ஆட்சியில், தமிழ்நாடு முழுக்கவே 'பவர் கட்' பிரச்னை இருந்துவந்தது. ஆனாலும் இந்த மின்தடை பிரச்னையால் அதிகம் பாதிப்புக்குள்ளானது கோவை மண்டலம்தான். ஏனெனில், இங்கு தொழில் நிறுவனங்கள் அதிகம். தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மின்தடையால் நிறைய நிறுவனங்கள் செயல்பட முடியாமல், மூடப்பட்டன. இங்கே வேலை செய்துவந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்தனர். ஆனால், 2011-ல் அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, தொடர்ந்து 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டையே மின்மிகை மாநிலமாக மாற்றிக்காட்டினோம்.

எனவே, கொங்கு மண்டலத்திலுள்ள தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் அ.தி.மு.க ஆட்சிக்குத் தொடர்ந்து வரவேற்பு அளித்துவருகின்றனர். அதேசமயம், கடந்த தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட மின்வெட்டுப் பிரச்னையால் ஏற்பட்ட காயம், இப்போதும் ஆறாத ரணமாக மக்கள் மனதில் ஆழப்பதிந்திருக்கிறது.

கோவை சத்யன்
கோவை சத்யன்

இது தவிர, மக்களுக்குத் தேவையான அடிப்படை வளர்ச்சித் திட்டங்கள் கோவை, சேலம் மாவட்டங்களில், அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. உதாரணமாக அவிநாசி - அத்திக்கடவுத் திட்டத்தில் கிட்டத்தட்ட 70% பணிகள் முடிந்துவிட்டன. கோவை, குடிநீர்த் தேவைக்கு சிறுவாணியை மட்டுமே நம்பியிராமல், அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம்.

ஒருங்கிணைந்த கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் திருப்பூரில் தண்ணீர்த் தேவையை நிவர்த்தி செய்திருப்பதோடு, தொழில்துறை கட்டமைப்புக்குத் தேவையான 24 மணி நேர தடையில்லா மின்வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. ஈரோடு பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்துவந்த சாயப்பட்டறைக் கழிவு பிரச்னையை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்கிறோம். இப்படி மாவட்டம், தொகுதி சார்ந்த மக்கள் பிரச்னைகளில் உடனுக்குடன் கவனம் செலுத்தி, நிவர்த்தி செய்ததால்தான் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது.

ஆக, தொகுதி நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் கோவை மற்றும் சேலம் பகுதிகளில் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தநிலையில், மறுபடியும் தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டால், ஏற்கெனவே நிகழ்ந்த அவலங்கள் மறுபடியும் தொடர ஆரம்பித்துவிடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொங்கு மண்டல மக்கள் மனதில் இருக்கிறது. இந்த அனுபவப் பாடங்களினாலேயே கோவை மாவட்டத்தில் தொடர்ச்சியாக அ.தி.மு.க-வுக்கு வெற்றி தேடித்தருகிறார்கள் மக்கள்.

வளர்ச்சிப் பணிகள் என்றாலே, 'கலெக்‌ஷன், கரெப்ஷன், கமிஷன்' என்று காசு அடிக்கும் திட்டமாகவே பார்க்கப் பழகிவிட்டவர்கள் தி.மு.க-வினர். எனவே, கோவையில் நடைபெற்றுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், அ.தி.மு.க மீது 'சாதிய ஓட்டுகள், பணப்பட்டுவாடா' எனப் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றனர்.

வேலுமணி - கார்த்திகேய சிவசேனாதிபதி
வேலுமணி - கார்த்திகேய சிவசேனாதிபதி

அப்படிப் பணப்பட்டுவாடா நடைபெற்றிருந்தால், அதை நிரூபிக்கும்விதமாக அ.தி.மு.க அமைச்சருக்கு எதிராக இங்குள்ள மண்ணின் மைந்தர் ஒருவரையே தி.மு.க வேட்பாளராக களமிறக்கியிருக்கலாமே... அதைவிடுத்து ஏன் காங்கேயத்திலிருந்து ஒருவரைக் கண்டுபிடித்துக் கூட்டிவந்து, களமிறிக்கினீர்கள்? இந்த மண்ணின் மைந்தர்களிலேயே தி.மு.க சார்பில் போட்டியிடக்கூடிய அளவுக்கு வேறு மூத்த தலைவர்கள் யாரும் இல்லையா? ஆக, கோவை மண்டலத்தில் கட்சிக் கட்டமைப்புரீதியாகவே தி.மு.க கலகலத்துக் கிடக்கிறது'' என்கிறார் விளக்கமாக.

இதையடுத்து, தி.மு.க செய்தித் தொடர்பாளரும், பேராசிரியருமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம், அ.தி.மு.க குற்றச்சாட்டுகள் மற்றும் கோவை மண்டல தோல்வி குறித்து விளக்கம் கேட்டுப் பேசியபோது, ``கோவை அ.தி.மு.க-வின் கோட்டை என்று சொல்வதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனெனில், 96-ல் ஜெயலலிதா உட்பட எல்லோருமே தோற்றுப்போய்விட்டனர். 2001-ல் அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தபோதும்கூட, கோவை மண்டலத்தில் நாங்கள் 16 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தோம். 2006-ம் ஆண்டிலும் கோவை, சேலம் பகுதிகளில் ஏறத்தாழ 40% இடங்களை தி.மு.க பெற்றிருந்தது.

2011, 2016 தேர்தல்களில் மட்டும்தான் கோவை கொஞ்சம் அ.தி.மு.க பக்கமாக நின்றது. அதையும்கூட 2019 நாடாளுமன்றத் தேர்தலில், நாங்கள் உடைத்துவிட்டோம். 2021 தேர்தலில், மறுபடியும் கோவை பகுதியில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் பா.ஜ.க-வின் தேர்தல் வியூகம். அதாவது சாதி, மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்துகிற யுக்தி.

தேர்தலுக்கு முந்தைய ஆறு மாதங்களில் மட்டும், தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம், வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு, கோவைப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகள் எனத் திட்டமிட்டுச் செய்திருக்கிறார்கள். அதோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்ற பிரசாரத்தை முன்னெடுத்துச் சென்றதோடு, தேர்தல் பிரசாரங்களில் நடைபெற்ற ஒன்றிரண்டு அருவருக்கத்த விஷயங்களை சாதிரீதியாகக் கொண்டு சென்று அதற்கான பலனையும் அவர்கள் அறுவடை செய்திருக்கிறார்கள். மற்றபடி கொள்கை, கோட்பாட்டுரீதியிலா கோவை மண்டலத்தைத் தக்கவைத்திருக்கிறார்கள்?

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் 'பவர்கட் பிரச்னை' இருந்தது... நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இப்போது திருப்பூரிலும் கோவையிலும் தொழிற்சாலைகள் இருக்கின்றனவா? 'பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், திருப்பூரில் மட்டும் 45 ஆயிரம் தொழிற்சாலைகள் கதவடைக்கப்பட்டுவிட்டன' என முன்னாள் அமைச்சர் வேலுமணியே 2019-20 பட்ஜெட்டில் சொல்லியிருக்கிறாரே?

கடந்த தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆறு மின் திட்டங்களில், மூன்று திட்டங்கள்தான் வெற்றிகரமாக 2011-க்குப் பிறகு மாநில மின் தேவையைப் பூர்த்தி செய்யக் காரணமாக அமைந்தன. மற்றபடி அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இவர்கள் புதிதாக என்ன மின் திட்டங்களைக் கொண்டுவந்தார்கள்? எதுவும் இல்லையே! மின்மிகை மாநிலம் என்று சொல்கிற இவர்கள், ஏன் இத்தனை ஆண்டுகளாக 3,000 மெகாவாட் மின்சாரத்தைத் தனியாரிடமிருந்து கடன் வாங்கிக்கொண்டிருந்தார்கள்? அடுத்து 5,000 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கான திட்டமும் அனுப்பப்பட்டுள்ளதே... ஆக, மின்மிகை மாநிலம் என்பதே இவர்கள் உருவாக்கிய பொய்யான தோற்றம்.

போராட்டம்தான்... ஆனாலும் வெற்றி... போடியில் `ஹாட்ரிக்’ அடித்த  ஓ.பன்னீர்செல்வம்! #TNelections2021

அடுத்து மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இரண்டரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான தொழில் முதலீடுகளைக் கொண்டுவந்ததாக அறிவித்தார். எடப்பாடி பழனிசாமியும் தன் பங்குக்கு 3 லட்சம் கோடி வந்ததாக அறிவித்தார். இவர்கள் அறிவித்த தொகையில் உண்மையாகவே தொழிற்சாலைகள் வந்திருந்தால், கிட்டத்தட்ட 7,000 மெகாவாட் மின் தட்டுப்பாடு வந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லையே... காரணம் இவர்கள் புதிதாக மின் திட்டமும் கொண்டுவரவில்லை... முதலீடுகளையும் கொண்டுவரவில்லை!

கோவைப் பகுதியில், தி.மு.க பலவீனமாக இருந்திருந்தால், 2019 தேர்தலில் எப்படி நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியும்? கோவை, திருப்பூர், தென்காசி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் பா.ஜ.க கொஞ்சம் பலமாக இருக்கிறது என்பது நாடறிந்த உண்மை. மேலும் தேர்தல் சூட்சுமங்களாக அ.தி.மு.க செய்த பணப்பட்டுவாடாவும் கோவைப் பகுதிகளில் கொஞ்சம் அவர்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்திருக்கிறது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி தொகுதி, கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் மட்டும் ஒரு குடும்ப அட்டைக்கு 10,000 ரூபாய் வீதம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது'' என்கிறார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.க., தி.மு.க-வின் பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், கோவை மண்டலத்தில் அ.தி.மு.க-வின் வெற்றிக்கான உண்மையான காரணத்தைத் தெரிந்துகொள்ளும் நோக்கில் பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான கணபதியிடம் பேசினோம்... ''எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே கொங்கு மண்டலம் அ.தி.மு.க-வுக்குச் சாதகமாகவே இருந்துவந்திருக்கிறது. ஆனால், ஜெயலலிதா 2-வது, 3-வது முறையாக ஆட்சி அமைத்த சமயங்களில், அ.தி.மு.க-வில் முக்குலத்தோருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால், சசிகலா சிறை சென்றுவிட்ட பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில், அ.தி.மு.க என்ற கட்சி 'முக்குலத்தோர் என்ற நிலையிலிருந்து விலகி, கவுண்டர்கள் கட்சியாக மாறிவிட்டது' என்பதை தென் மாவட்டப் பகுதிகளில் பேச ஆரம்பித்துவிட்டனர்.

கூட்டணிப் பேச்சுவார்த்தை என்றால்கூட வேலுமணி, தங்கமணிதான் இருப்பார்கள். கூடவே முதல்வர் என்ற வகையில், எடப்பாடி பழனிசாமி... இப்படி கோவை பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமே... 'இது நமக்கான கட்சி' என்ற மனநிலையை அந்தப் பகுதி மக்களிடையே உருவாக்கிவிட்டது. கூடவே இந்தத் தேர்தலில், பண பலமும் ரொம்பவே முக்கியப் பங்காற்றியிருக்கிறது. அதாவது பண பலம் என்றால், தேர்தலுக்கு முந்தைய பணப்பட்டுவாடா என்றில்லாமல், தொகுதி மக்களுக்கு பொங்கல் விழாவிலிருந்தே பணம், பரிசுப்பை என்று அமைச்சர்கள் வாரி வழங்கியிருப்பதாக நிறைய செய்திகள் வெளிவந்தன.

நெல்லை: `நீதிமன்றம் தராத தீர்ப்பை மக்கள் தந்திருக்கிறார்கள்!’ - அப்பாவு நெகிழ்ச்சி

தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க தரப்பில் சிலர் விரும்பத் தகாத பேச்சுகளை பேசியதும்கூட, கோவை மண்டலத்தில் தி.மு.க-வுக்கு பாதகத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. பொதுவாக தேர்தல் பிரசாரங்களின்போது வெளிப்படும் இது போன்ற பேச்சுகள், எதிர்க்கட்சிகளுக்கான வாக்குகளாக மாறிவிடும் என்பது சாத்தியம் இல்லை.

அதேபோல், ஒரு தேர்தலின்போது இருக்கும் பிரச்னை அடுத்தடுத்த தேர்தல்களிலும்கூட எதிரொலிக்கும் என்று சொல்லிவிட முடியாது. அப்படி எதிரொலிக்கும் என்றால், 1991-96 வரையிலான அ.தி.மு.க ஆட்சி மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு, 2001 தேர்தலின்போது இல்லை. எனவே, கடந்த தி.மு.க ஆட்சியில் இருந்த பவர் கட் பிரச்னை 2011 தேர்தலில் வேண்டுமானால், அ.தி.மு.க-வுக்குக் கைகொடுத்திருக்கலாம். 2016, 2021 தேர்தல்களிலும் அது கைகொடுக்கும் என்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

கணபதி
கணபதி

அடுத்து, எப்போதுமே கொங்குப் பகுதியில் தி.மு.க கொஞ்சம் 'வீக்'தான். அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி, கே.என்.நேரு மாதிரியான தலைமைகள் கோவைப் பகுதியில் தி.மு.க-வுக்கு கிடையாது. ஒருகாலத்தில், ராமநாதன், கண்ணப்பன் எனச் சில தலைவர்கள் இருந்தனர். இப்போது அப்படியான வலிமைமிக்க தலைவர்கள் யாரும் இல்லை. எனவே, கொங்கு மண்டலத்தில் இப்போதுதான் புதிதாகக் கட்சியைத் தொடங்குவதுபோல், அதிக அக்கறை எடுத்து தி.மு.க செயல்பட வேண்டும்!'' என்கிறார் அழுத்தமாக.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு