Published:Updated:

பொங்கிய எதிர்கட்சிகள்... ஆட்சியாளர்களுக்கு சிக்கலான பொங்கல் பொருள்கள்!

முதல்வர் ஸ்டாலின்
News
முதல்வர் ஸ்டாலின்

பொங்கல் பொருள்கள் தரமில்லாமல் போனதற்கு இந்த கடைசிநேர கமிஷன் விளையாட்டும் ஒருகாரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை!

``வடமாநிலத்திலிருந்து பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களை வாங்கி பொதுமக்களுக்கு தரமற்ற முறையில் விநியோகம் செய்கிறார்கள். இதன்மூலம் ஆளும் தரப்புக்கு கமிஷன் கிடைக்கிறது. கரும்பு வழங்குவதிலும் ஊழல் நடந்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் தி.மு.க கொள்ளை அடிப்பதுதான மிச்சம்” என்று தி.மு.க அரசு வழங்கிய பொங்கல் பரிசு குறித்து குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசு தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு 21 பொருள்கள் அடங்களில் பொங்கல் பொருள்கள் வழங்கும் திட்டத்தை கடந்த ஜனவரி 4-ம் தேதி துவங்கியது. தமிழகத்தில் உள்ள இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இந்த பொருள்களை, அந்ததந்த நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கிவருகிறது. இந்நிலையில் தான் ``இந்த பொங்கல் பொருள்களில் முறைகேடு நடந்துள்ளது. கூடுதல் விலைக்கு பொங்கல் பொருள்களை அரசு கொள்முதல் செய்துள்ளது. பல இடங்களில் தரமற்ற பொருள்களை விநியோகம் செய்துவருகிறது. கரும்பு விவசாயிகளை இந்த விசயத்தில் அரசு ஏமாற்றிவிட்டது” என்று அடுக்கடுக்கான புகார்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு அரசு தரப்பிலும் பதில் அளிக்கப்பட்டு வந்தாலும், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஏற்றார்போல பல இடங்களில் அரசு வழங்கிய பொருள்கள் தரமற்று இருப்பதாக பயனாளிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பொங்கல் பரிசுத்தொகுப்பில் உண்மையில் என்ன நடந்தது என்று அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தோம்.``பொங்கல் பரிசு தொகுப்பே மூன்று விதிமாக பிரித்துதான் ஒப்பந்தமே அறிவிக்கப்பட்டது. குறிப்பாக கூட்டுறவுத்துறையின் வசம் பொருள்கள் சப்ளை செய்தாலும், இதற்கான பொருள்களை சப்ளை செய்வதில் பெரும்பங்கை உணவுத்துறையின் கட்டுபாட்டில் தான் இருந்தது. நான்கு பொருள்கள் மட்டுமே கூட்டுறவுத்துறை மூலம் சப்ளை செய்யப்பட்டது. ஒவ்வொரு பொருள்களும் எந்த தரத்தில் இருக்கவேண்டும் என்பதையும் ஒப்பந்த புள்ளி வெளியிடும் போதே, அரசு தெளிவாக சுட்டிக்காட்டியது. இதன்படியே பொருள்களை சப்ளை செய்யும் நிறுவனங்களும் ஒப்பந்ததில் கலந்துக்கொண்டன. ஆனால், ஆளும் தரப்பில் சில நிறுவனங்களில் உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்து பேசினார்கள். டெண்டர் விடும் முன்பே ஒரு பைக்கு 420 வரை நிர்ணயம் செய்யலாம் என்று சிண்டிகேட் தரப்பு ஆளும்தரப்பிடம் சொல்லயிருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக பிரபல நிறுவனம் 360 ரூபாய்க்கு 12 பொருள்களைத்தர ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிட்டதால் புதிய சிக்கல் உருவானது. இறுதியாக ஆளும் தரப்புக்கு நெருக்கமான மூன்று நிறுவனங்களுக்கு 12 பொருள்கள் அடங்கிய தொகுப்பு விலை, 353 க்கும், வெல்லம், உப்பு இரண்டு பொருள்கள் 62 ரூபாய்க்கும், ஒதுக்கப்பட்டது.

தமிழக அரசு பொங்கல் பொருள்கள்
தமிழக அரசு பொங்கல் பொருள்கள்

அதே போல் கூட்டுறவுத்துறை மூலம் ஏலம், திராட்சை, முந்திரி ஆகியவை அடங்கிய தொகுப்பு 62 ரூபாய்க்கும், கரும்பு 33 ரூபாய்க்கும் நிர்ணயம் செய்யப்பட்டது. அதே நேரம் ஒவ்வொரு பொருள்களின் தரத்தையும் அதில் சுட்டிக்காட்டியிருந்தனர். குறிப்பாக ஏலக்காய் 320 பவுண்டு உள்ளதை மட்டுமே விநியோகம் செய்யவேண்டும் என்றனர். ஆனால், சப்ளையான பல ஏலக்காய் சிறியவகையிலும், சொத்தையானதாகவும் இருந்தது. அதே போல் ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்கள், குறுகிய காலத்தில் பொருள்களை சப்ளை செய்ய வேண்டும் என்கிற அவசரத்தில் வெளிமாநிலங்களிலிருந்து எல்லாம் பொருள்களை வாங்கினார்கள். இதனால் பொருள்களின் தரம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது” என்று வருத்தப்படுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே போல் ஒரு முழுக்கரும்பு அரசுவாங்கும் விலை 33 ரூபாய். ஆனால் விவசாயிகளிடமிருந்து 10 முதல் 13 ரூபாய்க்கு மட்டுமே விலை நிர்ணயம் செய்து வாங்கியிருக்கிறார்கள். மீதி தொகை ஆளும் தரப்புக்கு கமிஷனாகவே சென்றுள்ளது” என்கிற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்தது. கரும்பு விவசாயிகளை கண்ணீர்விட வைக்காதீர்” என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனியாக இதற்கு அறிக்கையும் வெளியிட்டார். அதே போல், பொருள்கள் அடங்கிய பை ஒன்று 10 ரூபாய் என அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், அந்த பையின் மதிப்பு ஐந்து ரூபாய் தான், அதிலும் மொத்தமாக கொள்முதல் செய்யும் போது இன்னும் குறையும் என்கிறார்கள் விவசாயிகள்.

கரும்பு
கரும்பு

பொருள்கள் வழங்கும் துணிப்பைகளை மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலமே பெறலாம் என்று அரசு திட்டமிட்டது. ஆனால் சில நிறுவனங்கள் ஆளும் தரப்பை சரிகட்டி அவர்கள் நிறுவனத்தின் மூலமே துணிப்பை சப்ளையை பெற்றுவிட்டார்கள். இப்போது துணிப்பை சப்ளையில்லாமல் போனதற்கு இந்த குளறுபடிகளும் ஒருகாரணம். பொங்கல் பரிசுத்தொகுப்பை வைத்து சில தனியார் நிறுவனங்கள் பெரும் அளவில் லாபம் அடைந்துவிட்டது. கரும்பு சப்ளையை வைத்து ஆளும்தரப்பு புள்ளிகள் கமிஷன் பார்த்துவிட்டனர்” என்று வேதனைப்படுகிறார் கூட்டுறவு சங்க ஊழியர் ஒருவர்.

பொங்கிய எதிர்கட்சிகள்... ஆட்சியாளர்களுக்கு சிக்கலான பொங்கல் பொருள்கள்!

சுமார் ஐநுாறு ரூபாய் வரை ஒவ்வொரு பொங்கல் தொகுப்பிற்கு அரசு நிதி ஒதுக்கியது. ஆனால், இந்த பொருள்கள் விநியோகத்தில் நடந்த கமிஷன் பேரங்களில் மட்டுமே நுாறு ரூபாய் மடைமாற்றப்பட்டிருக்கலாம் என்கிறார். பொங்கல் பொருள்கள் தரமில்லாமல் போனதற்கு இந்த கடைசிநேர கமிஷன் விளையாட்டும் ஒருகாரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை என்கிறார் கோட்டையில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர். ஆனால், முதல்வர் மட்டும் பொருள்கள் விநியோகத்தில் எந்த முறைகேடும் இருக்ககூடாது, பொருள்களின் தரத்திலும் குறைவு இருக்ககூடாது என்று தொடர்ந்து சொல்லிவருகிறார். அவர் சொல்வதை அவர்சார்ந்த கட்சியினரே மதிக்காமல் இருப்பதுதான் வேதனையின் உச்சம் என்கிறார்கள்.