மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம், அத்தியாவசியப் பொருள்கள் அவசர திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த அவசரச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களும் கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகள் மத்தியில் இந்தச் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கடந்த ஒரு வருடமாக இந்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டமும் நடைபெறுகிறது. போராட்டக்களத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகியிருப்பதாக விவசாய சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இந்தச் சூழலில்தான், 'மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும்' என்று அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. இதற்குப் பின்னே உத்தரப்பிரதேச, பஞ்சாப் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கணக்கு இருப்பதாகக் கூறுகிறது விவரமறிந்த வட்டாரம்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு குறித்து பா.ஜ.க வட்டாரத்தில் பேசினோம். "இரண்டு காரணங்களுக்காக இந்த முடிவை பிரதமர் மோடி எடுத்திருக்கிறார். இன்னும் சில மாதங்களில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தல்களில் வெற்றிபெற்றால் மட்டுமே, மாநிலங்களவையில் பா.ஜ.க-வுக்கு தனிப்பெரும்பான்மையுள்ள எண்ணிக்கையைப் பெற முடியும். தற்போது 97 எம்.பி-க்கள்தான் மாநிலங்களவையில் பா.ஜ.க-வுக்கென உள்ளனர். கடந்த மே 2021-ல் நடைபெற்ற மேற்கு வங்கத் தேர்தலில் கட்சி எப்படியும் வெற்றியைப் பெற்றுவிடும். அதன் மூலமாக, 'மாநிலங்களவையில் பா.ஜ.க எம்.பி-க்கள் எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ளலாம்' என டெல்லி மேலிடம் தீர்மானித்திருந்தது. ஆனால், அந்த மாநிலத் தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றிபெற்றுவிட்டார். விரைவில் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ஐந்து மாநிலங்களிலும் வாய்ப்பை தவறவிட்டால், பிறகு மாநிலங்களவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குக்கூட படாதபாடுபடவேண்டியிருக்கும்.
உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 80 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இந்த மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியை இழந்தால், அதன் தாக்கம் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். வேளாண் சட்டங்களை எதிர்த்து ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் தீவிரமாகப் போராடுகிறார்கள். இவர்கள் கணிசமாக வாழும் மேற்கு உத்தரப்பிரதேசப் பகுதி, எப்போதுமே பா.ஜ.க-வுக்கு சாதகமாகத்தான் இருந்திருக்கிறது. 2017 சட்டமன்றத் தேர்தலின்போது, இந்தப் பகுதியிலிருந்து 72 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வுக்கு கிடைத்தனர். ஆனால், வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களாலும், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் விவசாயிகள் மீது மோதிய வழக்காலும் பா.ஜ.க-வுக்குப் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க-வுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். இதே பிரச்னைகளுக்காக பஞ்சாப்பிலுள்ள சீக்கிய ஜாட் பிரிவைச் சேர்ந்தவர்களும் பா.ஜ.க-வுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் தேர்தலைச் சந்தித்தால் கட்சி பெரிய பின்னடைவைச் சந்திக்க நேரிடும்.

தவிர, வேளாண் சட்டங்களை மையப்படுத்தி பஞ்சாப்பில் தனிநாடு கோரும் குரல்கள் தீவிரமடைந்திருக்கின்றன. கடந்த அக்டோபர் 31-ம் தேதி, 'பஞ்சாப்பைத் தனியாகப் பிரித்து தனி நாடு அமைக்கக் கோரும் தீர்மானம்' லண்டன் மாநகரில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, 'நீதிக்காகப் போராடும் சீக்கியர்கள்' அமைப்பு செய்திருக்கிறது. இந்த நிகழ்வை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடுமையாகக் கண்டித்திருப்பதோடு, நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற இரு நாட்டு பேச்சுவார்த்தையின்போது, பிரிட்டன் அரசின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருக்கிறார். இப்படி, ஐந்து மாநிலத் தேர்தல்கள், பிரிவினைவாத கோஷங்கள் வலுப்பெற்றுவிடக் கூடாது என்கிற காரணத்துக்காக இந்த மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டிருக்கின்றன" என்றனர்.
வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்று பிரதமர் அறிவித்தாலும், நாடாளுமன்றத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்படும் வரை போராட்டத்தை விலக்கிக்கொள்ளப் போவதில்லை என்று விவசாய சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. ஆனால், இதற்கெல்லாம் பா.ஜ.க கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. நம்மிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், "பஞ்சாப்பைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் சமீபத்தில் பிரதமரைச் சந்தித்தபோது, அவரை பா.ஜ.க-வில் இணையுமாறு பிரதமர் அழைப்புவிடுத்தார். அதற்கு, 'வேளாண் சட்டங்களால் பஞ்சாப் மக்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில், உங்கள் கட்சியில் நான் சேர்ந்தால், அதற்கான எதிர்வினையைச் சந்திக்கவேண்டியிருக்கும்' என்று பிரதமரின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார் அமரீந்தர் சிங். இந்தச் சூழலில்தான், சீக்கியர்களின் புனித குருவான குருநானக் பிறந்தநாளில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்திருக்கிறார் மோடி. அமரீந்தர் சிங், அகாலி தளம் ஆகியோருடன் கரம் கோத்துக்கொண்டு பஞ்சாப் தேர்தலையும், ஜாட் சமூகத்தை அமைதிப்படுத்தி உத்தரப்பிரதேசத் தேர்தலையும் சந்திக்க வியூகம் வகுக்கிறது பா.ஜ.க தலைமை. அதன் ஒரு பகுதிதான் பிரதமரின் இந்த அறிவிப்பு" என்றார்.

தேர்தல் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்லத் திட்டமிடும் பா.ஜ.க., இந்த வேளாண் சட்டங்களை விலக்கிக்கொள்ளும் அறிவிப்பால், தங்களுக்குச் சாதகமாக காற்று அடிக்கும் எனக் கணக்கு போடுகிறது. பஞ்சாப்பில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளும், உத்தரப்பிரதேசத்தில் ராஷ்ட்ரிய லோக் தளம், சமாஜ்வாடி கட்சிகளும் பிரதமரின் இந்த அறிவிப்பால் குழப்பமடைந்திருக்கின்றன. இந்தக் குழப்பத்தில் மீன்பிடிக்கப் பார்க்கிறது பா.ஜ.க. மீன் சிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.