Published:Updated:

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை எப்படி உள்ளது?! - விரிவான அலசல்

தமிழ்நாடு காவல்துறை
News
தமிழ்நாடு காவல்துறை ( Photo: Vikatan )

போதைப் பழக்கங்களால் சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் சீரழிவதோடு, குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

தமிழகத்தில் சமீபகாலமாக நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களைப் பார்க்கும்போது, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு வருகிறதா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்திருக்கிறது. ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் அத்துமீறி நடந்துகொள்வது, சிறுவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது என சட்ட, ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையிலான சம்பவங்கள் அதிக அளவில் நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், காவல் நிலையங்களில் இன்னும் தீவிரமான நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

துப்பாக்கிமுனையில் கைதுசெய்த போலீஸ்
துப்பாக்கிமுனையில் கைதுசெய்த போலீஸ்

போதைக்கு அடிமையாகும் சிறுவர்கள், இளைஞர்கள், செயின் பறிப்பு, ஆடு திருடுதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு சிறைச்சாலை, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளுக்கு போய்வருவது சமூகத்தில் சர்வ சாதாரணம் என்பது போன்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளுக்குச் செல்லும் சிறுவர்கள், பலே ஆசாமிகளுடன் தொடர்பு ஏற்பட்டு, க்ரைம் நெட் வொர்க்கில் இணைகிறார்கள். அங்கு, கூலிப்படையாகச் செயல்பட அனைத்துவித பயிற்சிகளையும் முடித்த பின்னர் கிரிமினல்களாக வெளியே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கடந்த சில நாள்களில் மட்டும் தமிழகத்தை அதிரவைத்த குற்றச் சம்பவங்கள் குறித்து சுருக்கமாகப் பார்க்கலாம்:-

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வேலூர்:

வேலூரில் பட்டாக்கத்தியுடன் பைக்கில் பிஸியான ரோட்டில் மூன்று பேர்வந்திருக்கிறார்கள். 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இருவர். 20 வயதுக்காரர் ஒருவர். சாலையோரம் பச்சைகுத்திக்கொண்டிருந்தவரிடம் இந்த பைக் ஆசாமிகள் மாமூல் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். அதை யதேச்சையாக அந்தப் பக்கம் காரில் வந்த மாவட்ட எஸ்.பி செல்வகுமார் பார்த்துவிட்டார். அவரைப் பார்த்ததும் பைக் ஆசாமிகள் தப்பி ஓடினர். அவரும் அவர்களை விரட்டிப் பிடித்திருக்கிறார்.

வேலூர்
வேலூர்

இதே வேலூரில், கஞ்சா போதைக்கு அடிமையான 17, 18, 19 வயதுடைய மூன்று பேர், பெண் தகராறில் ஓர் இளைஞரை கொன்று புதைத்திருக்கின்றனர். அதேபோல, முன்விரோதம் காரணமாக 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட ஆறு பேர், இளைஞர்கள் இரண்டு பேரை படுகொலை செய்து உடலை எரித்து பாலாற்றில் வீசியிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் நடந்து 15 நாள்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், அந்த உடல்களை இன்னும் போலீஸார் கைப்பற்றவில்லையாம்.

தாம்பரம்:

தாம்பரத்தில் இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸார் சந்தேகத்தின் பேரில் பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களைப் பிடித்து விசாரித்திருக்கின்றனர். அப்போது அந்த இளைஞர்களில் ஒருவர் பேன்ட்டில் பெரிய சைஸ் பட்டாக்கத்தியை மறைத்துவைத்திருந்தாராம். அதை போலீஸார் கைப்பற்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுரை:

மதுரையிலிருந்து திருப்பூர் சென்ற அரசுப் பேருந்து ஒன்றின் டிரைவரால், போக்குவரத்து நெரிசல் காரணமாக பின்னால் வந்த தனியார் வாகனத்துக்கு வழி கொடுக்க முடியவில்லை. அதனால், ஆத்திரமடைந்த கார் டிரைவர் அரசு பஸ்ஸை முந்திச் சென்று மறித்து அரசுப் பேருந்து டிரைவரை இரும்புக்கம்பியால் தாக்கி கையில் ரத்தக்காயம் ஏற்படுத்தியிருக்கிறார். அரசுப் பேருந்து கழக ஒட்டுநர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில்தான் சட்டம், ஒழுங்கு சீரழிந்துகொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர் பில்லா ஜெகன்
அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர் பில்லா ஜெகன்

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளரும், தி.மு.க ஒன்றிய பொறுப்பாளருமான ஒருவர், அரசு மருத்துவக் கல்லூரி பல் டாக்டரை காரில் கடத்திச் சென்று, தோட்டத்தில் கட்டிவைத்து அரிவாள், உருட்டுக்கட்டையால் கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார். இது தொடர்பாக, போலீஸார் அந்த தி.மு.க ஒன்றியச் செயலாளரைக் கைதுசெய்திருக்கிறார்கள். இதற்கு முன்பு, இதே அமைச்சரின் உதவியாளர் ஒருவர் டிராஃபிக் கான்ஸ்டபிள் ஒருவரை அடித்துவிட்டு, பிறகு மன்னிப்புக் கேட்டார். அமைச்சர் பெயரைச் சொல்லி, இன்னொரு பிரமுகர் அரசு சுற்றுலா மாளிகையில் அறை கேட்டு கலாட்டா செய்து, அங்கிருந்த அரசு ஊழியரைத் தாக்கினார்.

* கரூர்:

கரூரில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது வேன் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. ஏன் அவரைக் குறிவைத்து மோதிக் கொன்றார் என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

* திருச்சி:

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த எஸ்.எஸ்.ஐ பூமிநாதனை ஆடு திருடும் கும்பலைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள் நான்கு பேர் கொடூரமாக வெட்டிக் கொன்றனர்.

இப்படியாகக் கடந்த சில நாள்களில் மட்டும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் அரங்கேறிய சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று பல்வேறு தரப்பினரை விசாரித்தோம்!

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் இது தொடர்பாக நம்மிடம் பேசுகையில், ``திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆடு வளர்ப்பவர்கள் அவற்றை இரவில் வீடுகளில் கட்டிவைக்க மாட்டார்கள். சுதந்திரமாக விட்டுவிடுவார்கள். இளஞ்சூடு இருக்கும் தார் ரோடுகளில் அவை படுத்திருக்கும். ஆடுகளைக் குறிவைத்துத் திருடும் கும்பலைச் சேர்ந்த இளைஞர்கள் பைக்கில் வந்து அள்ளிப்போட்டுக்கொண்டு தப்பிவிடுவார்கள். குறிப்பிட்ட சில கசாப்பு கடைகளில் ஒரு ஆட்டை ரூ.2,000-க்கு விற்றுவிடுவார்கள். ஆடுகளைச் சந்தையில் வாங்கினால் விலை மிக அதிகம். கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் அன்றாட ஊதாரிச் செலவுக்காகவும் ஆடுகளைத் திருடுகிறார்கள். போலீஸாரிடம் புகார் போனால், எங்கே போய் ஆடுகளைக் கண்டுபிடிப்பார்கள்? யாராவது மாட்டினால் அவர்களை விடச் சொல்லி அரசியல் அழுத்தம் வரும்'' என்றார்.

மத்திய மாவட்டங்களில், 12 வயதிலிருந்து 18 வயது வரையிலான சிறுவர்களை கஞ்சா, அபின் போதைக்கு அடிமையாக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுத்துவதும், போதைப்பொருள்களை பைக்கில் கடத்துவதும் என கூலிப்படையினர் அவர்களைத் தவறான வழியில் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

போதைப்பொருள்
போதைப்பொருள்

இதற்கிடையே, நவம்பர் 24-ம் தேதியன்று தமிழக அரசு புதிய அரசு ஆணை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

நீண்டகாலம் சிறைவாசம் அனுபவிக்கும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை அவர்களின் நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம், மத மோதல், சாதி மோதல், அரசுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள் உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாதிரி பல்வேறு காலகட்டங்களில் கைதிகள் விடுவிப்பது நடந்திருந்தாலும், தற்போதைய தி.மு.கழக அரசு எப்படி இந்த முடிவை செயல்படுத்தப்போகிறது என்று எதிர்க்கட்சியினர் காத்திருக்கின்றனர்.

மதுரையில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநரும், வழக்கறிஞருமான ஹென்றி டிபேன் பேசுகையில், ``சிறுவர்கள் சினிமாவில் இடம்பெறும் வன்முறைக் காட்சிகளைப் பார்த்து தடம்மாறுகிறார்கள். என்னிடம் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை அழைத்து வந்தார்கள். பட்டாக்கத்தி ஒன்றை அவன் வைத்திருந்தானாம். போதைக்கு அடிமையானவன். நான் அந்த மாணவனின் பெற்றோரிடம் பேசினேன். பள்ளி ஆசிரியர்களிடமும் பேசினேன். பிறகு, அந்த மாணவனிடம் பேசியபோது, `தவறான சகவாசத்தால் இப்படி ஆகிவிட்டேன். திருந்திவிடுகிறேன்’ என்று அழுதான். அவனைச் சட்டப்படி பார்த்தால், போலீஸில் ஒப்படைத்திருக்க வேண்டும்.

ஹென்றி டிபேன்
ஹென்றி டிபேன்

அப்படிச் செய்திருந்தால் அவன் பயங்கர கிரிமினலாக மாறிவிட வாய்ப்பு உண்டு. அதை யோசித்த நான் கவுன்சலிங் செய்து அனுப்பினேன். பள்ளித் தரப்பில் ஒரு வாரம் சஸ்பெண்ட் மட்டும் செய்தார்கள். வீட்டில் நல்ல அரவணைப்பையும் கண்காணிப்பையும் தரச் சொன்னேன். இப்போது அவன் மனம் திருந்தி நல்லபடியாக நடந்துவருகிறான். குற்றச் சம்பவங்களில் தெரியாமல் நுழையும் மாணவர்கள், இளைஞர்களைச் சட்டப்படி தண்டிக்காமல் கவுன்சலிங் செய்தால் நிச்சயம் அவர்கள் திருந்துவார்கள். இந்த மாதிரிச் சிறுவர்களுக்கு போதைப் பழக்கத்தை ஏற்படுத்தி, குற்றச் செயல்களில் ஈடுபடவைக்கும் ரௌடி கும்பல் வெளியே நடமாடுகிறது. அவர்களுக்கு அரசியல் தொடர்பு இருக்கிறது. அந்த மாதிரி ஆட்களை எந்த அரசியல் கட்சியும் வளர்த்துவிடக் கூடாது. நமது சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் குற்றச் சம்பவங்கள் குறையும்'' என்றார்.

கடைசியாக, சென்னை டி.ஜி.பி அலுவலக உயரதிகாரியிடம் பேசியபோது, ``தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும், அதற்கு முந்தைய காலகட்டத்திலும் தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்களின் புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே நீங்கள் புரிந்துகொள்ளலாம். பெரிய அளவில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நடக்கவில்லை. ரௌடிகள், கூலிப்படையினர் தொடர்புடைய கொலைகளின் எண்ணிக்கை குறைவுதான். முன்விரோதம், குடும்ப வன்முறை, திருமணம் தாண்டிய உறவு உள்ளிட்ட தனிப்பட்ட விவகாரம் தொடர்பாகத்தான் கொலைகள் அதிகம் நடந்துள்ளன. ரௌடிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை படு வேகமாக இந்த அரசு எடுத்துவருகிறது. அண்மையில், காஞ்சிபுரம், தூத்துக்குடியில் இரண்டு ரௌடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். மதுரையில் ஒரு ரௌடியைக் காலில் சுட்டுப் பிடித்துள்ளனர். இனி ரோந்து போகும்போது, போலீஸார் கையில் துப்பாக்கியுடன் போக வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார்.

டி.ஜி.பி சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்
டி.ஜி.பி சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்
வி.ஸ்ரீனிவாசுலு

உங்களுக்கு ஒரு புள்ளிவிவரத்தைச் சொல்கிறேன். 2019-ம் வருடம் செப்டம்பர் வரையில் தமிழகத்தில் 1,269 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. 2020 (செப்டம்பர் வரை) 1,203, 2021 (செப்டம்பர் வரை) 1,223 கொலைகள் நடந்துள்ளன. தி.மு.கழக ஆட்சி வந்த பிறகு, 2021 (மே முதல் செப்டம்பர் வரை) 697 கொலைகள் நடந்துள்ளன. இதுவே அதற்கு முந்தைய 2020-ல் (மே முதல் செப்டம்பர் வரை) 758 கொலைகள் நடந்துள்ளன. 2019-ம் வருடம் (மே முதல் செப்டம்பர் வரை) 715 கொலைகள் நடந்துள்ளன'' என்றார்.

இவர் இப்படிச் சொன்னாலும், போதைப் பழக்கத்தால் சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் சீரழிவதோடு, குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. செல்போன், ஆன்லைன், சமூக வலைதளங்கள் மூலமாக அப்பாவி ஏழைப் பெண்களை மிரட்டுவது, பாலியல் தொந்தரவு தருவது என குற்றச் செயல்களில் இளைஞர்கள் இறங்குகிறார்கள். இதையெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.