சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“பாக்கெட் பால் என்பது பன்றியின் பாலாகவும் இருக்கலாம்!”

La Ganesan
பிரீமியம் ஸ்டோரி
News
La Ganesan

‘`பாகிஸ்தானுக்கு எதிராக துல்லியத் தாக்குதல் நடத்தி வெற்றி பெறுகிற பா.ஜ.க., வெங்காய விலையேற்றத்தைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறதே..?’

மாநில அரசியலில் குதிரைபேர விளையாட்டுகள், பொருளாதாரச் சரிவு, வெங்காய விலையுயர்வு என நாடே தடதடக்கிறது மோடியின் தர்பாரில்!

தலைமை இல்லாத தமிழக பா.ஜ.க-வோ, வள்ளுவருக்குக் காவி அடித்துக்கொண்டும், நமீதா, ராதாரவி எனக் கோடம்பாக்கத்தினருக்கு வலைவிரித்துக்கொண்டும் தாமரையை மலரவைக்கப் படாதபாடுபடுகிறது. இந்நிலையில், தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசனைச் சந்தித்தேன்.

‘`பாகிஸ்தானுக்கு எதிராக துல்லியத் தாக்குதல் நடத்தி வெற்றி பெறுகிற பா.ஜ.க., வெங்காய விலையேற்றத்தைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறதே..?’’

“வெங்காயத் தட்டுப்பாடு என்பது, இயற்கையாக ஏற்பட்ட ஒரு தற்காலிகப் பிரச்னைதான். பதுக்கலைக் கண்டுபிடித்து மீட்டெடுப்பது, இறக்குமதி செய்வது என அரசாங்கம் முயற்சிகள் எடுத்துவருவதால், விரைவிலேயே சூழ்நிலை சரியாகிவிடும்.

 “பாக்கெட் பால் என்பது பன்றியின் பாலாகவும் இருக்கலாம்!”
“பாக்கெட் பால் என்பது பன்றியின் பாலாகவும் இருக்கலாம்!”

வெள்ளம், வறட்சி ஆகியவற்றால் உற்பத்தி பாதிக்கப்படுவதால் இதுபோன்ற சூழல் ஏற்படுகிறது. இதற்கும் அரசாங்கத்துக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை. இதற்கிடையில், சில வியாபாரிகள் பதுக்கலில் ஈடுபடுவதாலும் செயற்கையான பஞ்சம் ஏற்படுகிறது. இந்தப் பதுக்கல் வியாபாரிகளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை மாநில அரசுகள்தான் செய்யவேண்டும். அடுத்ததாக, இதுபோன்று குறிப்பிட்ட பொருள்கள் கிடைப்பதில் பஞ்சம் ஏற்படும்போது, அவற்றின் பயன்பாட்டை 2, 3 மாதங்களுக்குத் தள்ளிப்போட்டுக்கொள்கிற மனப்பான்மையும் மக்களிடையே ஏற்பட வேண்டும்! ஆனாலும் இப்போதைய சூழலில், மக்களை நோக்கி இந்த அறிவுரையை வைக்க முடியாது. ஏனெனில், அரசைக் கேள்வி கேட்பது அவர்களது உரிமை!’’

‘`வெங்காய விலையுயர்வு பற்றிய கேள்விக்கு, ‘நான் வெங்காயம் பற்றி அதிகம் கவலைப்படாத குடும்பத்திலிருந்து வந்தவர்’ என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பதை என்னவென்று புரிந்துகொள்வது?’’

“வட மாநிலங்களில் அவர்களது உணவுப் பொருள்களில் தவிர்க்கமுடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது வெங்காயம். காரணம் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தி சமநிலைப் படுத்துவதற்கு அங்கே வெங்காயம் கட்டாயத் தேவையாக இருக்கிறது. கேரள மாநிலத்தவர் களுக்குத் தேங்காய் இல்லாமல், எப்படி சமையல் செய்யமுடியாதோ, அதேபோல் வட மாநிலத்தவர் களுக்கு வெங்காயம் இருக்கிறது.

 “பாக்கெட் பால் என்பது பன்றியின் பாலாகவும் இருக்கலாம்!”

ஆனால், தமிழ்நாட்டில் வெங்காயத் தட்டுப்பாட்டினால், பெரிய அளவில் பிரச்னைகள் கிடையாது. ஆக, தமிழ்நாட்டுக் குடும்பத்திலிருந்து வந்திருப்பவர் என்ற முறையில், ‘தமிழ்நாட்டில் வெங்காயம் என்பது அத்தியாவசியம் கிடையாது’ என்ற கருத்தைத்தான் நிதி அமைச்சர் சொல்லியிருக்கிறார். ஆனால், அவரது பொறுப்பான பதில், இங்கே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.’’

‘`மக்களால் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரக்யா சிங், ‘கோட்சே தியாகி’ என்று பேசுவதையும் ‘பாலில் தங்கம் கலந்திருக்கிறது’ என்று பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் பேசுவதையும் எப்படி நியாயப்படுத்துவீர்கள்?’’

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருந்தாலும்கூட அவரும் கோடானுகோடி மக்களில் ஒருவர்தான். அந்த ஒருவரும்கூட கட்சிக்குக் கட்டுப்பட்டு, இப்போது அந்தக் கருத்தை வாபஸ் வாங்கிவிட்டார். எப்போதுமே விதிவிலக்குகளை விதியாக மாற்றி பிரச்னை செய்யக்கூடாது. அடுத்ததாக, பசும்பாலில் தங்கம் இல்லாவிட்டாலும் தங்கத்துக்கு உண்டான தன்மை குறிப்பிட்ட சதவிகிதம் இருக்கிறது என்பது ஆய்வு செய்து அறியப்பட்ட உண்மை. அதாவது நம் நாட்டில் உள்ள திமில் கொண்ட நாட்டு மாடுகளின் பால்தான் உண்மையான பசும்பால். பால் கறவைக்காகவே வெளிநாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட திமில் இல்லாத மாடுகள் எல்லாம் மாடுகளே அல்ல... அவை அதிகப்படியான பால் கறவைக்காகவே பன்றியையும் மாட்டையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட புதிய இனம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். எனவே இவை பன்றிக்குச் சமம். நாம் இன்றைக்குக் குடித்துக் கொண்டிருக்கும் பாக்கெட் பால் என்பது திமில் இல்லாத மாடுகளின் பால்தான் என்றால், அவை உண்மையிலேயே பன்றிகளின் பால்தான் என்றும் சொல்கிறார்கள். யாரையும் பயமுறுத்து வதற்காக நான் இதைச் சொல்லவில்லை.’’

‘`சமீபத்தில் தி.மு.க-வில் இணைந்த பி.டி.அரசகுமார், ‘ஸ்டாலினைப் புகழ்ந்ததற்காக, கேட்கக்கூடாத வார்த்தைகளையெல்லாம் கேட்டுவிட்டேன்’ என்று நொந்துபோய்ச் சொல்லியிருக்கிறாரே?’’

‘`நேற்றுவரை எங்கள் கட்சியில் இருந்த ஒருவர், இன்று கட்சியை விட்டு விலகிப்போய்விட்டார் என்பதற்காக அவரைப் பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்வதென்பது எங்களுடைய பண்பாட்டுக்கு உகந்ததல்ல!’’

‘`பஞ்சமி நிலப்பிரச்னையில் ஆதாரமே இல்லாமல், ‘முரசொலி அலுவலகத்துக்குப் பூட்டுப்போட வேண்டும்’ என்று நீங்கள் பேசியது சரிதானா?’’

‘`பா.ஜ.க-வைச் சேர்ந்த பேராசிரியர் சீனிவாசன்தான் இது சம்பந்தமான வழக்கைத் தொடுத்திருக்கிறார். தற்போது நீதிமன்றமும் இந்த வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், வழக்கு தொடர்ந்த சீனிவாசன் மற்றும் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆகியோர்மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதனால், இந்தக் குற்றச்சாட்டில் ஏதோ உண்மையிருக்கிறது என்றுதான் பொருள். ஆனாலும் நான் அதைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை. நீதிமன்றமே அதைப் பார்த்துக்கொள்ளட்டும்.’’

‘`மகாராஷ்டிராவில் அமித்ஷாவின் ராஜதந்திரம் தோற்றுவிட்டதே?’’

‘`என்ன செய்வது... ராஜதந்திரம் என்பது எல்லா நேரத்திலும் வெற்றிபெறும் என்று சொல்லமுடியாதே. ஒருசில நேரங்களில் எதிர்பாராததும் நடக்கும். இந்த விளையாட்டுகளை எல்லாம் விட்டுவிட்டுப் பார்த்தால், சிவசேனா வெறும் 54 இடங்களை மட்டுமே வென்றிருக்கிறது.

Amit Shah
Amit Shah

பா.ஜ.க 100 இடங்களுக்கும் மேலாக வெற்றி பெற்ற கட்சி. எனவே தார்மிக அடிப்படையில் பா.ஜ.க தலைமையில் ஆட்சி அமைவதுதான் நியாயம்!’’

‘` `எனக்குக் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது; ஆனால், நான் மாட்ட மாட்டேன்’ என்கிறாரே ரஜினிகாந்த்?’’

‘`காவி என்பது தியாகத்தைக் குறிக்கக்கூடிய புனிதமான நிறம். நமது தேசியக் கொடியிலும்கூட காவி வண்ணம் இருக்கிறது. ஆக, ‘எனக்குக் காவி சாயம் பூசாதே’ என்று யாரேனும் சொன்னால், ‘என்னைத் தியாகி என்று சொல்லாதே; அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை’ என்று சொல்வதாகத்தான் அர்த்தம். ஆனால், ரஜினிகாந்த் இப்படி யோசித்தெல்லாம் அந்த வார்த்தையைச் சொல்லவில்லை. நிருபர் யாரோ கேட்டதற்கு, சும்மா விளையாட்டுத்தனமாகச் சொல்லிவிட்டுப் போனாரே தவிர, அவர் அப்படிச் சொல்கிறவரும் அல்ல.’’

‘`பா.ஜ.க தலைவரைத் தேர்வு செய்வதில் காலதாமதம் ஆவதன் பின்னணிதான் என்ன?’’

‘`நாடு முழுக்கவே பா.ஜ.க கட்சி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேரம் இது. எனவே, டிசம்பர் 10 அல்லது 15-ம் தேதிக்குள் தமிழக பா.ஜ.க தலைவர் யார் என்பதைத் தேர்ந்தெடுத்து விடுவோம். எனவே, வருகிற ஆங்கிலப் புத்தாண்டில் புதிய தலைவரைப் பார்க்கலாம்!’’

‘`திருமாவளவன் குறித்து காயத்ரி ரகுராம் தனிநபர் தாக்குதல் நடத்தியதை ஆதரிக்கிறீர்களா?’’

‘`திருமாவளவன் எனக்கும் நல்ல நண்பர். நான் மதிக்கக்கூடியவர். ஆனாலும் அவர் சில நேரங் களில் தவறான வார்த்தைகளைப் பேசிவிடுகிறார். ஒரு கட்சிக்குத் தலைவராக இருக்கக்கூடியவரே அப்படிப் பேசுகிறார் என்றால், அந்தக் கட்சியில் இருக்கக்கூடிய சாதாரணத் தொண்டன் அதைவிடவும் அதிகமாகப் பேசுவதென்பது இயற்கை. எனவே, திருமாவளவன் பேசும்போது வார்த்தைகளில் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதை அவரும்கூட ஒப்புக்கொள்வார்.’’

‘`இந்து ஒற்றுமை பேசும் பா.ஜ.க., தீண்டாமைச்சுவர், ஆணவக்கொலை உள்ளிட்டவற்றுக்கு எதிராக எங்காவது களமிறங்கியதுண்டா?’’

‘`நாங்கள் தொண்டு செய்யத்தான் போகிறோம்; கிளர்ச்சி செய்ய அல்ல. வெள்ளம் வறட்சி போன்ற பாதிப்புகளின்போது, மற்ற கட்சியினர் ‘நிவாரணம் கொடு’ என்று அரசை வலியுறுத்திக் கொடி பிடிப்பார்கள். ஆனால், நாங்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி அந்த மக்களுக்கு உதவ ஆரம்பித்துவிடுவோம். பிரச்னைகளை முன்வைத்து அரசியல் செய்வதை நாங்கள் எப்போதுமே விரும்புவதில்லை!’’

‘`ஊழல் இல்லாத கட்சி என்று சொல்லிக்கொள்ளும் பா.ஜ.க, ஒவ்வொரு மாநிலத்திலும் குதிரைபேரத்தில் ஈடுபடுகிறதே, இது ஊழலில்லையா?’’

“முதலில், குதிரைபேரம் என்பதே ஊழல் என்று அர்த்தமாகாது. தேர்தலில், எந்தக் கட்சி பெரும்பான்மை பெற்றிருக்கிறதோ அந்தக் கட்சிதான் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும். அதுதான் மக்களின் விருப்பம். எனவே, மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, மெஜாரிட்டியை நிரூபிப்பதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டியதிருக்கிறது.

 “பாக்கெட் பால் என்பது பன்றியின் பாலாகவும் இருக்கலாம்!”

‘என்னோடு துணைக்கு வந்தால், உங்கள் கட்சிக்கும் இரண்டு அமைச்சர் பதவிகள் கொடுக்கிறோம்’ என்கிறோம். மற்றபடி நாங்கள் யாரிடமும் லஞ்சம் வாங்கவும் இல்லை; கொடுக்கவும் இல்லை. ஆட்சிப் பொறுப்புகளில் எதையாவது கொடுத்துத்தானே மற்றவர்களையும் பங்குகொள்ளச் செய்யமுடியும். எனவே, இதெல்லாம் பேரம் இல்லை... பேச்சுவார்த்தை!’’

தமிழிசை
தமிழிசை

`` ‘தாமரை மலர்ந்தே தீரும்’ என்று சொன்ன தமிழிசையும் தமிழக அரசியலை விட்டுச் சென்றுவிட்டார். தமிழகத்தில் எப்போதுதான் தாமரை மலரும்?’’

‘`ஒரு தனி நபரை மட்டுமே நம்பியிருக்கக்கூடிய கட்சியல்ல பா.ஜ.க. ஆனால், தமிழிசை சௌந்தரராஜன் சொன்னது உண்மை. அவர் சொன்னதுபோலவே தாமரை மலர்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் மலர்ந்தே தீரும்! அதில் சந்தேகமே இல்லை. உங்கள் கண்ணாலேயே நீங்கள் பார்ப்பீர்கள்!’’ (பலமாக சிரிக்கிறார்)