Published:Updated:

``காங்கிரஸ், திமுக-வினர் புள்ளையை ஒழுங்கா வளர்க்குறாங்க... பதவிக்கு வர்றாங்க"-சொல்கிறார் துரைமுருகன்

துரைமுருகன்

அறுபது ஆண்டு அரசியல் அனுபவத்துடன், 10-வது முறையாக எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் தி.மு.க பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன். அவரிடம் இன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்தும், தி.மு.க-வின் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் பேசினோம்.

``காங்கிரஸ், திமுக-வினர் புள்ளையை ஒழுங்கா வளர்க்குறாங்க... பதவிக்கு வர்றாங்க"-சொல்கிறார் துரைமுருகன்

அறுபது ஆண்டு அரசியல் அனுபவத்துடன், 10-வது முறையாக எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் தி.மு.க பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன். அவரிடம் இன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்தும், தி.மு.க-வின் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் பேசினோம்.

Published:Updated:
துரைமுருகன்

``தி.மு.க-வின் தொடர் பயணத்துக்கு அடிப்படைப் பாலமாக எதை கருதுகிறீர்கள்?”

``ஒன்று கொள்கை பலம்... இரண்டாவது பல துரோகங்களை சந்தித்தபோதும்; பல அடக்கு முறைகளுக்கு ஆளானபோதும், தேர்தல் தோல்விகள் தொடர்ந்து தாக்கங்கள் நடத்தியபோதும், கட்சியின் கட்டுக்கோப்பு சிதையாமல் இயக்கத்தை கட்டிக்காத்த தலைவர்கள் அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோருடைய பணி முக்கியமான காரணமாகும். அதோடு இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட தொண்டர்களின் மன வலிமையும் ஒரு காரணம். மூன்றாவதாக, இருபெரும் தலைவர்களுக்குப் பின்னால் அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிற தளபதி மு.க.ஸ்டாலின் ஓர் இளைஞர் அணியை உருவாக்கி கட்சி நடத்தும் கலையை இளமையிலேயே பெற்றிருக்கிறார்.

கலைஞர் கருணாநிதி- அண்ணா
கலைஞர் கருணாநிதி- அண்ணா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதுமட்டுமல்லாமல் அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரிடத்தில் முறையான பயிற்சி பெற்றிருக்கிற காரணத்தால் இயக்கத்தை கலைஞருக்குப் பிறகு கொஞ்சம்கூட சிதையாமல், இன்னும் சொல்லப்போனால் முன்பைவிட வலிமையோடு கட்சியை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். இந்தக் காரணங்களால்தான் தி.மு.க தொடர் பயணத்தில் இருக்கிறது. இந்தப் பயணம் தொடரும்.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``திராவிடம் என்பது தமிழ்நாட்டைத் தாண்டி வேறு எங்கும் எதிரொலிக்கவில்லையே ஏன்?”

“திராவிடம் என்ற பெயர் வேண்டுமானால் தமிழ்நாட்டைத் தாண்டி வேறெங்கும் ஒலிக்காமல் இருக்கலாம். ஆனால், திராவிடம் என்ற கொள்கையின் அடிப்படையை இப்போது மற்ற மாநிலங்கள் புரிந்திருக்கின்றன. தி.மு.க-வின் அடிப்படைக் கொள்கையான திராவிடத்தில்  ‘மாநில சுயாட்சி’ கேட்கிறோம். இன்று எல்லா மாநிலங்களிலும் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு மொழி இன்னொரு மொழி மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பது திராவிடத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்று. அது ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இந்தி பேசாத மாநிலங்களில் அந்தக் கொள்கை சற்று பரவத் தொடங்கியிருக்கிறது.

ஸ்டாலின் மம்தா
ஸ்டாலின் மம்தா

அதுமட்டுமல்லாமல் திராவிடம் என்பது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் உருவாகி அங்கேயே நிலைபெற்றுக்கொண்டிருந்த ஒன்று என்கிற காலம் போய், மொகஞ்சதாரோ-ஹரப்பாவை ஆராய்ச்சி செய்தவர்கள் ‘அது திராவிடத்தின் சாயல்தான். இந்தியா முழுவதும் பல இடங்களில் ஒத்திருக்கிறது’ என்கிறார்கள். சில இடங்களில் புதைபொருள்களைத் தோண்டி எடுக்கும்போது அதன் குறியீடுகளும் பொருந்திப்போகின்றன. எனவே, ஒரு மையமாக ஆரம்பித்த ஒன்று, இன்றைக்கு அகில இந்தியாவில் பரவலாகியிருக்கிறது. விரைவில் எல்லா இடங்களிலும் ஒன்றுபட்ட கொள்கைக்கு ஒன்றாகிற நிலைமை உருவாகும்.”

``மாநில சுயாட்சி என்பதை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறதா?”

“வலியுறுத்துகிறதா இல்லையா என்பதில்லை. வலியுறுத்த வேண்டும், அதில் சட்டத் திருத்தம் வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை.”

“மாறிவரும் நவீனகால அரசியல் சூழலை ஒரு மூத்த அரசியல்வாதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்?”

(அவருக்கே உரித்தான சிரிப்புடன்...) ``1962-ல் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்போது மேடை ஏறி பேச ஆரம்பித்தவன், இன்று வரையில் அந்தப் பணியில் தொடர்கிறேன். பிறகு 1971-ல் சட்டமன்றம் வந்த நான் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக இருக்கிறேன். அதில் நான்கு முறை அமைச்சர். இந்த 71-க்கும், 2022-க்கும் இடையில் அரசியலில் அநேக மாற்றங்கள். அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், சக்கரவர்த்தி ராஜ கோபாலாச்சாரியார், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமமூர்த்தி, தலைவர் மா.பொ.சி., தலைவர் ஜீவானந்தம், சி.சுப்ரமணியம், பக்தவத்சலம், கலைஞர் கருணாநிதி, சங்கரய்யா போன்ற பெரும் தலைவர்கள் அரசியலில் இருந்த காலம். ஆனால், அவர்கள் மத்தியில் வேறுபட்ட கொள்கைகள் இருந்தாலும் ஒவ்வொருவரோடும் பண்போடு பழகுகிற பழக்கம் அந்தக் காலத்தில் இருந்தது.

மு.க.ஸ்டாலின் - துரைமுருகன்
மு.க.ஸ்டாலின் - துரைமுருகன்

இதற்கு இரு உதாரணங்களைச் சொல்லாலாம். ஒன்று கலைஞருடைய தாயார் இறந்துவிட்டார்கள். அப்போது கலைஞர் வட சென்னை பகுதியில் பேசிக்கொண்டிருக்கிறார். அவருக்கு மேடையில் துண்டுச்சீட்டு தரப்படுகிறது. ஆனால், அந்தச் கூட்டத்தை முடித்துவிட்டுத்தான் வந்தார். அவர் வருவதற்கு முன்பு அப்போதைய முதலமைச்சர் காமராஜர், கலைஞருடைய அம்மா அருகில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தார். அந்தப் பண்பாடு இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, காமராஜர் அவர்கள் தோற்றுப்போனபோது நான் அண்ணாவின் பக்கத்திலிருந்து பார்த்தவன். அண்ணா வெற்றி பெற்றதைப் பற்றி ஏதும் பெரிதாக எடுக்காமல் இருந்தார். யார் துண்டு போட வந்தாலும் வாங்கவே இல்லை. ‘நான் ஒரு தப்பு பண்ணிட்டேன். காமராஜருக்கு எதிரான வேட்பாளரை போட்டிருக்கக் கூடாது’ என்று தனியாக உட்கார்ந்து அழுதுகொண்டே சொன்னார், ‘மாணவர்கள், ஸ்ரீனிவாசன் எல்லாம் சொல்லி என்னைச் சற்று தடுமாறவைத்துவிட்டார்கள். எவ்வளவு பெரிய இழப்பு தமிழ்நாட்டுக்கு...’ என்று அந்தப் பிரச்னையை மனிதாபிமானத்தோடு அணுகினார். இப்படி ஒருவருக்கொருவர் கண்ணியத்தோடு இருந்தார்கள். பொய்யான அரசியல், கீழ்த்தரமாகப் பேசுவது, வீண் புகார்களைக் கொடுப்பதெல்லாம் அந்த அரசியலில் இல்லை. இன்றைக்கு அது எல்லாம் பொய்யாய், பழங்கதையாகப் போய்விட்டது. அதிலும் எம்.ஜி.ஆர் காலம் வரை அந்த நாகரிகம் நீடித்தது. ஜெயலலிதா வந்த பிறகுதான் எல்லாம் மாறின. அந்தக் கலாசாரம் குறைந்து, எடப்பாடி வந்ததும் தளர்ந்திருக்கிறது. அந்தக் காலத்தில் இருந்த நாகரிக அரசியல் மீண்டும் வர வேண்டும் என்பதுதான் என்னுடைய கவலை.”

அண்ணா - பெரியார் - காமராஜர்
அண்ணா - பெரியார் - காமராஜர்

“இன்றைய டிஜிட்டல் யுகத்தில் உங்களின் இருப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

``ஒருகாலத்தில் தியாகங்கள் புரிவதில் மக்களுக்கு ஈர்ப்பு சக்தி இருந்தது. அது குறைந்த பிறகு தேவைப்பட்டால் சிறைச்சாலை, இல்லாவிட்டால் மக்களிடத்தில் கொள்கை பரப்புகிற வேலை என்றானது. அப்போதெல்லாம் இந்தப் பேச்சுக்கலைக்கு ஒரு மகத்துவம் இருந்தது. யார் பேசுகிறார்களோ அவர்கள் பக்கம் கூட்டம் வந்துவிடும். அப்படித்தான் தி.மு.க பக்கம் வந்தது. இப்போது வளர்ந்திருக்கிற சமுதாயத்தில் கூட்டத்துக்கு வரத் தேவையில்லை. எல்லோர் வீடுகளுக்கும் டி.வி போய்விட்டது. அதுமில்லாம வாட்ஸ்அப்-னு ஒண்ணு இருக்கு. ஐய்யய்யோ... மூச்சுவிடுறதுக்கு முன்ன 81 மூச்சுவிட்டாங்கனு போட்டுவிட்டுடுறாங்க. அந்த அளவுக்கு வேகமா இருக்கு. ஒரு மீட்டிங் பேசப் போனோம்னா 7 மணிக்கு போயிருவோம். என்னை பேச 9 மணிக்கு கூப்பிடுவாங்க. இந்த 7 மணிக்கும், 9 மணிக்கும் இடையில என்ன நடந்ததுனு எனக்குத் தெரியாது. நான் பேசும்போது ’விரைவில் ராஜபக்‌சே வீட்டுக்குப் போவார்’னு சொல்லிட்டு இருப்பேன்.  ‘சார் போயாச்சு எட்டரைக்கே’னு கீழ இருந்து சொல்றாங்க. பேசுகிறவர்கள் சொல்வதைவிட பார்வையாளர்கள் சொல்றாங்க.  இது விஞ்ஞானத்தின் வளர்ச்சி. ஆனால், பேசுகிறவர்கள் ஒரு பாயின்டுக்காகப் பல புத்தகங்களைப் படித்து அதைக் கொண்டுவந்து பேசுவார்கள். அது அறிவுவிருத்திக்கு போகும். இப்போது ஒன்றை மட்டும் எடுத்து பார்ப்பதால் ‘ஒன்வேர்டு ஆன்சர்’ மாதிரிதான் போய்கொண்டிருக்கிறது. விரிவான விளக்கம் கிடையாது. எனவே பேச்சு என்பது பெரிய வகுப்பு மாதிரி. அதைத்தான் ‘மாலை நேரக் கல்லூரி’ என்றார் அண்ணா. ஆனால், இன்று கல்லூரிகளெல்லாம் சுருங்கிவிட்டது. விஞ்ஞானத்தை ஒரு வகையில் பாராட்டினாலும், அறிவை சுருக்கிவிடக் கூடாது.”

ஜல்லிக்கட்டு போராட்டம்
ஜல்லிக்கட்டு போராட்டம்

“மாணவர் எழுச்சியின் வழியாக அரசியலை வந்தடைந்த நீங்கள் தற்போதுள்ள மாணவர்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தி?”

“இப்போது இருக்கும் மாணவர்களிடம் ஓர் எழுச்சி, வேகம் இருக்கிறது. அதில் எனக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால், அன்றைய மாணவரகளிடத்தில் அரசியலில் அதிக நாட்டம்  இருந்தது. ஒவ்வொருவரும் அதில் ஊறி அந்தக் கட்சிகளுக்காகத் தன்னை அர்பணித்துக்கொண்டார்கள். எங்களுடைய காலமெல்லாம் அதுதான். இன்றைக்கு இருப்பவர்களுக்கு விஞ்ஞான வளர்ச்சி வந்த காரணத்தால் எதிலும் ஒரு வேகம் காட்ட வேண்டும் என்று மட்டும் துடிக்கிறார்கள். அது அடிப்படை இல்லாமல் அன்றன்றைக்குக் காரியம் சாதிப்பதுபோல் ஆகிவிடக் கூடாது. மாணவர்களின் உணர்ச்சியை, வேகத்தை, விஞ்ஞானத்தோடு ஒட்டிப் போக வேண்டும் என்கிற ஆர்வத்தை மதிக்கிறேன். ஆனால், அதேநேரத்தில் சமூதாய நிலை குறித்து, மொழி குறித்து சிந்திக்க வேண்டும் என்பது என் தாழ்மையான எண்ணம்.”

``பா.ஜ.க ஒவ்வொரு கல்லூரியாகச் சென்று களமாடி வருகிறது. தி.மு.க அதில் பின்தங்கியிருக்கிறதா?”

``அவங்க இப்பதான் புதுக்கடை வைக்கிறார்கள். புதுக்கடை வைக்கிறவன் வீடு, வீடா போய் நோட்டீஸ் கொடுப்பான். பழைய கடைக்காரன் கொடுக்க மாட்டான். அது மாதிரி புது வேகம். போய் கொடுக்கிறார்கள். அது எந்த அளவுக்கு எடுப்படும் என்பது தெரியவில்லை. இருந்தாலும், அதைச் சாதாரணமாக கருதக் கூடாது. ஒருகாலத்தில் தி.மு.க-வில் இருந்த வேகம் இப்போதும் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.”

பிரதமர் மோடி  - முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்

``தனிநபராக மோடி... பிரதமர் மோடி... உங்கள் பார்வையில்?”

“மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோதிருந்தே எனக்கு நன்கு அறிமுகம். அவருடைய வளர்ச்சி மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. குஜராத்தில் எங்கேயோ ஒரு ரயில் நிலையத்தில் டீ விற்றுக்கொண்டிருந்தவர், மன உறுதி, கொள்கைப் பிடிப்பு, சளைக்காத ஆர்வம் இருந்ததால், இன்று நாட்டிலேயே மிகப்பெரிய பதவிக்கு வந்திருக்கிறார். பாராட்டுகிறேன். ஆனால்... நாட்டின் பிரதமராக அவரின் செயல்பாடு எனக்குச் சுத்தமாக பிடிக்கவில்லை. குறைந்தபட்சம் நாடாளுமன்றத்துக்குக்கூட அவர் வருவதில்லை. நேரு உள்ளிட்ட பிரதமர்கள் நாடாளுமன்றத்துக்குக் காலையில் வந்தால், இரவு பத்து மணி வரை இருப்பார்கள். ஆனால், இவர் வருவதுமில்லை. வந்தாலும் ஒரு கேள்விக்குக்கூட பதில் சொல்வதுமில்லை.”

“ ‘அடுத்த 40 ஆண்டுகள் பா.ஜ.க காலம்தான். தெற்கு நோக்கிய எங்கள் செயல்திட்டம் தொடங்கிவிட்டது’ என்று அமித் ஷா கூறியிருக்கிறாரே?”

“தமிழ்நாட்டில் எல்லா அரசியல் கட்சிகளும் வளர வழி இருக்கிறது. ஆனால், மதவாதக் கட்சியான பா.ஜ.க-வால் இங்கு வளர முடியாது. இந்த மண் பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட மண். சுயமரியாதை மண். இந்த மண்ணில் அவர்கள் கால்பதித்தால், கால்கள்தான் வேகுமே தவிர, மண்ணுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. எனவே, அமித் ஷா சொல்வதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.”

நரேந்திர மோடி - அமித் ஷா
நரேந்திர மோடி - அமித் ஷா

``வாரிசு அரசியல் குற்றச்சாட்டை பா.ஜ.க தொடர்ந்து முன்வைத்துக்கொண்டேயிருக்கிறதே?”

“இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் காங்கிரஸ், தி.மு.க-வில் இருப்பவர்கள் புள்ளையை ஒழுங்க வளர்க்குறாங்க. ஒழுங்கா பதவிக்கு வர்றாங்க. பா.ஜ.க-வில் சரியாக வளர்க்கவில்லை. அதற்கு நாங்கள் என்ன செய்வது... அதேபோல் இது முடிசூடும் முடியரசு காலமும் இல்லை. யாரும் அவர்களுடைய மகனை அரசியலில் தலைவராக்கிவிட முடியாது. முதலமைச்சராக்கிவிட முடியாது. அதுக்குத் திறமை இருக்க வேண்டும். அந்தத் திறமையை அந்தப் பசங்க வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நிலைக்கும். இல்லையென்றால் சரிந்துவிடும். ஸ்டாலின் இருக்கிறார் என்றால் அவரின் அர்ப்பணிப்பு, ஈடுபாடுதான் இன்று ஒரு தலைவராக்கியிருக்கிறது. மகன் என்கிற காரணத்தினாலேயே இந்தத் தியாகங்களைப் புறந்தள்ளிவிட முடியாது.”

“அ.தி.மு.க-வின் இன்றைய நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அ.தி.மு.க இப்படித்தான் போகும் என்று தெரியும். எம்.ஜி.ஆர் என்னை வளர்த்தவர். படிக்கவைத்தவர். எனது புராகரஸ் கார்டில் அவர்தான் கையெழுத்துபோடுவார். அதை நான் மறுக்கவில்லை. அவர் என்னைத் தனியாக அழைத்து, ‘உனக்கு எந்தப் பதவி வேணும்னு சொல்லுடா’ என்று கேட்டார். ‘இல்லைண்ணே வேணாம். எனக்கு மந்திரியாகி பணம் சம்பாதிக்கணும்னு ஆசை எல்லாம் இல்லை. நான் ஏதோ ஒரு லட்சியத்தோடு வந்தேன். என் கட்சி தி.மு.க., என் தலைவர் கலைஞர்’ என்று சொன்னபோது , ‘அப்ப நான் என்ன...’ என்று கேட்டார். உடனே அவர் காலைப் பிடிச்சு, ‘ நீங்க வாழவைத்த தெய்வம் அண்ணா’ என்றேன். கடைசிவரை என்னிடம் அன்பாக இருந்தார். என் நெஞ்சில் ஒரு நன்றிக்குரிய மனிதராக நிலைத்திருப்பவர் அண்ணன் எம்.ஜி.ஆர். ஆனால், அவர் கட்சி ஆரம்பித்தது தப்பு என்பது என் கொள்கை. ‘நீங்க இருக்குற வரைக்கும்தாண்ணே கட்சி இருக்கும். அதுக்கப்பறம் பாருங்கண்ணே...’ என்று அவரிடமே சொல்லியிருக்கிறேன். அவரின் கடைசி காலத்தில் அந்த நிலைக்குத்தான் வந்தார். எங்களைத் திட்டியே ஏன் ஓர் அரசியல் கட்சி பண்ணக் கூடாது... அதைத்தான் ஜெயலலிதா வந்த பிறகு தொடர்ந்தார். இப்போது அந்தக் கட்சிக்கு ஆளுமையுள்ள தலைவர்கள் இல்லை. எல்லோரும் ஒரே ரேங்க்கில் இருப்பவர்கள் என்பதால்தான் பிரச்னை வெடித்துக்கொண்டேயிருக்கிறது.”

அதிமுக - ஓபிஎஸ். - இபிஎஸ்
அதிமுக - ஓபிஎஸ். - இபிஎஸ்

“அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து உங்கள் மதிப்பீடு?”

“நான் பாராட்டுகிறேன்... தனிமனிதனாக இருந்து சளைக்காமல் பேசுகிறார், போகிறார், வருகிறார். அவர் பேசும் கருத்தில், கொள்கையில் மாறுபாடு இருக்கலாம். ஆனால், அவரின் ஆர்வத்தை, வேகத்தை மெச்சுகிறேன்.”

அண்ணாமலை
அண்ணாமலை

``தி.மு.க உட்கட்சித் தேர்தல் குளறுபடிகள் தொடர்கின்றனவே?”

“தி.மு.க பெரிய கட்சி. ஏகப்பட்ட பதவிகள் இருக்கின்றன. இப்போது ஆளுங்கட்சி வேறு. அதனால் போட்டிக்குக் குறைவே இருக்காது. போட்டி இருந்தால்தான் அது ஆரோக்கியமான கட்சி. பதவிகள் எல்லாருக்கும் எளிதாகக் கிடைத்துவிட்டால், சிக்கல் இருப்பதாகவே பொருள். அதனால், இந்தக் குளறுபடிகள் கட்சியின் வளர்ச்சியையே காட்டுகின்றன.”