Published:Updated:

``எனக்கு மறுக்கப்படும் பதவியை உதயநிதியுடன் ஓராண்டு பழகியவருக்குக் கொடுப்பது நியாயமா?”- கு.க.செல்வம்

கு.க.செல்வம்
News
கு.க.செல்வம் ( Photo: Srinivasulu / Vikatan )

"தலைவர் கலைஞர் உயிரோடு இருந்தபோது ஒருமுறை அவரே என்னை அழைத்து அன்பழகனுக்கு மாவட்டச் செயலாளர் பதவியை விட்டுக்கொடு என்று சொன்னார். நானும் மறுப்பேதும் சொல்லாமல் விட்டுக்கொடுத்தேன்."

தி.மு.க-விலிருந்து பா.ஜ.க தூண்டில் போட்டுக்கொண்டிருக்கும் லிஸ்டில் லேட்டஸ்ட் மீன். டெல்லி சென்று பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்ததால் தி.மு.க-வின் தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் கு.க.செல்வம்.

அறிவாலயத்துக்கு தினமும் வந்து பழக்கப்பட்ட கு.க.செல்வம், இப்போதெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பி ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பி்னர் அலுவலகத்துக்கு விசிட் செய்கிறார். தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இப்போதுவரை உள்ள கு.க.செல்வம், பேட்டி வேண்டும் என்றதும் அந்த அலுவலகத்துக்கே நம்மை வரச் சொன்னார். வாசலில் அமர்ந்திருந்த நமக்கு காபியுடன் கையில் ஒரு புத்தகத்தையும் திணித்துச் சென்றார்கள் அவருடைய உதவியாளர்கள். குழந்தை முருகனின் அழகு புகைப்படத்துடன் 'வெற்றிவேல் வீரவேல் - கந்த சஷ்டி கவசம்’ என்றது புத்தகம். "எந்தக் கட்சியிலும் சேரவில்லை என்று சொல்கிறீர்கள்... ஆனால் பிரதமர் மோடி, பா.ஜ.க தமிழகத் தலைவர் முருகன் இருக்கும் கந்த சஷ்டி கவசம் புத்தகத்தை, தி.மு.க சார்பாக ஜெயித்து அமர்ந்திருக்கும் சட்டமன்ற அலுவலகத்தில் வைத்தே விநியோகம் செய்கிறீர்களே...” என்று நான் கேட்டதும் சிரிப்பை மட்டும் பதிலாகக் கொடுத்து... “அடுத்த கேள்வி?” என்றார்.

கு.க.செல்வம் - நட்டா சந்திப்பு
கு.க.செல்வம் - நட்டா சந்திப்பு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“தி.மு.க தலைமையின் குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்த உங்களுக்கு தலைமை மீதான அதிருப்திக்கு காரணம் என்ன?”

“தலைவர் கலைஞர் உயிரோடு இருந்தபோது ஒருமுறை அவரே என்னை அழைத்து அன்பழகனுக்கு மாவட்டச் செயலாளர் பதவியை விட்டுக்கொடு என்று சொன்னார். நானும் மறுப்பேதும் சொல்லாமல் விட்டுக்கொடுத்தேன். அதனடிப்படையில் அன்பழகன் மறைவுக்குப் பிறகு, அந்தப் பொறுப்பைக் கேட்டு தலைமைக்குக் கடிதம் எழுதினேன் அதற்கு எந்தப் பதிலும் இல்லை. தலைவர் குடும்பத்தின் அழுத்தம் என்னை மாவட்டப் பொறுப்பாளர் பதவியில் நியமிக்க தடையாக இருந்திருக்கலாம்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“குடும்பம் என்றால் யாரையெல்லாம் சொல்கிறீர்கள்?”

“தலைவர் ஸ்டாலினின் மகனேகூட அப்பாவிடம் எனக்கு பதவி கொடுக்கக் கூடாது என்று சொல்லியிருக்கலாம். முதலில் தாத்தா சொல்லி பதவிகள் போட்டனர். அதன்பிறகு மகன் சொல்லி... இப்போது பேரன் சொல்லி பதவிகள் நியமிக்கப்படுகின்றன. பதவி இல்லாதபோதுகூட நான் அமைதியாக இருந்தேன். ஆனால், அதன்பிறகும் மன உளைச்சல் ஏற்படுத்தும் சில நிகழ்வுகள் நடந்தன. அவைதான் என் மனமாற்றத்துக்கு காரணம்.”

“தி.மு.க மீது பல ஆண்டுகளாக குடும்ப அரசியல் குற்றச்சாட்டுள்ளது. இப்போதுதான் உங்களுக்குத் தெரிகிறதா?”

“யார்தான் பூனைக்கு மணிகட்டுவது? 10 நாள்களுக்கு முன்பே எனது பொறுப்புகளை ராஜினாமா செய்கிறேன். உறுப்பினராக மட்டும் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர்கள் அதைக்கூட ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் என் வருத்தம்.”

கு.க.செல்வம் - ஸ்டாலின்
கு.க.செல்வம் - ஸ்டாலின்

“தி.மு.க-வில் பலரும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்களே?”

“ஆமாம்! அனைத்து மாவட்டங்களிலும்... பல மட்டங்களிலும் இந்த அதிருப்தி இருக்கிறது.”

“உதயநிதி தலையீடு மட்டும் இருக்கிறதா. அல்லது சபரீசன், துர்காவின் தலையீடும் இருக்கிறதா?”

“அது எனக்குத் தெரியாது. ஆயிரம் விளக்கில் போட்டியிடச் சொல்லி, நானே உதயநிதியிடம் சொன்னதுண்டு. அவருக்கு எந்தப் பொறுப்பு வழங்குவதைப் பற்றியும் எனக்கு வருத்தம் இல்லை. ஆனால், அவரைச் சார்ந்தவர்களுக்கும் பொறுப்பு வழங்கப்படுவது கஷ்டமாக இருக்கிறது. ஸ்டாலினுடன் 25 ஆண்டுகள் நெருக்கமாகப் பழகிய எனக்கு மறுக்கப்படும் பதவி உதயநிதியுடன் ஓராண்டு பழகியவருக்கு கொடுக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? எனவேதான் தேர்தல் நடத்தி பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“துரைமுருகன், ‘பதவிக்காக நாங்கள் கட்சியில் இல்லை, கொள்கைக்காக இருக்கிறோம்’ என்று சொல்லியுள்ளாரே?”

“அப்படி என்றால் ‘பொருளாளர் பதவி போதும்... பொதுச் செயலாளர் பதவி வேண்டாம்’ ஒன்று ஓப்பனாக அவர் சொல்வாரா?”

“உதயநிதியின் இந்த ஆளுமைக்குப் பின்னால் அன்பில் மகேஷ் தலையீடு அதிகம் இருக்கிறதோ?”

“என்னுடைய விஷயத்தில் அன்பில் அப்படிச் செய்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். ஆனால், உதயநிதியிடம் சிற்றரசுக்கு பதவி வேண்டும் என்று சொல்லியிருக்கலாம், அவர் ஸ்டாலினிடம் சொல்லி பதவி வாங்கிக்கொடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.”

கமலாலயத்தில் கு.க.செல்வம்
கமலாலயத்தில் கு.க.செல்வம்

“தி.மு.க-விலிருந்து பலரும் பா.ஜ.க-வுக்கு வருவார்கள் என்று செய்திகள் பரப்பப்படுகிறது. உங்களை நம்பி தி.மு.க-வினர் யாரும் வந்தால் எந்தக் கட்சியில் அவர்களோடு இணைவீர்கள்?”

“நான் எந்தக் கட்சியில் சேரும் நிலைவருகிறதோ அந்தக் கட்சியில் அவர்களையும் இணைத்துக்கொள்வேன். இன்றைய நிலையில் நாட்டை ஒற்றுமைப்படுத்தி வலுவான நிலைக்குக் கொண்டு செல்லும் வல்லமை பா.ஜ.க-வுக்கு மட்டுமே இருக்கிறது என்பதையும் உங்கள் கவனத்தில் பதிய வைக்கிறேன்.”

“உங்களுக்கு சாக்லேட் கொடுத்து பா.ஜ.க அழைத்துச் சென்றுவிட்டது என்று உதயநிதி விமர்சித்துள்ளாரே?”

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க மிட்டாய் கொடுத்து மக்களை ஏமாற்றியது என்று அ.தி.மு.க விமர்சித்தது. அதற்கு உதயநிதி என்ன பதில் சொல்லுவாரோ அதுதான் இந்தக் கேள்விக்கு பதில்.”

“வக்ப்போர்டு இடத்தை நீங்கள் ஆக்கிரமித்துவிட்டதாகக் கூறப்படுகிறதே?''

“அந்த இடம் அண்ணா பொதுநல மன்றத்துக்கு வழங்கப்பட்ட இடம். அது என் தனிப்பட்ட இடம் அல்ல. அந்த இடத்துக்கு நாங்கள் முறையாக வரி கட்டி வருகிறோம். அதற்கான ஆவணங்களும் என்னிடம் உள்ளன.”

``மதுரவாயலில் உள்ள உங்கள் இடத்தை விற்க முடியாமல்தான் பா.ஜ.க-விடம் தஞ்சம் அடைந்தீர்களா?”

“மதுரவாயல் இடம் 40 வருடமாக பிரச்னையில் இருக்கிறது. அந்த வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு பலமுறை நான் அழைத்தே வராத எதிர்தரப்பு, பா.ஜ.க சொல்லியா வந்துவிடப் போகிறார்கள்?”

கு.க.செல்வம்
கு.க.செல்வம்

“தி.மு.க-வுக்காக பணம் நிறைய செலவு செய்துவிட்டேன் என்று சொல்லியிருந்தீர்களே?”

“ஆம்! நான் கட்சியின் வளர்ச்சிக்காக நிறைய செலவு செய்துள்ளேன். இலவச கல்விக்கும், போட்டித்தேர்வுக்கும் ஆண்டுதோறும் நான் செலவு செய்துள்ளேன். கட்சியின் பெயரில்தான் அந்த நிகழ்வுகளை நடத்தினேன். நான் செலவு செய்த தொகை பற்றி தலைமைக்குத் தெரியும்.”

“அ.தி.மு.க-விலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்ததா?”

“அப்படி ஏதும் வரவில்லை. நான் தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்று மட்டுமே இப்போது நினைக்கிறேன். முதலில் தி.மு.க தலைமை அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு பதில் அளித்துவிட்டுத்தான் அடுத்த முடிவுகளை எடுப்பேன்.”

உதயநிதி - அன்பில் மகேஷ் - ஸ்டாலின்
உதயநிதி - அன்பில் மகேஷ் - ஸ்டாலின்

“ ‘தி.மு.க-வில் பணம் வாங்கிக்கொண்டுதான் பொறுப்பு முதல் சீட் வரை வழங்கப்படுகிறது’ என்று வி.பி.துரைசாமி குற்றம்சாட்டியுள்ளாரே?”

“அது அவருடைய கருத்து. என்னிடம் யாரும் காசு கேட்டதில்லை. நானும் கொடுத்ததில்லை. வேறு யாரும் வாங்கியிருந்தால் எனக்குத் தெரியாது.”

“ஸ்டாலின் மனைவி துர்காவின் தலையீடு கட்சியில் அதிகம் இருக்கிறதா?”

“அவர்கள் குடும்பத்தினருடன் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. தலையீடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லா விவரங்களையும் இப்போது வெளிப்படையாகப் பேச விருப்பம் இல்லை” என்றவர் சிரித்தபடி முடித்துக்கொண்டார்.