
ஒடிசலான தேகம், கனத்த மூக்குக்கண்ணாடி, தும்பைப்பூ நிறத்திலான கதர் ஜிப்பா - வேட்டி, வார்த்தைகளுக்கும் வலித்து விடக் கூடாது என்ற கவனத்துடன்கூடிய மெல்லிய பேச்சு...
இவைதான் பழ நெடுமாறன்! உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனை தஞ்சாவூர், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சந்தித்தேன்...
“மதுரைதான் சொந்த ஊர். தந்தை பழநியப்பனார், மதுரை தமிழ்ச் சங்கச் செயலாளராகவும் மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் இருந்தார். அதனால், சிறுவயதிலிருந்தே தமிழின் மீதான ஆர்வம் எனக்கும் இயல்பாகிவிட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்தான் இளங்கலை (சிறப்பு) தமிழ் இலக்கியம் படித்து முடித்தேன். 25 வயது இளைஞனாக இருந்தபோதே, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்து கைதானதுதான் பொதுவாழ்க்கையில் என் முதல் படி. அதன்பிறகு பல்வேறு போராட்டங்களிலும் கலந்துகொண்டு இதுவரையிலும் 80 முறைக்குமேல் கைதாகி, சிறைவாசம் அனுபவித்திருக்கிறேன். இந்தவகையில் தமிழகத்தில் உள்ள ஒன்றிரண்டு சிறைக்கூடங்களைத் தவிர, மற்ற எல்லாச் சிறைகளிலும் இருந்த அனுபவம் உண்டு’’ என்று சொல்லிச் சிரிக்கும் பழ.நெடுமாறன், 1993-ல் தடா வழக்கில் கைதானவர். 2003-ல் பொடா சட்டத்தில் கைதாகி 17 மாதங்கள் வரையிலும் சிறைவாழ்க்கை அனுபவித்தவர்.
“சென்னை, தியாகராய நகரில் உள்ள திருமலைப் பிள்ளை சாலையில் 8-ம் எண் வீட்டில் மாதம் 250 ரூபாய் வாடகையில்தான் தலைவர் காமராசர் குடியிருந்தார். வீட்டின் உரிமையாளரான கோவிந்தராசு என்பவர், அதற்கடுத்த 9-ம் எண் வீட்டில் குடியிருந்தார். இந்த இரண்டு வீடுகளின் பேரிலும் கோவிந்தராசு, ஏராளமாகக் கடன் வாங்கியிருந்தார்.

கோவிந்தராசுக்குக் கடன் கொடுத்த பாப்பாலால் எனும் மார்வாடி தனது பணத்தைத் திரும்ப வாங்குவதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துத் தீர்ப்பும் பெற்றுவிட்டார். இதையடுத்து கோவிந்தராசுவின் வீடுகள் ஏலம் விடப்படுவதற்கு முன்னறி விப்பாக, காமராசர் குடியிருந்த வீட்டிற்கு முன்னால் தமுக்கடித்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
காமராசர்மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த பாப்பாலாலுக்கு, கோவிந்தராசுவின் வீட்டில் காமராசர்தான் வாடகைக்குக் குடியிருக்கிறார் என்ற விவரம் தெரியாது. பின்னர் காமராசரின் நண்பரான தாமோதரன் மூலமாக விஷயத்தைத் தெரிந்து கொண்ட பாப்பாலால், ‘தலைவர் வீட்டுக்கா தமுக்கு அடிக்க வைத்தேன்... அந்த வீட்டை ஒரு காசு போட்டுப் பத்திரம் போடுங்கள். நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விடுகிறேன்’ என்று பதறினார்.
இந்தத் தகவலைக் காமராசரிடம் தெரிவித்தார் தாமோதரன். ஆனாலும் தான் குடியிருந்த வீட்டின் முன்னால் தண்டோரா போடப்பட்டது காமராசருக்குப் பிடிக்கவில்லை. எனவே, அந்த வீட்டை உடனடியாகக் காலி செய்துவிட்டு வேறு வீட்டிற்குச் சென்றுவிட எண்ணினார்.
‘வேலூர்க் கோட்டையிலிருந்து நான்கு பெண்கள் உட்பட 43 புலிகள் 15-08-1995 அன்று தப்பிச் சென்றனர். தங்கள் தாயகத்தை மீட்கவேண்டிய போராட்டத்தில் ஈடுபட முடியாமல் சிறைக்குள் அடைந்து கிடக்க அவர்கள் விரும்பவில்லை. அதற்காகவே தப்பினார்கள்.
எனவே, தமிழ்நாடு காங்கிரசு நிர்வாகிகளிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்து வேறு வீடு பார்க்கும்படி கூறினார். நீண்ட காலமாகக் காமராசர் வாழ்ந்த அந்த வீடு வரலாற்றுச் சிறப்புமிக்கது. எத்தனையோ உள்நாட்டு, வெளிநாட்டுத் தலைவர்கள் வந்துசென்ற இடம். எல்லாவற்றுக்கும் மேலாக அவரின் தொண்டர்களும் மக்களும் அவரைத் தேடி வந்த இடம். எனவே, ‘அந்த வீட்டைத் தமிழ்நாடு காங்கிரசு கட்சியே விலைக்கு வாங்கிவிடலாம்’ என நாங்கள் கருதினோம். (அப்போது அந்த வீட்டின் விலை இரண்டு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய்தான்.) ஆனால், எங்கள் யோசனையைத் தலைவர் ஏற்கவில்லை.
இதற்கிடையில், காமராசரின் நெருங்கிய நண்பரான திருச்சி தாப்பா ரெட்டியாரும், காமராசருக்குப் பிறந்தநாள் பரிசாக வீட்டை வாங்கிப் பரிசளிக்க முன்வந்தார். அதையும் காமராசர் ஏற்றுக்கொள்ள வில்லை. பிறகு ‘நவசக்தி இதழ்’ சார்பில் நிதி திரட்டி அந்த வீட்டை வாங்குவதற்கு எப்படியோ ஒருநாள் தலைவரைச் சம்மதிக்கவைத்து விட்டார் தாமோதரன். ஆனால், இந்தத் திட்டம் நிறை வேறு வதற்குள் தலைவர் மறைந்தேவிட்டார். ஆக, கடைசிவரை வாடகை வீட்டில் வாழ்ந்த ஒரே தலைவர் காமராசர் மட்டுமே. ஆனாலும் தமிழ்நாடு காங்கிரசு கட்சிக்கு சத்தியமூர்த்தி பவன், தேனாம்பேட்டைத் திடல், கட்டடங்கள் எனப் பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள சொத்துகளைச் சேர்த்துவைத்தார்’’ என்று நெகிழ்ந்தவர், விடுதலைப்புலிகள் குறித்து ஜெயலலிதா கொண்டிருந்த புரிதலை விளங்கவைத்த சம்ப வத்தையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

‘`கி.வீரமணியும் நானும் இணைந்து 30-12-95 அன்று சென்னை பெரியார் திடலில், ‘ஈழத் தமிழர் படுகொலைக் கண்டன மாநாடு’ ஒன்று நடத்த முடிவு செய்தோம். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை அம்மாநாட்டுக்கு அழைப்பதற்காக நானும் வீரமணியும் நேரில் சென்றிருந்தோம்.
மாநாடு பற்றிய பேச்சினை முதலில் வீரமணி தொடங்கினார். ஆனால், இடைமறித்த ஜெயலலிதா, ‘மாநாடு பற்றிப் பின்னர்ப் பேசுவோம். இப்போது நெடுமாறனிடம் சிலவற்றை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்’ என்றவர் என்னை நோக்கி,‘வேலூர்க் கோட்டையில் புலிகளை நன்றாகத்தான் வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் சிறையிலிருந்து தப்பிவிட்டார்கள். அப்படித் தப்பிச் சென்றவர்கள் யாழ்ப்பாணம் சென்றவுடன் அவர்கள் அனைவரையும் பிரபாகரன் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாகச் சொல்கிறார்களே... இது சரிதானா? விடுதலைப் போராட்டம் என்பது இதுதானா?’ எனக் கேட்டார். நான் நிதானமாக, ‘வேலூர்க் கோட்டையிலிருந்து நான்கு பெண்கள் உட்பட 43 புலிகள் 15-08-1995 அன்று தப்பிச் சென்றனர். தங்கள் தாயகத்தை மீட்கவேண்டிய போராட்டத்தில் ஈடுபட முடியாமல் சிறைக்குள் அடைந்து கிடக்க அவர்கள் விரும்பவில்லை. அதற்காகவே தப்பினார்கள். இப்போது தாயக விடுதலைப்போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்குக் கிடைத்த தகவலில் கொஞ்சம்கூட உண்மையில்லை. பிரபாகரன் அவர்களைச் சுட்டுக்கொல்ல உத்தரவிடவும் இல்லை. அவர்கள் சாகவும் இல்லை’ என்றேன். ஆனாலும் அம்மையாருக்கு இருந்த சந்தேகம் தீரவில்லை. ‘மத்திய உளவுத் துறை எனக்கு அளித்த தகவல் இது. அப்படி இருக்கும்பொழுது அதை எப்படி நீங்கள் உறுதியாக மறுக்கிறீர்கள்?’ என்றார் மறுபடியும்.
‘மத்திய உளவுத்துறையினரோ மாநில உளவுத் துறையினரோ யாழ்ப்பாணம் செல்ல முடியாது. சிங்கள உளவுத் துறை அளிக்கும் தகவலை இவர்கள் கிளிப்பிள்ளைபோலக் கூறுகிறார்கள்’ என்றேன். அதிர்ச்சி கலந்த வியப்புடன் என்னைப் பார்த்தவர் ‘அப்படியா, எல்லோரும் நலமுடன் இருக்கிறார்களா? அந்த நான்கு பெண்களும் நன்றாக இருக்கிறார்களா?’ எனத் திரும்பவும் கேட்டார். ‘அனைவரும் நன்றாக இருக்கிறார்கள்’ என்றேன். ஜெயலலிதாவை நான் நேரில் சந்தித்துப் பேசிய முதலாவதும் இறுதியுமான சந்திப்பு இதுதான்’’ என்றவர், பிரபாகரன் பற்றிய நினைவுகளைப் பகிரும்போது கூடுதல் உற்சாகமாகிறார். தொடர்ச்சியாகப் பேசியவரின் கண்கள், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துச் சிலைகளின் பக்கம் திரும்பியபோது கலங்கியிருந்தன.