Published:Updated:

காந்தி சொன்னார்... சிகரெட்டை நிறுத்தினார்! - ராம் மனோகர் லோகியா நினைவுதின சிறப்புப் பகிர்வு

ராம் மனோகர் லோகியா
ராம் மனோகர் லோகியா

"நாட்டின் பிரதமருக்காக, ஒருநாளைக்கு 25,000 ரூபாய் செலவு செய்யும் இந்த அரசாங்கம், ஏழைக் குடிமகனுக்கு மூன்று அணா வருமானத்துக்குக்கூட வழியில்லை" என்று கேள்வியெழுப்பினார் அவர்.

2002-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'பாபா' திரைப்படம் வெளியானபோது, அதில் அவர் சிகரெட் பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதற்கு, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். "இளைஞர்களைக் கெடுக்கும் இதுபோன்ற காட்சியில், ரஜினி நடிக்கக்கூடாது" என அவர் எச்சரித்தார்.

ரஜினி
ரஜினி

இதனால், ரஜினி ரசிகர்களுக்கும், பா.ம.க-வினருக்கும் மோதல் போக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், 'ரஜினி, தன்னுடைய படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைக்கவில்லை. அவரது ரசிகர்களும் புகைப்பழக்கத்தைக் கைவிட வேண்டும்' என்று ரஜினி சொன்னதாக, ராமதாஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். ஒருகாலத்தில் அரசியல்ரீதியாக பரபரப்பைக் கிளப்பியது இந்த சம்பவம். இதேவிஷயத்தை அன்பால் சாதித்த ஒரு சம்பவமும் உண்டு. நம் கட்டுரையின் நாயகருக்கும், தேசப்பிதாவான மகாத்மா காந்திக்கும் இடையே நடந்த சம்பவம் அது.

ஆம், தன்னிடம் நெருங்கிப் பழகிய அந்த சீடரிடம், "நீங்கள் சிகரெட் பிடிப்பதை நிறுத்தவேண்டும்" என்றார், மகாத்மா காந்தி. அதற்கு சீடர், "நீங்கள் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை நான் விரும்பவில்லை" என்றார். "நான் அப்படியெல்லாம் எதையும் யோசிப்பதில்லை. இந்த விஷயத்தில், நான் கண்டிப்பாகத் தலையிடுவேன். நீங்கள் சிகரெட் பிடிப்பதை நிறுத்தவேண்டும். அது, உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது" என்று அவரிடம் வலியுறுத்தினார், மகாத்மா.

காந்தி
காந்தி

குருவின் அறிவுரைகளை ஏற்காத அந்த சீடர், அதேநேரத்தில் அவரிடம் வாதாடவும் விரும்பவில்லை; அவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆனால் காந்தி, சீடரை விடுவதாக இல்லை. தொடர்ந்து அவரிடம், "நீங்கள் சிகரெட் பிடிப்பது எளிய மக்களிடமிருந்து உங்களைத் தனிமைப்படுத்தும்; உங்களை உயர்குடியாகக் காட்டக்கூடும்" என்கிற உண்மையை எடுத்துரைத்தார். அதை உணர்ந்த அந்த சீடர், அன்றுமுதல் சிகரெட்டிலிருந்து விடுதலையானார்.

குரு சொன்னதன் உண்மையான கருத்தை ஏற்றுக்கொண்ட அந்த சீடர், இந்தியாவில் சாதி வேற்றுமை களைய வேண்டும் என்பதற்காக அன்றே குரல்கொடுத்தார். அன்றுமுதல் இன்றுவரை அரசியலில் சாதி கலந்தே இருக்கிறது. அதைவைத்தே வாக்கு வங்கி தீர்மானிக்கப்படுகிறது. இதை அன்றே நன்குணர்ந்த அந்த சீடர், "சாதிகளுக்கு இடையிலான வேற்றுமையே நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கிறது" என்றார்.

நேரு
நேரு

இதுதவிர, நம் நாட்டின் விடுதலைக்குப் பிறகு, இங்குள்ள அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கான தேவைகளை உணர்ந்த அந்த சீடர், "ஜனநாயக நாட்டில் மக்களின் குறைகளை மக்களின் பிரதிநிதிகள் அறிய வேண்டியது அவசியம்" என்றார். அதற்காக மக்களின் பங்களிப்பும் அவசியமென்றார். மேலும், ஏழை மக்களின் வருமானம் குறித்து, பிரதமரிடம் கேள்விகேட்கக்கூட அவர் தயங்கவில்லை.

"நாட்டின் பிரதமருக்காக, ஒருநாளைக்கு 25,000 ரூபாய் செலவு செய்யும் இந்த அரசாங்கம், ஏழைக் குடிமகனுக்கு மூன்று அணா வருமானத்துக்குக்கூட வழியில்லை" என்று கேள்வியெழுப்பினார், அந்த சீடர். அதற்குப் பதிலளித்த பிரதமர் நேரு, "ஏழ்மையை ஒழிப்பதற்காகத் திட்டக்குழு செயல்படுகிறது. அதன் புள்ளிவிவரப்படி, நாட்டின் ஏழைக் குடிமகனின் சராசரி தினப்படி வருமானம் 15 அணா ஆகும்" என்றார். பிரதமரின் புள்ளிவிவரத்தைக் கடுமையாகச் சாடிய அந்த சீடர், "திட்டக்குழு வைக்கும் புள்ளிவிவரங்கள் மாயையானவை" என்றார். அதனால்தான் அவரை... மகாத்மா காந்தி, "துணிச்சலும் எளிமையும் கொண்ட மனிதர்" என்றதுடன், "அவரைப்போல் வேறு யாரையும் நான் பார்த்ததில்லை" என்றார்.

"ஆக்கப்பூர்வமான கட்டமைப்புப் பணிகள் அல்லாது செய்யப்படும் சத்தியாகிரகம் என்பது, வினைச்சொல் இல்லாத வாக்கியம் போன்றது" என்பார், அந்த சீடர். ஆம், உண்மைதான். இன்றைய அரசியல்வாதிகள் அப்படித்தானே இருக்கிறார்கள். இப்படி, சத்தியத்தோடு வாழ்ந்த அந்த சீடர் வேறு யாருமல்ல... பிரதமர்களை உருவாக்கும் மாநிலத்தில் பிறந்த ராம் மனோகர் லோகியாதான், அந்த சத்தியாகிரகி. அவருடைய நினைவுதினம் இன்று.

அடுத்த கட்டுரைக்கு