Published:Updated:

அன்புள்ள ரஜினிகாந்துக்கு தமிழக மக்களின் சார்பாக ஒரு கடிதம்!

ரஜினி தோற்றுப்போவது போல் ஒரு காட்சி இருந்தால், நிச்சயம் அதைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காரணம், ரஜினியின் தோல்வியைத் தங்களின் தோல்வியாக நினைக்கக்கூடியவர்கள். ரஜினி தோற்கவேகூடாது என நினைக்கக் கூடியவர்கள், தமிழக மக்கள். 

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது என்கிற செய்திதான் கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் ஹாட் டாபிக்காக இருக்கிறது. வரும் நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவிருக்கும் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. `ஐகான் ஆஃப் தி கோல்டன் ஜூப்ளி' என அந்த விருதுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

ராமதாஸ் ட்வீட்
ராமதாஸ் ட்வீட்

இந்த விருது அறிவிப்புக்குப் பிறகு, திரைத்துறை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரிடமிருந்தும் ரஜினுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. மிகமுக்கியமாக, ரஜினியோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்த மருத்துவர் ராமதாஸின் வாழ்த்துதான் அனைவரையும் ஒருகணம் திகைக்க வைத்திருக்கிறது. வழக்கம்போலவே, தங்கள் தலைவருக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரத்தைக் கொண்டாடித் தீர்த்துவருகிறார்கள், ரஜினி ரசிகர்கள். இது ஒருபுறமிருக்க, ரஜினிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருதுக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. பா.ஜ.க, தங்கள் வலையில் வீழ்த்துவதற்காகவே ரஜினிக்கு இந்த விருதை அளிக்கிறது என குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் எழுகின்றன.

ரஜினிகாந்த்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கப்படுவதைப் பாராட்டுகிறேன். அதேவேளை, அவரை விட அதிகம் சாதித்தவர்கள் இளையராஜா, பாரதி ராஜா மற்றும் கமல்ஹாசன் போன்றோர் திரை உலகில் இருக்கிறார்கள். ஆனால், ரஜினிக்கு வழங்கியிருப்பதைப் பார்த்தால், அவர் பா.ஜ.க-வுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் மத்திய அரசு `வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்க உள்ளது.
சீமான்

இந்த விருது அறிவிப்போடு, மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். அதில்,

``கடந்த பல ஆண்டுகளாக இந்தியத் திரைத்துறைக்கு ரஜினிகாந்த்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.

திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரஜினி ரசிகர்கள் இந்த விருதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்கட்டும். தமிழக மக்கள் இந்த விருதை எப்படிப் பார்க்கிறார்கள்...

பிரகாஷ் ஜவடேகர்
பிரகாஷ் ஜவடேகர்

இந்தியத் திரைத்துறைக்கு ரஜினிகாந்த்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு இந்த விருது என அறிவிக்கப்பட்டிருந்தாலும், ரஜினி யார்? அவர் யாரின் அடையாளம் என உலகுக்குத் தெரியும். கடந்த 44 ஆண்டுகளாக, தமிழக மக்கள் ஒரு முறையேனும் உச்சரித்த பெயராக ரஜினிகாந்த் என்கிற பெயர் நிச்சயமாக இருக்கும். தமிழர்களின், தமிழ்நாட்டின் அடையாளங்கள் குறித்து தமிழ்நாடல்லாத பிற இடங்களில் ஒரு உரையாடல் தொடங்கினால், அதன் இரண்டாவது அல்லது மூன்றாவது நிமிடத்தில் அது, ரஜினி குறித்த, அவரின் அடுத்த திரைப்படம் குறித்த பேச்சாக மாறியிருக்கும்.

``நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு, தமிழ்த் திரை உலகத்திற்கு பெருமை அளிக்கக்கூடிய விஷயம். இந்த விருதுக்கு ரஜினிகாந்த் தகுதியானவர். புதுச்சேரி மக்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாராயணசாமி, புதுவை முதல்வர்.

கர்நாடகத்தில்தான் கண்டக்டராக வேலைபார்த்தார் ரஜினி. ஆனால், தமிழகத்திலிருந்து பெங்களூருக்கோ கர்நாடகாவின் மற்ற இடங்களுக்கோ பயணம் செய்தவர்களுக்குத் தெரியும், ரஜினியை யாரின் அடையாளமாக, முகமாகக் கன்னடர்கள் பார்க்கிறார்கள் என்று. இன்றளவும் பெங்களூருவில் வாழும் தமிழர்களுக்கு ரஜினி படம் வெளியாகும் நாள் தீபாவளிதான். ரஜினியின் படம் சரியில்லை என்றால், தமிழர்களைத்தான் பகடி செய்வார்கள் கர்நாடக மக்கள்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைப்பதில் தமிழ் மொழிக்கு முதல் இடம் என்றாலும், அதன் கலை வடிவமான திரைப்படத்தின் வாயிலாக ரஜினிக்கும் அந்த வரிசையில் இடமுண்டு என்கிற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

தமிழர்களுக்கு, தமிழக மக்களுக்கு ரஜினி அப்படி என்ன செய்துவிட்டார்?

தமிழகத்தில், இப்போது நீங்கள் கணக்கெடுத்தாலும் வீட்டுக்கு ஒருவர் ரஜினி ரசிகராகத்தான் இருப்பார். இல்லை, ரஜினி ரசிகராக இருந்திருப்பார். `சின்ன வயசுல எல்லாம் எனக்கு ரஜினியைத்தான் பிடிக்கும். ஆனா, இப்போ...’ என இழுத்து அவருக்குப் பிறகு நடிக்க வந்த ஒரு நடிகரின் பெயரைச் சொல்வார்கள். பெரும்பாலும் அவர்கள் சொல்லும் நடிகரும், ரஜினியின் சாயலைப் பின்பற்றி நடிக்கும் நடிகராகத்தான் இருப்பார். இன்றளவும் ரஜினியின் இடத்துக்குத்தான் போட்டாபோட்டி இருக்கிறது.

கலையுலகம் கொண்டாடும் பொன்விழா கதாநாயகனான உங்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் முழுத் தகுதியும் உண்டு. விருது பெறுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் பல உலகளாவிய விருதுகள் பெற வேண்டும்.
வைகோ

90-களில் கிட்ஸான, என் பால்யத்தில் எனக்குக் கிடைத்த பசுமையான திரைக்களிப்பில் ரஜினிக்கு நிச்சயம் பங்குண்டு. இப்போது யோசித்தாலும் ரஜினி ஓடி ஆடி சண்டை போட்ட காட்சிகள்தான் நினைவில் வந்துபோகின்றன. 

ரஜினி நடிக்கும் படங்கள், தமிழக மக்களுக்கு மிகவும் பிடித்துப் போகக் காரணம்,  எத்துயர் வரினும், எங்கனமேனும் வாழ்க்கையில் வெற்றிபெறுவது எப்படியெனத் திரைவழியாக மக்களுக்குப் பாடம் நடத்தியிருக்கிறார் ரஜினி. வாழ்க்கையின் மீது நேர்மறையான எண்ணங்களை, நம்பிக்கையைத் தன் படங்களின்மூலம் விதைத்திருக்கிறார், ரஜினி.

எஸ்.பி.முத்துராமன் - ரஜினி
எஸ்.பி.முத்துராமன் - ரஜினி

அதற்கு, அந்தத் திரைப்படங்களை எடுத்த இயக்குநர்கள்தான் காரணமென்றாலும், ரஜினியின் மூலமாகச் சொல்லும்போது அது, வேறோர் இடத்துக்கு இட்டுச்செல்லும் என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார். ஒட்டுமொத்தமாகவே, ஓரிலக்கத்தில்தான் அவரின் தோல்விப் படங்கள் இருக்கின்றன. ரஜினியை வைத்து படம் எடுத்தால் நிச்சயமாக நஷ்டம் வராது எனத் தயாரிப்பாளர்கள் வைத்த நம்பிக்கைதான், அவரை ஒரே வருடத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கவைத்தது. ஒரு தனிமனிதனின் உழைப்பால், முகத்தால், சினிமாத்துறையில் வேலைபார்க்கும் பலரின் குடும்பங்கள் பிழைத்ததும் தமிழகத்தில் உள்ள மொத்தக் குடும்பங்களும் சந்தோஷத்தில் திளைத்ததும் ரஜினியால் மட்டுமே சாத்தியமானது. தமிழக திரைத்துறையைத் தன் வெற்றிகளின்மூலம் முன் நகர்த்தியிருக்கிறார், தாங்கிப்பிடித்திருக்கிறார் ரஜினி.

ரஜினி தோற்றுப்போவது போல் ஒரு காட்சி இருந்தால், நிச்சயம் அதைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காரணம், ரஜினியின் தோல்வியைத் தங்களின் தோல்வியாக நினைக்கக் கூடியவர்கள். ரஜினி தோற்கவேகூடாது என நினைக்கக் கூடியவர்கள், தமிழக மக்கள். 

ரஜினி என்றால் பாஸிட்டிவிட்டி, ரஜினி என்றால் வெற்றி, ரஜினி என்றால் தொடர் முயற்சி, ரஜினி என்றால் உழைப்பு, ரஜினி என்றால் ஆர்வம், ரஜினி என்றால் எளிமை...  திரைத்துறை சார்ந்து ரஜினியை யோசிக்கும்போது, இவையெல்லாம்தான் நம் மனக்கண்ணில் வந்துபோகும். ஆகமொத்தத்தில், ரஜினிக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு அவர் மிகவும் பொருத்தமானவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஆனால், ஏன் எதிர்ப்பு வருகிறது, எதற்கு அச்சம் எழுகிறது?

ரஜினி
ரஜினி

திரைத்துறையையொட்டி தமிழகத்தில், தமிழக மக்களிடையே ரஜினி ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிப் பார்த்தோம். இனி, அரசியல் ரீதியாக அவரின் கருத்துகளையும் அதன் சாதக பாதகங்களையும் பார்ப்போம்.

முதல்முறையாக 1996-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமு.க - த.மா.க கூட்டணியை ஆதரித்தார் ரஜினி. `ஆண்டவன் வந்தாலும் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது' என ஜெயலலிதா ஆட்சிகுறித்து அவர் பேசியது, தேர்தல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. 221 தொகுதிகளில் அபார வெற்றிபெற்றது தி.மு.க கூட்டணி. ரஜினியின் வாய்ஸ்தான் அதற்குக் காரணம் என்று அப்போதும் சொல்லப்பட்டது... இப்போதும் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு முந்தைய ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சியும் அராஜகமும் ஊழல் புகாரும் மக்கள் மத்தியில் அவர் மீது மிகப்பெரிய வெறுப்பை உண்டாக்கியிருந்து. மக்கள் மனநிலையை அப்படியே பிரதிபலித்தார், ரஜினி. அதனால்தான் அந்த வெற்றி சாத்தியமானது.

`அபூர்வ ராகங்கள்' தொடங்கி `பேட்ட' வரை சாதித்ததை வாழ்த்தி, வாழ்நாள் சாதனையாளர் விருது. `படையப்பா' இன்னும் பல சாதனைகளைப் படையப்பா என வாழ்த்துகிறேன்.
தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா கவர்னர்.

96 -ஐத் தொடர்ந்து, 1998-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் தி.மு.க கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தார், ரஜினி. ஆனால், 30 தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ரஜினியின் வாய்ஸ் எடுபடவில்லை. அதற்குப் பிறகு, ரஜினி அரசியல் பேசுவதை முழுவதுமாக குறைத்துக்கொண்டார்.

2004-ம் ஆண்டு, வீரப்பன் குறித்து ரஜினி பேசிய கருத்துகளால் கடுமையான கோபத்தில் இருந்த மருத்துவர் ராமதாஸ், `பாபா' படத்தில் புகைபிடிப்பது போல போஸ்டர்கள் வெளியானதைக் கடுமையாக எதிர்த்தார். அது, ரஜினிக்கும் ராமதாஸுக்கும் இடையே மிகப்பெரிய மோதலாக வெடித்தது. அதனால், அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பா.ம.க போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும், அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணியை ஆதரித்தார் ரஜினி.

ரஜினி
ரஜினி
பி.ஜே.பி-யின் ‘விருது’ தூண்டில்! - நழுவும் ரஜினி... கலக்கும் கமல்!

மத்திய சென்னையில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட பாலகங்காவுக்குத்தான் ஓட்டுப்போட்டேன் என வாக்குச் சாவடிக்கு வெளியே வந்து பேட்டிகொடுத்தார் ரஜினி. ஆனால், பா.ம.க போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் மட்டுமல்லாது, 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வாகை சூடியது. அப்போதைய ஜெயலலிதா ஆட்சியின்மீது மக்களுக்கிருந்த கோபமும் தி.மு.க -வின் மெகா கூட்டணியுமே அதற்குக் காரணம். ஆனால், அதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல், மக்கள் மனநிலைக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததால் ரஜினியின் வாய்ஸ் எடுபடாமல் போனது. 

அதற்குப் பிறகு ஜெயலலிதா, கருணாநிதி மறைவு வரை மிகப்பெரிய அளவில் அரசியல் ரீதியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை ரஜினி. பல வருடங்களாகக் கட்சி ஆரம்பிப்பது குறித்து அவர் பேசிவந்தாலும், ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவரின் மறைவுக்குப் பிறகு தீவிரம் காட்டினார். ஆனால், அவருக்கு முன்பாக அவரின் நண்பர் கமல் கட்சி ஆரம்பித்துவிட்டார்.

ரஜினி கட்சி ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்பது அவரின் தனிப்பட்ட முடிவு. ஆனால், மக்களின் மனநிலையை அறிந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்பதே நம் விருப்பம். காரணம், கடந்த சில ஆண்டுகளாக ரஜினி தெரிவித்துவரும் கருத்துகள், பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கிவருகின்றன. அதைவிட, மக்களின் மனநிலைக்கு நேர் எதிராக இருக்கின்றன என்பதே உண்மை.

தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் போராட்டத்தை எதிர்த்து ரஜினி தெரிவித்த கருத்துகள், மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கின. துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தூத்துக்குடி சென்றார். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவரும் நபர் ஒருவர், ``நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?" என ரஜினியைப் பார்த்துக் கேட்டார்.  இறுக்கமான முகத்துடன் நடிகர் ரஜினி, அந்த இடத்தை விட்டு நகர்ந்துசென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.

ரஜினி
ரஜினி

இதைப் போன்று பல முரணான கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்துவருகிறார், ரஜினி. இவையெல்லாம் அவரின் மீதான பிம்பத்தில் விரிசல் ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்தன.

அரசியலைப் பொறுத்தவரை, ரஜினி என்றால் குழப்பம்... ரஜினி என்றால் முன்னுக்குப் பின் முரண்... ரஜினி என்றால் மக்களின் மனநிலைக்கு எதிரானவர்... என்கிற பிம்பம்தான் பெரும்பாலான அரசியல் பார்வையாளர்களிடம் உருவாகியுள்ளது. தன் உழைப்பால் தமிழக மக்களின் மனதில் உயர்ந்துநின்ற ரஜினி, தன் அரசியல் நிலைப்பாட்டால், கருத்துகளால் சற்று பின்னடவைச் சந்தித்துவருகிறார்.

கர்நாடகாவில், மும்பையில் தமிழர்களை அடித்துவிரட்டிய வாட்டாள் நாகராஜுடனும், மறைந்த பால் தாக்கரேவுடனும் நட்பு பாராட்டிவந்தார் ரஜினி. வாட்டாள் நாகராஜின் கலவரத்தைத் தூண்டக்கூடிய பேச்சுகளை கர்நாடக மக்களே விரும்ப மாட்டார்கள். ஆனால், ரஜினி தனக்குப் பிடித்த பேச்சாளராக வாட்டாள் நாகராஜையே குறிப்பிட்டார். ஒருபடி மேலே போய், ``பால் தாக்கரே எனக்குக் கடவுள் மாதிரி" என்றார் ரஜினி. அதையெல்லாம்கூட தமிழக மக்கள் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஆனால், தமிழகத்தில் தங்களை யார் ஆள வேண்டும் என்பதைவிட, யார் ஆளக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கின்றனர். `எப்போதும் எங்களில் ஒருவராகத் தெரியும் நீங்கள், சில அரசியல் நிலைப்பாடுகளின்போது மட்டும் யாரோவாகிப்போகிறீர்களே’ என்பது அவர் ரசிகர்களில் சிலர் எழுப்பக்கூடிய கேள்வியாக இருக்கிறது.

பால்தாக்கரே
பால்தாக்கரே
வன்முறைகளின் ராஜா Vs நண்பர்களிடம் தஞ்சம்..! ரஜினி - ராமதாஸ் பகை முடிவுக்கு வருகிறதா?!

ரஜினி, நீங்கள் கட்சி ஆரம்பிப்பதோ, யாருடனும் கூட்டணி சேர்வதோ உங்களின் தனிப்பட்ட விருப்பம், உரிமை. ஆனால், தமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக எந்தவொரு முடிவையும் எடுக்காதீர்கள். நீங்கள் தோற்கடிக்கப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அத்தகைய சூழலுக்கு தமிழக மக்களை ஆட்படுத்திவிடாதீர்கள். மற்றபடி, இந்த விருதுக்கு நீங்கள் 100 சதவிகிதம் தகுதியான நபர். உங்கள் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. மற்றவர்களைவிட தமிழக மக்களாகிய எங்களுக்கு அது நிச்சயம் தெரியும்.

மென்மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள் ரஜினி.