Published:Updated:

``அடுத்து தமிழகத்தில் ஆட்சி!" - அண்ணாமலை கூறுவது உண்மையா? புதுச்சேரியில் பா.ஜ.க-வின் நிலை என்ன?!

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

எண்பதுகளின் தொடக்கத்தில் புதுச்சேரியில் கால்பதித்த பா.ஜ.க., அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் போட்டியிட்டுவருகிறது. ஆனால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு ஒன்றிரண்டு தொகுதிகளைத் தவிர எங்கும் டெபாசிட் வாங்கியது கிடையாது.

``அடுத்து தமிழகத்தில் ஆட்சி!" - அண்ணாமலை கூறுவது உண்மையா? புதுச்சேரியில் பா.ஜ.க-வின் நிலை என்ன?!

எண்பதுகளின் தொடக்கத்தில் புதுச்சேரியில் கால்பதித்த பா.ஜ.க., அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் போட்டியிட்டுவருகிறது. ஆனால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு ஒன்றிரண்டு தொகுதிகளைத் தவிர எங்கும் டெபாசிட் வாங்கியது கிடையாது.

Published:Updated:
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ``இந்தியா இரண்டு நாடாக பிரிந்திருக்கிறது. ஒரு இந்தியா பணம் படைத்தவர்களுக்காகவும், மற்றொரு இந்தியா பணமில்லாத ஏழைகளுக்கானதாகவும் இருக்கிறது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மன்னர் ஆட்சியைப்போல நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று தமிழகம் உங்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறது. ஆனால், தமிழகத்தின் கோரிக்கைகள் உங்கள் காதுகளுக்கு எட்டவில்லை. தமிழகம் மீண்டும் மீண்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என உங்களிடம் கோரிக்கை வைக்கும். அதை நீங்கள் மறுத்து அவர்களை வெளியேற்றுகிறீர்கள்.

ராகுல், மோடி
ராகுல், மோடி

மக்களின் கருத்தை அரசர் கேட்காததுபோல உங்கள் அரசு செயல்படுகிறது. தமிழ் மொழியும், தமிழ் கலாசாரமும் தனித்துவம் கொண்டவை. அவற்றை மதித்து, சம உரிமை கொடுக்கப்பட வேண்டும். அனைத்து மாநில மக்களுக்கும் சம உரிமையைக் கொடுக்க வேண்டும். உங்களுடைய வாழ்நாளில் ஒருபோதும் நீங்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்யவே முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராகுலின் இந்த உஷ்ணமான பேச்சு நாடாளுமன்றத்தில் கடும் அமளியை ஏற்படுத்தியதுடன், தமிழக பா.ஜ.க-வினரைக் கொந்தளிக்கவைத்துவிட்டது. ராகுலின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் தமிழகத்தின் மைந்தன் என்ற வகையில் இந்த விஷயத்தில் உங்களை வழிநடத்த விரும்புகிறேன் ராகுல் ஜி. நீங்கள் இப்போது தமிழகத்தில் தி.மு.க-வின் ஆக்சிஜன் உதவியுடன் ஐ.சி.யூ-வில் இருக்கிறீர்கள். தற்போது புதுச்சேரியில் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். நமது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரித்த புதுச்சேரி மக்களுக்கு நன்றி. அது ஒரு மைல் கல். அந்த மைல் கல்லின் அடுத்த ஜங்ஷன் தமிழகமாகத்தான் இருக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.

அண்ணாமலை கூறியதுபோல புதுச்சேரி மக்கள் பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டத்தை புரிந்துகொண்டதால்தான் பா.ஜ.க அங்கு ஆட்சியில் இருக்கிறதா என்பதை விரிவாகப் பார்க்கலாம்...

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

கடந்த 2006-ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி சார்பில் இரண்டாவது முறை முதல்வர் பதவியில் அமர்ந்த ரங்கசாமி, அரசுப் பணிகள் நியமனம், ஒப்பந்தப் பணிகள் என எந்த விவகாரத்திலும் அமைச்சர்களைக் கலந்தாலோசிக்காமல் ஒன்மேன் ஆர்மியாக வலம்வரத் தொடங்கினார். அதனால் அவருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார்கள் அமைச்சர்கள். அப்போது ரங்கசாமியை அழைத்த சோனியா, அமைச்சர்களைச் சமாதானப்படுத்தும்படி கூறியனுப்பினார். அதற்குச் சரியென்று தலையசைத்துவிட்டு ரங்கசாமி புதுச்சேரிக்குத் திரும்பியபோது, சொல்லி வைத்ததுபோல் அனைத்து அமைச்சர்களும் பல்வேறு மாநிலங்களுக்கு இன்பச் சுற்றுலாவுக்குச் சென்றுவிட்டனர்.

புதுச்சேரி பா.ஜ.க தேர்தல் பொதுக்கூட்டம்
புதுச்சேரி பா.ஜ.க தேர்தல் பொதுக்கூட்டம்

அதனால் வேறு வழியின்றி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமி. முதல்வர் பதவி பறிக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ரங்கசாமி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி 2011-ல் ஆட்சியைப் பிடித்தார். அடுத்து வந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து வெற்றிபெற்றார் ரங்கசாமி. அப்போது மத்திய பா.ஜ.க அரசின் தயவு வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ஒரேயொரு நியமன எம்.எல்.ஏ பதவியைக் கொடுத்தார் ரங்கசாமி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது முதல் என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்துவருகிறது பா.ஜ.க. பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரி இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட பிறகு 1964-ம் ஆண்டு தனது முதல் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்தது. அந்தத் தேர்தல் தொடங்கி 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு வரை புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் ஒரே முறை ஒரேயொரு தொகுதியில் வெற்றிபெற்றது பா.ஜ.க. அது நடந்தது, 2001 சட்டப்பேரவைத் தேர்தல் ரெட்டியார்பாளையம் தொகுதியில்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

அதுவும்கூட அப்போது அ.தி.மு.க கூட்டணியுடன் போட்டியிட்டதால் அக்கட்சியின் வாக்குவங்கி பா.ஜ.க-வை வெற்றிபெறவைத்தது. எண்பதுகளின் தொடக்கத்தில் புதுச்சேரியில் கால்பதித்த பா.ஜ.க., அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் போட்டியிட்டுவருகிறது. ஆனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு வரை எதிலும் டெபாசிட் வாங்கியது கிடையாது. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சி அனைத்து இடங்களிலும் டெபாசிட்டைப் பறிகொடுத்தது. 20 தொகுதிகளையும் சேர்த்து வெறும் 9,183 வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க-வின் அப்போதைய வாக்குவங்கி 1.32% மட்டும்தான்.

2021 தேர்தலுக்கு முன்பு நாம் 18 இடங்களை வைத்துக்கொண்டு கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வுக்கு தலா ஆறு இடங்களை ஒதுக்கலாம் என்பதுதான் ரங்கசாமி போட்டு வைத்திருந்த கணக்கு. என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் நின்றால் டெபாசிட்டை உறுதி செய்ய முடியுமே தவிர, வெற்றியை உறுதி செய்ய முடியாது என்று நினைத்த பா.ஜ.க., வேறுவிதமாக கணக்கு போட்டது. புதுச்சேரியில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று முனைப்புடன் இருந்த பா.ஜ.க., தொகுதிப் பங்கீட்டில் அப்போது ஆர்வம் காட்டவில்லை.

புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்
புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்

அதேசமயம் தனித்து நின்றாலும் வெற்றிபெறும் அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்ற தனிநபர்கள் தங்களின் கட்சியில் இருக்க வேண்டும் என்று நினைத்தது. அதன்படி களத்தில் இறங்கிய அக்கட்சி அமலாக்கத்துறை ஆயுதத்தால் காங்கிரஸ் கட்சியில் இருந்த அமைச்சர்களையும், எம்.எல்.ஏ-க்களையும் அடுத்தடுத்த விக்கெட்டில் வீழ்த்தி தன் பக்கம் இழுத்தது. தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தது.

அதன் பிறகு அடித்துப் பிடித்து ரங்கசாமியிடம் ஒன்பது தொகுதிகளை வாங்கிய பா.ஜ.க., மணவெளி, மண்ணாடிப்பட்டு, ஊசுடு, காமராஜர் நகர், காலாப்பட்டு, நெல்லித்தோப்பு என ஆறு தொகுதிகளில் வெற்றிபெற்றது. அத்துடன் இரண்டு அமைச்சர் பதவிகளையும், ஒரு சபாநாயகர் பதவியையும் பெற்றுக்கொண்டது. வெற்றிபெற்றவர்கள் அனைவரும் பா.ஜ.க-வினர்தானா என்பதையும், அக்கட்சியின் செல்வாக்கால்தான் அவர்கள் வெற்றிபெற்றார்களா என்பதையும் பார்க்கலாம். மண்ணாடிப்பட்டு தொகுதியில் வெற்றிபெற்று தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம், காங்கிரஸ் ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து சென்றவர். காமராஜர் நகர்த் தொகுதியின் எம்.எல்.ஏ-வான ஜான்குமார் காங்கிரஸ் கட்சியிலிருந்து சென்றவர். அவரது மகன் ரிச்சர்டு ஜான்குமார் நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றிபெற்றவர்.

காலாப்பட்டு தொகுதியில் வெற்றிபெற்ற கல்யாணசுந்தரம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியிலிருந்து சென்றவர். ஊசுடு தொகுதியில் வெற்றிபெற்று தற்போது அமைச்சராக இருக்கும் சாய் ஜெ.சரவணகுமார் என்.ஆர்.காங்கிரஸில் சீட் கிடைக்காது எனத் தெரிந்து பா.ஜ.க-வுக்குச் சென்றவர். அதேபோல மணவெளி தொகுதியில் வெற்றிபெற்று சபாநாயகராக இருக்கும் செல்வம் தி.மு.க-விலிருந்து சென்றவர். பா.ஜ.க-வில் நீண்டநாள்களாக இருந்து வரும் கட்சிக்காரரும், புதுச்சேரியின் மாநிலத் தலைவருமான சாமிநாதனே லாஸ்பேட்டை தொகுதியில் தோல்வியைச் சந்தித்தார். இவர் தேர்தலில் டெபாசிட் இழந்த பிறகும்கூட நியமன எம்.எல்.ஏ-வாக சட்டப்பேரவைக்குள் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல உழவர்கரை, திருபுவனை, ஏனாம் தொகுதிகளில் தங்கள் சொந்த செல்வாக்கில் வெற்றிபெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டதுடன், கொரோனா சிகிச்சைக்காக முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தங்கள் கட்சியைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ-க்களாக நியமித்துக்கொண்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது பா.ஜ.க. (முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் தங்கள் கட்சியைச் சேர்ந்த மூன்று பேரை எம்.எல்.ஏ-க்களாக நியமித்துக்கொண்டது பா.ஜ.க).

``புதுச்சேரியில் பா.ஜ.க-வின் நிலைமை இப்படியிருக்க, கள நிலவரம் தெரியாமல் அண்ணாமலை அடித்துவிடுகிறாரே..!" என்று சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்துவருகின்றனர் நெட்டிசன்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism