பேட்டி - கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

இந்திய குடிமக்களாகிய நாம்...

இந்திய குடிமக்களாகிய நாம்...
பிரீமியம் ஸ்டோரி
News
இந்திய குடிமக்களாகிய நாம்...

முதல் தடுப்பு முகாம் அஸ்ஸாமில் அமைக்கப்படுவதற்கு ஒரு காரணம் உண்டு.

ந்திய குடிமக்கள் என நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க அஸ்ஸாமில் தடுப்பு முகாம் (Detention Camp) ஒன்று தயாராகிவருகிறது. அடர்ந்த காடு ஒன்று அழிக்கப்பட்டு, அந்த இடத்தில் தடுப்பு முகாம் அமைக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற தடுப்பு முகாம்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடிமக்கள் என நிரூபிக்கமுடியாத அனைவரும் தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுவார்கள்.

முதல் தடுப்பு முகாம் அஸ்ஸாமில் அமைக்கப்படுவதற்கு ஒரு காரணம் உண்டு.

1971-ல் வங்கதேசப் போர் நடைபெற்றபோது, வங்கதேசத்திலிருந்து லட்சக்கணக்கானோர் அஸ்ஸாமில் குடியேறினர். ‘சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள வங்கதேச முஸ்லிம்கள், எங்கள் வேலைவாய்ப்பு, கல்வி, அரசு தரும் சலுகைகள் ஆகியவற்றை அபகரிக்கிறார்கள்’ என்ற குரல்கள் அஸ்ஸாமில் எழுந்தன. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்று பெரும் போராட்டங்களும் நடைபெற்றன. அப்போதுதான் `அஸ்ஸாம் கண பரிஷத்’ என்ற கட்சியே உருவானது.

தேசியக் குடியுரிமைப் பதிவேடு - அஸ்ஸாம்!
தேசியக் குடியுரிமைப் பதிவேடு - அஸ்ஸாம்!

அஸ்ஸாமில் நடைபெற்ற போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர 1985-ம் ஆண்டு அஸ்ஸாம் மாநில அரசு, இந்திய அரசு, போராட்டம் நடத்துவோர் ஆகியோரிடையே ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. ‘என்.ஆர்.சி தயார்செய்து, அஸ்ஸாமில் குடியேறியுள்ள வெளிநாட்டவர் அடையாளம் காணப்பட்டு வெளியேற்றப் படுவார்கள்’ என அப்போது காங்கிரஸ் அரசு உறுதியளித்தது. என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்துவதென்றும் சொல்லப்பட்டது. சமீபத்தில், மீண்டும் அங்கு உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் என்.ஆர்.சி பணி நடைபெற்றது. வங்கதேசப் போர் நடைபெற்ற 1971-ம் ஆண்டு என்.ஆர்.சி-க்கான வரம்பாக நிர்ணயிக்கப்பட்டது. 1971-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி நள்ளிரவுக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றோர் என்.ஆர்.சி-யில் இடம்பெற முடியும். என்.ஆர்.சி இறுதிப்பட்டியல் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியிடப்பட்டது. உரிய ஆவணங்களை அளிக்க முடியாத காரணத்தால், சுமார் 19 லட்சம் பேர் என்.ஆர்.சி-யில் இல்லை. மேலும், என்.ஆர்.சி-யில் இடம்பெறாதவர்களில் சரிபாதி் பேர் வங்கதேச இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது, அஸ்ஸாமில் ஆளும் பா.ஜ.க-வுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்.ஆர்.சி-க்கு அஸ்ஸாம் மாநில பா.ஜ.க-வே எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், வெளிநாடுகளிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் ஆகியோரை என்.ஆர்.சி பட்டியலில் சேர்த்துக்கொள்வது என அரசு முடிவுசெய்தது. ஆனால், வெளிநாட்டைச் சேர்ந்த அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்று அஸ்ஸாம் கண பரிஷத் கோரிவருகிறது.

இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், இந்தியா முழுவதும் என்.ஆர்.சி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. எனவே, இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரும் தாம் இந்தியர் என்பதை உரிய ஆவணங்களுடன் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

“என்.ஆர்.சி தேவைதானா?” என்ற கேள்வியை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணி முன்பாக வைத்தேன்.

இந்திய குடிமக்களாகிய நாம்...

“இதில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என்றாலும், சட்டத்தின் பார்வை என்பது வேறு. இப்படியொரு முறை உருவாக்கப்பட்டால் ஒரு வாக்காளரின் பெயர் பல இடங்களில் பட்டியலில் இடம்பெறுவது, ஒரு குடும்பத்துக்கு பல குடும்ப அட்டைகள் இருப்பது போன்ற பிரச்னைகள் சரியாகும். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு மூலமாக இதற்கான முயற்சிகள் நடைபெற்றாலும் அது முழு வடிவத்துக்கு இன்னும் வரவில்லை. என்.ஆர்.சி உள்நோக்கம் கொண்டது என்று சொல்லப் பட்டாலும், அதனாலேயே அதை நிராகரித்துவிடுவது சரியானதாக இருக்காது” என்றார்.

என்.ஆர்.சி விவகாரத்தில் வேறு பார்வைகளை முன்வைக்கும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான பாலச்சந்திரன், “நான் 35 ஆண்டுகளாக அரசியலில் இருந்துள்ளேன். அதனால் எனக்கு நன்குத் தெரியும்... அரசு என்பது ஒரு மகா சக்தி. அரசு நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்.

இந்திய குடிமக்களாகிய நாம்...

வெளிப்படைத் தன்மையும் நடுநிலையும் இல்லாத ஓர் அரசால் மேற்கொள்ளப்படும் என்.ஆர்.சி-யை எல்லோரும் சந்தேகக்கண்கொண்டுதான் பார்ப்பார்கள். குடியுரிமை என்பது அரசு எனக்கு தரும் ஒரு சலுகையாக ஆகிவிடும். ஆட்சியில் இருப்பவர்கள் நினைத்தால் மட்டுமே நமக்கு அந்த உரிமை கிடைக்கும். இல்லையென்றால், கிடைக்காது. இது விரும்பத்தக்க விஷயம் அல்ல. அதுபோன்ற ஒரு நிலைமைதான் இன்றைக்கு உள்ளது” என்றார் கவலையுடன்.

இருவேறு கருத்துகள் முன்வைக்கப் பட்டாலும் இன்னும் அதிகமாக ஆராயப்பட வேண்டிய, விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் உள்ளன. குறிப்பாக எந்தச் சமூகமும் தாங்கள் விலக்கப்பட்டு விடுவோமா என்று அச்சப்படாத சூழலை உருவாக்க வேண்டியது முக்கியம்.