Published:Updated:

அதிரடி காட்டும் ஸ்டாலின்.. அக்கறையா? அச்சமா? விளம்பரமா?

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

முதல்வராகப் பதவியேற்ற ஒரு வாரத்துக்குள் மக்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பெயர் நன்கு ரீச் ஆகியிருக்கிறது. முதல்வர் மேற்கொள்ளும் அதிரடிகள்  விளம்பரத்துக்காகவா? மக்கள் மீதான அச்சத்தின் காரணமாகவா? அலசுவோம்.

முதல்வராகப் பதவியேற்ற ஒரு வாரத்துக்குள் மக்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பெயர் நன்கு ரீச் ஆகியிருக்கிறது. முதல்வர் மேற்கொள்ளும் அதிரடிகள் மக்கள் மீதான அக்கறையா இல்லை வெறும் விளம்பரத்துக்காகவா... அலசுவோம்.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது தி.மு.க. முதன்முறையாக முதல்வர் நாற்காலியில் மே 7-ம் தேதி அமர்ந்தார் மு.க.ஸ்டாலின். முதல் கையெழுத்தில் தொடங்கி , அதிகாரிகள் நியமனம், மருத்துவர், செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை, திடீர் ஆய்வுகள், ஊரடங்கு அமல், அனைத்துக்கட்சிக் கூட்டம் என தொடர்ந்து அதிரடிகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். எதற்காக, யாரை திருப்திப்படுத்த இந்த அதிரடி உத்தரவுகள் முதல்வருக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் விசாரித்தோம்.

ஸ்டாலின் கேபினட்
ஸ்டாலின் கேபினட்

"பொதுவாகவும் சரி, தேர்தல் பிரசாரத்திலும் சரி அ.தி.மு.க ஊழல் கட்சி, அதனால் தி.மு.க-வை ஆதரியுங்கள் என்று சொன்னால், மக்கள் கேட்கும் முதல் கேள்வி 'ஏன் தி.மு.க ஆட்சி வந்தால் ஊழல் இருக்காதா? அரசியவாதிகள் என்றாலே ஊழல்வாதிகள்தானே!' என்பதுதான். அந்தக் கேள்வியே மக்கள் மனதில் எழாமல் இருக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் முதன்மைக் குறிக்கோள். அதற்காகத்தான், 'முதல்வன்' திரைப்பட பாணியில் செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க ஆட்சியில் டம்மியாக வைக்கப்பட்ட, ஊழல் கரைபடியாத ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளைத் தேடித்தேடி பணியமர்த்துவதற்கும் இதுதான் காரணம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அ.தி.மு.க எவ்வளவோ ஊழல் புரிந்திருந்தாலும் மக்கள் மனதில் நிலைத்திருப்பது என்னவோ 2ஜி முறைகேடு தான். அதுமட்டுமின்றி, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ரவுடியிஸம் பெருகும், காவல்துறை கைகள் கட்டப்பட்டுவிடும், தி.மு.க லோக்கல் நிர்வாகிகள்கூட போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து செய்வார்கள் போன்ற செய்திகளும் மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இது பல காலமாக கட்டமைக்கப்பட்ட ஒன்று. ஒரேயடியாக இதனை மாற்ற முடியாது. படிப்படியாகத்தான் மக்கள் மனதில் இடம்பெற முடியும். அதன் காரணமாகவே முதல்வர் தனது துவக்கத்தையே அதிரடியாக்கி இருக்கிறார்.

தி.மு.க ஆட்சி வந்துவிட்டது. இனி நாம் வைத்ததுதான் சட்டம் என ஒரு சில பகுதிகளில் லோக்கல் தி.மு.க-வினர் அலம்பல் செய்துகொண்டுதான் இருப்பார்கள். சென்னை முகப்பேரில் அப்படி ஆட்டம் போட்டு அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கியவர்களை கட்சியை விட்டே நீக்கிவிட்டார் ஸ்டாலின். கட்சி நிர்வாகிகள் ஸ்டேஷன் பஞ்சாயத்துகளில் ஈடுபடக்கூடாது என்று கடிவாளமும் போட்டுவிட்டார். ஜெயலலிதா, கருணாநிதி இருந்தவரை ஒருவரது திட்டத்தை இன்னொருவர் ஆட்சிக்கு வரும்போது மாற்றி விடுவார்கள். ஆனால், அப்படி எதுவும் செய்துகூட கெட்ட பெயர் வாங்கிவிடக்கூடாது என்றுதான் முழு ஊரடங்கில் கூட அம்மா உணவகத்தை மூடவேண்டாம் என்று சொல்லிவிட்டார் ஸ்டாலின்.

கொரோனா வார் ரூம்-ல் ஸ்டாலின்
கொரோனா வார் ரூம்-ல் ஸ்டாலின்

கொரோனா முதல் அலையின் ஊரடங்கின்போது, அரசு நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதா முகம் பொறித்த ஸ்டிக்கரை ஒட்டி விநியோகித்தனர் அ.தி.மு.க-வினர். அப்போது அச்செயல் கடும் கண்டனத்தைப் பெற்றுக்கொடுத்தது. மேலும், பொங்கல் சிறப்புப் பை, கொரேனா நிவாரணப் பை என எல்லாவற்றிலும் ஜெ. படத்தை பிரின்ட் செய்தனர் அ.தி.மு.க-வினர். அதிலும் கவனமாக இருந்த ஸ்டாலின், அவர் படத்தையோ, கருணாநிதி படத்தையோ கொரோனா நிவாரணப் பைகளில் பிரின்ட் செய்யவில்லை. மக்களின் துயரம் அறிந்து கொரோனா நிவாரணத் தொகை 4000 ரூபாய், ஆவின் பால் விலைக் குறைப்பு, பெண்கள் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணம், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் செலவை அரசு காப்பீட்டில் ஏற்றது போன்ற முத்தான திட்டங்களையும் கொடுத்தார் முதல்வர்.

அதிரடி காட்டும் ஸ்டாலின்..
அக்கறையா? அச்சமா? விளம்பரமா?

இதெல்லாம் விளம்பரத்துக்காக என்றால் உடனடியாக செய்ய வேண்டிய அவசியமில்லை. சென்ற அரசு கஜானாவைத் துடைத்துவிட்டுச் சென்றுவிட்டது. தலைக்கு மேல் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அப்படியும் திட்டங்களை நிறைவேற்றுவதில் விளம்பரம் தேடினார் என்றால் மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதற்கு மக்கள் மீதான அக்கறையும், அச்சமுமே காரணம். ஏனெனில், எது செய்தாலும் உடனடியாக சமூக வலைதளங்களில் பரவிவிடுகிறது. மக்களும் கமென்ட் போடத் தொடங்கி விடுவார்கள். அப்படியான ஒரு சூழல் வரக்கூடாது என்பதுதான் முதல்வரின் நோக்கம். பொதுவாக, புதிய அரசு பொறுப்பேற்று ஓரிரு மாதங்கள் 'ஹனிமூன் பீரியட்' என்பார்கள். ஆனால் ஸ்டாலினுக்கோ அப்படியில்லை. இது நெருப்பாற்றில் நீந்தும், முள் மீது நடக்கும் நேரம் ஆகிவிட்டது முதல்வர் ஸ்டாலினுக்கு. அதைத் தெளிவாகக் கடந்தும் கொண்டிருக்கிறார்" என்றார் தெளிவாக.

நல்லவை நடக்கட்டும் என்ற நம்பிக்கையில்தான் மக்களும் ஓர் அரசைத் தேர்வு செய்கிறார்கள். ஆரம்பம் மட்டுமில்லாம ஆட்சி முழுவதும் மக்களுக்கான நற்செயல்கள் தொடர்ந்தால் நல்லதுதான்.

அடுத்த கட்டுரைக்கு