Published:Updated:

காவிரி மேலாண்மை ஆணையம்... தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசு!

காவிரி
பிரீமியம் ஸ்டோரி
காவிரி

காவிரி

காவிரி மேலாண்மை ஆணையம்... தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசு!

காவிரி

Published:Updated:
காவிரி
பிரீமியம் ஸ்டோரி
காவிரி
கொரோனோ தொற்றுக் காரணமாக இந்தியாவே முடங்கிக் கிடக்கிறது. இந்த நேரத்தில்கூட மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பது வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. பல ஆண்டுகளாக விவசாயிகளும் பொதுமக்களும் கடுமையாகப் போராடிப் பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தை, தனது கட்டுப்பாட்டிலுள்ள ஜல்சக்தி துறையின் (மத்திய நீர்வளத்துறை)கீழ் கொண்டுவந்திருக்கிறது மத்திய அரசு.

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்குத் தற்காலிக நிவாரணம் கொடுத்தது காவிரி மேலாண்மை ஆணையம் மட்டும்தான். இதுவரை தன்னிச்சையாகச் செயல்பட்டுவந்த அந்த அமைப்பு, இப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது. இனி தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நீர் முறையாகக் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி நிற்கிறது.

ஊரடங்கு நேரத்திலும்கூட குடியரசுத் தலைவர் வாயிலாக இதை ஜல்சக்தி துறையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அரசிதழில் வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. இதற்கு, தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனால், அவற்றைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாத தமிழகப் பொதுப் பணித்துறையோ, ‘மத்திய அரசின் தற்போதைய முடிவால், தமிழக விவசாயிகளுக்குப் பாதிப்பில்லை’ என்று மத்திய அரசின் செயலுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. இது விவசாயம் தொடர்பான பிரச்னை மட்டுமல்ல; காவிரி நீரால் பலனடையும் தமிழகத்தின் 25 மாவட்டங்களின் பிரச்னை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து, தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப் பாளருமான பெ.மணியரசனிடம் பேசினோம். “காவிரி, கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட நீர் மேலாண்மை ஆணையங்களை நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்களாக இணைத்திருக்கிறது மத்திய அரசு.

காவிரி
காவிரி

இதற்காக, 33E என்ற புதிய பிரிவு சேர்க்கப் பட்டிருக்கிறது. நீர் மேலாண்மை ஆணையம் என்பது தேர்தல் கமிஷன் போல ஒரு தன்னாட்சி அதிகாரம் உடையது. அதை மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் கொண்டு வருவது சட்ட விரோதம். நீர் மேலாண்மை ஆணையத்தை நிறுவுவது மட்டும்தான் மத்திய அரசின் வேலை. அதற்கடுத்து ஆணையத்தின் எந்தவித நடவடிக்கையிலும் மத்திய அரசு தலையிட முடியாது. ஆனால், தற்போது செய்துள்ள திருத்தத்தின் மூலம் அதைச் செய்யலாம். உதாரணமாக, ஆறுகளுக்கிடையே அணை கட்டுவதாக இருந்தால் மத்திய அரசின் வழிகாட்டுதலில் அதைச் செய்ய முடியும்.

அதேபோல, 7A என்ற புதிய பிரிவின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து ஆறுகளையும் பாதுகாப்பது, மேம்படுத்துவது, மேலாண்மை செய்வது மற்றும் தூய்மைச் சீர்கேட்டைத் தடுப்பது ஆகிய அதிகாரங்கள் இந்திய நீர்வளத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளன. அந்தந்த மாநில அரசுகளின் ஆற்று நீர் மேலாண்மை தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் இந்திய அரசு பறித்துக் கொள்ளச் சட்ட விரோதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய பிரிவைப் பற்றித் தெரிந்துகொண்டாலே, எதற்கு நதிநீர் மேலாண்மை ஆணையங்கள் நீர்வளத்துறையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஆறுகள் அனைத்தும் மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருக்கின்றன. அதை மத்திய அரசின் அதிகாரமாக மாற்றுவதற்கான வேலைதான் இது.

இதுநாள் வரை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்தாமல் இருந்ததே மத்தியில் ஆட்சியிலிருந்த, காங்கிரஸ், பா.ஜ.க அரசுகள்தான். ஒருவேளை மத்தியில் நடுநிலையான ஒரு அரசாங்கம் வந்தால், நமக்குக் கிடைக்க வேண்டிய நீர் சரியாகக் கிடைக்கலாம். ஆனால், இது மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரச்னை குறித்த விஷயம் மட்டுமல்ல; ஆற்று நீரைத் தனியாருக்குக் கையளிப்பதற்கான ஏற்பாடு. ஆற்று நீர், கி.மீ வாரியாகத் தனியாருக்கு கான்ட்ராக்ட் விடப்படும். அதற்குப் பிறகு, தண்ணீரை மீட்டர் வைத்து அளந்து, விவசாயிகளிடம் பணம் வசூலிக்கப்படும். பன்னாட்டு நிறுவனங்களும், உலக வர்த்தக நிறுவனமும் பல நாள்களாக இந்தக் கோரிக்கையை இந்திய அரசிடம் முன்வைத்து வருகின்றன.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதே, ‘தேசிய தண்ணீர்க் கொள்கை’ என்ற பெயரில் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு அது கைவிடப்பட்டது. அதேபோல, பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகும் அது தொடர்பாகப் புதிய சட்டம் இயற்றப்பட்டது. அதைச் செயல்படுத்து வதற்கான நேரமாக, இந்த கொரோனா காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். காவிரி மட்டுமல்ல; இந்தியாவில் எந்த ஆற்றையும் மத்திய அரசு எடுத்துக்கொள்வது சரியல்ல. தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, அரசிதழைத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும்’’ என்றார்.

தமிழ்நாடு பொதுப் பணித்துறையின் மூத்த பொறியாளர் சங்கத்தின் தலைவர் அ.வீரப்பன், “இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். மத்திய அரசு எப்போதுமே தமிழக மக்களுக்கு, குறிப்பாக, இங்குள்ள பாசன விவசாயிகளுக்குப் பாதகமாகவே நடந்து கொள்கிறது. முல்லைப் பெரியாறு, பாலாறு விவகாரங்களே இதற்குச் சாட்சி. காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டும்கூட, மேலாண்மை ஆணையம் அமைக்க மறுத்துவந்தது. நம் மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தியும் அலட்சியம் செய்தது. 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், நீண்ட இழுபறிக்குப் பிறகே ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனாலும் நிரந்தரத் தலைவரை நியமிக்கவில்லை. அதற்கு முழுமையான தன்னாட்சி அதிகாரம் இல்லை யென்றாலும் கூட, இங்காவது நம் ஆதங்கத்தைப் பதிவு செய்தோம்; அழுத்தம் கொடுத்தோம். தற்போது அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. மத்திய ஜல்சக்தி துறை கண்டிப்பாகக் கர்நாடகாவுக்குச் சாதகமாகத்தான் நடந்து கொள்ளும். இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. காவிரியில் தண்ணீர் கொண்டு வர முடியாத தமிழக அரசு, கோதாவரியிலிருந்து காவிரிக்குத் தண்ணீர் கொண்டு வருவதாகத் திசை திருப்புகிறது. மத்திய அரசின் தற்போதைய சூழ்ச்சி நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. காவிரியில் தண்ணீர் வருமா என்பது இனி சந்தேகம்தான்” என்றார்.

இது குறித்து, தமிழகப் பொதுப்பணித்துறைச் செயலாளர் மணிவாசனிடம் பேசினோம். “எந்தவொரு ஆணையத்தையும், வாரியத்தையும் ஏதாவதொரு துறையின் கீழ் கொண்டுவருவது வழக்கமான நடைமுறை. பல ஆணையங்கள் இதற்கு முன்பே மத்திய நீர்வளத்துறையின் கீழ் இருந்தன. காவிரி உட்படச் சில ஆணையங்கள் தற்போது புதிதாகச் சேர்க்கப் பட்டுள்ளன. மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டுத் தெளிவுபெற்றுத்தான் அந்த அறிக்கையை வெளியிட்டோம். இதனால் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆறுகள் அனைத்தும் இன்னும் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றார்.

கொரோனா காலகட்டத்தில்கூட மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சிப்பதாக விவசாயிகளும், எதிர்க்கட்சியினரும் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். தமிழக அரசும் ‘ஆட்சியைக் காப்பாற்ற’ ஏதேதோ சொல்லி மழுப்பிக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் அரசியலைக் கடந்து, மாநில நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.

பெ.மணியரசன்
பெ.மணியரசன்

“காவிரி மேலாண்மை ஆணையம் என்பது தேர்தல் கமிஷன்போல ஒரு தன்னாட்சி அதிகாரம் உடையது. அதை மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் கொண்டு வருவது சட்ட விரோதம்.”

- பெ.மணியரசன், ஒருங்கிணைப்பாளர்

காவிரி உரிமை மீட்புக் குழு

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

“காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்திருப்பது தமிழகத்தின் ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற செயல்.”

- மு.க.ஸ்டாலின், தலைவர், தி.மு.க.

“50 ஆண்டு காலம் போராடிப் பெற்ற காவிரி உரிமையை தமிழகம் இழந்துவிடக் கூடாது.

அ.வியனரசு
அ.வியனரசு

நடுவணரசின் நீர்வளத்துறையின் கீழ் காவிரி வாரியம் என்ற அறிவிப்பை எதிர்த்து தமிழக அரசு, உடனே உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும்.”

-அ.வியனரசு, தலைவர்-தமிழர் விடுதலைக் கொற்றம்.

“காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளை முடக்கிடும் வகையில் ஆணையமானது மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

இது கர்நாடகத்துக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதைக் காட்டுகிறது.”

-பி.ஆர்.பாண்டியன் -தலைவர்,

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு

பொறிஞர் அ.வீரப்பன்
பொறிஞர் அ.வீரப்பன்

“காவிரி மேலாண்மை ஆணையம் நீதிமன்றம்போல் செயல்படும் ஒரு சுதந்திர அமைப்பு. அதை மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு வந்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்.”

- பொறிஞர் அ.வீரப்பன்

மூத்த பொறியாளர் சங்கம் (த.பொ)

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

“காவிரி நீர் விவகாரம் தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்னை என்பதால் இதில் அலட்சியம் காட்டாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி அமைச்சகத்துடன் இணைக்கும் முடிவை கைவிடுமாறு மத்திய அரசை முதல்வர் பழனிசாமி வலியுறுத்த வேண்டும். அனைத்துக்கட்சித் தலைவர்களை அழைத்து எதிர்ப்பைக் காட்ட வேண்டும். செய்வாரா?”

- மாணிக்கம் தாகூர், விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர்.

மருத்துவர் பாரதிச்செல்வன்
மருத்துவர் பாரதிச்செல்வன்

“காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தையும் ஆறுகளின் மீதான மாநில அரசுகளின் உரிமையையும் மத்திய அரசு பறித்துள்ளது. நீதி கேட்டு, தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும்.”

- மருத்துவர் பாரதிச்செல்வன், தலைமை ஆலோசகர், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு.

சி.வையாபுரி
சி.வையாபுரி

“தேன்கூட்டில் கல்லெறியப் பார்க்கிறது மத்திய அரசு. காவிரி ஆறு தமிழகத்தின் ஜீவாதாரம். அதை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம். காவிரியைப் போராட்டங்களின் மூலமே பெற்றோம். இனியும் போராடி ஆணையத்தை மீட்போம்.”

- சி.வையாபுரி, ஐக்கிய விவசாய சங்கத் தலைவர்.