Published:Updated:

வாசகர்களுக்கு வணக்கம்: சமூக அநீதியை அரசே அனுமதிக்கலாமா?

அந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த எஸ்.சி., எஸ்.டி பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் தொடக்க நிலையிலேயே நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

வாசகர்களுக்கு வணக்கம்: சமூக அநீதியை அரசே அனுமதிக்கலாமா?

அந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த எஸ்.சி., எஸ்.டி பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் தொடக்க நிலையிலேயே நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

Published:Updated:
‘தகுதி’, ’திறமை’ ஆகியவற்றைக் காரணம் காட்டி விளிம்பு நிலை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்படும் அவலம் இந்தியாவில் நீண்டகாலமாக நிலவுகிறது.

இந்த நிலையில் முழுமையான தகுதியும் திறமையும் அனுபவமும் இருந்தும்கூட, எஸ்.சி., எஸ்.டி பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்ட கொடுமை இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதுவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘எய்ம்ஸ் மருத்துவமனை’ எனப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையிலேயே இப்படியொரு அநீதி நிகழ்ந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Doctor(Representational Image)
Doctor(Representational Image)
Photo by Sasun Bughdaryan on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பட்டியலினத்தவர், பழங்குடியினர் நலன் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை ஒன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் இடம்பெற்றிருக்கும் பல தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக இருக்கின்றன. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் 1,111 ஆசிரியர் பணியிடங்களில் 92 பேராசிரியர்கள், 275 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த எஸ்.சி., எஸ்.டி பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் தொடக்க நிலையிலேயே நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விண்ணப்பதாரர்கள் முழுமையான தகுதியும், திறமையும், அனுபவமும் பெற்றவர்கள். மேலும் இவர்கள், எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக மருத்துவர்களாக பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அங்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு உரிய பணி வாய்ப்பு கட்டாயம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பொருத்தமான, போதுமான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத காரணத்தால், அந்த இடங்கள் நிரப்பப்படவில்லை என்று சொல்லப்பட்டிருக்கும் காரணம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கருதப்பட வேண்டும். எய்ம்ஸ் நிர்வாகத்தால் சொல்லப்படும் காரணம் ஏற்கத்தக்கது அல்ல என்று நாடாளுமன்ற நிலைக்குழுவும் சுட்டிக் காட்டியுள்ளது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

எய்ம்ஸில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் முறையான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிரப்பப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கும் நாடாளுமன்ற நிலைக்குழு, அதற்கான செயல்திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்று கோரியிருக்கிறது. எதிர்காலத்தில், தற்போதைய காலிப்பணியிடங்களை நிரப்பும்போது, எந்தவொரு காரணத்தாலும் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான இடங்கள் எதுவும் காலியாக இருக்கக்கூடாது என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு கறார் காண்பித்திருக்கிறது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் இந்த அணுகுமுறை வரவேற்கத்தக்கது.

மேலும், எஸ்.சி., எஸ்.டி விண்ணப்பதாரர்களின் உரிமையைப் பறிப்பதற்காக தவறான, பாரபட்சமான அணுகுமுறையும் தேர்வுக்குழு கையாளுகிறது என்கிற உண்மையை நாடாளுமன்ற நிலைக்குழு வெளிச்சம் போட்டுக் காண்பித்திருக்கிறது. எய்ம்ஸ் பொதுக்குழுவில் எஸ்.சி., எஸ்.டி பிரிவுகளைச் சேர்ந்த யாரும் உறுப்பினர்களாக இல்லாததும் இந்தப் பிரச்னைக்கு ஒரு முக்கியக் காரணம். எனவே, எய்ம்ஸ் பொதுக்குழுவிலும் எஸ்.சி., எஸ்.டி பிரிவுகளைச் சேர்ந்த ஒருவர் இடம்பெற வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்திருக்கிறது.எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், இதர இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகள் அனைத்திலுமே எஸ்.சி மாணவர்கள் 15% அளவுக்குக் குறைவாகவும், எஸ்.டி பிரிவு மாணவர்கள் 7.5% அளவுக்குக் குறைவாகவுமே சேர்க்கப்படுகிறார்கள் என்ற அவலத்தையும் நாடாளுமன்ற நிலைக்குழு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

இடஒதுக்கீடுக்கு எதிரான இத்தகைய அணுகுமுறையை மத்திய அரசு எந்த இடத்திலும் எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.