Published:Updated:

`சித்தம் துடிக்குதம்மா!' - 1962 சீன ஊடுருவலின்போது இந்தியாவின் மனநிலை என்ன? #IndiaChinaFaceOff - பகுதி 2

1962-ல் சீனப் படைகள் முன்னேறத் தொடங்கிய நேரத்தில், இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள், அரசின் அணுகுமுறை, உலக நாடுகளின் பார்வை, நம் நாட்டு மக்களின் மனநிலை எனப் பல்வேறு கோணங்களில் அப்போதைய சூழல்களை எடுத்துக் காட்டியிருக்கிறது ஆனந்த விகடன்.

அந்த வகையில், 04.11.62 மற்றும் 11.11.62 தேதிகளிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான தலையங்கம் பகுதிகளிலிருந்து...

ஐயமுண்டு பயமில்லை

கடைசியாக சீனா படையெடுத்தே விட்டது. சென்ற 20-ம் தேதியன்று காலை, ஐந்து மணிக்குச் சீனத் துருப்புகள் பெருவாரியாக அணிவகுத்து, வடகிழக்கு எல்லைப் பகுதியிலும், லடாக்கிலுள்ள நமது ராணுவ முகாம்களிலும் தாக்கி முன்னேற ஆரம்பித்தன. வசதியற்ற சூழ்நிலையிலும் நமது வீரர்கள் கடும் போர் புரிந்து எதிரியை எதிர்த்து நிற்கின்றனர். ஆனால், சாரி சாரியாக வரும் சீனப் படையைத் தடுத்து நிறுத்த அவர்களால் முடியவில்லை. அதனால் சில முகாம்களை நாம் இழக்க நேர்ந்துள்ளது.

பல நாள்களாகவே இந்தியா மீது படையெடுக்கும் நோக்கத்துடன் எல்லா ராணுவ ஏற்பாடுகளையும் செய்துகொண்டு, பெரும் படையை நம் எல்லையில் குவித்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறது சீனா. அப்படியிருந்தும் பெரும் சேதத்துக்குப் பிறகுதான் சீனப் படைகள் முன்னேற முடிந்திருக்கின்றன என்பது, நமது வீரர்களின் போர்த் திறமைக்கும் மன உறுதிக்கும் எடுத்துக்காட்டு.

சீனர்களின் இந்தத் திடீர் வெற்றிகளைக் கண்டு நாம் கலங்க வேண்டியதில்லை.

யுத்தத்தில் திடீர் என்று தாக்குபவனுக்கு எப்போதுமே ஆரம்ப வெற்றிகள் அதிகமாகக் கிடைப்பதுதான் வழக்கம். சென்ற உலக மகா யுத்தத்தில் இந்தத் திடீர் தாக்குதல் மூலம் ஹிட்லரின் நாஜிப் படை வியக்கத்தக்க வகையில் முன்னேறியதைக் கண்டோம். ஆனால் இறுதியில் தோல்வியடைந்தது நாஜி ஜெர்மனியே. அதேபோலதான் மண்ணாசை கொண்ட சீனாவும் பெருவாரியான ராணுவ ஏற்பாடுகளைச் செய்துகொண்டு, ஏராளமான துருப்புகளைத் திரட்டி திடீரென்று தாக்க முற்பட்டதால் சீனப் படைகள் சற்றே வெற்றி பெற முடிந்தன. ஆனால் போர் தொடங்கிய மூன்றாவது நாளன்றே, சீனர்களின் முன்னேற்ற வேகம் குறைந்துவிட்டது. இப்போது ஒவ்வொரு அடி நிலத்துக்கும் சீனப் படைகள் நம் ராணுவத்துடன் பயங்கரமான போர் புரிய வேண்டியிருக்கிறது. பல முகாம்களில் இந்தியப் படையினர் எண்ணிக்கையில் குறைந்திருந்த போதிலும், எதிரியை அணுகவிடாமல் விரட்டியடித்து வருகின்றனர்.

பஞ்சசீலம், சமாதானம், நட்பு, நல்லுறவு என்றெல்லாம் சீனா சொல்லியதை முதலில் நாம் நம்பிவிட்டோம். சமீபத்தில்தான் அதன் ஆக்கிரமிப்பு நோக்கமும், மண்ணாசையும், அதற்காக அது செயதுவந்த ராணுவ ஏற்பாடுகளும் வெளிப்பட்டன. அது முதலே இந்திய சர்க்கார் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் வருகிறது.

ஆனால் மனித நடமாட்டமில்லாத அந்த உறையும் பனிப் பிரதேசத்தில் தேவையான பாதுகாப்பு தளங்களையும் சாலைகளையும் அமைப்பது இந்தியாவுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. அதோடு பனி உறைந்த அந்தப் பகுதிகளில் நமது ராணுவம் போரிடுவதற்கு அவ்வளவு பழக்கப்பட்டிருக்கவில்லை. இத்தகைய அனுபவமற்ற சூழ்நிலையிலும் நமது ராணுவம் வீரத்துடன் போராடி வருவது வியக்கத்தக்க சாதனையாகும்.

04.11.62 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான தலையங்கம்
04.11.62 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான தலையங்கம்
#VikatanOriginals

சீனாவின் படையெடுப்புச் செய்தியைக் கேட்டவுடன் நாட்டு மக்கள் துடிப்புற்று எழுந்துவிட்டனர். தாய்நாட்டைக் காக்க எத்தகைய தியாகத்தையும் செய்ய அனைவரும் தயாராகிவிட்டனர். நம் மாஜி ராணுவத்தினர், `போர்முனைக்கு எங்களை அனுப்புங்கள், எதிரியை ஒரு நொடியில் விரட்டி விடுகிறோம்' என்று ஆவேசம் கொண்டு கேட்கின்றனர். ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் இந்தியத் தளபதியான திரு.கரியப்பா அவர்கள், மீண்டும் தமது சேவையை நாட்டுக்கு அளிக்கத் தயார் என்று சொல்லியுள்ளது நம் உள்ளத்தைத் தொடுகிறது.

பாரதப் பிரதமரின் ரேடியோ செய்தியைக் கேட்ட மக்கள் அனைவருமே மற்ற பிரச்னைகளையெல்லாம் மறந்துவிட்டனர். அரசியல் கட்சிகளோ, வீண் சர்ச்சைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒருமுகமாக நேருஜியின் கரத்தைப் பலப்படுத்த முன்வந்துள்ளன. இந்திய கம்யூனிஸ்டுகளே கூட சீனாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து, `நமது எல்லையைப் பாதுகாக்க அரசாங்கத்துக்குத் துணையாக நிற்போம்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதுமட்டுமா? உலகமே இன்று சீனாவின் ஆக்கிரமிப்பைப் பலமாகக் கண்டித்து இந்தியாவுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறது. ``எங்களை மட்டும் ஒரு வார்த்தை கேட்கட்டும், உதவி செய்யக் காத்திருக்கிறோம்" என்கிறது அமெரிக்கா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவ்வாறு, தர்மமும் நியாயமும் உலக அபிப்ராயமும் நம் பக்கம் இருக்கும்போது இறுதி வெற்றி நமக்குத்தான் என்பதில் ஐயம் இல்லை.

ஆனால், இந்த எல்லைப் போரில் வல்லரசுகளைத் துணைக்கு அழைத்து அதை உலக யுத்தமாக மாற்ற ஒருபோதும் இந்தியா விரும்பவில்லை. நமது எல்லையை நாமேதான் காக்கவேண்டும் என்று உறுதிகொண்டு அது போரிடத் தீர்மானித்திருக்கிறது. அவ்வாறு நமது எல்லையைக் காக்க நமது ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களை எவரிடமிருந்தும் வாங்கிக் கொள்ளவும் நாம் தயாராக இருக்கிறோம்.

சற்றே தயார் செய்துகொள்ள அவகாசம் கிடைத்தவுடன், நமது படையினர் தற்போது இழந்த பகுதிகளிலிருந்து மட்டுமல்ல, ஏற்கெனவே சீனா கைப்பற்றிக்கொண்டிருந்த பகுதிகளிலிருந்தும் அதை வெளியேற்றிவிடும்.

இந்தியா - சீனா போர்
இந்தியா - சீனா போர்

தரைப்படையைப் பொறுத்தவரை இன்று திறமையிலும் உறுதியிலும் இந்திய ராணுவத்துக்கு நிகராக வேறு எந்தப் படையுமே இல்லை எனலாம். சென்ற யுத்தத்தில் மின்ன வேகத்தில் முன்னேறிக்கொண்டிருந்த ரோமலின் படையை எகிப்தில் தடுத்து நிறுத்தி பின்வாங்கச் செய்து, நேச நாடுகளின் வெற்றிக்கு அடிகோலியது இந்திய ராணுவம்தான். அதேபோல அடர்ந்த அஸ்ஸாம் காடுகளில் ஜப்பானியர்களை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தியதும் இந்திய ராணுவம்தான். முதல் உலக மகா யுத்தத்தில்கூட இந்திய ராணுவத்தின் வீரச் செயல்கள் புகழ்பெற்று விளங்கியது.

இத்தகைய வீரம் நிறைந்த நமது ராணுவத்தினர் தாய்நாட்டின் மண்ணையும் மானத்தையும் காக்கப் போரிடும்போது, தளரா நெஞ்சத்துடன் நாம் ஒன்றுபட்டு நின்று, நாட்டின் உற்பத்தியைப் பெருக்கி, அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் ஆயுதங்களையும் கொடுத்து ஊக்க வேண்டியது நமது கடமை.

11.11.62 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான தலையங்கம் பகுதிகளிலிருந்து...

சித்தம் துடிக்குதம்மா!

அவன் பச்சிளம் பாலகன். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவனுக்கு பதினைந்து ஆண்டுகள் நிரம்பின. அதற்குள் ஞானத்திலே சிறந்தவன், மானத்திலே உயர்ந்தவன், நிதானத்திலே நிகரற்றவன், நடுநிலை தவறாதவன், நட்பை மறவாதவன், ஆற்றலில் வல்லவன்; ஆனால் அனைவருக்கும் நல்லவன் என்று உலகத்திலுள்ள அத்தனை பேரும் அவனைப் புகழ்ந்தார்கள்.

புகழ் வந்தால் உலகில் பொறாமையும் கூடவே வருகின்றதே! `இவனுக்கு இவ்வளவு புகழா? நம்மை விட இவன் உயர்ந்தவனா?' என்று பக்கத்து வீட்டுக் குள்ளன் பதறினான். ஆத்திரத்தில் கத்தியைத் தீட்டினான். ஓங்கி அவன் முதுகிலேயே குத்தியும் விட்டான்!

அந்தோ! ரத்தம் வடிகின்றனது. அவன் தாய் சென்ற தீபாவளிக்குப் பட்டுச் சேலை கட்டவில்லை. பசும் மஞ்சள் பூசவில்லை. கங்கை ஆடி குங்குமப் பூவால் திலகம் இடவில்லை!

11.11.62 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான தலையங்கம்
11.11.62 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான தலையங்கம்
#VikatanOriginals

``அடே, ஈனச் செயல் புரிந்த சீனனே! உனக்காக என் மகன் பன்முறை உலகச்சபையில் பரிந்து பேசினானே! உலகப் பேரவையில் உட்கார உனக்கும் இடம் கொடுக்க வேண்டுமென்று நீ தாக்கிய பிறகும் கூறினானே! உன்னை யோக்கியன் என்றெண்ணி பாண்டுங்கில் கூடினானே! பஞ்சசீலம் பாடினானே! பாரதத்திற்கு உன்னை அழைத்துக் கைகோத்து ஆடினானே! அத்தனையும் மறந்து நீ இன்று அவனைக் குத்திவிட்டாயே!"

``என் செல்வக் குழந்தை உனக்கு என்ன தீங்கு செய்தான்? போன மாதம்கூட உன் பசிக்குக் கோதுமை அனுப்ப வேண்டுமென்று கூறினானே! நன்றி மறந்த நயவஞ்சகா! அவன் மீதா நீ படையெடுக்கத் துணிந்தாய்?" என்று உள்ளம் குமுறுகிறாள் பாரதத்தாய்.

**

11.11.62 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான தலையங்கம்
11.11.62 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான தலையங்கம்
#VikatanOriginals
இந்திய - சீன போர்... 1962-ல் எல்லையில் என்ன நடந்தது? - ஒரு பிளாஷ்பேக் #IndiaChinaFaceOff #1962ThrowBack

``மகனே! என்ன செய்யப் போகிறாய்? மானம் உள்ளவனாக வாழப் போகிறாயா? அல்லது மறுபடியும் அடிமையாகி வீழப் போகிறாயா?" என்று நம்மில் ஒவ்வொருவரையும் பார்த்து நாத் தழுதழுக்கக் கேட்கிறாள் நம் அன்னை.

அந்த அன்னையின் குரல்தான் அன்று ரேடியோவில் நேரு பேசியபோது நாடெங்கும் ஒலித்தது.

பேச்சு முடிந்ததும் பலர் ரேடியோவை விட்டு எழுந்திருக்கவில்லை. வடிந்த கண்ணீரைத் துடைக்கவில்லை. எத்தனையோ வீடுகளில் பலர் அன்று இரவு சாப்பிடவில்லை!

**

வீரத் திருமகனே! நேருஜி அவர்களே! நீங்கள் `பணம், காசு, பொன் தாருங்கள்' என்று ஒருமுறை அறிக்கை விட்டதேபோதும். இனி உங்கள் பார்வை முழுவதும் பகைவனை விரட்டுவதிலேயே ஈடுபடட்டும்.

`எங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையுமே அளிக்கத் தயாராயிருக்கிறோம்' என்று செயலில் காட்டி வருகிறார்கள் நாட்டு மக்கள்.

ஆறு வரண்டு அடிசுடும்போது ஊற்று நீர் தாகத்தைத் தணிப்பது போல, சேமித்து வைத்த செல்வமெல்லாம் தேசத்தின் சுதந்திரத்தைக் காப்பதற்கு அல்லாமல் வேறு எதற்கு?

**

பாராட்டுகிறோம்!

நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பேராபத்தை உணர்ந்து, அதைப் பாதுகாப்பதே தங்கள் முதல் கடமையாகக் கருதி அரசாங்கத்துடன் ஒத்துழைக்க முன்வந்துள்ள தி.மு.கழகத்தையும் அதன் தலைவர் திரு அண்ணாதுரை அவர்களையும் மனமாரப் பாராட்டுகிறோம்.

பிரிவினை கோரும் தி.மு.கழகம் ``எங்கோ வடஎல்லையில் நடக்கும் சண்டைக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?" என்ற மனப்பான்மையோடு இருந்துவிடுமோ என்று சிலர் ஐயமுற்றிருக்கலாம். ஆனால், `நாடு இருந்தால்தான் அதைப் பிரித்துக் கொடுக்கும்படி கேட்க முடியும். ஜனநாயகம் இருந்தால்தான் எந்த அரசியல் கட்சியும் இயங்கிவர முடியும். கம்யூனிசத்தின் ஆதிக்கம் வந்துவிட்டால் பேச்சுமை கருத்துரிமை எல்லாம் பறிக்கப்பட்டுவிடும்' என்பதை தி.மு.க கழகத் தலைவர் உணராமலிருக்க முடியாதல்லவா?

எனவேதான் ``நேரு அரசாங்கத்தின் கையைப் பலப்படுத்துவோம், ஆக்கிரமித்த அன்னியனை முதலில் விரட்ட உதவி செய்வோம். அதுவரை திராவிட நாட்டுக் கோரிக்கையை ஒத்திவைப்போம். கோஷங்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள் அனைத்தையும் நிறுத்தி வைப்போம். எல்லையில் போரிடும் நம் ராணுவத்துக்கு இயன்ற வகையில் எல்லாம் உதவி செய்வோம்" என்று திரு அண்ணாதுரை அவர்கள் தமது கழகத் தோழர்களுக்கு எடுத்துரைத்திருக்கிறார்.

நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்புரிய வேண்டிய நெருக்கடியான இத்தருணத்தில் தி.மு.கழகம் சரியான வழியைப் பின்பற்ற முன்வந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்.

- தொடரும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு