Published:Updated:

1962 சீன யுத்தத்தின்போது எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை என்ன? #IndiaChinaFaceOff - பகுதி 3

Indo China war - 1962
News
Indo China war - 1962

1962-ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் தீவிரமாக நடந்தபோது, எதிர்க்கட்சிகளின் `அரசியல்' அணுகுமுறைகளையும், மக்களிடம் காணப்பட்ட எழுச்சியையும் அப்படியே அப்போது பதிவு செய்திருக்கிறது ஆனந்த விகடன்.

குறிப்பாக, அப்போது அரசியல் பேசியவர்களை விமர்சனப் பார்வையுடன் குறிப்பிட்டதுடன், மக்களிடம் தேசபக்தி பீறிட்டதை முன்னுதாரணத்துடன் காட்டியது. கோவை மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையம் விவசாயி பற்றிப் பதிவு செய்யப்பட்ட தகவலே இதற்குச் சான்று.

மேலும், அப்போது மகாராஷ்டிர முதல்வாக இருந்த சவானிடம் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதன் பின்புலத்தையும் பதிவு செய்திருக்கிறது ஆனந்த விகடன்.

இந்த அத்தியாயத்தில், 18.11.1962 மற்றும் 25.11.1962 தேதிகளிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான தலையங்கம் பகுதிகளைப் பார்ப்போம்.

பேசிக் கெடுக்காதீர்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வேண்டாத மருமகள் கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்று எதற்கும் குறை சொல்வார்கள் சில மாமியார்கள். மருமகள் பேசினால் `எதிர்த்துப் பேசுகிறாள்' என்பார்கள். பேசாமல் இருந்தாலோ, `என்னை மதிக்கிறதே இல்லை' என்பார்கள்.

வீட்டுத் தலைவிக்கு மட்டும் அல்ல; நாட்டுத் தலைவனுக்கும் இவ்வாறு பல மாமியார் கொடுமைகள் உண்டு.

ஆளும் கட்சியும், அதன் தலைவரும் நாட்டுப் பொறுப்பை ஏற்று நடத்தும்போது, அவர்கள் எதிர்க்கட்சிகளாகிய மாமியார்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவது இயற்கை. ஆனால் அதற்கும் ஒரு நேரம் காலம் வேண்டாமா? வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருக்கும் போது மாமியார் திட்டினால் அந்த வீட்டு மானம் என்ன ஆவது?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விருந்து வந்தபோதே இப்படியென்றால், எதிரி வந்திருக்கும்போது ஏசுவது முறையாகுமா?

இன்று நம் நாட்டில் அவசர நிலைமை பிரகடனமாகி இருக்கிறது. பேச்சை அளந்து பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. `அளந்து பேசு, அக்கம் பக்கம் பார்த்துப் பேசு, அடக்கமுடன் பேசு, அக்கப் போர் பேசாதே' என்று மக்களுக்கு அறிவுறுத்த வேண்டிய நேரம் இது. இந்தச் சூழ்நிலையில் சில அரசியல் தலைவர்கள் `என்ன பேசுகிறோம்? எங்கே பேசுகிறோம்? எப்போது பேசுகிறோம்?' என்பதைக் கூடச் சிந்திக்காமல், மனம் போனபடியெல்லாம் பேசி, மக்களைக் குழப்புவதைப் பார்க்கும் போது நமது உள்ளம் புண்படுகிறது.

நெருக்கடி மிகுந்த இந்த நேரத்தில் நேருவுக்கு ஊக்கம் அளித்து மக்களை உற்சாகப்படுத்தாமல், `தினை விதைத்தவன் தினை அறுக்கிறான்; வினை விதைத்தவன் வினையை அறுக்கட்டும். நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்களே இதைச் சமாளிக்கட்டும்' என மனப்பான்மையுடன் சிலர் மேடைகளில் பேசுவதைப் பார்க்கிறோம்.

இவ்வாறு பேசுவதால் எதிரி பயந்து ஓடி விடுவான் என்றால் இதைப் பேசட்டும், இன்னும் பேசட்டும்! ஆனால் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குத்தானே கொண்டாட்டம் என்று உணர வேண்டாமா? ஆத்திரம் வரும்போது வார்த்தைகளைக் கொட்டிவிட்டால், பிறகு அள்ள முடியுமா? அதனால் ஏற்படும் தீமைகளை விலக்கத்தான் முடியுமா?

**

18.11.1962 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான தலையங்கம்
18.11.1962 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான தலையங்கம்
#VikatanOriginals

`சீனர்களை விரட்ட வேண்டுமா? அதற்கு ஓர் அபூர்வமான வழி சொல்கிறேன், கேளுங்கள். அமெரிக்காவிடம் சொல்லி, சியாங்-கே-ஷேக்கை செஞ்சீனா மீது படை எடுக்கும்படி நேருஜி செய்ய வேண்டும். முதுகிலே அடித்தால் சீனன் திரும்புவான்; இந்திய எல்லையில் அவன் கொட்டம் அடங்கும்' என்று கம்பீரமாக ஒரு பொதுக் கூட்டத்தில் மூழங்கி இருக்கிறார் திரு மசானி அவர்கள்.

அடடா! இந்த `ஹிமாசல' வீரரின் மூளையே மூளை! நமது ராணுவத்திற்குக் கூட அவர் தலைமை வகிக்கலாம்போல் இருக்கிறதே!

ஆனால் இதில் நமக்கு ஒரே ஒரு வருத்தம்தான். இவ்வளவு மணியான யோசனையைச் சொல்வதற்கு, பம்பாயிலிருந்து டெல்லிவரை பறந்து சென்றவர், இதை நேருவிடமே நேரில் கூறி இருக்கலாமே! அல்லது தமது கட்சியின் அங்கத்தினர்களைக்கொண்டு பார்லிமென்டில் வலியுறுத்தச் சொல்லி இருக்கலாமே! ஏன் இதைப் பொதுக் கூட்டத்தில் போட்டு உடைத்து விட்டார் என்பதுதான் புரியவில்லை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`கொக்கு தலையில் வெண்ணையை உருட்டி வை. அது வெயிலில் உருகி கண்ணில் வடியும். கொக்குக்குக் கண் தெரியாது. அப்போது பொக்கென்று அதைப் பிடித்து விடலாம்' என்பது போல அவருடைய யோசனை கவைக்கு உதவாது என்பது அவருக்கே தெரியும்.

அவர் ஒரு `ஐடியா' கொடுத்தாரே தவிர, நேருஜி இதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று அவர் நினைத்தாரா? அல்லது நினைப்பாரா? அப்படி நினைத்திருந்தால் நேருவைப் புரிந்துகொண்டவர் ஆவாரா? பின், அவர் கருத்துத்தான் என்ன?

அதுதான் அரசியல்!

**

இன்னொரு தலைவரின் பொறுப்பற்ற பேச்சு. இந்த நாட்டிலுள்ள நாற்பத்து நாலு கோடி மக்களையும் ஆத்திரம் அடையச் செய்திருக்கிறது. `நாட்டின் தலைமையையே மாற்ற வேண்டிய அவசியம் கூட வந்து விட்டது. நாடு ஒரு தனி நபரின் சொத்து அல்ல' என்று மனத்தில் எதையோ எண்ணிக்கொண்டு, அதைச் சொல்வதற்கும் அஞ்சி, அவலை நினைத்து உரலை இடித்திருக்கிறார் திரு கிருபளானி அவர்கள்! அந்தோ பரிதாபம்! அரசியல் வெறி அறிவையும் மறைத்து விட்டதே!

மனித குல மாணிக்கம் நேரு. மகாத்மா காந்தியின் வாரிசு நேரு. நாடு பூராவும் அந்த நேருவின் தலைமையைத்தான் நம்பியிருக்கிறது. அவரது ஒவ்வொரு சொல்லையும் உலகம் மதிப்புடன் கேட்கிறது. இன்று இந்தியாவுக்குப் பெருமளவில் உதவி செய்ய உலக நாடுகள் தாமாகவே முன் வருவதன் காரணமே நேருவின் தலைமைதான்!

இத்தகைய கிடைத்தற்கரிய தலைமையை மாற்ற வேண்டுமென்று எண்ணவோ, பேசவோ துணிந்த திரு கிருபளானி அவர்களே பேசுங்கள்! நன்றாகப் பேசுங்கள்! அந்த நேருவின் தலைமையில்தான் உங்களுக்கு இந்தப் பேச்சுரிமை இருக்க முடியும்!

*

ஐயா ஜயப்பிரகாச நாராயண் அவர்களே! பழங்கணக்குப் பார்க்க இது நேரமல்ல. குற்றங் குறைகள் இருந்திருக்கலாம்! இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆனால் எதிரியை வாயிற்படியில் வைத்துக்கொண்டு இவற்றை இன்று சர்ச்சை செய்ய வேண்டாம். கொஞ்சம் தயவு செய்யுங்கள்!

மதிப்பிற்குரிய ராஜாஜி அவர்களே.... உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.. கைகூப்பி வணங்குகிறோம்!

****

திறமை தேசத்தின் உடைமை

``சிறைச்சாலையில் என் மைந்தனுக்கு நல்ல படுக்கை தர மாட்டார்களே, தரையில் படுக்கச் சொல்வார்களே, பஞ்சணையில் படுத்துறங்கிப் பழகிய மகன் தரையில் படுத்தால் அவன் உடல் உறுத்துமே!'' என்ற கவலையில் தன் கையையே தலைக்கு உயரமாக வைத்துக்கொண்டு கட்டாந்தரையில் படுத்துப் பார்த்தாராம் பண்டித மோதிலால் நேரு.

தன் பாக்கியம் அனைத்தையும் பாரத மாதாவிற்கு அர்ப்பணம் செய்த மோதிலால் நேருவே இவ்வாறு துயருற்றார் என்றால் புத்திர பாசத்தின் வலிமையை என்னென்று சொல்வது!

ஆனால், இன்று அந்த புத்திர பாசத்தையும் மீறி, ``வீர மகனே வென்று வா'' என்று ஆசி கூறி, தாம் பெற்ற செல்வங்களைப் போர்க்களத்திற்கு அனுப்பி வைக்கும் பல தாய் தந்தையர்களைப் பார்க்கிறோம்.

25.11.1962 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான தலையங்கம்
25.11.1962 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான தலையங்கம்
#VikatanOriginals

`தங்கச் சுமைதாங்கிகள்', `நகைப் பைத்தியங்கள்' என்று நகையாடப்படும் நங்கையர்கள் ``பாரதத் தாய் எங்கள் தாய், அவளுடைய ஆபத்துக்கு இல்லாத தங்கம் எங்கள் அழகுக்காக இருப்பதா?'' என்று கூறி, தங்கள் அணிகலன்களையெல்லாம் அன்னையின் காலடியில் வைத்துத் காணிக்கை செலுத்துவதைப் பார்க்கிறோம்.

பிச்சையெடுத்துச் சேர்த்த பணத்தைப் போர் நிதிக்குக் கொடுத்து விட்டு, தன் பெயரைக் கூடச் சொல்லாமல் போகும் பெரியவர்களையும் காண்கிறோம்.

ஆம். இன்று கண்டறியாத காட்சிகளைக் காண்கிறோம். கேட்டறியாத கீர்த்திகளைக் கேட்கிறோம்!

தேச பக்தி வெள்ளம் பெருக்கெடுத்துவிட்டது. அதன் சக்தியால் இந்நாட்டிற்காகப் போரிடும் வீரர்கள் எல்லோரும் புத்தொளியுடன் விளங்குகிறார்கள். `சுற்றி நில்லாதே போ பகையே; துள்ளி வருகுது வேல்!'' என்ற வீர முழக்கத்துடன் போர் புரிகின்றார்கள்.

இவ்வாறு உயிரைக் கொடுத்துப் போராடும் வீரர்களுக்கு நாட்டு மக்கள் செய்ய வேண்டிய கடமை என்ன? பொன்னும் மணியும் அளித்தால் மட்டும் போதுமா?

போதாது. நீடித்த போரில் வெற்றி காண எல்லாத் துறைகளிலும் உற்பத்தி பெருக வேண்டுவது அவசியம்.

கோவை மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையம் விவசாயி ஒருவர் இத்தருணத்தில் ஓர் அரிய காரியத்தைச் செய்திருக்கிறார்.

அதிக விளைச்சலுக்காக அரசாங்கம் தமக்கு அளித்த தங்கப் பதக்கங்கள் இரண்டையும் அவர் தேசத்துக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

``என் திறமை, தேசத்தின் உடைமை, திறமையால் தேசத்தைச் செழிக்கச் செய்வேன். இதைக் காட்டிலும் அதிக விளைவை உண்டாக்கி இதனிலும் பெரிய பரிசு பெறுவேன்'' என்று சொல்லிப் பொன்னைக் கொடுத்ததோடு அல்லாமல், பொன்னான கருத்து ஒன்றையும் அவர் கூறியிருக்கிறார்.

ஏர் பிடிக்கும் கரங்களிலெல்லாம் இந்த வீர கங்கணம் ஏறட்டும். நாட்டின் பற்றாக்குறை தீரட்டும். ஆனால் இது மட்டும் போதுமா? விவசாயிகளின் திறமை மட்டும்தானா தேசத்தின் உடைமை?

இந்த மண்ணில் பிறந்த அனைவரின் திறமையும் நாட்டின் உடைமைதான்!

திறமையில், சொல் திறமை, செயல் திறமை என இரண்டு உண்டு.

இன்றுவரை நாட்டிலே சொல்திறமை ஒன்று மட்டும்தான் மதிக்கப்பட்டு வந்திருக்கிறது. அரசியலுக்கு அது வேண்டிருப்பதால், பேச்சுத்திறன் மிக்கவர்களுக்கெல்லாம் அங்கு இடம் கிடைத்துவிட்டது. ஆனால் செயல் திறமைக்கு இன்னும் செல்வாக்கு ஏற்படவில்லை.

செயல்திறனுக்கும் மதி நுட்பத்திற்கும் இந்தப் பாரத நாட்டில் பஞ்சமே கிடையாது.

புதுப் புதுத் தொழில்களை உருவாக்கி பற்பல துறைகளிலும் வியக்கத்தக்க சாதனைகளைப் புரியும் தொழில் மேதைகள் பலர் இந்த நாட்டில் இருக்கிறார்கள்.

இத்தகைய மேதைகளின் திறமையை எல்லாம் ஒன்று திரட்டி, போரின் வெற்றிக்குப் பயன்படுத்த வேண்டிய தருணம் இப்போது வந்திருக்கிறது.

ஒவ்வொரு துறையிலும் உள்ள தொழில் மேதைகளையெல்லாம் அரசினர் அழைத்து, ``போர் முயற்சிக்கு அடிப்படையான பல்வேறு பொருள்களின் உற்பத்தியைப் பெருக்க உங்கள் திறமையை இன்று நாட்டுக்குத் தாருங்கள்'' என்று அன்புக் கட்டளையை அவர்களுக்கு இட வேண்டும். அதை உடனே சிரமேற் கொண்டு செயல் புரியக் காத்திருக்கிறார்கள் அவர்கள்.

பல தொழில்களை ஆரம்பித்து, திறம்பட நிர்வகித்து, ஆக்க வேலை செய்தே பழகிய அவர்களுக்கு ``நாடு இருந்தால்தான் நாம் இருப்போம்'' என்ற உண்மை பிறர் சொல்லியா தெரிய வேண்டும்?' நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும்; நம் திறமையைத் தேசத்திற்கு அளிக்க வேண்டும்' என்று அவர்களும் ஆவலோடு துடிக்கும் தருணம் இது.

அதற்கேற்ற வாய்ப்பை அவர்களுக்கு அளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

*****

நாட்டைப் பாதுகாக்க ஒரு சவான்!

நாட்டின் சுதந்திரத்தைக் காக்க கடும் போர் நடத்த வேண்டிய இந்த நெருக்கடியான தருணத்தில், தேச மக்கள் சந்தேகத்தைப் போக்கி அனைவரது நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் அரசாங்கம் பெற வேண்டுமென்றுதான் நேருஜி பாதுகாப்பு இலாகாவின் பொறுப்பை தாமே ஏற்றுக்கொண்டார்.

ஆனால், ஏற்கெனவே பிரதமர் நேருவுக்கு எத்தனையோ பொறுப்புகள் இருந்து வருகின்றன. மக்கள் தலைவராக இருந்து யுத்த முயற்சியை அவர்தான் ஊக்குவிக்க வேண்டியிருந்தது. நெருக்கடிக்கேற்றவாறு நிர்வாக இயந்திரத்தைச் செயல்படுத்த வேண்டியிருக்கிறது. நடுநிலைமைக் கொள்கைக்கு இடையூறு இல்லாதவாறும் நமக்கு உதவி செய்யும் நண்பர்கள் மனத்தைப் புண்படுத்தாதவாறும், நமது அயல்நாட்டு விவகாரங்களை அவர்தான் பார்த்துக்கொண்டாக வேண்டியிருக்கிறது.

இவ்வளவுக்கும் நடுவே பாதுகாப்பு இலாகாவையும் நேருஜியே நீடித்து நிர்வகிப்பது என்பது முடியாத காரியம். ஆகவேதான் அதை ஒரு தனி மந்திரியிடமே மீண்டும் ஒப்படைக்கத் தீர்மானித்தார் அவர்.

ஆனால், தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்பு இலாகாவின் பொறுப்பை ஏற்பவர் திறமைசாலியாகவும், நாட்டு மக்கள் அனைவரது முழு நம்பிக்கையையும் பெற்றவராகவும் இருக்க வேண்டுமல்லவா?

பம்பாய் முதன் மந்திரி திரு சவான் அவர்கள் எல்லாவகையிலும் இப்பொறுப்பை ஏற்கத் தகுதியுடையவர் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். சிவாஜி தோன்றிய மகாராஷ்டிர மண்ணில் பிறந்த திரு சவானிடம் வீரம், தியாகம், திறமை மூன்றுமே குடி கொண்டுள்ளன. பிரதமர் நேரு அவரைப் பாதுகாப்பு அமைச்சராகத் தேர்ந்தெடுத்தது முற்றிலும் பொருத்தமாகும்.