Published:Updated:

`வாங்க... இல்லன்னா எப்பவும் வராதீங்க..!' ரஜினியின் 20 ஆண்டுக்கால அரசியல் ஃபார்முலா #VikatanOriginals

ரஜினியின் அரசியல் பிரவேசம்?!
ரஜினியின் அரசியல் பிரவேசம்?! ( Hasif Khan )

`பாபா'வுக்கும், `தர்பாரு'க்கும் இடைப்பட்ட காலம், கிட்டத்தட்ட 18 ஆண்டுகள். இத்தனை கால இடைவெளியில், திரையில் எவ்வளவோ மாறியிருக்கிறார் ரஜினி. ஆனால், அரசியலில் மட்டும் இன்னும் அப்படியே இருக்கிறார்.

`அரசியலுக்கு வருகிறார் ரஜினி!'

இந்த உலகில் அடுத்து Expiry-யே ஆகாத ஒரு விஷயம் உண்டென்றால், அது இந்த ஸ்டேட்மென்ட்தான்.

`அப்போ ஒரு பேச்சு, இப்போ ஒரு பேச்சு' என மாற்றி மாற்றிப் பேசும் அரசியல்வாதிகள் வாழும் இந்தக் காலத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே விஷயத்தை மாறாமல் தொடர்ந்து பேசிவரும் `அரசியல்வாதி' யார் என்றால், அது இன்னும் கட்சியே தொடங்காத `சூப்பர்ஸ்டார்'தான்.

ஜெயலலிதா, கருணாநிதிக்கு மாற்றாக இருப்பாரா என்பதில் தொடங்கி, ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவாரா என்பதுவரை... பல ஒப்பீடுகள், பல அலசல்கள், பல விவாதங்கள் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து நடந்துவிட்டன. ஆனால், இன்னும் அந்தப் பிரவேசம் மட்டும் நடக்கவேயில்லை.

ஒவ்வொரு படம் வரும்போதும், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தும் படத்திலிருக்கும் அரசியல் குறித்தும் விவாதங்கள் நடப்பது வழக்கம். அந்த இடைவெளி குறைந்து, இப்போது ஒவ்வொரு பிரச்னைக்கும் `ரஜினியின் அரசியல்' குறித்து விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அதுவும், நாட்டில் எங்கு போராட்டங்கள் நடந்தாலும், `போயஸ் கார்டனின் அந்தக் கதவுகள் இப்போது திறக்குமா?' என்ற அளவிற்கு ரஜினியின் கருத்துகள் விவாதத்தின் மையமாகியுள்ளன. நேற்றுகூட, டெல்லி வன்முறை தொடர்பாக ரஜினி தெரிவித்த கருத்திற்கு, ``சபாஷ் நண்பரே... அப்படி வாங்க" எனக் கைகொடுத்திருக்கிறார், கமல். ஆனால் அவரோ, `வருவேனா?' என்கிறார்.

இந்த அரசியல் விளையாட்டு குறித்து மக்கள் மற்றும் ஊடகங்களின் கருத்து, கடந்த 20 ஆண்டுகளாக ஒரே மாதிரியாகத்தான் இருந்துவருகிறது. அப்படி 2002-ம் ஆண்டு ஆனந்தவிகடனில் வெளிவந்த தலையங்கம் இது...

இதில், ``இளங்கோவனும் கருத்து தெரிவித்திருக்கிறார்" என்ற வரியைத் தூக்கிவிட்டு படித்தால், இந்தக் கட்டுரைக்கும் காலாவதி தேதியே இருக்காது..!

விகடன் தலையங்கம் 27/01/2002
விகடன் தலையங்கம் 27/01/2002
#VikatanOriginals

``தமிழ்நாட்டில் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக மூன்றாவது அணி ஒன்று உருவாவதற்கான அடையாளங்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.

இந்த மூன்றாவது அணிக்கு ரஜினிகாந்த் தலைமையேற்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுவருகிறது. இந்த அணிக்கு ரஜினி ஆதரவளித்தால், அதை வரவேற்கத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இப்படி, ரஜினி நேரடி அரசியலில் நுழைய வேண்டும் என்று அவ்வப்போது குரல்கள் ஒலிப்பது பழக்கப்பட்ட ஒன்றுதான். அரசியலில் நேர்மையையும், தூய்மையையும் எதிர்பார்ப்பவர்கள் ரஜினி மீது ஏராள நம்பிக்கை வைத்து, அவர் அரசியலுக்கு வரவேண்டுமென்று ஏக்கத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.

பொதுவாழ்வில் பல்வேறு பலவீனங்களைக் கொண்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்து, அலுத்துச் சலித்துப்போனதன் விளைவே இந்த எதிர்பார்ப்பு!

தன்மீது நம்பிக்கை வைத்திருக்கும் அரசியல் தலைவர்களையும் எதிர்பார்ப்பு வைத்திருக்கும் மக்களையும் தொடர்ந்து தவிக்கவிட்டு அலைக்கழித்துவருவது ரஜினிக்கு அழகல்ல!

ஒன்று, அழைப்பை ஏற்க விருப்பமும் துணிவும் இருந்தால், தாமதிக்காமல் அவர் அரசியலில் குதித்து விறுவிறுவென்று முன்னேற வேண்டும். அல்லது தனக்கு அப்படியொரு எண்ணம் இல்லை என்பதை நறுக்குத்தறித்தாற்போல் போட்டு உடைத்துவிட வேண்டும்.

இரண்டையும் செய்யாமல் நழுவிச்செல்லும் விலாங்குமீனாக இருந்துகொண்டிருப்பது ரஜினிக்கு நல்லதல்ல!"

- தலையங்கம் நிறைவடைந்தது

`நகைச்சுவை என்றால் உங்களுக்கு வேப்பங்காயா?'- மக்களின் கேள்விகளுக்கு ஜெ. பதில்கள் #VikatanOriginals

நாள்களை, வாரங்களை, ஆண்டுகளை பின்னோக்கிச் சென்று பார்க்கும்போது, கால ஓட்டத்தில் இப்போது நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள்தான் நம்மை வியப்புக்குள்ளாக்கும். ஆனால், இங்குமட்டும், இன்னும் எதுவும் மாறாமல் இருப்பதுதான் `ரஜினி' என்னும் அதிசயமும் அற்புதமும்..!

இதுபோன்ற சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... 

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு