Published:Updated:

ஆட்டிப்படைக்கும் அன்பில்... அலறும் அறிவாலயம்!

ஆட்டிப்படைக்கும் அன்பில்...
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டிப்படைக்கும் அன்பில்...

மூன்றாம் தலைமுறை நட்பு!

ஆட்டிப்படைக்கும் அன்பில்... அலறும் அறிவாலயம்!

மூன்றாம் தலைமுறை நட்பு!

Published:Updated:
ஆட்டிப்படைக்கும் அன்பில்...
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டிப்படைக்கும் அன்பில்...
“ஸ்டாலின் இளைஞராக இருந்த காலத்திலேயே ‘கோபாலபுரம் இளைஞர் மன்ற’த்தை உருவாக்கி, ஓடியாடிப் பாடுபட்டார். மிசா காலத்தில் சிறையில் சித்ரவதைகளுக்கு ஆளானார். அவரே தானாக உழைத்து, உழைத்து `தி.மு.க-வின் வருங்காலத் தலைவர்’ என்ற நிலைக்குத் தன்னைத்தானே உயர்த்திக்கொண்டார். அந்தவகையில், ஸ்டாலின் இன்றைக்கு என் அரசியல் வாரிசாகத் திகழ்கிறார்” - 2016-ம் ஆண்டு பேட்டி ஒன்றில் கருணாநிதி வெளிப்படுத்திய ‘வாரிசு பிரகடனம்’ இது! அதன் பிறகும்கூட கருணாநிதி உயிருடன் இருக்கும்வரையில் ஸ்டாலினுக்கு அதிகாரபூர்வமாகத் தலைவர் பதவியைக் கையளித்து விடவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1970-களின் இறுதிகளில் விடலைப் பருவத்தில் ‘கோபாலபுரம் இளைஞர் அணி’யைத் தொடங்கி, 1980-ல் மதுரை ஜான்சிராணி பூங்காவில் அதை ‘தி.மு.க இளைஞர் அணி’யாக நிறுவி, 1983-ல் அதன் செயலாளராக நியமிக்கப்பட்டு, தொடர்ச்சியாக அரசியல்களத்தில் தி.மு.க-வின் அடுத்த முகமாகச் செயல்பட்டும்கூட, தன் தந்தை கருணாநிதி மறைந்த பிறகே 2018, ஆகஸ்ட் மாதம் ஸ்டாலினால் தலைவராக முடிந்தது. கிட்டத்தட்ட 40 ஆண்டுக்காலப் போராட்டம்.

ஆனால், இன்றைய தலைமுறைக்கு அவ்வளவு காலமெல்லாம் காத்திருக்கப் பொறுமை இல்லை. சற்றேறக்குறைய ஸ்டாலினின் போராட்டக் காலத்தையே வயதாகக்கொண்ட இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், அவரின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் மொத்தக் கட்சியையும் கைப்பற்றத் துடிக்கிறார்கள்; மூத்த தலைவர்களை ஒடுக்குகிறார்கள் என்பதுதான் தமிழகம் முழுவதும் தி.மு.க தொண்டர்களின் குமுறலாக இருக்கிறது. இதில், இருவருமே ‘வாரிசு’கள் என்பது அறுபது வயதைத் தாண்டியும் தெருவில் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கும் சாமானியத் தொண்டனின் கூடுதல் குமுறல்!

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

2020, ஆகஸ்ட் 7. மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள். கிழக்கில் ‘வளரிளம் சூரியன்’ காலை மணி 7:30 காட்டியது. மெரினா கடற்கரையிலுள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் தி.மு.க மூத்த நிர்வாகிகள் நின்றிருந்தனர். சற்று நேரத்தில் வழுக்கிக்கொண்டு வந்தது கட்சித் தலைவரின் டொயோட்டா லேண்ட்ஸ்குரூஸர். மு.க.ஸ்டாலினும் உதயநிதியும் ஒன்றாக இறங்கினர். நிர்வாகிகளுக்கோ ஒரே ஆச்சர்யம். “வழக்கமா அன்பில் தம்பியோடதான் உதயா வருவாரு. அன்பில் ஏன் வரவில்லை...” என்று அதிர்ச்சி அடைந்தனர்.

மூன்றாம் தலைமுறை நட்பு!

அன்பில் மகேஷ் பொய்யாமொழி பற்றிச் சிறு அறிமுகம்... `அன்பில் தர்மலிங்கத்தின் பேரன்’, `அன்பில் பொய்யாமொழியின் மகன்’ என்பதே அன்பில் மகேஷின் அடையாளம், அங்கீகாரம், எக்ஸட்ரா... எக்ஸட்ரா எல்லாமே! ‘எழுதப்படாத வாரிசுரிமை’ என்பதைத்தான் கெளரவமாக தி.மு.க-வில் ‘பாரம்பர்ய தி.மு.க குடும்பம்’ என்றழைக்கிறார்கள். அப்படியொரு பாரம்பர்ய தி.மு.க குடும்பமாக மூன்று தலைமுறைகளாகத் திருச்சியில் கோலோச்சுகிறது இவர்களின் குடும்பம்.

அன்பில் தர்மலிங்கம் - கருணாநிதி; அன்பில் பொய்யாமொழி - ஸ்டாலின்; உதயநிதி - அன்பில் மகேஷ்
அன்பில் தர்மலிங்கம் - கருணாநிதி; அன்பில் பொய்யாமொழி - ஸ்டாலின்; உதயநிதி - அன்பில் மகேஷ்

ஸ்டாலினுக்குத் தோழனாக அன்பில் பொய்யாமொழி இருந்தபோது, புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, சேலம் வீரபாண்டி செழியன், ஈரோடு என்.கே.பி.ராஜா, காஞ்சிபுரம் தா.மோ.அன்பரசன், கரூர் வாசுகி எனப் பலரையும் பொறுப்புக்குக் கொண்டுவந்தார். ஸ்டாலின்-பொய்யாமொழி இருவரும் நட்பிலிருந்தபோது, சீனியர்கள் எப்படிப் பாதிக்கப்பாட்டார்களோ கட்சியினர் எப்படிப் புலம்பினார்களோ அதேபோலவே அன்பில் மகேஷ் - உதயநிதியின் நட்பும் கட்சியில் பலருக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி யிருக்கிறது. வரலாறு மீண்டும் திரும்புகிறது.

இளைஞரணிச் செயலாளராக உதயநிதி தேர்வாகும் முன்பே, இளைஞரணியில் பொறுப்பு வகித்தவர் மகேஷ். கூடுதலாக, உதயநிதி ரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராகவும் இருந்தார். உதயநிதியை இளைஞரணி பொறுப்புக்குக் கொண்டுவருவதற்கு, மாவட்டச் செயலாளர்களிடம் கடிதம் வாங்கியதில் இவரது பங்கு அதிகம். தற்போது உதயநிதியின் குரலாகவே மாறியிருக்கிறார் மகேஷ். அதைத் தொடர்ந்தே இவ்வளவு பிரச்னைகள்.

சென்னை ஓர் உதாரணம் மட்டுமே...

சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் நியமன விவகாரம், கடந்த இரு வாரங்களைத் தாண்டியும் கட்சியினரிடையே புகைந்து கொண்டிருக்கிறது. மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக மகேஷின் ஆதரவாளர் சிற்றரசு நியமிக்கப்பட்டதால், சீனியரான கு.க.செல்வம் கட்சியைவிட்டே விலகினார். இப்போது பா.ஜ.க-வில் ஐக்கியமாகி தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் செய்கிறார்.

சென்னை மேற்கு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஒன்றை சிற்றரசுவிடமும், மற்றொன்றை கு.க.செல்வத்திடமும் ஒப்படைத்திருந்தால் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்காது. சீனியர் ஒருவர், இளையவர் ஒருவர் எனப் பழுத்த அனுபவமும், புதிய சிந்தனைகளும் கட்சிக்கு உரமூட்டியிருக்கும். அதைவிடுத்து, சீனியரை ஓரங்கட்டிவிட்டு சிற்றரசுவுக்குப் பதவி கொடுத்ததால், ஒரு சீனியரை இழக்க நேரிட்டு விட்டது.

“சென்னை மேற்கு மாவட்ட விவகாரம், ஒரு துளி உதாரணம்தான்... மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் நிலவரம் கலவரமாகவே இருக்கிறது” என்கிறார்கள் அந்தந்த மாவட்டங்களிலுள்ள தொண்டர்கள். அவர்களின் குரலை அப்படியே இங்கு பதிவு செய்கிறோம்...

ஆட்டிப்படைக்கும் அன்பில்...
ஆட்டிப்படைக்கும் அன்பில்...

தருமபுரியில் தலையெடுத்த ஆதிக்கம்!

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதுதான் மகேஷ் - உதயநிதி நட்புக் கூட்டணியின் ஆதிக்கம் தலையெடுத்தது. தருமபுரி தொகுதிக்கு வேட்பாளர் ஒருவரை ‘டிக்’ அடித்தார் எ.வ.வேலு. அந்த ‘டிக்’கை அழித்து, செந்தில்குமாரைக் கொண்டுவந்து நிறுத்தியது நட்புக் கூட்டணி. விழிபிதுங்கி நின்றார் வேலு. ஸ்டாலினுக்கு நெருக்கமான சீனியரான அவராலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. செந்தில்குமார் வெற்றி பெற்று நட்புக் கூட்டணியின் சாய்ஸைக் கட்சியில் அங்கீகரிக்கவைத்தார்.”

கதிகலங்கும் கன்னியாகுமரி!

கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர் மனோ.தங்கராஜுக்கு எதிராக, திருவட்டார் ஒன்றியத் தலைவரான ஜெகநாதனை வளர்த்து விடுகிறார் மகேஷ். ஜெகநாதன் உதயநிதிக்கு நெருக்கம் என்கிறார்கள். மேல்புறம் ஒன்றியச்செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன், ஆரம்பத்திலிருந்தே மனோ.தங்கராஜுக்கு எதிராகச் செயல்பட்டுவந்தாலும் உதயநிதி - மகேஷ் வகையறாக்களுடன் நெருக்கம் இல்லை. அதேபோல், மாவட்ட துணைச் செயலாளர் ஜான் கிறிஸ்டோபர், முன்னாள் எம்.எல்.ஏ புஷ்பலீலா ஆல்பன் உள்ளிட்டவர்கள் மனோ தங்கராஜுக்கு எதிராகச் செயல்பட்டாலும் உதயநிதி வகையறாக் களுடன் தொடர்பு இல்லை. மனோ.தங்கராஜ், கனிமொழியின் தீவிர ஆதரவாளர் என்பதால், கட்சித் தலைமை இவரைக் கண்டுகொள்வதில்லை. இவ்வளவுக்கும் ஜெகநாதன் தே.மு.தி.க-வில் இருந்து வந்து ஓராண்டுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளரான சிவபத்மநாபனை மாநில வர்த்தகர் அணியின் துணைத் தலைவரான அய்யாதுரை பாண்டியன் மதிப்பதே இல்லை. இத்தனைக்கும் அய்யாதுரை பாண்டியன் இரு ஆண்டுகளுக்கு முன்புதான் அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவாளராக இருந்து, தி.மு.க-வுக்கு வந்தார். இடையே மகேஷின் அறிமுகம் அவருக்குக் கிடைத்த பிறகே இந்த நிலைமை. சமீபத்தில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டு தென்காசி காவல் நிலையத்தில் புகாரளிக்கும் அளவுக்கு நிலைமை முற்றியது!”

ஆட்டிப்படைக்கும் அன்பில்... அலறும் அறிவாலயம்!

ஆடு பகை... குட்டி உறவா? வேலூர் ‘கலவரம்’

“மூத்த தலைவர் துரைமுருகனின் ‘பொதுச் செயலாளர்’ கனவு காத்திருப்பிலேயே இருப்பதற்குக் காரணம், நட்புக் கூட்டணிதான் என்பது கட்சியில் அனைவரும் அறிந்த ரகசியம். அதுவே நிறைவேறுமா என்று தெரியவில்லை... இதற்கிடையில் துரைமுருகன், தன் மகன் கதிர் ஆனந்தை வேலூர் மாவட்டச் செயலாளராக்க ஆசைப்படு கிறார். துரைமுருகனின் வளர்ச்சியையே விரும்பாத உதயநிதி, கதிர் ஆனந்தை வளரவிடுவாரா? ஆடு பகையாக இருக்கும்போது, குட்டி உறவாக இருக்கவே முடியாது.

இன்னொரு பக்கம், கட்சிப் பணிகளில் சுறுசுறுப்பு காட்டாத, ஆற்காடு தி.மு.க எம்.எல்.ஏ-வான ஈஸ்வரப்பன்மீது தலைமை பாயாமல் இருக்கக் காரணமே உதயநிதிதான். மாவட்டச் செயலாளரான காந்தியின் பேச்சைக்கூட மதிப்பதில்லை ஈஸ்வரப்பன். இதனால், காந்தியே அவரிடம் ‘கப்சிப்’ என்றிருக்கிறார்!”

தனிமரமான கே.என்.நேரு - ‘சரியும்’ மலைக்கோட்டை

“திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக மகேஷ் மையம்கொண்ட பிறகு, கே.என்.நேருவின் பலம் குறையத் தொடங்கியது. அவரின் ஆதரவாளர்களும் மகேஷ் பக்கம் சாய ஆரம்பித்துவிட்டனர். அதன் முன்னோட்டம்தான் லீலா வேலு அடித்த போஸ்டர். திருச்சி மாவட்டத்தின் வடக்கு, மத்தி, தெற்கு ஆகிய மூன்று மாவட்டங்களுமே தெற்கு மாவட்டச் செயலாளர் மகேஷின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. இத்தனைக்கும் வடக்கு, மத்திய மாவட்டச் செயலாளர்களான காடுவெட்டி தியாகராஜன், வைரமணி இருவருமே நேருவின் தீவிர ஆதரவாளர்கள்.

சமீபத்தில் திருச்சி தெற்கு மாவட்ட மகளிரணிக்கான பொறுப்புகள் அறிவிக்கப்பட்டன. அதில் மூன்றாவது முறையாகத் தெற்கு மாவட்ட மகளிரணிச் செயலாளராக லீலா வேலு தேர்வு செய்யப்பட்டார். கடந்த இரு முறையும் அவரை இந்தப் பொறுப்புக்குப் பரிந்துரைத்தவர் நேருதான். இந்தமுறை தேர்வாகும்போது, தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார் மகேஷ். இந்தச் சூழலில் லீலா வேலு தேர்வானதும், நேருவைப் புறக்கணித்துவிட்டு, ஊர் முழுவதும் மகேஷுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில் ஸ்டாம்ப் சைஸுக்குக்கூட நேருவின் படம் இல்லை.

இதுநாள்வரை நேருவின் ஆதரவாளர்களாக இருந்த ஸ்ரீரங்கம் ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ-வான கே.என்.சேகரன், மலைக்கோட்டை சரவணன், துறையூர் ராணி, குடமுருட்டி சேகர், மணப்பாறை சல்மா, பரணிக்குமார், லீலா வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மகேஷ் பக்கம் சாயத் தொடங்கிவிட்டார்கள். இதனால் திருச்சியில் நேரு தனிமரமாகத் தவிக்கிறார்.”

மகேஷின் விழுதுகளான மதுரை!

“அழகிரியின் காலத்தில் மதுரை தி.மு.க-வினர் ‘அண்ணனின் விழுது’களாக இருந்தார்கள். இப்போது அப்படியே அலுங்காமல் குலுங்காமல் மகேஷின் விழுதுகளாகிவிட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே உதயநிதியைவைத்து பிரமாண்டமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்தினார் வடக்கு புறநகர் மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி. மருத்துவர் அணியின் மாநிலத் துணைத் தலைவரான சரவணன், மகேஷுடன் நல்ல தொடர்பி லிருக்கிறார். மாநகரப் பொறுப்புக்குழுத் தலைவர் கோ.தளபதி, மகேஷ் கிழிக்கும் கோட்டைக்கூடத் தாண்ட மாட்டார். இதில் விதிவிலக்கு, தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மட்டுமே. அவர் ஸ்டாலினுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால் உதயநிதியைக் கண்டுகொள்வதில்லை. இதனாலேயே அன்பில் ஆதிக்கம் செலுத்தும் ஐபேக் குழுவுக்கும், அவருக்கும் அடிக்கடி மோதல் எழுகிறது.”

இதர ஊர்களின் நிலை என்ன?

தஞ்சை

“தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒவ்வோர் ஊராட்சியிலும் உள்ள ஒவ்வொரு கிளைக்கும் ஓர் இளைஞரணி அமைப்பாளர், மூன்று துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவருகின்றனர். இதில் தஞ்சாவூர் தொகுதி எம்.பி-யான பழநி மாணிக்கம் உள்ளிட்ட சீனியர்களிடம் கலந்தாலோசிக்கப் படுவதில்லை.”

விழுப்புரம்

“விழுப்புரம் மாவட்டத்தில், வருடந்தோறும் உதயநிதியைச் சிறப்பு விருந்தினராக அழைத்துவந்து இறகுப்பந்து போட்டியை நடத்துவார் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி. அந்த நெருக்கத்தில் சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு, கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் கவுதமசிகாமணிக்கு சீட் வாங்கிக் கொடுத்தது உதயநிதி - மகேஷ் கூட்டணி. பிறகு `தி.மு.க-வின் கோட்டை’ என்று வர்ணிக்கப்பட்ட விக்கிரவாண்டித் தொகுதியின் 2019-ம் ஆண்டு இடைத்தேர்தலில், கவுதமசிகாமணியின் சிபாரிசில் தொகுதிக்குச் சம்பந்தமே இல்லாத புகழேந்திக்கு சீட் கொடுத்தார்கள். அந்தத் தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்தது. சீனியர்களை அரவணைத்துச் சென்றிருந்தால், இந்தத் தோல்வியைத் தவிர்த்திருக்கலாம்.”

புதுக்கோட்டை

“புதுக்கோட்டை மாவட்டத்தில், உதயநிதியின் ரசிகர் நற்பணி மன்றத்தினர் பலரும் இளைஞரணியின் ஐ.டி பிரிவில் இருக்கிறார்கள். ரசிகர் மன்றம் சார்பிலும், இளைஞரணி சார்பிலும் கொரோனா நேரத்தில் இவர்கள் நடத்தும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு மாவட்டச் செயலாளர்களான ரகுபதி, செல்லப்பாண்டியன், பெரியண்ணன் அரசு உள்ளிட்ட சீனியர்களுக்கு அழைப்பு விடுப்பதில்லை. சீனியர்கள் என்றில்லை... இளைஞரணி மாவட்டத் தலைவர் சண்முகத்துக்கும் எந்தத் தகவலும் தெரிவிப்பதில்லை.”

நாமக்கல்

“கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த காந்திசெல்வனின் பதவி பறிக்கப்பட்டது. அந்தப் பதவிக்கு முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ‘பார்’ இளங்கோ, சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினர் நக்கீரன் என சீனியர்களின் பெயர்கள் அடிபட்டன. ஆனால், உதயநிதி ஆதரவாளரான கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ்குமார், அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இதனால், காந்திசெல்வன் தனி அணியாகச் செயல்பட்டுவருகிறார். ராஜேஷோ, சீனியர்களைக் கூட்டங்களுக்கு அழைப்பதில்லை.”

சேலம்

“சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவின் பதவி பறிக்கப்பட்டு, அவருக்கு `மாநிலத் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்’ என்கிற டம்மியான பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், கட்சியில் பெரிய பொறுப்பு எதுவும் இல்லாத வீரபாண்டி ஆறுமுகத்தின் மற்றொரு மனைவியின் மகனான வீரபாண்டி பிரபுவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. சென்னையில் வளர்ந்த பிரபு, உதயநிதியின் நண்பர் என்பதால் இந்த முக்கியத்துவம். மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்களின் ஓட்டுகள் வேண்டும்; அதேசமயம் ராஜா தானாகவே கட்சியைவிட்டு வெளியேற வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிரபுவை வளர்த்து விடுகிறார்கள். ராஜாவுக்கு பா.ஜ.க தொடர்ந்து தூது விடுகிறது. ஆனால், கட்சிமீதான விசுவாசத்தால் ராஜா அந்த வாய்ப்பை மறுத்துவருகிறார்.’’

இப்படிப் பெரிதும் சிறிதுமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொண்டர்களின் குமுறல்கள் வெளிப்படுகின்றன. இவர்களுடைய ஆதங்கத்தின் அடியாழத்தில் எழும்பும் கேள்வி, “ஏன் மீண்டும் மீண்டும் வாரிசுகளே கோலோச்சுகிறார்கள்?” என்பதே.

அடிப்படையில் வாரிசு அரசியல் எதிர்ப்பில் உருவானதே தி.மு.க! மணியம்மையை வாரிசாக பெரியார் அறிவித்தபோது, திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி தி.மு.க-வைத் தொடங்கினார் அண்ணா. இன்று கிச்சன் கேபினெட் முன்னிலையில் முடிவெடுக்கும் கட்சித் தலைமை அதை மறந்துவிடக் கூடாது. அதற்காகவே அண்ணா ஒன்றை அழுத்தமாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்...

‘வீட்டுக்கும் ஆட்சிக்கும் இடையே ஒரு கோடு வேண்டும்!’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism