Published:Updated:

திருச்சி: `அண்ணன் நேருவைக் கேட்டுத்தான் செயல்படுகிறேன்!’ - மகேஷ் பொய்யாமொழி

தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு - அன்பில் மகேஷ்
தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு - அன்பில் மகேஷ்

``கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பது எனது எண்ணம் இதைத்தான் கட்சித் தலைமையும் விரும்புகிறது.’’

``திருச்சி தி.மு.க-வில் எந்தவித உட்கட்சிப் பூசலும் இல்லை. `உட்கட்சிப் பூசல்’ எனச் சிலர் சொல்வது அவர்களின் அனுமானம்தான். நான் எந்த ஒரு செயலைச் செய்தாலும், முதலில் கே.என்.நேரு அண்ணனைக் கேட்டுவிட்டுத்தான் செய்வேன். நான் சுயமாக எந்தவித முடிவும் எடுப்பதில்லை” என்கிறார் அன்பில் மகேஷ்.

சுதந்திரப் போராட்ட வீரர்  ஒண்டிவீரனுக்கு மரியாதை செலுத்தும் மகேஷ்
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மரியாதை செலுத்தும் மகேஷ்

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாளை முன்னிட்டு தி.மு.க திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப் படத்துக்கு தி.மு.க திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க மற்றும் ஆதி தமிழர் பேரவை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியான திருச்சி மாவட்டம், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டிருக்கிறது. திருச்சியைத் தலைநகராக்க எம்.ஜி.ஆர் எடுத்த முடிவை அப்போது ஏன் அவர் நடைமுறைப்படுத்தவில்லை என்று தெரியவில்லை. ஆனால், இன்றைய தலைமுறையின் கருத்தாக இருப்பது, `திருச்சியே இரண்டாவது தலைநகராக வேண்டும்’ என்பதுதான். அதற்கேற்ற அனைத்து வசதிகளும் திருச்சியில்தான் உள்ளன.

அன்பில் மகேஷ் - நேரு
அன்பில் மகேஷ் - நேரு

இரண்டாம் தலைநகர் என்கிற அந்தஸ்தை ஒரு மாவட்டத்துக்கு வழங்க வேண்டுமானால், அதை திருச்சி மாவட்டத்துக்குத்தான் வழங்க வேண்டும்" என்றார்.

அதைத் தொடர்ந்து, `தி.மு.க-விலுள்ள மூத்த நிர்வாகிகள் ஓரங்கட்டப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றனவே...’ என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு. ``திருச்சி மாவட்ட தி.மு.க-வில் உட்கட்சிப் பூசல் இல்லை. `உட்கட்சிப் பூசல்’ எனச் சிலர் கூறுவது அவர்களின் அனுமானமே. முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவைக் கலந்தாலோசித்துத்தான் நான் நிகழ்வுகளை நடத்துகிறேன்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

`மூத்தவர்களை மதிக்க வேண்டும்’ என்பதில் உறுதியாக இருக்கிறேன். மாநிலப் பதவியிலிருந்த காலத்திலிருந்தே நேரு அண்ணணின் தலைமையில்தான் நாங்கள் வேலை பார்த்துக்கொண்டு வருகிறோம். இப்போதுகூட தெற்கு மாவட்டத்திலிருக்கும் நிர்வாகிகள்கூட அவர் போட்ட ஆட்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் முகவரி கொடுத்ததே நேரு அண்ணன்தான். கட்சிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை. வழக்கம்போல்தான் சென்றுகொண்டிருக்கிறது. `கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்’ என்பது எனது எண்ணம். அதைத்தான் கட்சித் தலைமையும் விரும்புகிறது. அதன்படிதான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்” என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு