Published:Updated:

ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழி இந்தி; ``இதுவும் ஒருவித இந்தித் திணிப்புதான்!" - அன்புமணி

அன்புமணி ராமதாஸ்

``மத்திய அரசு அலுவலகங்களில் இனி அனைத்து பதிவேடுகளும் இந்தியில் மட்டும்தான் பராமரிக்கப் பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.’’ - அன்புமணி

ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழி இந்தி; ``இதுவும் ஒருவித இந்தித் திணிப்புதான்!" - அன்புமணி

``மத்திய அரசு அலுவலகங்களில் இனி அனைத்து பதிவேடுகளும் இந்தியில் மட்டும்தான் பராமரிக்கப் பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.’’ - அன்புமணி

Published:Updated:
அன்புமணி ராமதாஸ்

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக இந்தியை கட்டாயமாக்கும் வகையில் புதுச்சேரி ஜிம்பர் இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களின் பதிவேடு மற்றும் கோப்புகளில் இதுவரை இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் பயன்படுத்தப்பட்டு வந்த சூழலில், இனிமேல் இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஜிப்மர் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில்,``மத்திய அரசு அலுவலகங்களில் இனி அனைத்து பதிவேடுகளும் இந்தியில் மட்டும்தான் பராமரிக்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுவும் ஒரு வகையான இந்தித் திணிப்புதான் என்பதில் எந்த ஐயமும் இல்லை; இத்தகைய செயல்களை அனுமதிக்க முடியாது.

ஜிப்மர் மருத்துவமனை
ஜிப்மர் மருத்துவமனை
விகடன்

மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களிலும் இப்போதும் இந்தி கட்டாயப் பயன்பாட்டில்தான் உள்ளது. அத்துடன் கூடுதலாக ஆங்கிலத்திலும் எழுதும் வழக்கமும் உள்ளது. இந்தியுடன் கூடுதலாக ஆங்கிலத்திலும் விவரங்களை எழுதுவதைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் தான், எதிர்காலங்களில் இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களும், துறைகளும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளன. இந்தியைத் தவிர வேறு எந்த மொழியையும் மத்திய அரசு அலுவலகங்களில் அனுமதிக்க முடியாது என்பதுதான் இதன் பொருள். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு மட்டுமின்றி, இந்திய அலுவல் மொழி சட்டத் திருத்தத்திற்கும் எதிரான செயலாகும்.

இந்தி பேசாத தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கும் முயற்சி காலம் காலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் இனிவரும் காலங்களில் அனைத்து பதிவேடுகளும் இந்தி மொழியில் மட்டும்தான் பராமரிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்பப்பெறப்பட வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் இப்போதுள்ள நிலையே தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism