Published:Updated:

``தொண்டர்களை அருகில் அமர வைத்து சாப்பிடச் செய்தவர் ராமதாஸ் அய்யா" - அன்புமணி ராமதாஸ் பேச்சு.

``தமிழகத்தில் கடந்த 54 ஆண்டு காலம் இரு பெரும் கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிந்தது போதும். இனி பாமக ஆட்சி செய்ய வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது." - அன்புமணி ராமதாஸ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பரபரக்கத் தொடங்கியுள்ளன. அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரிப்பில் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில், விழுப்புரம் மாவட்டத்தில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்,``கடந்த ஓராண்டு காலமாக கொரோனா பெருந்தொற்று காரணமாக நானும் மருத்துவர் ராமதாஸ் அய்யாவும் உங்களைச் சந்திக்க முடியாமல் ஏங்கிக் கொண்டிருந்தோம். மருத்துவர் அய்யா, கடந்த 42 ஆண்டு காலமாக உங்களைச் சந்தித்து, உங்களில் ஒருவராகப் போராட்டம், தியாகம் செய்து வாழ்ந்து வருகிறார். ஆனாலும் இந்த ஓராண்டு காலமாக உங்களைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது. நீங்களும் இந்த கொரோனா காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் மிக மிக முக்கியமானது. மாற்றம் உள்ளாட்சியில் இருந்து தொடங்க வேண்டும். அது நம் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து ஆரம்பம் ஆகட்டும்.
அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் கடந்த 54 ஆண்டு காலமாக இரு பெரும் கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிந்தது போதும். இனி பாமக ஆட்சி செய்ய வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. வேறு யாரோ ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவா மருத்துவர் அய்யா கட்சி தொடங்கினார். நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் கட்சி தொடங்கியிருக்கிறார். நமது கோரிக்கையை யாராலும் செய்து கொடுக்க முடியவில்லை. 42 ஆண்டு காலமாக போராடி வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் மருத்துவர் ராமதாஸ் அய்யாதான். அவரைப் போன்ற தலைவர் வேறு ஏதாவது கட்சியில் உள்ளனரா! தனக்கென எந்தப் பதவியும் வேண்டாம், உங்களின் முன்னேற்றம் மட்டும் போதும் என்று தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார்.

தமிழகத்திற்கு முதலமைச்சராக வரவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் ரொம்ப நாள்களாக ஆசைப்பட்டார். இப்போது அது நிறைவேறிவிட்டது அவ்வளவுதான். அடுத்ததாக நாமதான் ஆட்சிக்கு வரப் போகிறோம். இன்று அரசியல் என்றாலே 500 ரூபாய், 1000 ரூபாய், 2000 ரூபாய், மதுபானம் என்றுதான் உள்ளது. இப்படி 54 வருடமாக மக்கள் பணிந்து பணிந்து சென்றதால், இன்று நாம் இப்படி இருக்கிறோம். ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்றால், எதுவும் கிடையாது. விழுப்புரம் மாவட்டத்தில் தொழிற்சாலை உள்ளதா? வேலை வாய்ப்பு உண்டா..? ஏதுமில்லை. எல்லாம் இங்கு விவசாயம்தான். அதற்காகத்தான் ஒரு மாற்றம் வரவேண்டும். அது உங்களின் வாழ்க்கையிலும் வரவேண்டும். இவர்கள் ஆண்டது போதும். மாற்றத்தை கொண்டு வாருங்கள் என்று என் அண்ணன், தம்பி, தங்கைகள் ஆகிய உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

சிதறும் பாமக: `பிரிந்துச் செல்ல என்ன காரணம்?!' -மாற்று கட்சிக்கு தாவிய நிர்வாகிகள் சொல்வதென்ன?
தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ், கூட்டேரிப்பட்டு
தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ், கூட்டேரிப்பட்டு

10.5% இட ஒதிக்கீடு கொடுத்தது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள். அதை ஏற்றுக் கொள்கிறோம். அதற்கு உதவியாக இருந்தது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். அதை ஏற்றுக் கொள்வதிலும் தயக்கமே எனக்கு கிடையாது. ஆனால், அதற்காக போராடி பெற்றுக் கொடுத்தது மருத்துவர் அய்யா அவர்கள். அவர் இல்லை என்றால் இட ஒதுக்கீடு கிடையாது. மற்ற சமூகத்தினருக்கும் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை மருத்துவர் அய்யா கட்டாயம் பெற்றுத் தருவார். உழைப்பாளியின் வாழ்வில் மாற்றம் வர வேண்டுமென்றால், தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வரவேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றத்தைவிட மிக மிக முக்கியமானது உள்ளாட்சி என்று நான் கூறுவேன். அதன் மூலம், மக்களாகிய உங்களின் அன்றாட பிரச்சினைக்கு எளிதில் தீர்வு கிடைத்துவிடும். எனவே உங்களில் ஒருவரான பாமகவினரைச் வெற்றி பெற செய்யுங்கள். இந்த தேர்தலில் இருந்து நாம் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்தில் திண்டிவனத்திலிருந்து 2, 3 பேர் மாற்றுக் கட்சிக்கு சென்றுள்ளனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் பார்த்தீங்கன்னா `மரியாதை கிடையாதாம்'. உங்களுக்கு யார் அடையாளம் கொடுத்தது? உங்களுக்கு அடையாளம் தந்தது மருத்துவர் அய்யா அவர்கள். எந்தக் கட்சியிலாவது ஒரு தலைவர், தன் தொண்டர்களை அழைத்து அருகில் அமர வைத்து சாப்பிட சொல்வார்களா, நினைத்த நேரத்தில் போன் பண்ணி பேச முடியுமா..! அருகில் அமர வைத்து சாப்பிட வைத்த அப்படிப்பட்ட தலைவரிடம் வளர்ந்து விட்டு, 'மரியாதை இல்லை' என்று சொல்கிறீர்கள். நீங்க போகின்ற கட்சியில் மரியாதை கிடைத்துவிடுமா? தலையில் தூக்கிவைத்து ஆடுவார்களா? இதைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். எனக்கு அதை பற்றி கவலையே கிடையாது. உண்மையான தம்பி, தங்கைகள் தமிழகம் முழுவதும் பரவியுள்ளனர்.

பாமக-வின் அரசியல் வியூகம்: ஆட்டம் காண்கிறதா ராமதாஸ் கோட்டை? | The Imperfect Show

கொரோனா காரணமாக கடந்த ஒரு வருடமாக உங்களை நேரில் பார்க்க முடியாத மிகப்பெரிய ஆதங்கம் என்னிடத்தில் உள்ளது. தீபாவளி முடியட்டும், உங்கள் அனைவரையும் ஊர் ஊராக நேரில் வந்து பார்க்க போகிறேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு