Published:Updated:

மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி: ``அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும்!" - அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

``தாய்மொழிவழி மருத்துவக் கல்வி கற்பித்தல் திட்டத்துக்கு முன்னோட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும்.'' - ராமதாஸ்

மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி: ``அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும்!" - அன்புமணி ராமதாஸ்

``தாய்மொழிவழி மருத்துவக் கல்வி கற்பித்தல் திட்டத்துக்கு முன்னோட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும்.'' - ராமதாஸ்

Published:Updated:
அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``மருத்துவப் படிப்பை மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ், மருத்துவப் பாட நூல்கள் இந்தியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மருத்துவப் பாடநூல்கள் வெளியிடப்படவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நோக்கம் நேர்மையானதாக இருந்தால் அது நிச்சயமாக வரவேற்கத்தக்கதாகும்.

மத்தியப் பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவப் படிப்பை பயிற்றுவிக்கும் திட்டத்தின்படி அந்த மாநில அரசால் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டுள்ள மருத்துவ பாடநூல்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப படிப்புகளும் தமிழ்நாட்டில் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் பா.ம.க-வின் உறுதியான கொள்கையாகும்.

அமித் ஷா
அமித் ஷா

தமிழக அரசுடன் இணைந்து தமிழில் தரமான மருத்துவ நூல்களை தயாரித்து, தாய்மொழியில் மருத்துவப் படிப்பு வழங்கப்பட்டால், தாய்மொழி வழிக்கல்வியை உறுதி செய்யும் பயணத்தில் அது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைவது உறுதி. நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அவர்களுக்கு புரியும் மொழியில் மருத்துவர்கள் விளக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காகவே தாய்மொழி வழி கற்பித்தல் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. தாய்மொழிவழி கற்பித்தலுடன் ஆங்கில வழி கற்பித்தலும் தொடரும் என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது. இதிலும் எந்த சிக்கலும் இல்லை.

மாநில மொழிகளில் மருத்துவம் பயிற்றுவிக்கும் முறை நடைமுறைக்கு வரும்போது ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், வேறு மொழி பேசும் மாநிலத்திற்கு சென்று மருத்துவப் படிப்பை படிப்பதில் சிக்கல் ஏற்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் நோயாளிகளுக்கு புரியும் மொழியில் மருத்துவம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம் என்பதால், ஒவ்வொரு மாநிலத்திலும், அந்த மாநில மொழியில் அந்த மாநில மாணவர்களுக்கு மட்டும் மருத்துவம் பயிற்றுவிக்கப்படுவதுதான் சரியானதாக இருக்கும்.

இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு

இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்வதும், அந்தந்த மாநிலத்தில், அந்தந்த மாநில மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிப்பதும் தான். அகில இந்திய ஒதுக்கீடு 36 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டபோது வேண்டுமானால், அதற்கான தேவை இருந்திருக்கலாம். அதன்பிறகு 36 ஆண்டுகளில் மருத்துவக் கல்வி பரவலாக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் போதிய எண்ணிக்கையில் மருத்துவக் கல்வி இடங்கள் உள்ளன. அதனால், அகில இந்திய ஒதுக்கீடு என்ற கொள்கைக்கு இன்றைய சூழலில் எந்தவிதத் தேவையும் இல்லை.

எனவே, தாய்மொழிவழி மருத்துவக் கல்வி கற்பித்தல் திட்டத்திற்கு முன்னோட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்வழி மருத்துவக் கல்வி திட்டத்தை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பள்ளிக்கல்வியில் தமிழை கட்டாய பயிற்றுமொழியாக்க சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்'' எனத் தெரிவித்திருக்கிறார்.