Published:Updated:

``என்னை யாரும் `சின்ன ஐயா'னு கூப்பிடக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்!" - அன்புமணி @ 2000 #AppExclusive

Anbumani Ramadoss

“2000ல் விகடனுக்கு அளித்த சுவாரஸ்ய பேட்டி இது...

``என்னை யாரும் `சின்ன ஐயா'னு கூப்பிடக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்!" - அன்புமணி @ 2000 #AppExclusive

“2000ல் விகடனுக்கு அளித்த சுவாரஸ்ய பேட்டி இது...

Published:Updated:
Anbumani Ramadoss

மிழக அரசியல் அரங்கில் புதிதாக 'சின்ன ஐயா' என்றொரு குரல் ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. ஆங்காங்கே 'வருங்கால முதல்வர்' என்ற கோஷங்களும் எழுப்பப்படுகிறது. பா.ம.கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸின் மகனான டாக்டர் அன்புமணியைச்சுற்றி சட்டென அரசியல் ஒளி வட்டம் கிளம்பியிருக்கிறது. 

"எனக்குப் பத்திரிகைன்னா, கொஞ்சம் கூச்சம், நிறைய பயம்!” என்று தோள் குலுக்கினபடியே பேட்டிக்குத் தயாரானார் அன்புமணி, உதடுகளில் சின்னதாக ஒரு புன்னகை.

"நான் டாக்டர் ஐயாவோட மகன். அவரோட எண்ணங்களும் செயல்பாடுகளும் என் ரத்தத்துல கலந்திருக்கிறதுல ஆச்சரியம் இல்லே! அதனாலதான் அப்பா துவங்கி வெச்ச 'பசுமைத் தாயகம்' மரம் வளர்ப்புத் திட்டத்துல ஆர்வமாகி, கிராமம் கிராமமா சுற்றுப்பயணம் போயிட்டிருக்கேன். அரசியல் சார்பில்லாத அந்த அமைப்பு மூலமா இதுவரை மூணு லட்சம் மரம் நட்டுருக்கோம்" என்று பெருமிதம் பொங்கச் சொல்கிற அன்புமணி, சென்னை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் படிப்பு முடித்தவர். படிக்கும்போதே பிரபல காங்கிரஸ்காரரான கிருஷ்ணசாமியின் மகளைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இப்போது இரண்டு மகள்கள். 

Anbumani Ramadoss
Anbumani Ramadoss

"பா.ம.க-வில் நீங்கள் முன் நிறுத்தப்படுவதாக செய்திகள் வருகின்றன. கிராமங்கள்தோறும் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் உங்கள் அரசியல் செல்வாக்கைச் சொல்வதாக இருக்கின்றன." 

"நான் பாட்டாளி மக்கள் கட்சியில் அடிப்படை உறுப்பினர் கூடக் கிடையாது. என்னை ஏன் இப்படி இழுத்துவிடறாங்கன்னு புரியலை. நான் உண்டு, என் ரியல் எஸ்டேட், இன்டீரியர் டெகரேஷன் பிஸினஸ் உண்டுனு இருக்கேன். என் மேல அன்பா இருக்கிற பசுமைத் தாயக இளைஞர்களும், அபிமானிகளும் பேனர் வெச்சா நான் என்ன பண்ணமுடியும்? இத்தனைக்கும் என்னை யாரும் 'சின்ன ஐயா'னு கூப்பிடக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லியிருக்கேன். பா.ம.க-வில் ஐயான்னா அது அப்பா மட்டும்தான்." 

"ஆனா, டெல்லியில பா.ம.க. மந்திரிகளை ஆட்டிவைக்கிறதே நீங்கதான். அவங்க ரூம்ல உங்களுக்குத் தனி கேபின்கூட உண்டுன்னெல்லாம் சொல்றாங்களே?" 

"சொல்றவங்க எதுவும் சொல்வாங்க... எங்க மந்திரிகள் சுயமா, சிந்திச்சு செயல்படறவங்க... எனக்கு அறிமுகமானவங்களுக்கு சின்னச் சின்ன வேலைகள் செய்துதர சிபாரிசு மட்டும்தான் நான் பண்ணமுடியும். என் எல்லை எனக்குத் தெரியும்." 

"பா.ம.க. - அ.தி.மு.க. கூட்டணியின் தூதுவர் நீங்கதான்... தினகரனை நாலு முறை சந்திச்சீங்கன்னு..." 

"இருங்க... இருங்க... அதுல எல்லாம் துளிகூட உண்மை இல்லை. இதுவரை நான் தினகரனை சந்திச்சதோ, டெலிபோன்ல பேசினதோ கூட இல்லை. நான் தினகரனை சந்திச்சேன்னு ஆதாரம் காட்டினா, என் தாய் மண்ணை மிதிக்காம ஒடிடறேன்னுகூட சொல்லிட்டேன். இதுக்கு மேல நான் எப்படி என்னை நிருபிக்கிறது?"

Anbumani Ramadoss
Anbumani Ramadoss

 'எதிர்காலத்தில் என்னவாக ஆசைப்படறீங்க?" 

"நல்ல பிஸினஸ்மேனா ஆகணும். 'பசுமைத் தாயகம்' அமைப்பை இந்திய அளவுல பேசப்பட வைக்கணும். எதிர்காலம் சுற்றுச்சூழல் பிரச்னைல தவிக்கும்ங்கிற நிலை இருக்கு. அப்போ 'பசுமைத் தாயகம்' மாதிரியான அமைப்புகள் முக்கிய சக்தியா இருக்கும். அப்பா ஆசைப்பட்டபடிதான் நான் டாக்டருக்குப் படிச்சேன்.  இன்னிக்கு அப்பாகூட பக்கத்துல இருந்து கட்சியில் என்னென்ன நடக்குதுன்னு கவனிச்சு சில உதவிகள் செய்து தர்றேன். தீரன், தலித் எழில்மலை போன்ற முக்கியமான நபர்கள் அப்பாவை விட்டுப் பிரிஞ்சு போயிட்டதால அவருக்கு நான் பக்கபலமா இருக்கேன். 

பா.ம.க-ங்கிற மிகப்பெரிய கட்சியை அப்பா வளர்த்தது ஒரு சாதனை. 'ஆரம்ப காலத்தில் அவர் சட்டமன்றத்தில் நுழையமாட்டேன்னு சொன்னது அவரோட உரிமை. ஆனா, தன் வாரிசு அரசியலுக்கு வரக் கூடாதுன்னு அவர் கட்டாயப்படுத்த முடியாதே. இது உங்க உரிமையாச்சே... நீங்க அரசியல்ல ஈடுபடனும்'னு என்னைச் சுத்தி உள்ளவங்க சொல்லவும்தான் செய்யறாங்க. என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்? பார்ப்போம்!"

- விகடன் டீம் 

(“என் எல்லை எனக்குத் தெரியும்!” - அன்புமணி ராமதாஸ் என்ற தலைப்பில் 21.05.2000 தேதியில் ஆனந்த விகடன் இதழிலிருந்து...)