Published:Updated:

"பதவி ஆசை எனக்கு இல்லை. ஆனால்... ஒரு வருத்தம் உள்ளது" - விழுப்புரத்தில் அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் - விழுப்புரம்

``35 வயதில், அனைத்துத் தலைவர்களையும் பார்த்துவிட்டேன், எனக்கு பதவி ஆசைகள் இல்லை. 2026-ல், பாமக மற்ற கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியைப் பிடிக்கும்." - அன்புமணி.

"பதவி ஆசை எனக்கு இல்லை. ஆனால்... ஒரு வருத்தம் உள்ளது" - விழுப்புரத்தில் அன்புமணி ராமதாஸ்

``35 வயதில், அனைத்துத் தலைவர்களையும் பார்த்துவிட்டேன், எனக்கு பதவி ஆசைகள் இல்லை. 2026-ல், பாமக மற்ற கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியைப் பிடிக்கும்." - அன்புமணி.

Published:Updated:
அன்புமணி ராமதாஸ் - விழுப்புரம்

விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று (01.05.2022) நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், "இன்னும் ஒரு மாத காலத்துக்குள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் பா.ம.க கொடி பறந்தாக வேண்டும். இது என்னுடைய அன்புக்கட்டளை. அதற்கு அடுத்த மாதம், நான் அனைத்துக் கிராமங்களுக்கும் வரப்போகிறேன். கடந்த 55 ஆண்டுக்காலமாக இரண்டு கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன. நமக்கு என்ன தகுதி இல்லை... எல்லாத் தகுதியும், செயல்திட்டமும் நம்மிடம் இருக்கின்றன. எந்தக் கட்சியிலும் இல்லாத, இளைஞர்களின் மிகப்பெரிய பலம் நம் பா.ம.க கட்சியில் இருக்கிறது.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

இந்த மே 1-ம் தினம், பாட்டாளி மக்களுக்கான தினம். அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள். இந்த மக்களை முன்னுக்குக் கொண்டுவர வேண்டுமென்று மருத்துவர் அய்யா, 42 ஆண்டுக்காலமாக போராடிக்கொண்டிருக்கிறார். எனக்கு ஒரு சின்ன வருத்தம்! தி.மு.க., தொடங்கப்பட்ட சுமார் 18 வருடங்களில் ஆட்சிக்கு வந்தது; அ.தி.மு.க., தொடங்கப்பட்ட சுமார் 6 வருடங்களில் ஆட்சிக்கு வந்தது. ஆனால்... பா.ம.க தொடங்கப்பட்டு 32 ஆண்டுக்காலம் ஆகியும், இன்னும் நம்மால் ஆட்சிக்கு வர முடியாத ஒரு சூழல் உள்ளது. எனக்குப் பதவி ஆசைகள் இல்லை. என்னுடைய 35-வது வயதிலே, என்னை மத்திய அமைச்சராக நீங்களெல்லாம் தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பிவைத்தீர்கள். அப்போது நம் நாட்டின் தலைவர்கள் மட்டுமின்றி, உலக நாடுகளின் தலைவர்கள் வரை நான் பார்த்துவிட்டேன். அதனால், எனக்குப் பதவி ஆசை நிச்சயமாக கிடையாது. என்னுடைய நோக்கம், நீங்கள் முன்னேற வேண்டும் என்பதுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரு கட்சிகளின் கடந்த 55 ஆண்டுக்கால ஆட்சியில், தமிழக மக்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனரா... நிச்சயமாக இல்லை. ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்குமான வித்தியாசம் அதிகமாகவே இருக்கிறது. விவசாயிகளின் தற்கொலை நடந்துகொண்டுதான் இருக்கிறது. பெண்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை... காரணம் மது. ஆகவே, 'பூரண மதுவிலக்கு' வேண்டும் என்றார்கள் மருத்துவர் அய்யா. அதை, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டன, கொள்கை அடிப்படையில் மட்டும். இந்த மதுவினால் கலாச்சார சீர்கேடு ஏற்படுகிறது. தொலைபேசியில் வரும் வீடியோக்களைப் பார்க்கும்போது பகீர்... பகீர்... என்று இருக்கிறது.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

பள்ளிக்குப் போகும் பெண் பிள்ளைகள், மது பாட்டிலை வாங்கிக் குடிக்கிறார்கள். வாத்தியார் கேள்வி கேட்டால், அவரை மிரட்டுகிறான் ஒரு மாணவன். மற்றொரு மாணவனோ, குடித்துவிட்டுச் செல்கிறான். இதையெல்லாம் பார்த்தால், 'எங்குதான் போகிறது இந்த நாடு' என்று இருக்கிறது. இதுவரையிலான அழிவுகள் போதும். கடந்த 55 ஆண்டுக்காலமாக தமிழகத்தில் ஒரு தேக்கநிலை இருக்கிறது. இதையெல்லாம் சீர்திருத்த வேண்டுமென்றால், பா.ம.க ஆட்சிக்கு வர வேண்டும். நம்மிடம் அதிகாரம் இருந்தால் தமிழகத்தைச் சுலபமாக முன்னேற்றிவிடலாம். இந்த விழுப்புரம் மாவட்டம், கல்வியில் கடைசி... ஆனால், டாஸ்மாக் விற்பனையில் நம்பர் ஒன். இரு கட்சிகளின் 55 ஆண்டுக்கால ஆட்சியில் படிப்பு கேட்டோம் தரவில்லை... ஆனால், சாராயத்தை ஊற்றி ஊற்றிக் கொடுக்கிறது.

அடுத்த நான்கு வருடங்களுக்கு நாம் இணைந்து செயல்பட்டாலே போதும், 2026-ல் பா.ம.க ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அது நடந்தால், விவசாயிகள் மகிழ்ச்சியில் பொங்குவார்கள். ஒரு விவசாயியின் கஷ்டம், நம்மைப் போன்ற மற்றொரு விவசாயிக்குத்தான் தெரியும். சினிமா நடிகராக இருந்து வருபவர்களுக்குத் தெரியாது. நந்தன் கால்வாய் பற்றிக் கேட்டுக் கேட்டு புளிச்சுப் போச்சு. தேர்தல் வந்தால் மட்டும்... இரண்டு கட்சியும், "நந்தன் கால்வாய்... நந்தன் கால்வாய்... நந்தன் கால்வாய்" என்பார்கள். ஆனால், எங்கே வந்தது? இதையேதான் 30 வருடங்களாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். 30 என்றால், நாமம் என்று அர்த்தம். தேர்தல் வந்தால் நந்தன் கால்வாய் வரும். தேர்தல் முடிந்துபோனால் நந்தன் கால்வாயும் போய்விடும்.

"நாமம் என்று அர்த்தம்" - அன்புமணி ராமதாஸ்
"நாமம் என்று அர்த்தம்" - அன்புமணி ராமதாஸ்

வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு என்பது சாதிப் பிரச்னை கிடையாது, அது ஒரு சமூகநீதி பிரச்னை. தாழ்த்தப்பட்ட மற்றும் வன்னியர் சமூக மக்கள்தான் இங்கு 40 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறார்கள். இவர்கள் முன்னேறிவிட்டாலே தமிழகம் தானாக முன்னேறும். 10.5% இட ஒதுக்கீடு குறித்து நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர், 10.5% இட ஒதுக்கீடு பற்றி தமிழக முதலமைச்சரை சந்தித்துப் பேசியிருக்கிறோம். நிச்சயமாக செய்வார் என நம்புகிறோம். என் தம்பிகள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள், ஆனால், போராட்டத்துக்கு அவசியம் இருக்காது என நினைக்கிறேன்" என்றார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலைகள் அதிகம் நடக்கின்றன. எனவே, உடனடியாக தமிழக அரசு அதைத் தடைசெய்ய வேண்டும். அதேபோல தமிழகத்தில் 70% பிரச்னைகளுக்குக் காரணமே மதுதான். எனவே, திமுக அரசு பூரண மதுவிலக்கை அறிவிக்க வேண்டும். அதற்கான செயல்திட்டத்தையும் வெளியிட வேண்டும். மது மட்டுமின்றி, கல்வி நிலையங்களுக்கு முன்பாக போதைப்பொருள்கள் சாதாரணமாகவே விற்பனை செய்யப்படுகின்றன. இது காவல்துறைக்கும் நன்றாகவே தெரியும். அவர்கள் நினைத்தால் இரண்டு நாள்களில் அதை ஒழித்துவிடலாம். எனவே, தமிழக முதலமைச்சர் இதற்காக ஒரு கூட்டத்தைக் கூட்டி நல்ல முடிவு எடுக்க வேண்டும். இந்தத் தவற்றில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட வேண்டும். இதைச் செய்யாவிட்டால், அடுத்த தலைமுறையை நாம் காப்பாற்ற முடியாது.

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி
முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

ஆளுநரும், தமிழக முதலமைச்சரும் அரசியல் சாசனப் பிரதிநிதிகள். இருவரும் ரயில் தண்டவாளம் போன்றவர்கள். ஆகவே, இருவருக்குள்ளும் பிரச்னை வராமல் இணைந்து செயல்பட வேண்டும். அதேபோல, தமிழக ஆளுநரும் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நடுநிலையாகச் செயல்பட வேண்டும். இந்த ஓராண்டுக்கால திமுக ஆட்சியில், 10 மாதங்கள் கொரோனாவுக்காக சென்றுவிட்டன. இனிமேல்தான் ஆட்சி எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும். உக்ரைன் போர் சமயத்தில் உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை, தற்போது குறைந்துள்ளது. அதற்கு ஏற்றாற்போல எரிபொருள்களின் விலைகளை அரசுகள் குறைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பங்கேற்று இந்த பெட்ரோல்-டீசல் விலையைக் குறைக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.

2026 சட்டமன்றத் தேர்தலின்போது, பா.ம.க மற்ற கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியைப் பிடிக்கும். அதற்கான முடிவுகள் அச்சமயத்தில் எடுக்கப்படும். செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அதற்குக் காரணம், சக மாணவர்கள் ராகிங் செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் உண்மைத்தன்மை இன்னும் சரியாகத் தெரியவில்லை. பொதுவாகவே இது போன்ற தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். மாணவியின் மரணம் குறித்து, குழு ஒன்று அமைத்து அதற்கான காரணம் அறிய வேண்டும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறைந்தது ஒரு கோடி ரூபாயும், அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் இந்த அரசு இழப்பீடாகத் தர வேண்டும்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

தூத்துக்குடி சம்பவத்தைப்போல திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஒரு சிறை மரணம் நடந்துள்ளது. காவல்துறை அவர்களுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஓர் உயிர் என்பது விலை மதிக்க முடியாதது. எனவே அனைத்துக் காவல் நிலையங்களின் உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமரா இயங்க வேண்டும். இது போன்ற சம்பவங்களுக்குக் காரணமான காவலர்கள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் காட்டமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism