`ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 63 நாள்களாகும் நிலையில், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது' என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்நாட்டின் தலையாய பிரச்னையாக உருவெடுத்திருக்கும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்வதற்கான சட்டம் இயற்றப்பட்டு இன்றுடன் 63 நாள்களாகிவிட்ட நிலையில், அதற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான அவசியத்தைக் கருத்தில்கொண்டு மாற்று ஏற்பாடுகளை அரசு ஆராய வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இல்லை.

கடந்த 2014-ம் ஆண்டில் தொடங்கி 2020-ம் ஆண்டு வரை ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி, தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 50-க்கும் அதிகம். அதன் காரணமாகவே அதைத் தடைசெய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடிவருகிறது. அதன் பயனாக 2020-ம் ஆண்டில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 2021-ம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டதால் ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் முடிவுக்கு வந்தன.
ஆனால், ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, மீண்டும் ஆன்லைன் சூதாட்டங்கள் தலைதூக்கின. அதற்கு இதுவரை 38 பேர் பலியாகியிருக்கின்றனர். இந்தக் கொடுமைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி போராடியதன் பயனாகவே ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்து, அக்டோபர் ஒன்றாம் தேதி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக அக்டோபர் 18-ம் தேதி சட்டம் இயற்றப்பட்டது.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் மிக நீண்ட போராட்ட வரலாற்றை நான் பட்டியலிட்டதற்குக் காரணம்.... கிட்டத்தட்ட 100 உயிர்களை பலிகொண்டு அவர்களின் குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்டத்துக்கு முடிவு கட்டவேண்டியது எவ்வளவு அவசியம், எவ்வளவு அவசரம் என்பதை உணர்த்துவதற்காகத்தான். ஆனால், ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 63 நாள்களாகும் நிலையில், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் குறித்து ஆளுநர் எழுப்பிய ஐயங்களுக்கு அரசு விளக்கம் அளித்துவிட்டது; சட்ட அமைச்சரும் ஆளுநரை நேரில் சந்தித்து ஒப்புதல் அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார். ஆளுநரை அமைச்சர் சந்தித்து 19 நாள்களாகிவிட்டன. அதன் பிறகும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காததைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு ஆளுநர் காலவரையின்றி ஒப்புதல் அளிக்காமல் இருந்தால், அது சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கத்தைச் சிதைத்துவிடும்.
எனவே, ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்வதற்கான மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு பொருள் குறித்து சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருக்கும்போது, அவசரம் கருதி அதே பொருள் குறித்து நிர்வாக ஆணை பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவு கூறுகிறது. அதனால், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்து நிர்வாக ஆணை பிறப்பிக்க முடியும்.

தமிழ்நாட்டில் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 162 பயன்படுத்தப்பட்டதற்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சமூகநீதி வழங்கும் நோக்கத்துடன் மருத்துவக் கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 15.09.2020 அன்று சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அதன் பிறகு 45 நாள்களாகியும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்குள்ளாக நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைத் தொடங்கிவிட்டதால், தமிழ்நாட்டிலும் மருத்துவ மாணவர் சேர்க்கையைத் தொடங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அத்தகைய அவசரச் சூழலைச் சமாளிக்கும் நோக்குடன் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி, அப்போதைய அரசு நிர்வாக ஆணை பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து அந்தச் சட்டத்துக்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார்; உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. 7.5% இட ஒதுக்கீடு வழங்கி நிர்வாக ஆணை பிறப்பிப்பதற்கு எத்தகைய அவசரமும் அவசியமும் ஏற்பட்டதோ, அதே அவசரமும் அவசியமும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்து நிர்வாக ஆணை பிறப்பிப்பதற்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்து பேரவையில் சட்டம் இயற்றப்பட்டதால், அதற்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் கடந்த நவம்பர் 27-ம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது.
அதன் பிறகு 16 நாள்களில் 6 பேர், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், தற்கொலை செய்துகொண்டனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடைசெய்யப்பட வேண்டும் என்பதற்கு இதைவிட அவசரமும் அவசியமும் இருக்க முடியாது. இவற்றையும் கடந்து ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று சென்னை உயர் நீதிமன்றம் அதன் தீர்ப்பில் தெளிவாகக் கூறியிருக்கிறது. அதனால், இந்த விஷயத்தில் நிர்வாக ஆணை பிறப்பிக்க அரசு தயங்கவேண்டியதில்லை.

அதுமட்டுமின்றி, இது மாநில அரசின் அதிகாரத்தை நிலைநிறுத்துவது தொடர்பான விவகாரம். எனவே, தமிழக அரசு எந்தத் தயக்கமும் இல்லாமல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 162-வது பிரிவின்படி வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்து நிர்வாக ஆணை பிறப்பிக்க வேண்டும்; அதை நீதிமன்றங்களில் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.