Published:Updated:

"என்.எல்.சி-க்காக மக்களை மிரட்டுகிறது மாவட்ட நிர்வாகம்!” - நில எடுப்பு விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

”என்.எல்.சி நிறுவனத்துக்காக அரசு கையகப்படுத்தத் துடிக்கும் நிலங்கள் வெறும் மண் அல்ல. அவை மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டவை.” - அன்புமணி ராமதாஸ்

"என்.எல்.சி-க்காக மக்களை மிரட்டுகிறது மாவட்ட நிர்வாகம்!” - நில எடுப்பு விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ்

”என்.எல்.சி நிறுவனத்துக்காக அரசு கையகப்படுத்தத் துடிக்கும் நிலங்கள் வெறும் மண் அல்ல. அவை மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டவை.” - அன்புமணி ராமதாஸ்

Published:Updated:
அன்புமணி ராமதாஸ்

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான என்.எல்.சி-க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு, உரிய இழப்பீடு மற்றும் வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென்று த.வா.க, வி.சி.க, பா.ம.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இத்துடன் தொடர்ச்சியாக பல போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. இந்நிலையில் சுரங்கம் 1 ஏ விரிவாக்கத்துக்குத் தேவைப்படும் நிலங்களை குறிப்பிட்டு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டது என்.எல்.சி நிர்வாகம். ஆனால் உரிய தொகையை அறிவிக்காதவரை நிலத்தை கொடுக்கமாட்டோம் என்று போராடி வருகின்றனர் நிலத்தின் உரிமையாளர்கள். இதற்காக மாவட்ட ஆட்சியர், அமைச்சர் உள்ளிட்டோர் தலைமையில் நடத்தப்பட்ட பலகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்டன.

என்.எல்.சிக்க்கு எதிரான போராட்டத்தில் மக்கள்
என்.எல்.சிக்க்கு எதிரான போராட்டத்தில் மக்கள்

இந்நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன், நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. அந்த வகையில் சேத்தியாதோப்பு அருகேயிருக்கும் கத்தாழை ஊராட்சி கரிவெட்டியிலும் நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி. நிறுவனம் முயன்று வருகிறது. ஆனால் கூடுதல் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்ப்பு தெரிவித்து கரிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று நிலங்களை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் அங்கு செல்லவிருந்த நிலையில்,  100-க்கும் மேற்பட்ட மக்கள் வயல்களிலும், சாலைகளிலும் அமர்ந்து என்.எல்.சி. நிறுவனத்துக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல்துறையினருடன் என்.எல்.சி. அதிகாரிகள் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பொதுமக்களிடம் அவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

இந்நிலையில் என்.எல்.சி விவகாரம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “என்.எல்.சி சுரங்கத்துக்கு நிலம் தர முடியாது என்று நெய்வேலி பகுதி மக்கள் திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட  கிராமங்களுக்கு அதிகாரிகளையும், காவல்துறையினரையும் அனுப்பி, மக்களை மிரட்டி நிலங்களை பறிக்கும் முயற்சியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. என்.எல்.சி-க்காக அரசு கையகப்படுத்தத் துடிக்கும் நிலங்கள் வெறும் மண் அல்ல. அவை மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டவை. நிலங்களை வழங்க முடியாது என்ற மக்களின் உணர்வை அரசும், ஆட்சியரும் உணர வேண்டும். மிரட்டிப் பறிக்கலாம் என்று நினைத்தால் அது பலிக்காது!

சிங்கூரில் மிரட்டியும், நந்திகிராமில் துப்பாக்கிச்சூடு நடத்தியும் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் பயனற்று போயின. இறுதியில் மக்கள் சக்திக்கு அதிகாரம் பணிந்தது. பறிக்கப்பட்ட நிலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கே மீண்டும் கிடைத்தன என்பது மறக்க முடியாத, மறக்கக் கூடாத வரலாறு. கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களையும், உரிமைகளையும் காக்க பா.ம.க மட்டுமே போராடி வருகிறது. அதில் இறுதி வெற்றி கிடைக்கும் வரை எங்களின் போராட்டம் ஓயாது.

தேவைப்பட்டால் எத்தனை மாதம் வேண்டுமானாலும் களத்தில் முகாமிட்டு, போராட்டத்தை தலைமையேற்று நடத்த தயாராக இருக்கிறேன். கடலூர் மாவட்ட சுற்றுச்சூழலை சீரழிக்கும் என்.எல்.சி-க்கு துணை போகக்கூடாது. நெய்வேலியை நந்திகிராமம், சிங்கூராக மாற்றிவிடக் கூடாது. மக்களின் பக்கம் நின்று, கடலூர் மாவட்டத்திலிருந்து வெளியேறும்படி என்.எல்.சி நிர்வாகத்தை  தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.