Published:Updated:

அன்புமணி Vs சூர்யா... எழுப்பப்பட்ட 9 கேள்விகளும் ஏற்படுத்தப்பட்ட `புரிதல்’களும் - ஒரு பார்வை

`ஜெய் பீம்‘ திரைப்படம் தொடர்பாக, படத்தைத் தயாரித்து அதில் நடித்துள்ள சூர்யாவுக்கு 9 கேள்விகளுடன் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையும், அதற்கு சூர்யா வெளியிட்ட விளக்கமும் என்ன புரிதல்களை ஏற்படுத்தியுள்ளன ?

நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த `ஜெய் பீம்’ திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் நவம்பர் 2-ம் தேதி வெளியானது. இருளர் சமூகத்தினரின் வலிகளைப் பேசும் இந்தத் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவர், 1995-ம் ஆண்டு காவல் நிலையத்தில் கடும் சித்ரவதைகளுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம், பல தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. படம் வெளியாகி சில நாள்களுக்குப் பிறகு, இந்தத் திரைப்படத்தில் வெளியான ஒரு காட்சி பற்றியும், ஒரு பெயர் குறித்தும் சர்ச்சை எழுந்தது. படத்தின் கதையில் வில்லனாக சித்தரிக்கப்படும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் பெயர் குருமூர்த்தி என்பதும், அவர் இடம்பெற்ற ஒரு காட்சியில் காண்பிக்கப்படும் காலண்டரில் அக்னிக்கலசம் இருப்பதும் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. சர்ச்சைக்குப் பிறகு, அந்தக் காட்சியை படக்குழுவினர் மாற்றியமைத்துள்ளனர்.

அன்புமணி
அன்புமணி

இந்த நிலையில், `ஜெய் பீம்’ படம் குறித்து பா.ம.க இளைஞரணிச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,

` `ஜெய் பீம் திரைப்படத்தில் கொடூர மனநிலையும், மனித உரிமையைக் காலில் போட்டு மிதிக்கும் போக்கும்கொண்ட காவல்துறை சார்பு ஆய்வாளரின் வீட்டில், உண்மையிலேயே அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும்கூட, அவரை வன்னியர் என்று காட்டும் வன்மத்துடன் அக்னிக் கலசத்துடன்கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்றிருப்பது, உண்மையான நிகழ்வில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரைக் கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது பலரும் அறிந்த உண்மை எனும் நிலையில், அந்தப் பாத்திரத்துக்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குருவை நினைவுபடுத்தும் வகையில் `குரு’ என்று அழைப்பது ஆகியவையும், இந்த அநீதிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சில காட்சிகளும் தமிழ்நாட்டில் வாழும் மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளன. இந்தக் காட்சிகள் கண்டிக்கத்தக்கவை” என்று அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார்.

மேலும் அந்த அறிக்கையில், ``ராஜாக்கண்ணுவைப் படுகொலை செய்த காவல் அதிகாரியின் பெயர் அந்தோணிசாமி என்பதை அறிந்திருந்தும்கூட, கொலையான பழங்குடி இளைஞருக்கு ராஜாக்கண்ணு, அவருக்காகப் போராடும் வழக்கறிஞருக்கு சந்துரு, விசாரணை அதிகாரியான காவல்துறை ஐ.ஜி-க்கு பெருமாள்சாமி என்று உண்மை நிகழ்வின் கதாபாத்திரங்கள் பெயரையே சூட்டிய தாங்களும், இயக்குநரும், சார்பு ஆய்வாளர் பாத்திரத்துக்கு மட்டும் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக `குருமூர்த்தி’ எனப் பெயரிட்டது ஏன்... நீதிமன்ற விசாரணையில் அவரை `குரு... குரு...’ என்று அழைக்கும் வகையில் காட்சி அமைத்தது ஏன்?” என்று அன்புமணி ராமதாஸ் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

சூர்யா
சூர்யா

அன்புமணி ராமதாஸின் அறிக்கைக்கு நடிகர் சூர்யா பதில் வெளியிட்டார். அதில், ``தங்களின் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது எடுத்து நடத்திய ஒரு வழக்கில், `அதிகாரத்தின் துணையோடு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலமாக நீதி நிலைநாட்டப்பட்டது’ என்பதே `ஜெய் பீம்’ திரைப்படத்தின் மையக்கரு. பழங்குடி மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளையும் படத்தில் பேச முயன்றிருக்கிறோம். கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப்போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையையும் உடனடியாகத் திருத்தி சரிசெய்யப்பட்டதைத் தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.

`படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை’ என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாக நான் ஏற்கிறேன். அதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. அதேபோல, `படைப்புச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும்’ என்பதையும் நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று சூர்யா கூறியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விவகாரம் குறித்து பா.ம.க-வின் பொருளாளர் திலகபாமாவிடம் பேசினோம்.

``படைப்பாளிகளுக்கான சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். சுதந்திரம் என்பது அடுத்தவரின் மூக்குநுனி வரைக்கும்தான் போகலாம். அதைத் தாண்டினால் அது அத்துமீறல் ஆகிவிடும். படைப்பாளி, ஒரு பிரச்னையைப் பொதுத்தன்மையில் வைத்து கொண்டுபோக வேண்டும். ஆனால், ஒரு வாழை இலை முழுவதும் உணவை வைத்துவிட்டு இலையின் ஓரத்தில் விரும்பத்தகாத ஒன்றை வைத்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது `ஜெய் பீம்’ படம். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரச்னைகளைப் பேசும் அந்தப் படத்தில் வைக்கப்பட்ட ஒரு காலண்டர் காட்சி, அப்படிப்பட்டதாகத்தான் இருக்கிறது. அந்த இடத்தில் வன்முறையாளனாக வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இருக்கிறார் என்று சித்திரித்திருக்கிறார்கள்.

திலகபாமா
திலகபாமா

இருளர் சமூதாயத்தின் பிரச்னைகளைப் பற்றிப் பேசும் படத்தில், வன்னியர் சமுதாயத்தைக் குறிப்படும்படியான காலண்டரை வைக்கவேண்டிய அவசியம் என்ன? அது தெரியாமல் வைக்கப்பட்ட ஒன்றாகக் கருதிவிட முடியாது. ஏனென்றால், திரைப்படக் காட்சியின் ஸ்கிரிப்ட் என்பது, முழுவதும் திட்டமிடலுடன்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும். இந்த யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அதேபோல, கொடூரமான ஒரு காவல்துறை அதிகாரியாக வரும் நபருக்கு குருமூர்த்தி என்று பெயர் வைத்ததன் நோக்கம் என்ன? இது, அப்பட்டமாக வெறுப்பரசியலைத் திணிக்கும் செயல். இது கடும் கண்டனத்துக்குரியது மட்டுமல்ல, இதற்காக மானநஷ்ட வழக்கே போட வேண்டும். வெறும் பெயர்தானே என்று சாதாரணமாகக் கடந்துபோய்விட முடியாது. படம் ஓடி எல்லோரும் பார்த்து முடித்த பிறகு, அந்தக் காட்சியை நீக்கியிருக்கிறார்கள். அதனால் என்ன பயன்? சூர்யா கொடுத்த விளக்கமெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறன. ஆனால், அவையெல்லாம் வெறும் வார்த்தைகள். அந்த வார்த்தைகளில் இருக்கும் நியாயம், `ஜெய் பீம்’ படத்தில் வெளிப்படவில்லையே” என்றார் திலகபாமா.

கொரோனா மரணம்: `தமிழகத்தில் ரூ.50,000 இழப்பீடு... மற்ற மாநிலங்களில் எப்படி?!'

இந்தச் சர்ச்சை குறித்து எழுத்தாளர் இரா.முருகவேளிடம் பேசினோம்.

``காலண்டர் காட்சி என்பது ஒரு சாதாரண விஷயம். உள்ளூரில் செல்வாக்கானவர்கள், பிரபலமானவர்கள், பொது அமைப்புகள், வணிக நிறுவனங்கள் சார்பில் அன்பளிப்பாகக் கொடுக்கப்படும் காலண்டர்களை வீட்டிலோ, அலுவலகங்களிலோ மாட்டிவைப்பது வழக்கமான ஒன்றுதான். காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எனவே, `ஜெய் பீம்’ படத்தின் ஒரு காட்சியில் அந்த காலண்டர் இடம்பெற்றது தற்செயலானதாக இருக்கலாம். யார் வீட்டில் வேண்டுமானாலும் அந்த காலண்டர் இருக்கலாம். அந்த காலண்டர் இருந்ததாலேயே அவர் அந்தச் சாதியைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடியாது. ஒரு குறியீடு என்று எடுத்துக்கொண்டு, நம்முடைய விருப்பத்துக்கு ஏற்ப கருத்துகளைத் திரித்து, ஒருவரைத் தாக்குவது என்பது அபத்தமானது என்று பார்க்கிறேன்.

இரா.முருகவேள்
இரா.முருகவேள்

அதேபோல `பெயர் அரசியல்.’ எந்தப் பெயரையும் சர்ச்சைக்கு உள்ளாக்க முடியும். எல்லா பெயர்களையும்கொண்டவர்கள் வன்னியர் சங்கத்தில் இருப்பார்கள். உதாரணமாக, ஆறுமுகம் என்று பெயர் வைத்திருந்தாலும், அதில் ஒருவர் வன்னியர் சங்கத்தில் இருக்கத்தான் செய்வார். அதைப்போய் ஒரு சர்ச்சையாக எழுப்புவதை என்னவென்று சொல்வது? இந்தச் சர்ச்சை வெளியானவுடனேயே, சம்பந்தப்பட்ட காட்சியை படக்குழுவினர் மாற்றிவிட்டார்கள். அதற்குப் பிறகு எதற்காக அன்புமணி ராமதாஸ் கண்டன அறிக்கை வெளியிட்டார் என்று தெரியவில்லை. ஒன்பது கேள்விகளை எழுப்பிய அன்புமணி ராமதாஸ், இதுவரை காவல்துறையினரால் வன்னியர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகளையும், அநீதிகளையும் ஏன் காண்பிக்கவில்லை என்கிற ஒரு கேள்வியையும் கேட்டிருக்கலாமே... ஏன் அவர் கேட்கவில்லை?” என்றார் இரா.முருகவேள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு