Published:Updated:

பாலாற்றின் குறுக்கே ஆந்திரா கட்டும் அணை: மோதிக்கொண்ட இ.பி.எஸ் - துரைமுருகன் - ஓ.பி.எஸ்!

பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அணை

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, `தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் கனகதாச்சியம்மன் கோயில் அருகிலிருக்கும் பாலாறு நீர்தேக்கத்தில் தண்ணீர் சேகரிக்கும் அளவை உயர்த்தப்போவதாகவும், அதற்காக ரூ.120 கோடி ஒதுக்கியிருப்பதாகவும்' கூறினார்.

பாலாற்றின் குறுக்கே ஆந்திரா கட்டும் அணை: மோதிக்கொண்ட இ.பி.எஸ் - துரைமுருகன் - ஓ.பி.எஸ்!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, `தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் கனகதாச்சியம்மன் கோயில் அருகிலிருக்கும் பாலாறு நீர்தேக்கத்தில் தண்ணீர் சேகரிக்கும் அளவை உயர்த்தப்போவதாகவும், அதற்காக ரூ.120 கோடி ஒதுக்கியிருப்பதாகவும்' கூறினார்.

Published:Updated:
பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அணை

கர்நாடகாவில் உருவாகி, ஆந்திரா வழியாக தமிழ்நாட்டுக்கு வரும் பாலாறுதான் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்களின் தாகத்துக்கும், விவசாயத்துக்கும் முக்கிய நீராதாரம். இப்படி, எஞ்சிவரும் நீரையும் தடுத்து நிறுத்தும்விதமாக ஆந்திர முதல்வர் அறிவித்திருக்கும் தடுப்பணை திட்டம், தமிழக அரசியல் தலைவர்களை முட்டல் மோதலில் நிறுத்தியிருக்கிறது.

பாலாறு
பாலாறு

அறிவிப்பு வெளியிட்ட ஜெகன்மோகன் ரெட்டி!

ஆந்திரா, குப்பம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, `தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் கனகதாச்சியம்மன் கோயில் அருகிலிருக்கும் பாலாறு நீர்தேக்கத்தில் தண்ணீர் சேகரிக்கும் அளவை உயர்த்தப்போவதாகவும், அதற்காக ரூ.120 கோடி ஒதுக்கியிருப்பதாகவும் கூறினார். மேலும், குடிப்பள்ளியில் 0.77 டிஎம்சி, சாந்திபுரத்தில் 0.33 டிஎம்சி தண்ணீரையும் சேமிக்க இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்காக ரூ.250 கோடி ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஸ்டாலினை விமர்சித்த இ.பி.எஸ்!

ஆந்திர முதல்வரின் இந்தப் பேச்சு, பாலாற்றை நம்பியிருக்கும் தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அதையடுத்து கண்டன அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``தமிழக மக்களுக்கு விடியலைத் தருவோம் என்று பசப்பு வார்த்தைகளைக் கூறி ஆட்சிக்கு வந்த இந்தக் கையாலாகாத அரசு இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது வெட்கக்கேடானது. இந்தத் திட்டம் குறித்து நன்கு அறிந்தும், தி.மு.க அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலினும், நீர்வளத்துறையும் எதிர்ப்பு தெரிவிக்காமல் கள்ள மௌனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை. கும்பகர்ணத் தூக்கத்தை கைவிட்டுவிட்டு, உடனடியாக ஆந்திர அரசின் இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும். நீதிமன்றத்தின் மூலமாக இதற்குத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கடும் விமர்சனத்துடன் கோரிக்கை வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இ.பி.எஸ்-ஸை நக்கலடித்த துரைமுருகன்:

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக எதிர் அறிக்கை வெளியிட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், `அது ஒரு பொதுக்கூட்டச் செய்திதான். அந்தச் செய்தியை வைத்துக்கொண்டு தளபதி அரசு என்ன சாதித்துவிட்டது என்று அவசரக்குடுக்கையாக எதிர்க்கட்சித் தலைவர் ஓர் அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்து எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. இப்படித்தான் முன்னர் ஒரு முறை கணேசபுரத்தில் அணைகட்டப்போவதாக வந்த செய்தியைப் பார்த்து சில அறிக்கை தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட, முதல்வரும் நானும் கணேசபுரம் போய்ப் பார்த்தோம். அணை கட்டுவதற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை.

துரைமுருகன்
துரைமுருகன்

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை இந்த அரசு தீவிரமாகக் கண்காணித்துக்கொண்டிருக்கிறது. தேவையான நடவடிக்கைகளை தக்க நேரத்தில் எடுக்கும். இந்த நிர்வாகரீதியான செயல்பாடுகளெல்லாம் எடப்பாடியாருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. இ.பி.எஸ் எந்த அணையையும் கட்டவில்லை. அந்தரத்தில் நீர்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திவிட்டுப் போனவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படித் தெரியும்?" எனக் காட்டமாகக் கேள்வியெழுப்பினார்.

இ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாக துரைமுருகனை வம்பிழுத்த ஓ.பி.எஸ்!

இந்த நிலையில், இ.பி.எஸ்-ஸை விமர்சித்த துரைமுருகனின் பதிலடிக்கு, பதிலடி கொடுக்கும்விதமாக அ.தி.மு.க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், `2001-2006 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடந்ததை துரைமுருகன் மறந்துவிட்டார் அல்லது தனக்கு வசதியாக மறைத்துவிட்டார். அந்த ஆட்சிக்காலத்தில் பாலாற்றின் குறுக்கே அணைகட்டப்போவதாக செய்தி வந்ததும், `1892-ம் ஆண்டு ஒப்பந்தப்படி கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதியின்றி எந்த ஒரு புதிய அணையைக் கட்டவோ, நீரைத் தடுப்பதற்கான கட்டுமானங்களையோ கட்டக் கூடாது என ஆந்திர முதல்வருக்குக் கடிதம் எழுதினார் துரைமுருகன். அதுமட்டுமல்லாமல், `பாலாறு சஹாரா பாலைவனமாகக்கூடிய நிலைமை உருவாகிவிடும்; அதிகாரிகள் அங்கு அளவெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; மிகப்பெரிய கொந்தளிப்பு, பதற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் பேசினார்.

ஓ. பன்னீர் செல்வம்
ஓ. பன்னீர் செல்வம்

ஆனால், தற்போதைய செய்தியைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்பதுபோல் அவரின் அறிக்கை அமைந்திருக்கிறது. இது சாதாரண பத்திரிகைச் செய்தி அல்ல, ஆந்திர முதல்வரின் பேச்சு பத்திரிகையில் செய்தியாக வெளி வந்திருக்கிறது. இதற்கு எதிர்வினை ஆற்றவேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு" என துரைமுருகனுக்கு கொட்டுவைத்திருக்கிறார்.

`அறிக்கைச் சண்டையை விடுத்து, ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுங்கள்' என்பதே மக்களின் கோரிக்கை!