Published:Updated:

` இந்திய வரைபடத்தில் ஏன் இடம்பெறவில்லை?!' - தலைநகர் அமராவதி சர்ச்சையில் மோதும் ஆந்திரக் கட்சிகள்

புதிய இந்திய வரைபடத்தில் ஆந்திர தலைநகர், அமராவதி இடம்பெறாததால் அம்மாநிலத்தில் ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்திய வரைப்படம்
இந்திய வரைப்படம் ( Twitter/@PIB_India )

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிந்தன. கடந்த அக்டோபர் 31-ம் தேதி முதல் இரு யூனியன் பிரதேசங்களும் தனியாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், புதிய யூனியன் பிரதேசங்கள் அடங்கிய இந்தியாவின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இது ஆந்திராவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர தலைநகர்!

ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த ஆந்திரா, 2014-ம் ஆண்டு ஆந்திரா, தெலங்கானா என இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. அப்போது, `தெலங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தையே அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திராவும் தலைநகராகப் பயன்படுத்திக்கொள்ளலாம். கால அவகாசம் முடிவதற்குள், ஆந்திரா தங்களுக்கான புதிய தலைநகரைத் தேர்ந்தெடுத்து அறிவிக்க வேண்டும்' என மத்திய அரசு கூறியிருந்தது.

ஆந்திரப் பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட உடனேயே, `ஆந்திராவின் தலைநகராக அமராவதி இருக்கும்' என அறிவித்தார் அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு. `அமராவதியை மொத்த இந்தியாவும் வியந்து பார்க்கும் அளவுக்கு உலகத்தரத்தில் புதிய நகரமாக உருவாக்கிக் காட்டுவோம்' என்ற இலக்குடன் கலத்தில் இறங்கிய சந்திரபாபு நாயுடு, அதற்காகத் தீவிரமாக களமிறங்கினார். முன்னதாக ஹைதராபாத்திலிருந்த ஆந்திராவின் அனைத்து அரசு அலுவலகங்களும் அமராவதிக்கு மாற்றப்பட்டன.

அமராவதி
அமராவதி

அமராவதியில் சட்டசபை, உயர் நீதிமன்றம் போன்ற அனைத்தும் தற்காலிக கட்டடங்களில் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன. அமராவதியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதே சந்திரபாபு நாயுடுவின் மிகப்பெரும் கனவாக இருந்தது. ஆனால், அதற்குள் அங்கு தேர்தல் நடந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. தற்போது ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி செயல்பட்டு வருகிறார்.

புதிய வரைபட சர்ச்சை!

தற்போது பழைய கதைக்கு வருவோம். இந்தியாவின் புதிய வரைபடத்தில் அனைத்து மாநில எல்லைகளும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு அதற்கான தலைநகரங்கள் சிவப்பு வண்ணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், ஆந்திராவின் தலைநகராக அறிவிக்கப்பட்ட அமராவதி மட்டும் இந்திய வரைபடத்தில் இடம்பெறவில்லை. இதற்கு ஆளும்கட்சிதான் காரணம் என எதிர்க்கட்சியும் முன்னாள் அரசான எதிர்க்கட்சிதான் காரணம் என ஆளும்கட்சியும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

``சந்திரபாபு நாயுடு அறிவித்த அமராவதியை ஏற்க மனமில்லாமல், புதிய தலைநகரை தேர்ந்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி. அவர்கள் ஆந்திர தலைநகரை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால்தான் புதிய இந்திய வரைபடத்தில் ஆந்திர தலைநகர் இடம்பெறவில்லை.

Vikatan

மேலும் அமராவதியை ஸ்மார்ட் சிட்டியாக்கும் திட்டம் தொடங்கப்பட்டபோது பிரதமர் மோடிதான் அதற்கு அடிக்கல் நாட்டித் தொடங்கிவைத்தார். ஆந்திர தலைநகர் அமராவதி என அறிந்தும் இரு மாநிலங்களுக்கும் ஒரே தலைநகர் குறிப்பிடப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது” என தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வரலா ராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

இதுபற்றிப் பேசிய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர், ``புதிய வரைபடத்தில் ஆந்திர தலைநகர் குறிப்பிடப்படாமல் உள்ளது மிகவும் வருத்தமான விஷயம். ஆந்திராவின் தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டபோது அது எந்த அரசிதழிலும் வெளியாகவில்லை. அதனால் மத்திய அரசுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதன் காரணமாகவே வரைபடத்தில் ஆந்திர தலைநகர் இடம்பெறாமல் இருந்திருக்கலாம். இதற்குக் காரணம், இதற்கு முன்பாக ஆட்சி தெலுங்கு தேச அரசுதான்” என விமர்சித்துள்ளனர்.