Published:Updated:

புதுக்கட்சித் தொடங்குகிறார் ஜெகன்மோகன் தங்கை ஷர்மிளா! - அரசியல் ஆலோசகராக திமுக எம்.எல்.ஏ மகள்?!

ஜெகன்மோகன் தங்கை ஷர்மிளா
ஜெகன்மோகன் தங்கை ஷர்மிளா

தெலங்கானாவில் ஆதிக்கம் செலுத்திவரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு அடுத்தபடியாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் அங்கு பலமாக இல்லை என்பதால், அங்குக் காலூன்ற ஷர்மிளாவின் கட்சிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் ஜெகன்மோகன் 2011-ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். அதன் பிறகு ஜெகன்மோகனுக்கு ஆந்திராவில் தனது தந்தையின் செல்வாக்கை மீட்டெடுத்து, மக்களிடம் தனது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற கட்சியை முழுமையாகக் கொண்டு போய் சேர்க்கக் கிட்டத்தட்ட எட்டு வருடகாலம் தேவைப்பட்டது. ஒருவழியாக 2019 சட்டமன்றத் தேர்தலில் பலமான பிரசார வியூகங்கள், தந்தை ராஜசேகர ரெட்டியின் செல்வாக்கு ஆகியவை ஒருசேரக் கைகொடுத்ததால் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியை ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்றிவிட்டு ஜெகன்மோகன் அரியணை ஏறினார். ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் தனிக்கட்சி தொடங்கிய நேரத்தில், அந்தக் கட்சி மாநிலம் முழுவதும் சென்றடைய முக்கியக் காரணமாக இருந்தவர் அவரது இளைய சகோதரி ஷர்மிளா.

ஆளுங்கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் செயல்பாடுகள் குறித்து மாநிலம் முழுவதும் பயணித்து, எளிமையாகப் பிரசாரம் செய்து ஷர்மிளா மக்கள் மனதில் மாற்றத்தின் விதையைத் தூவினார். குறிப்பாக, கடந்த தேர்தலில் தனது சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டியை ஆதரித்து ஷர்மிளா மேற்கொண்ட மாபெரும் பாதயாத்திரை ஆந்திரத்தில் 'ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்' என்ற கட்சியை மக்களிடம் முழுமையாகக் கொண்டு சேர்த்தது. அதன் பயனாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 2019 தேர்தலில் வெற்றிவாகை சூடியது. ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த ஜெகன்மோகன் அதற்குப் பிறகு தெலங்கானா பக்கம் தனது கவனத்தை முற்றிலுமாக குறைத்துக்கொண்டார்.

முன்னதாக, ஆந்திரப் பிரதேசம் என்ற ஒற்றைக் குடையின் கீழ் இருந்த மாநிலம், 2014-ல் ஆந்திரா, தெலங்கானா என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஆனால், 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆந்திர மாநிலத்தில் மட்டுமே கவனம் செலுத்திவந்தது. அதன் காரணமாக, அந்தக் கட்சிக்குத் தெலங்கானாவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு செல்வாக்கு இல்லாமல்போனது. தன் தந்தையின் காலத்தில் தெலுங்கானாவில் அவருக்கு இருந்த செல்வாக்கு தற்போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு இல்லை என்பதை மிகத்தெளிவாகப் புரிந்துகொண்ட ஷர்மிளா, தனது அரசியல் பயணத்தைத் தெலங்கானாவின் பக்கம் திருப்பினார்.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

2019 ஆந்திர சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி செயல்பாடுகளில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருந்த ஷர்மிளா, கடந்த சில மாதங்களாகவே வலுவான எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தக் கட்சியும் இல்லாத தெலங்கானாவில் புதுக் கட்சி தொடங்கி, அந்த மாநிலத்தில் தனது தந்தை ராஜசேகர ரெட்டியின் செல்வாக்கை மீண்டும் மீட்டெடுக்கத் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறார். தெலங்கானாவில் 2023-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஷர்மிளா தனிக்கட்சி தொடங்கி அரசியலில் இறங்குவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், ஷர்மிளா கடந்த ஏப்ரல் மாதம் தெலங்கானாவில் பிரமாண்ட பேரணி நடத்தினார். அதைத் தொடர்ந்து கம்மம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தனது அரசியல் நிலைப்பாடு குறித்தும், புதிய கட்சி தொடங்குவது குறித்தும் அறிவித்தார்.

தன் தந்தை ராஜசேகர ரெட்டியின் நல்லாட்சியை தெலங்கானாவிலும் தர விரும்புவதாகக் கூட்டத்தில் பேசிய ஷர்மிளா, இந்த மாதம் (ஜூலை 8-ம் தேதி) ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாளில் புதுக் கட்சி ஒன்றைத் தொடங்கவிருப்பதாக அறிவித்தார். தன்னுடைய அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையில் இல்லாமல், தன்னுடைய தலைமையில் தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைப் போன்றே ஒரு கட்சியை ஆரம்பித்து, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது ஷர்மிளாவின் திட்டமாக இருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் ஒன்றும் இருக்கிறது. அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டியுடனான மனக்கசப்பின் காரணமாகத்தான் ஷர்மிளா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸிலிருந்து மறைமுகமாக விலகி, தெலங்கானாவில் தனிக் கட்சி தொடங்குவதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் ஷர்மிளாவின் அரசியல் வியூகம் முற்றிலும் மாறாகவே இருக்கிறது.

ஆந்திரா பிரிக்கப்பட்டு, தெலங்கானா என்ற மாநிலம் புதிதாக உருவாக்கப்பட்டதிலிருந்து நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் பங்காளிகளான இரு மாநிலங்களும் பகையாளிகளாக மாறி மோதல் போக்கைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றன. எனவே, இந்தச் சூழலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸைவைத்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைப்பது தண்ணீரில் கோலம் போடுவதற்குச் சமம் என்பதால், ஷர்மிளா ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அல்லாத, ஆனால், தந்தை ராஜசேகர ரெட்டி வழியிலான புதுக் கட்சியைத் தொடங்க முடிவெடுத்திருக்கிறார். எனவேதான், ஷர்மிளா தனது ஆதரவு திரட்டும் பயணத்தின்போதுகூட 'தெலங்கானாவுக்குச் சொந்தமான ஒரு சொட்டு நீர்கூட ஆந்திராவுக்கு சென்றுவிடக் கூடாது... அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்' என்று சூளுரையாற்றிக்கொண்டிருந்தார். எப்படியாவது, தன்னை தெலங்கானாவின் மண்ணின் மகள், தன் கட்சி தெலங்கானா மக்களுக்கானது என்பதை மக்கள் மனதில் பதியவைக்க ஷர்மிளா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.

ஷர்மிளா
ஷர்மிளா

கடந்த ஏப்ரல் மாதம் கட்சி குறித்த அறிவிப்பைக் கொடுத்த கையோடு, ஷர்மிளா தெலங்கானா முழுவதும் பயணித்து கட்சிக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது, மக்களைச் சந்தித்து ஆதரவைத் திரட்டுவது எனப் புயலாகச் சுழன்றுகொண்டிருந்தார். இந்தநிலையில், ஷர்மிளா அறிவித்ததுபோல அவர் தந்தை ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாளான இன்று தெலங்கானா தலைநகர், ஹைதராபாத்திலுள்ள தனியார் மண்டப வளாகம் ஒன்றில் கொரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் கட்சியைத் தொடங்கவிருக்கிறார். இன்று மாலை 3 மணிக்கு ஷர்மிளா தனது கட்சியின் கொடி, நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கூட்டத்தில் திரளான தொண்டர்கள் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொள்வதாகத் தெரியவில்லை. ஆனால், அவரின் தயார் விஜயம்மா கலந்துகொண்டு கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா தனது புதிய கட்சிக்கு அரசியல் உத்தி வகுப்பாளராகச் சேலம் வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ ராஜேந்திரனின் மகள் பிரியாவை நியமித்திருப்பதாக தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. சோஷியல் மீடியா ஸ்ட்ராட்டஜிஸ்ட்டான பிரியா ராஜேந்திரன், தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் தலைமையில் திமுக-வுக்கு தேர்தல் பிரசார வியூகம் வகுத்துக் கொடுத்து ஐபேக் குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்தார். இந்தச் சூழலில், பிரியா ராஜேந்திரன் ஷர்மிளாவை அவருடைய இல்லத்தில் அண்மையில் சந்தித்துப் பேசி ஒப்பந்தம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சேலம் வடக்குத் தொகுதி திமுக எம்.எல்.ஏ ராஜேந்திரனிடம் தொடர்புக் கொண்டு விளக்கம் கேட்டோம். "என் மகள் பிரியா ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை திருமதி ஷர்மிளா அவர்களை நேரில்  சந்தித்து அரசியல் ஆலோசகராக பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது. என்னுடைய மகள் யாருக்கும் அரசியல் ஆலோசகராக பணியாற்றவில்லை. அரசியல் சார்ந்து அவர் ஒரு போதும் செயல்படமாட்டார்" என்று மறுப்பு தெரிவித்தார்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கட்சி தொடங்கவிருக்கும் ஷர்மிளாவின் திட்டங்களும், அரசியல் வியூகங்களும் பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!

அடுத்த கட்டுரைக்கு