Published:Updated:

அக்டோபர் 2-ல் அப்பாயின்மென்ட் ஆர்டர்; 4 லட்சம் இளைஞர்களுக்கு இன்ப அதிர்ச்சிகொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி!

சத்யா கோபாலன்

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், ஆந்திராவில் 75 சதவிகித தொழில்துறை வேலைகள், உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார், ஜெகன்மோகன் ரெட்டி.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

சமீபத்தில், ஆந்திராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஜெகன்மோகன் ரெட்டிக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவியது. ஆட்சியைக் கைப்பற்ற இரு தலைவர்களும் வாக்குறுதிகளை அள்ளிக் குவித்தனர். முடிவில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அமோக வெற்றிபெற்று ஆந்திராவின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

முதல்முறையாக முதலமைச்சர் அரியணை ஏறியுள்ள ஜெகன், தன் மாநில மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து மக்களின் ஆதரவுகளைப் பெற்றுவருகிறார். அது மட்டுமல்லாது, தேர்தலின்போது தான் அளித்த வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிவருகிறார். ஜெகன் அளித்த வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமாகக் கருதப்படுவது விவசாயிகளுக்கு கடன் உதவி மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு. விவசாயிகளுக்கான கடன் உதவி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், யாரும் எதிர்பாராதவிதமாக 4.01 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கியுள்ளார். ஜெகன் தன் தேர்தல் அறிக்கையில், ‘ இனி மக்களின் வீடு தேடி ரேஷன் பொருள்கள் உள்ளிட்ட அரசுத் திட்டங்கள் வரும்’ என அறிவித்திருந்தார்.

Vikatan

அதைச் செயல்படுத்தும் நோக்கில்தான், இத்தனை லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளார். கிராமங்களில் வாழும் மக்களில் 4000 பேருக்கு ஒரு கிராம தலைமைச் செயலகம் என அமைக்கப்பட்டுள்ளது. அதில், 50 வீடுகளுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டுள்ளது. அவர், அந்த வீடுகளில் ரேஷன் கார்டு போன்ற நலத்திட்டத் தேவைகளை அந்தந்த துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.

இதேபோன்று, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார். கிராம தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர்களுக்கு 10-ம் வகுப்பு கல்வித் தகுதியாகவும், ரூ.5000 சம்பளமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள செயலகங்களில் பணி புரிபவர்களுக்கு, பட்டப்படிப்பு கல்வித் தகுதியாகவும் ரூ.15,000 சம்பளமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு

ஆந்திர முதல்வரின் இந்தப் புதிய திட்டம் மூலம், கிராமங்களில் உள்ள 99,494 பேருக்கும், நகரங்களில் 34,345 பேருக்கும் வேலை கிடைக்கிறது. மேலும், தற்போது அரசுப் பணியில் உள்ள 1,33,494 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டுள்ளது. துப்புரவுத் தொழிலாளர்களின் பணி நிரந்தரமாக்கப்பட்டு, அவர்களின் சம்பளம் ரூ.18,000 -ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் முழுவதும் பல்வேறு துறைகளில் சுமார் 4.01 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு, அக்டோபர் -2 காந்தி ஜெயந்தி அன்று பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.