Published:Updated:

`நம்ம ஜெகன் அண்ணா!' - வைரலான ஆந்திரப் பெண் துணை முதல்வரின் டிக்டாக் வீடியோ

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியைப் பாராட்டி அம்மாநில பெண் துணை முதலமைச்சர் வெளியிட்ட டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ( Twitter )

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராகப் பதவியேற்றது முதல் பல்வேறு திட்டங்கள் மூலம் அதிரடி காட்டி வருகிறார். ஆனால், ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்கள் என்ற அவரது அறிவிப்புக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. முதல்வரின் இந்த அறிவிப்பைத் திரும்பப் பெறக்கோரி அமராவதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துணை முதல்வர் புஷ்பா ஸ்ரீவாணி
துணை முதல்வர் புஷ்பா ஸ்ரீவாணி
Twitter

இதையடுத்து ஆந்திர அரசு இந்த விவகாரத்தில் அடுத்தகட்டம் குறித்து முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், ஜெகன் மோகன் ரெட்டியைப் பாராட்டி அம்மாநில துணை முதல்வர் புஷ்பா ஸ்ரீவாணி வெளியிட்டுள்ள டிக் டாக் வீடியோ வைரலாகியுள்ளது. ராயலசீமா பகுதியின் முன்னேற்றத்துக்கு ஜெகன் அரசு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுவந்திருப்பதாக `நம்ம ஜெகன் அண்ணா' என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிட்ட பாடல் பின்னணியில் அவர் வெளியிட்ட டிக் டாக் வீடியோ கலவையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

ஜெகன் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் வீடியோவைக் கொண்டாடி வரும் நிலையில், துணை முதல்வர் பொறுப்பிலுள்ள ஒருவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா என எதிர்த் தரப்பில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். விழிநகரம் மாவட்டத்தின் குருபம் தொகுதி எம்.எல்.ஏ-வான புஷ்பா ஸ்ரீவாணி துணை முதல்வராகவும் அம்மாநில பழங்குடியினர் நல்வாழ்வுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.