ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. அமரவாதி நகரம் அருகே, கிருஷ்ணா நதிக்கரையில், சந்திரபாபு நாயுடு வசிக்கும் பிரமாண்ட பங்களாவைத் தகர்த்தெறிந்து விட, ஜெகன் மோகன் ரெட்டி கங்கணம் கட்டிக் கொண்டுள்ளார். கிருஷ்ணா நதிக்கரையோரம் கட்டப்பட்டிருந்த 20 கட்டடங்களை இடிக்கக் கடைசி நோட்டீஸ் நேற்று முன்தினம் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் கட்டடத்தில் வசிப்பவர்கள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெகனின் முதல் டார்கெட் சந்திரபாபு நாயுடுவின் பங்களாதான். ஆந்திரத் தலைநகராக விஜயவாடா அறிவிக்கப்பட்டது முதல் கடந்த 4 ஆண்டுகளாக, சந்திரபாபு நாயுடு இங்கேதான் வசித்து வருகிறார். `நதிக்கரையில் பங்களா கட்டியிருப்பது விதிகளை மீறிய செயல், உங்கள் வீட்டைஇடிக்கப் போகிறோம்' என்று ஆந்திர அதிகாரிகள் கடைசி நோட்டீஸ் விநியோகிக்க பங்களாவுக்குச் சென்றனர். வாட்ச்மேன்கள் அதிகாரிகளை பங்களாவுக்குள் அனுமதிக்கவில்லை.
தொடர்ந்து, வீட்டு வாசலில் நோட்டீஸை ஒட்டி விட்டு அதிகாரிகள் திரும்பினர். அதில், ``7 நாள்களுக்குள் பங்களாவில் இருப்பவர்கள் வெளியேற வேண்டும்; இது இறுதிக்கெடு'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாவுக்கு அதிகாரிகள் சென்றபோது, சந்திரபாபு நாயுடு ஹைதராபாத் சென்றிருந்தார்.
கடந்த ஜூன் மாதத்தில், சந்திரபாபு நாயுடு பங்களாவை ஒட்டிக் கட்டப்பட்ட `பிரஜாவேதிகா' என்ற அரசு கட்டடம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இதைக் கட்டியதும் சந்திரபாபு நாயுடுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகடந்த 2015- ம் ஆண்டு இந்த பங்களாவை சந்திரபாபு நாயுடு குத்தகைக்கு எடுத்தார். வெங்கமானேனி ரமேஷ் என்பவருக்குச் சொந்தமானது இந்த பங்களா. கிருஷ்ணா நதியையொட்டி மிக அழகாக காணப்படும் இந்த பங்களாவை ஆந்திர முதலமைச்சரின் அதிகாரபூர்வ வீடாக மாற்றினார் சந்திரபாபு நாயுடு.
சுற்றுச்சூழல் மற்றும் நதிகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, இந்த பங்ளாவுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. முதலமைச்சரே இந்த வீட்டில் குடி புகுந்தால் என்ன செய்ய முடியும்? சட்டம் அமைதியாகி விட்டது.
சந்திரபாபு நாயுடு இந்த பங்களாவில் குடியேறிய பிறகு, அரசு கூட்டங்கள் நடத்துவதற்காக ரூ.8.90 கோடி செலவழித்து புதிய கூட்ட அரங்கு ஒன்றைக் கட்டி, அதற்கு 'பிரஜாவேதிகா' என்று பெயர் சூட்டினார். ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சந்திரபாபு நாயுடு, தான் வசித்த பங்களாவை 'தனியார் சொத்து' என்று தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதிய கதையும் நடந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நதிக்கரையிலிருந்து 100 மீட்டர் தள்ளியே கட்டடங்கள் கட்டப்பட வேண்டுமென்பது விதி. சுமார் 1.38 ஏக்கர் பரப்பளவில் தோட்டத்துடன் உள்ள இந்த பங்களாவில் முதல் மாடியில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிபேடும் உள்ளது. எந்த முன் அனுமதியும் பெறாமல் பங்களா கட்டப்பட்டுள்ளது. எனவே, விரைவில் சந்திரபாபு நாயுடுவின் நதிக்கரை பங்களாவும் இடித்துத் தள்ளப்படலாம்.

பிரஜாவேதிகா கட்டடம் இடிக்கப்பட்ட போது, தெலுங்குதேசம் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. எனினும், விதிகளுக்குப் புறம்பாக கட்டப்பட்டிருப்பதால், பிரஜாவேதிகா கட்டடத்தை இடிக்க நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. கட்டுவதும், இடிப்பதுமாக மக்கள் பணம்தான் வீணானது!
பிரஜாவேதிகா கட்டடத்தை இடித்ததால், 'உங்கள் தந்தை ராஜசேகர ரெட்டியின் சிலைகள்கூட எந்த அனுமதியும் இல்லாமல் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை இடித்துத் தள்ளுவீர்களா?' என்று ஜெகனிடம் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பினார்.
சந்திரபாபு நாயுடுவின் கேள்விகளுக்கு, தன் அதிகார பலத்தால் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார் ஜெகன்.