Published:Updated:

`அரசு செலவில் குடும்பத்தோடு வெளிநாட்டுப் பயணம்!‍' - 62வது நாளில் சர்ச்சையில் சிக்கிய ஜெகன்

சத்யா கோபாலன்

மூன்று வருடங்களுக்குப் பிறகு, தற்போதுதான் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஜெருசலேம் சென்றுள்ளார்.

ஆந்திர முதல்வர்
ஆந்திர முதல்வர்

ஆந்திராவின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு, தன் மாநிலத்துக்காகப் பல்வேறு சிறந்த திட்டங்களைக் கொண்டுவந்து, மக்களின் ஆதரவைப் பெற்றுவருகிறார். கல்வி, விவசாயம், இளைஞர் நலன், வேலைவாய்ப்பு போன்ற பல திட்டங்கள்மூலம் ஆந்திரா மட்டுமல்லாது பிற மாநில மக்களின் ஆதரவையும் பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி, முதல் முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையுமான ராஜசேகர ரெட்டி, வருடத்துக்கு ஒருமுறை ஜெருசலேம், இஸ்ரேல் செல்வதை வழக்கமாகக்கொண்டிருந்தார். தன் தந்தையைப் பின்பற்றி, தற்போது ஜெகனும் ஜெருசலேம் சென்றுள்ளார். நான்கு நாள் பயணமாகத் தன் குடும்பத்துடன் நேற்று புறப்பட்டுச்சென்ற அவர், அந்நாட்டில் உள்ள பல புனிதத் தலங்களுக்குச் செல்ல உள்ளார். ஆந்திர முதல்வராகப் பதவியேற்ற பிறகு, ஜெகன் செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது.

ஜூலை 26-ம் தேதி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தன் சொந்தப் பயணத்துக்காக ஜெருசலேம் செல்ல உள்ளதாக முதலில் அரசு அறிக்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து அதே நாளில், ‘முதல்வரின் பயணத்தை ஒட்டி, ஆந்திர காவல்துறை கண்காணிப்பாளர் சிவராஜ் செந்தில் குமார், இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே ஜெருசலேம் செல்ல வேண்டும்’ என மற்றொரு அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கிடையில், ஜூலை 31-ம் தேதி, ஆந்திர பொதுத்துறை ‘ஆந்திர முதல்வர் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 4-ம் தேதிவரை ஜெருசலேம் செல்ல உள்ளார். அந்தப் பயணத்தில், அவரின் பாதுகாப்புக்காக 22,52,500 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வரின் பாதுகாப்பு வாகனம்
ஆந்திர முதல்வரின் பாதுகாப்பு வாகனம்

முதல்வரின் சொந்தப் பயணத்தில் அவருக்கு பாதுகாப்பு அளிப்பதற்குப் பதிலாக, அரசு கஜானாவிலிருந்து 22.52 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும், 'ஜெகன் தன் குடும்பத்தினருக்கும் சேர்த்து பொதுமக்களின் பணத்தைச் செலவிடுகிறார்' என விமர்சித்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக, ஆந்திர முதல்வரின் பாதுகாப்பு என்ற பெயரில் மட்டும் பல்வேறு அரசு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை 22-ம் தேதி வெளியிட்ட அரசு அறிக்கையில், ‘ஹைதராபாத்தில் உள்ள முதல்வரின் லோட்டஸ் பாண்ட் வீட்டுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக 24.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி, ஜூன் 22-ம் தேதியே குண்டூரில் புதிய வீடு கட்டி குடும்பத்தினருடன் குடிபெயர்ந்துவிட்டார். ஹைதராபாத் செல்லும்போது மட்டும் லோட்டஸ் பாண்ட் வீட்டில் தங்குவார்.

அரசு அறிக்கை
அரசு அறிக்கை
Twitter/@Paul_Oommen

இதையடுத்து, ஜூன் 25-ம் தேதி வெளியிட்ட அரசாணையில், ‘தேசிய நெடுஞ்சாலையிலிருந்து முதல்வரின் வீட்டை இணைக்கும் 1.30 கி.மீ சாலையை மேம்படுத்த 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது. ‘ஜெகனின் இந்தச் செலவு, ஆந்திர கருவூலத்துக்கான தேவையில்லாத கூடுதல் சுமை’ என தெலுங்கு தேசம் கட்சியினர் அப்போது விமர்சித்திருந்தனர்.

ஜூன் 26-ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘முதல்வரின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக 1.89 கோடி ரூபாயும், நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 75 லட்சம் ரூபாயும், ஜெகனின் வீட்டில் உள்ள ஹெலிபேட் மேம்பாடு மற்றும் அதைச் சுற்றி வேலி அமைப்பதற்காக 40 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் பேசிய ஆந்திர தலைமைச் செயலாளர் எல்.வி. சுப்ரமணியம், “ ஒரு மாநிலத்தின் முதல்வர் வெளிநாடு சென்றால், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது ஒன்றும் புதிதல்ல. வெளிநாடுகளில், எங்கள் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் ஆயுதம் ஏந்தவோ, கண்காணிக்கவோ அனுமதி வழங்கப்படுவதில்லை. அதனால்தான், தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பு வீரர்களுடன் முதல்வர் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.