Published:Updated:

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை: ஜெகன்மோகன் ரெட்டி கூட்டும் புதிய தலைவலியைச் சமாளிப்பாரா ஸ்டாலின்?!

ஜெகன்மோகன் ரெட்டி, ஸ்டாலின்

`தமிழ்நாடு - ஆந்திரா எல்லைப் பகுதியில் பாலாற்றின் குறுக்கே மிகப்பெரிய தடுப்பணை கட்டப்படும்’ என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருப்பது முதல்வர் ஸ்டாலினுக்குத் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை: ஜெகன்மோகன் ரெட்டி கூட்டும் புதிய தலைவலியைச் சமாளிப்பாரா ஸ்டாலின்?!

`தமிழ்நாடு - ஆந்திரா எல்லைப் பகுதியில் பாலாற்றின் குறுக்கே மிகப்பெரிய தடுப்பணை கட்டப்படும்’ என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருப்பது முதல்வர் ஸ்டாலினுக்குத் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
ஜெகன்மோகன் ரெட்டி, ஸ்டாலின்

ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டிக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இணக்கமான நட்புறவு உண்டு. ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக 2019-ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றார். அந்தப் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தார்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டியை ஸ்டாலின் வாழ்த்திப் பேசிய பிறகு, ஜெகன்மோகன் ரெட்டி பேசினார். அப்போது, "கடவுள் ஆசீர்வாதத்துடன் விரைவில் தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் வர வேண்டும்" என ஜெகன்மோகன் ரெட்டி குறிப்பிட்டார். இருவருக்குமிடையே சுமுகமான உறவு நிலவிவரும் சூழலில், ஜெகன்மோகன் ரெட்டியின் சமீபத்திய அறிவிப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மக்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு ஆந்திர அரசு நீண்டகாலமாக முயன்றுவருகிறது. அதற்கு, தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இந்த நிலையில், ஆந்திராவில் குப்பம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார். அப்போது, தமிழ்நாடு- ஆந்திரா எல்லையில் கனகதாச்சியம்மன் கோயில் அருகே இருக்கும் நீர்தேக்கத்தில் தண்ணீர் சேகரிக்கும் அளவை உயர்த்தப் போவதாகவும், அதற்காக ரூ.120 கோடி ஒதுக்கியிருப்பதாகவும் கூறினார். குடிப்பள்ளி, சாந்திபுரம் ஆகிய இடங்களிலும் நீர்தேக்கங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்காக ரூ.250 கோடி ஒதுக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

கர்நாடகத்தின் நந்திதுர்கா மலையில் உருவாகும் பாலாறு, மூன்று மாநிலங்களுக்கிடையே பாய்கிறது. ஆந்திராவில் 93 கி.மீ தூரம் பயணித்து தமிழ்நாட்டின் வாணியம்பாடி அருகே புல்லூர் வழியாகச் சென்று சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே இருக்கும் வயலூரில் கடலில் கலக்கிறது. ஆண்டுதோறும் பாலாற்றில் குறைந்தபட்சம் 80 டி.எம்.சி தண்ணீர் உற்பத்தியாகிறது. இதில், கர்நாடகா 20 டி.எம்.சி-யும், ஆந்திரா 20 டி.எம்.சி-யும், தமிழகம் 40 டி.எம்.சி-யும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என மூன்று மாநிலங்களும் ஒப்பந்தம் செய்திருக்கின்றன. இந்த நிலையில், நீர்த்தேக்கம் கட்டுவதும், தடுப்பணைகள் அமைப்பதும் தமிழ்நாட்டு விவசாயிகளைக் கடுமையாக பாதிக்கும்.

எந்தவொரு மாநிலமும், வடிநிலப் பகுதியில் இருக்கும் மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஆற்றின் குறுக்கே கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்கிற நீதிமன்றத் தீர்ப்புகளை மீறி, ஆந்திரா அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்ட தொடர்ச்சியாக முயன்றுவருகிறது. ஏற்கெனவே, காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்படுவதால், தமிழ்நாடு பாதிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டால், நீர்த்தேக்கம் உயர்த்தப்பட்டால், தமிழ்நாட்டில் ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்படும்.

பாலாறு, வேலூர்
பாலாறு, வேலூர்

`பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும், நீர்த்தேக்கம் உயர்த்தப்படும்’ என்று ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருப்பது, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. வெறும் ஏழு அடியாக இருந்த நீர்த்தேக்கத்தின் உயரத்தை, 2014-ம் ஆண்டு 22 அடியாக ஆந்திர அரசு உயர்த்தியது. அடுத்து, 40 அடியாக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க அந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்கு அப்போது நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதும் இந்தப் பிரச்னை எழுந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுத்து ஆந்திரா அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இப்போது, முதல்வர் நாற்காலியில் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியில் எடப்பாடி பழனிசாமியும் இருக்கிறார்கள். “திராவிட மாடல்... திராவிட மாடல் என்று சொல்லி தமிழ்நாட்டு மக்களை திசைதிருப்பும் போக்கை இந்த விடியா அரசு கைவிட வேண்டும். கும்பகர்ணத் தூக்கத்தைக் கைவிட்டுவிட்டு, ஆந்திர அரசின் முயற்சியை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். நீதிமன்றத்தின் மூலமாக இதற்கு விடியா அரசு தீர்வுகாண வேண்டும்” என்று அறிக்கை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி. முதல்வர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று வட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து மாவட்ட மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.