Published:Updated:

‘முதல்வன்’ ஜெகன்... ஆந்திரத்து ஹீரோவா?

ஐஷ்வர்யா
கார்த்திகேயன் மேடி

ஜூ.வி 2020

பிரீமியம் ஸ்டோரி

2019 -ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் நான்கு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, அனைவராலும் உற்றுநோக்கப்பட்ட மாநிலம், ஆந்திரா. காரணம், ஆந்திராவில் 175 தொகுதிகளில், 151 தொகுதிகளைக் கைப்பற்றித் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது, ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி. ஆட்சியில் அமர்ந்ததே ஓர் அதிரடியென்றால், தனது அடுத்தடுத்த அதிரடிகளால் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி!

2009-ம் ஆண்டு, ஆந்திராவில் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர், விமான விபத்தில் உயிரிழந்தார். அப்போது, ‘என்னை முதல்வர் ஆக்குங்கள்’ என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் கோரிக்கை வைத்தார், ராஜசேகரின் மகன் ஜெகன்மோகன். ஆனால், அவருக்கு வாய்ப்பு தர மறுத்து விட்டார், சோனியா. அதனால், தனது செல்வாக்கை நிரூபிப்பதற்காக 2010-ம் ஆண்டில் ஆந்திரா முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டார், ஜெகன்மோகன். அவருக்கு மக்கள் ஆதரவு பெருகியதை அறிந்த சோனியா, ஜெகனின் அம்மாவையும் சகோதரியையும் அழைத்து நடைப்பயணத்தைக் கைவிட வேண்டும் என உத்தரவிட்டார். இப்படியாகப் பல விதங்களிலும் காங்கிரஸ் கட்சித் தலைமையால் அவமானத்துக்கு உள்ளாக்கப்பட்ட ஜெகன்மோகன், கட்சியிலிருந்து விலகி ஆரம்பித்ததுதான், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி.

ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி
ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி

கடந்த தேர்தலில், ஜெகன்மோகனின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது, அவருடைய ‘நவ ரத்னலு’ தேர்தல் அறிக்கைதான். ‘அம்மா வோடி’, ‘பூரண மதுவிலக்கு’, ‘கூட்டுறவுச் சங்கங்களில் பெண்களின் கடன் ரத்து’ என ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காக நவ ரத்னலு முன்வைத்தவற்றில் நான்கு திட்டங்கள் பெண்கள் மற்றும் கல்விக்கானவை. அரசியலில் பெண்களுக்கான சம உரிமை என்ற நோக்கத்துடன் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இப்படி தேர்தல் அறிக்கையுடன் நிறுத்திக்கொள்ள வில்லை ஜெகன்.

பதவியேற்ற முதல் வாரத்திலேயே அங்கீகரிக்கப்பட்ட சமூகச் சுகாதாரச் செயற்பாட்டாளர்களுக்கு (Asha workers) ரூ.7,000 ஊதிய உயர்வுத் திட்டத்தை முதல் திட்டமாக அமல்படுத்தினார். மத்திய அரசு, சுகாதாரம் சார்ந்து அறிவிக்கும் திட்டங்கள் கிராமப்புறங்களில் ஒழுங்காகச் செயல்படுத்தப்படுகிறதா எனக் கண்காணிப்பதுதான் ஆஷா செயற்பாட்டாளர்களின் பணி. இவர்கள், இதுவரை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்கப்பட வில்லை. இவர்களுக்கான சம்பளம் மாதம் ரூ.3,000 ஆகத்தான் இருந்தது. தற்போது அவர்களுக்கு ரூ.10,000 சம்பளம் வழங்கப்படுகிறது.

ஜெகனின் அடுத்த முக்கியமான திட்டம் ‘அம்மா வோடி’. இந்தத் திட்டத்தின்கீழ் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்கள் அல்லது காப்பாளர்களுக்கு (வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள்) ஆண்டுக்கு ரூ.15,000 வழங்கப்படுகிறது. இதன்மூலம் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கத் திட்டமிட்டிருக் கிறார் ஜெகன். அரசுப்பள்ளி, தனியார் பள்ளி என எந்தப் பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பினாலும் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி
ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி

அத்துடன் தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், ‘மாநிலக் கல்வி மற்றும் கல்விக் கட்டண ஒழுங்குமுறை வாரிய’த்தை அமைத்திருக்கிறார் ஜெகன். இந்த வாரியத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் கீழ் 11 கல்வியாளர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

சாதனைகளின் உச்சமாக, பெண்களின் பெரும் ஆதரவை திரட்டவிருக்கும் திட்டம்தான், பூரண மதுவிலக்கு. தனது தேர்தல் அறிக்கையில், ‘2022-ம் ஆண்டுக்குள் பூரண மதுவிலக்கை அமல் படுத்துவேன்’ என்று சொல்லியிருந்தார், ஜெகன். ஆந்திராவில் என்.டி.ராமாராவ் காலத்திலிருந்து பெண்கள் அமைப்புகள் பூரண மதுவிலக்குக் கோரி போராடி வருகின்றன. அதன்படி படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் திட்டத்தை அறிவித்திருக் கிறார், ஜெகன். ஆனாலும், இது 2022-ம் ஆண்டில் முழுமையாக நடைமுறைக்கு வந்தால்தான் நிச்சயம்.

தெலங்கானாவில் கால்நடை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதைத்தொடர்ந்து, ‘ஆந்திரப்பிரதேச திஷா சட்டத்திருத்தம் - 2019’ என்கிற சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது, ஜெகன் அரசு. இதன்படி பாலியல் வன்புணர்வுக் குற்றங்களுக்கான விசாரணை ஒரு வாரத்திலும், அதன்மீதான நீதிமன்ற விசாரணை மற்றும் தீர்ப்பு அதற்கடுத்த 14 நாள்களிலும் கொடுக்கப்பட்டு, 21 நாள்களுக்குள் வழக்கு முடிக்கப்பட வேண்டும். அதிகபட்சம் நான்கு மாதங்கள்வரை நீதிமன்ற விசாரணை நடக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. குழந்தைகள்மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டத்திருத்தங்களும் கொண்டுவரப் பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முரண்பாடுகளும் இல்லாமல் இல்லை. ‘அரசுப் பள்ளிகளில் தெலுங்கு வழிக்கல்வி நிறுத்தப்பட்டு ஆங்கிலவழிக் கல்வி நடைமுறைப்படுத்தப்படும்’ என்று அறிவித்திருக்கிறார் ஜெகன். ‘தாய்மொழி வழிக் கல்வியையே மறுப்பதா?’ என்று இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. அதேசமயம், ஒடுக்கப் பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகத்தினர் ஆங்கில வழிக்கல்விக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். இதன்மூலம் அரசுப் பள்ளியில் பயில்பவர்களும் ஆங்கிலம் பயின்று போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக முடியும் என ஜெகன் அறிவித்திருக்கிறார். அதேபோல விசாகப்பட்டினம், அமராவதி, கர்னூல் ஆகிய மூன்று நகரங்களில் தலைநகரங்கள் அமைக்கும் திட்டமும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. சந்திரபாபு நாயுடுவைப் பழிவாங்கும்விதமான ஜெகனின் முரட்டுத்தனமான செயல்பாடுகளும் இவர்மீதான எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி யிருக்கின்றன.

ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி
ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி
‘அரசுப் பள்ளிகளில் தெலுங்கு வழிக்கல்வி நிறுத்தப்பட்டு ஆங்கிலவழிக் கல்வி நடைமுறைப் படுத்தப்படும்’

அதேசமயம், ஒப்பீட்டளவில் விமர்சனங்களை கிளப்பிய திட்டங்களைவிட ஜெகன்மோகன் ரெட்டி கொண்டுவந்திருக்கும் மற்றும் அறிவித்திருக்கும் ஆக்கபூர்வமான திட்டங்களே அதிகம். ஆனாலும், ஜெகன்மோகன் ஆந்திராவின் ஹீரோவா என்பதை வருங்காலங்களில் அவரது செயல்பாடுகள் மட்டுமே முடிவுசெய்யும்!

ஆந்திரா முழுவதும், தான் மேற்கொண்ட நடைப்பயணத்தை தனது செயல்பாடுகளுக்குக் காரணமாகச் சொல்கிறார் ஜெகன். “மொத்தம் 3,648 கிலோமீட்டர் தூரம் ஆந்திரா முழுவதும் பாதயாத்திரை சென்றேன். அதை, அதிகாரத்தை அடைவதற்கான வழி என்றார்கள். ஆனால், நான் தினமும் மக்களைச் சந்தித்தது , ‘தங்களை யாரேனும் வந்து சந்திக்கிறார்கள்’ என்கிற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்தது. மேலும், ‘தங்களுக்கு ஏதேனும் அற்புதம் நிகழும்’ என்று அவர்கள் நம்பத்தொடங்கினார்கள். அந்த நம்பிக்கைதான் என்னை நகர்த்திக்கொண்டிருக்கிறது; இயங்கச் செய்துகொண்டும் இருக்கிறது” என்கிறார்.

ரெட்டிகாரு... மீரு கெட்டிகாரு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு