சினிமா
Published:Updated:

“ஜெயலலிதாவுக்கு நான் மகள் மாதிரி!”

முதல்வருடன் ரோஜா குடும்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
முதல்வருடன் ரோஜா குடும்பம்

படம்: ஆர்.சுரேஷ்குமார்

சினிமா ஸ்டார் டு பொலிட்டிகல் ஸ்டாராக புரமோஷன் பெற்றிருக்கிறார் நடிகை ரோஜா. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவை, கடந்த வாரம் மாற்றியமைக்கப்பட்டது. அதில் இடம்பிடித்திருக்கும் ரோஜாவுக்கு, சுற்றுலா, கலை மற்றும் விளையாட்டு மேம்பாடு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலத்தில் அமைச்சராகியிருக்கும் முதல் பெண் சினிமா பிரபலமான ரோஜா, அம்மாநிலத்தில் அதிரடி அரசியல்வாதியாக, அனல் தெறிக்கும் பேச்சால் எதிர்க்கட்சியினரை மிரள வைப்பவர். தனது நகரித் தொகுதியிலிருந்து தலைநகர் அமராவதிக்கு விரைந்துகொண்டிருந்த ரோஜாவிடம் உரையாடினேன்.

“அமைச்சர் பொறுப்பு கிடைக்கப்போகிற தகவல் வந்ததும் உங்க மனநிலை எப்படியிருந்துச்சு?”

“என் குழந்தைகளைப் பெத்தெடுக்கிறப்போ ஏற்பட்ட சந்தோஷத்தைப்போலவே, விவரிக்க முடியாத உணர்வுல ஆனந்தக்கண்ணீர் விட்டேன். அந்தச் செய்தியை முதல்ல என் கணவர், குழந்தைகள்கிட்ட சொன்னப்போ, என்னைவிட அவங்கதான் அதிகமா மகிழ்ச்சியடைஞ்சாங்க.”

“அரசியல்ல உங்களோட 20 ஆண்டுக்காலப் போராட்டத்தை எப்படிப் பார்க்கிறீங்க?”

“ஜெயலலிதா மேடம்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவரைப்போல ஜெகன் அண்ணாவும் நிறைய போராட்டங்களைத் தாண்டித்தான் அரசியல்ல ஜெயிச்சிருக்கார். இவங்க ரெண்டு பேர்கிட்டேருந்தும் கத்துக்கிட்ட போராட்டக்குணத்தினாலதான், கஷ்டங்கள், நிதி நெருக்கடிகள், அவமானங்களையெல்லாம் தாண்டி, பொறுமையுடன் என் வேலைகளைச் செஞ்சேன். நாம செய்யுற வேலைக்கு ஊக்கமோ பாராட்டோ கிடைச்சா, டபுள் எனர்ஜியுடன் இயங்க முடியும்தானே? அதுபோலவே, என் உழைப்புக்கு உண்மையான அங்கீகாரமா அமைச்சர் பொறுப்பு கிடைச்சிருக்கிறதா பெருமைப்படுறேன்.”

“உங்களுக்கு வந்த வாழ்த்துகளில் மறக்க முடியாதது...”

“என் சினிமா ஃபிரெண்ட்ஸ் பலரும் வாழ்த்தினாங்க. நடிகை சரோஜாதேவி அம்மாவுடன் சினிமாவுல நான் வேலை செஞ்சதில்லை. ஆனா, எப்படியோ என் நம்பரை வாங்கி, போன்ல நெகிழ்ச்சியா பாராட்டினாங்க. ‘உன் தைரியத்துக்கு நீ பெரிய உயரத்துக்குப் போவே’ன்னு ‘உழைப்பாளி’ படத்துல வேலை செய்யும்போதே சொன்னேன்ல’ன்னு பி.வாசு சார் பெருமிதமா சொன்னார். பாரதிராஜா சார் உட்பட நிறைய பேர்கிட்டேருந்து வந்த ஒவ்வொரு வாழ்த்துமே எனக்கு முக்கியமானது.”

“பதவிப் பிரமாண நிகழ்ச்சியில ஜெகன் மோகன் ரெட்டியின் கையில நீங்க முத்தமிட்டது வைரலாச்சே...”

“2009-ல் ஜெகன் அண்ணாவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில நான் சேரும்போது, ‘எங்கப்பாவை நம்பி வந்த யாரையும் கைவிடமாட்டேன்’னு எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதன்படி, அவரோட தங்கச்சி மாதிரி என்மேல உண்மையான அன்பு வெச்சு, அரசியல்ல எனக்கு ரொம்பவே சப்போர்ட்டிவ்வா இருந்திருக்கார். 13 மாவட்டங்கள் இருந்த ஆந்திராவுல, சமீபத்துலதான் கூடுதலா 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுச்சு. என் நகரித் தொகுதி அமைஞ்சிருக்கிற திருப்பதி மாவட்டத்தின் சார்பா நான் அமைச்சராகியிருக்கேன். ‘அமைச்சரவையில எல்லோருக்கும் சமவாய்ப்பு கொடுக்கணும்ங்கிற நிர்பந்தங்களையெல்லாம் தாண்டி, எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றிண்ணா’ன்னு சொல்லி அவருக்கு அன்பு முத்தம் கொடுத்தேன்.”

“ஜெயலலிதாவுக்கு நான் மகள் மாதிரி!”

“உங்களோட அரசியல் எதிரியான சந்திரபாபு நாயுடுவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சா, அவர்கிட்ட என்ன சொல்லுவீங்க?”

“என்.டி.ராம ராவ் சார்கிட்டேருந்து மோசம் பண்ணி அவர் கட்சியை சந்திரபாபு நாயுடு அபகரிச்சார். அதுக்கப்புறமா, 1999-ல் முதன்முறையா சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டார். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் முழுக்க சுத்தி அவருக்காகப் பிரசாரம் செஞ்சேன். அந்தத் தேர்தல்ல அவர் கட்சிக்குக் கிடைச்ச வெற்றியில என் பங்களிப்பு முக்கியமானது. ஆனா, தன் கட்சிக்காரங்க சிலரின் பேச்சைக் கேட்டு, சரியான தொகுதி கொடுக்காம, தேர்தல் செலவுக்கான நிதியுதவி செய்யாம, என் வெற்றிக்கு ஆதரவா எதுவுமே செய்யாம மறைமுகமா என்னைப் பழிவாங்கினார் அவர். அந்தச் சூழல்லதான், அப்போதைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி சார் என்னைக் கூப்பிட்டார். ‘உங்கள மாதிரி டைனமிக் பேச்சாளர் காங்கிரஸ் கட்சிக்கு வேணும்’னு சொன்னார். அவரை நான் சந்திச்ச சில தினங்கள்லயே ஹெலிகாப்டர் விபத்துல அவர் இறந்துட்டார். ‘ராசியில்லாத ரோஜாவைக் கட்சியில சேர்க்க நினைச்சதாலதான் ராஜசேகர ரெட்டிக்கு விபத்து ஏற்பட்டுச்சு’ன்னு தரம் தாழ்ந்த விமர்சனத்தை முன்வெச்ச சந்திரபாபு நாயுடு, ஜெகன் சார் கட்சியிலேருந்து என்னைப் பிரிக்க நினைச்சார். அவரை இப்போ சந்திச்சா ‘கட்சிக்கு விசுவாசமா இருந்த என்னை மாதிரியான ஆட்களை இழந்ததைத் தப்புன்னு இப்பவாச்சும் ஃபீல் பண்ணுங்க. திறமையான ஆட்களைப் பழிவாங்காம, மத்தவங்களோட உழைப்புக்கு உரிய மதிப்பு கொடுங்க’ன்னு அவர்கிட்ட சொல்லுவேன்.”

“வேளாண் சட்டம், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல விஷயங்களில் எதிர்வினையாற்றாம மத்திய அரசுடன் மென்மையான அணுகுமுறையையே கடைப்பிடிப்பது, மூணு தலைநகர் திட்டத்தில் பின்வாங்கியது, மாநிலத்தின் கடன் சுமையை அதிகரிச்சதுன்னு ஜெகன்மீது சந்திரபாபு நாயுடு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறாரே...”

“கடன் சுமை பத்திப் பேச சந்திரபாபு நாயுடுவுக்குத் தகுதியே கிடையாது. சரியா திட்டமிடாம அமராவதியில தலைநகர் அமைக்கிறேன்னு விவசாயிகளோட நிலங்களை அபகரிச்சு, தன்னைச் சார்ந்தவங்களோட ரியல் எஸ்டேட் தொழிலுக்கு உதவுற வகையிலதான் அவர் செயல்பட்டார். அவர் வாங்கின கடனுக்கு நாங்க வட்டி கட்டிக்கிட்டிருக்கோம். முன்பு ஹைதராபாத்ல நடந்ததுபோலவே, இப்போ அமராவதியிலயும் மொத்த வளர்ச்சியும் குவிஞ்சா, ராயலசீமா மாதிரியான வளர்ச்சியடையாத பகுதியிலிருக்கும் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கு. அதனாலதான் எல்லாப் பகுதிகளுக்கும் ஒருங்கிணைந்த வளர்ச்சி கிடைக்கணும்னு நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறைன்னு மூணு இடங்கள்ல தலைநகர் அமைக்க முடிவெடுத்தார் ஜெகன் அண்ணா. ஆனா, சந்திரபாயு நாயுடு செஞ்ச தவறுகளால, நீதிமன்றத் தலையீடு ஏற்பட்டு அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியலை. மத்திய அரசின் கொள்கை முடிவுகள் எப்படி இருந்தாலும், அதனால மாநில மக்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாத வகையிலதான் ஜெகன் அண்ணா பார்த்துக்கிறார்.”

“ஜெயலலிதாவுக்கு நான் மகள் மாதிரி!”

“ஜெயலலிதாவின் விசுவாசியான நீங்க, சமீபத்துல தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்துகிட்டுப் பேசினீங்க. இதை எப்படி எடுத்துக்கலாம்?”

“ஜெயலலிதா அம்மா, தன் மகள் மாதிரி என்மேல அன்பு காட்டினாங்க. அவங்க கட்சியில என்னைச் சேரச்சொல்லி அழைப்பு விடுத்தாங்க. அதன்படி நான் அ.தி.மு.க-வுல சேர்ந்திருந்தா, நிச்சயமா என்னைப் பெரிய உயரத்துக்கு அவங்க கொண்டுபோயிருப்பாங்க. அவங்கமேல அளவுகடந்த மதிப்பு வெச்சிருந்த நான், அவரின் தயவைப் பயன்படுத்தி எனக்காக எந்த ஒரு காரியத்தையும் செய்துக்கிட்டதில்லை. இந்த நிலையில, என் தொகுதி நெசவாளர்களின் நலனுக்காகத்தான் ஸ்டாலின் சாரைச் சந்திச்சுப் பேசினேன். அந்தச் சந்திப்பு முடிஞ்சு வீடு திரும்புறத்துக்குள்ள நான் எதிர்பார்த்த அரசாணை வந்து சேர்ந்திடுச்சு. அந்தச் சந்திப்புக்காக நேரம் ஒதுக்கி, என் கோரிக்கைக்கு உடனடியா தீர்வு கண்டதுக்கு நன்றிக்கடனாதான், ஸ்டாலின் சாரின் பிறந்தநாள் கூட்டத்துல கலந்துகிட்டுப் பேசினேன். அதுலகூட நான் ஜெயலலிதா அம்மாவின் ரசிகைன்னுதான் சொல்லியிருந்தேன். எவ்வளவோ எதிர்ப்புகளைத் தாண்டி, கட்சியைத் தன்வசப்படுத்தி எஞ்சிய ஆட்சிக்காலத்தை நிர்வகித்தார் எடப்பாடி பழனிசாமி சார். அப்போ அவரையும் பாராட்டிப் பேசினேன். ஸ்டாலின் சார் தலைமையில தமிழ்நாட்டுல நல்லபடியா ஆட்சி நடக்குது. அதனால, ஸ்டாலின் சாரின் ஆட்சி நிர்வாகத்தையும் பாராட்டுறேன்.”

“மீண்டும் சினிமாவில் நடிப்பீங்களா?”

“அமைச்சரா ஆகியிருக்கிறதால சினிமா, சின்னத்திரையில வேலை செய்யப்போறதில்லை. எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறை சார்ந்த வேலைகள்ல மட்டுமே கவனம் செலுத்தப்போறேன்.”