Published:Updated:

`உங்களைப் பந்தலுக்குள் அனுமதிக்க முடியாது!’ - ஆந்திராவில் தடுத்து நிறுத்தப்பட்ட பட்டியலின எம்.எல்.ஏ

கலிலுல்லா.ச

தலிகொண்டா தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமட்டுமில்லாமல் அவர் மருத்துவராகவும் இருந்துவருகிறார்.

 Vundavalli Sridevi
Vundavalli Sridevi

`பட்டியலின சமூகம் என்பதால் அவர் சமைக்கக்கூடாது’ என்று கூறி படிக்கும் மாணவர்களே மறுப்பு தெரிவிக்கும் காலகட்டத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது கீழ்நிலை பணியாளர்களுக்கு மட்டுமல்ல, அதிகாரமிக்க பதவிகளில் இருப்பவர்களும், இந்த சாதிய பாகுபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். சாதியபாகுபாடுகள் நம்மைச்சுற்றி நாளுக்கு நாள் அரங்கேறிவருகின்றன. அந்தவகையில், ஆந்திராவில் பெண் எம்.எல்.ஏ ஒருவர் பட்டியலின சமூகம் என்பதால் விநாயகர் சதுர்த்தி பந்தலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Vundavalli Sridevi
Vundavalli Sridevi

ஆந்திராவின், ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் எம்.எல்.ஏ உண்டவல்லி ஸ்ரீதேவி. இவர் அக்கட்சி சார்பில் நடந்தமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தலிகொண்டா தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமட்டுமில்லாமல் அவர் மருத்துவராகவும் இருந்துவருகிறார். இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான, ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் நினைவுதின நிகழ்ச்சி குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்தாவரம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி கலந்துகொண்டார்.

Vikatan

தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தார். அவர் அங்கு வரும்போது, ஏற்கெனவே அப்பகுதியில் திரண்டிருந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், `எம்.எல்.ஏ ஸ்ரீதேவி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள பந்தலுக்குள் செல்லக் கூடாது’ என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

 Vundavalli Sridevi
Vundavalli Sridevi

`மீறி சென்றால் மாசு ஏற்பட்டுவிடும்’ என்று கூறி ஆரவாரம் செய்தவர்களை, காவல்துறையினர் கட்டுப்படுத்தினர். இதனால் எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக ஸ்ரீதேவி செய்தியாளர்களிடம், ``முதல்முறையாக நான் சாதிய பாகுபாடுகளை எதிர்கொண்டேன். இது தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் இப்படியொரு செயலில் ஈடுபட்டுள்ளனர்” என்று குற்றம்சாட்டினார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.