``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.
ரக்கீன் கிராமத்தின் வயற்கரைக் கிராமத்தை பர்மிய பொலீஸார் முழுவதுமாக முற்றுகையிட்டிருந்தனர். சாம்பல் - கறுப்பு வண்ணச் சீருடைகளால் வயல் வரம்புகள் நிறைந்திருநதன. நீண்ட வறண்ட ஒற்றையடிப் பாதை வழியாக உள்ளே ஒளிந்திருந்த முஸ்லிம் வட்டாரத்த்துக்குள் எண்ணுக்கணக்கற்ற கரும்பச்சை வாகனங்கள் நுழைந்திருந்தன.
அந்த வட்டாரத்தின் அத்தனை வீடுகளிலிருந்தவர்களும் தென்னஞ்சோலையொன்றுக்குள் இழுத்துச் சென்று, வரிசையாக இருத்திவைக்கப்பட்டிருந்தனர். என்ன நடைபெறகிறது என்று புரியாத பெண்கள் சிலர் குழறி அழுதார்கள். ஆண்கள் சிலர், கடவுளின் வீட்டுக்கு இழுத்துவரப்பட்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கழுத்தோடு வெட்டிக் குத்தப்பட்டிருந்த தலைகளிலிருந்து வழிந்த ரத்தம், அலவாங்கில் வடிந்து தரையில் இறுகிப்போயிருந்தது. சுற்றிலும் மொய்த்துக்கொண்டிருந்த இலையான்களிடமிருந்து தப்புவதற்கு, அங்கு வந்திருந்த சீருடைக்காரர்கள் முகத்தை மூடியபடி நின்றனர்.
மரண விசாரணை அதிகாரி ஒருவர், உதவியாளர்களோடு வந்து குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார். கடவுளின் வீட்டுக்குள்ளே சென்று, ஏதாவது தடயம் உள்ளதா என்று பொலீஸார் தேடிக்கொண்டிருந்தார்கள். இன்னொரு சீருடைக்காரர் முகக்கசவம் அணிந்தபடி ஓர் இடம் விடாமல் சகலத்தையும் புகைப்படமெடுத்துக்கொண்டிருந்தார்.
தேசப்பற்றுமிக்க பௌத்த இயக்கத்தின் நான்கு தலைகளிலிருந்தும் வழிந்த ரத்தம், வெயிலில் நன்றாகக் காய்ந்துவிட்டதைவைத்து, இந்தக் கொலைகள் எப்போது இடம்பெற்றிருக்கும் என்று மருத்துவர் கணக்கு போட்டுக்கொண்டிருந்தார்.

கடவுளின் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட அயலவர்கள் நால்வரை, அந்த வளவின் பின்பக்கமாகக் கொண்டுபோய் நிலத்தில் போட்டு, விசாரிக்கத் தொடங்கியிருந்தார்கள் பொலீஸார். நிலத்தில் கிடந்தவர்களுடன் துப்பாக்கிப் பிடிகளும் சப்பாத்துக்களும் அதிகம் பேசிக்கொண்டிருக்க, எதுவுமே தெரியாத அவர்கள் சாக்குரலெடுத்துக் குழறியது, அந்தப் பண்ணை நிலம் முழுவதும் எதிரொலித்தது.
வரும்படிக்காக வாரிக்கொடுத்த தென்னங்காணியிடமிருந்து இரவோடு இரவாகப் பிரிந்த கடவுள், அன்றைக்கே தேங்காய் லொறியொன்றில் ஏறி பங்களாதேஸுக்குத் தப்பியோடினான்;.
குடும்பத்தை இழந்த துயரினால் உறைந்திருந்த உடம்புக்குள், மூளை மாத்திரம் மிகத் தீவிரமாக இயங்கி, நான்கு கொலைகளை செய்து முடித்ததை கடவுளாலேயே நம்ப முடியவில்லை.
தன்னில் எஞ்சியிருந்த காலக் கழிவுகள் அனைத்தையும் கழற்றிவிட்டு, இந்தோனேசியாவுக்குப் பறந்த கடவுள், அங்கிருந்த ஆஸ்திரேலியா வந்து சேர்ந்தான்.
கடவுள் நாட்டைவிட்டு வெளியேறிய பின்னர், அவன் பர்மிய அரசினால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். நான்கு பேர் கொலையில் தேடப்படுகின்ற முக்கிய நபராக, அவன் தொடர்பில் வெளியான பத்திரிகைச் செய்திகள், வழக்கம்போல ஆஸ்திரேலியப் புலனாய்வுத்துறையினரின் கைகளில் கிடைத்தபோது, கடவுளின் விதி கசங்கியது.
ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக வந்த காரணத்தைக் கேட்டபோது, கடவுள் ஒரு கதையைச் சொல்ல, ஆஸ்திரேலியப் புலனாய்வுத்துறையினர் பர்மிய பத்திரிகையை நீட்ட, சகலதும் சாம்பாராகிப்போனது.
விளைவாக, கடவுளும் நீதனைப்போல நீண்டகால அகதியாக முத்திரை குத்தப்பட்டான். அதாவது, ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கக்கூடியவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டான்.
ஏனைய அகதிளைப்போல, கடவுளுக்கும் மெல்போர்னிலுள்ள புலம்பெயர்ந்த பர்மிய இஸ்லாமிய மக்கள் முகாமுக்கு வந்து உதவிபுரிவது வழக்கம். நல்ல நாள், பெரு நாளென்றால், வெளியிலிருந்து உணவு கொண்டுவந்து தருவார்கள். அடிக்கடி வந்து பழகிய சில விருந்தினர்கள், அவ்வப்போது மாலை வேளைகளில் விருந்தினர் மண்டபத்துக்கு வந்திருந்து சில மணி நேரம் பேசிவிட்டுப்போவார்கள்.
எந்நேரமும் முகாமில் சக அகதிகளைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு, விருந்தினர்கள் வந்து கொஞ்ச நேரமாவது பேசிவிட்டுப்போவது அருமருந்து.
இவ்வாறு விருந்தினர்களாக வருபவர்கள், முகாம் வாசலில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் தாங்கள் சந்திக்க வருகின்ற அகதியின் பெயரையும், தங்களது விவரங்களையும் முன்பதிவு செய்ய வேண்டும். பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், ரேடியோவில் குறிப்பிட்ட முகாம் மண்டபத்துக்குப் பொறுப்பாக உள்ள உத்தியோகத்தர்களுக்குத் தகவல் கொடுப்பார்கள். அந்த உத்தியோகத்தர், குறிப்பிட்ட அகதியை அழைத்து, அவருக்கு விருந்தினர் வந்திருக்கின்ற தகவலை அறிவிக்க, அவர் விருந்தினர் மண்டபத்துக்கு வந்து தனது விருந்தினரைச் சந்திக்கலாம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇவ்வாறு விருந்தினராக வருபவர்கள், உள்ளே அகதிகளைப் பார்க்கச் செல்லும்போது தொலைபேசி கொண்டு போக முடியாது. குறிப்பிட்ட உணவுப்பொருள்களோ, சிகரெட், மது போன்ற வஸ்துக்களோ எடுத்துச்செல்ல முடியாது. கடுமையான சோதனையின் பின்னரே, விருந்தினர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர். சகல பாதுகாப்புச் சோதனைகளுக்குள்ளேயும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்குக் கம்பி நீட்டிவிட்டு, சில விருந்தினர்கள் உள்ளே சட்ட விரோதமாகப் பொருள்களை எடுத்துச்செல்வது அவ்வப்போது நடக்கும். அப்படியான விருந்தினர்களை குடிவரவு அமைச்சு அலுவலகம் முகாமுக்கு வர முடியாதவர்கள் பட்டியில் சேர்த்து, தடைவிதிக்கும்.

முகாம் அகதிகளின் பெயர்களை அநேகமாக சகல உத்தியோகத்தர்களும் ஞாபகம் வைத்திருப்பர். இல்லாவிட்டாலும், நேரில் சென்று பேசுவதற்கோ அல்லது உத்தரவுகளை வழங்குவதற்கோ பெயர் என்பது பெரும்பாலும் முகாமில் தேவைப்படுவதில்லை.
ஆனால்,
ஆங்கில எழுத்தொன்றில் ஆரம்பித்து, மூன்று எண்களுடன் முடிகின்ற இலக்கம் அது. முகாமுக்குள் வருகின்றபோது, அந்த இலக்கத்தை அகதிகளுக்குக் கொடுக்கின்றபோது, அதை அவர்கள் பெரிதுபடுத்துவதில்லை. விரைவில் வெளியேறப்போகும் தங்களுக்கு, அந்த இலக்கம் ஏதோவோர் அடையாள எண் போன்றது என்பதாகவும், முகாமின் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக அதைத் தங்களுக்குத் தருகிறார்கள் என்பதாகவும் அவர்கள் நம்பிவிடுகிறார்கள்.
ஆனால், விடுதலையாகாமல் நீண்ட காலம் முகாமுக்குள் தடுத்துவைக்கப்படுகின்றபோது, முகாமின் பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்துமே அகதிகளுக்கு மிகுந்த எரிச்சலூட்டுவதாக மாறிவிடுகின்றன.
அது இயல்புதான். தங்களால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையிலிருக்கும் உயிரினத்துக்குக் கட்டுப்பாடுகள் என்பது எப்போதும் மீறப்பட வேண்டியதாகவே தோன்றும்.

அதிலும், தங்களை யாராவது இலக்கத்தைவைத்து அழைத்தால், நீண்டகால அகதிகள் எவராக இருந்தாலும், அவர்கள் பெருஞ்சீற்றம் கொள்வர். தங்களது பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும் என்பதில் அவர்கள் இறுக்கமான எதிர்பார்ப்புடையவர்கள். இலக்கத்தைவைத்துத் தங்களை அழைப்பதானது, தங்கள் மீதான மதிப்பிறக்கமாகவே அவர்கள் உணர்கிறார்கள். தங்களைக் குற்றவாளிகள்போல் நடத்துவதாக அவர்கள் உணர்கிறார்கள்.
அன்று அதுதான் நடந்தது.
முகாமுக்குப் புதிததாக வேலைக்கு வந்திருந்த உத்தியோகத்தன் டோனி , கடவுளுக்கு வந்திருந்த விருந்தினருக்காக, கடவுளை அழைப்பதற்கு, அல்பா கம்பவுண்டுக்குச் சென்றிருக்கிறான். அவனது அறையில் கடவுள் இல்லை. ஜிம்மில் போய் தேடியிருக்கிறான், அங்குமில்லை.
துவாயொன்றை இடுப்பில் கட்டிக்கொண்டு, சோப்பு நுரைகள் உடலெங்கு வழிய, வெளியே உதறிக்கொண்டு வந்த கடவுள், டோனி மீது பாய்ந்தான். டோனி சற்று விலக, துவாய் அவிழ்ந்த கடவுள் நிர்வாணமாகத் தரையில் வீழந்தான். டோனி அதிர்ந்துபோய், ரேடியோவை எடுத்து,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
``ரெஸ்போன்ஸ் ரெஸ்போன்ஸ், கோட் பிளாக். அல்பா கம்பவுண்ட்” – என்று குழறினான்.
ஏதிர்பாராத திசையிலிருந்து வந்து தாக்கிய மிருகத்தைக் கண்டு ஓடுவதுபோல டோனி ஓட, துவாயை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, கடவுள் அவனைக் கலைத்தான். கடவுளின் உடல் மிகவும் திடகாத்திரமானது. ஜிம்முக்குத் தினமும் சென்று தசைக்கொத்துகளை இறுக்கமாகப் பேணுபவன்.
அரை நிர்வாணமாக அவன் ஓடிவந்ததை, அங்கு உதவிக்கு ஓடிவந்த உத்தியோகத்தர்கள் கண்டு, அவர்களும் அதிர்ந்துபோனார்கள். ஏனெனில், நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அகதிகள் இலகுவில் யாருடனும் சர்ச்சைக்குப் போவதில்லை.
முகாம் உத்தியோகத்தர்கள் உட்பட சகலருடனும் மிகுந்த மரியாதையோடு பழகுபவர்கள். இந்த முகாம் என்பது தங்களது வீடென்றாகிவிட்டது என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு நடப்பவர்கள்.
அவர்களில் யாராவது மிரண்டுவிட்டால், அது சாது மதம்கொண்ட நிலைதான்.
தன்னை இலக்கத்தில் அழைத்த அந்தக் குரலை கடவுளால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஓடிவந்த கடவுளை உத்தியோகத்தர்கள் இழுத்துப் பிடித்தார்கள். தன்னை அழுத்திப் பிடித்த மூன்று உத்தியோகத்தர்களின் வலுவான பிடியை மீறி, அவன் கெட்ட வார்த்தைகளால் வைதான். அவனது கண்கள் கண்ணீரில் திரண்டுபோயிருந்தன. அவனால் கட்டுப்படுத்த முடியாத அந்தக் கோபத்தை உத்தியோகத்தர்கள் அனைவரும் உணர்ந்து, அது அடங்கும்வரை, அவனைத் தாங்கினார்கள்.
நிலைமையைக் கேள்விப்பட்ட, அன்றைய நாளின் முகாம் பாதுகாப்புப் பொறுப்பாளர் ஜெப்ரி ஓடிவந்தான். கையெடுத்து தொழாத குறையாக, கடவுளிடம் மன்னிப்புக் கோரினான். டோனி புதிதாக வேலைக்கு இணைந்தவன் என்றும், அவனுக்கு முகாம் நடைமுறை தெரியாமல் தவறு செய்துவிட்டான் என்றும் சொல்லி, கடவுளின் கோபத்தைக் கரைக்க முயன்றான்.
கடவுளின் கோபம் தானாகத் தணிவதற்கு சில நிமிடங்களானது.
எல்லா அகதிகளையும்போல அவனுக்கும் தன் வாழ்வு தொடர்பாக எண்ணுக்கணக்கற்ற நியாயங்கள் இருந்தன. தன்னை இந்த முகாமில் வருடக்கணக்கில் தடுத்துவைத்திருப்பது என்பது, தான் செய்த கொலைகளிலும் பார்க்கப் பாரதூரமான குற்றம் என்பது, அவன் தரப்பு வாதம். தன்னை விசாரணை செய்கின்ற சகல அதிகாரிகளிடமும் அதை அவன் திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறான்.
அவனுக்குள் திரளுகின்ற தூய கோபம், எப்போதும் தீயதைச் சிதைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைகொண்டவன் கடவுள்.
எத்தனை வருடங்களானாலும், கடவுள் தன்னைத் தொடர்ந்தும் நம்புகின்றவனாகவே இந்த முகாமில் வாழ்ந்தான். ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த உணர்வை ஜிம்மில் சென்று கூர் செய்துகொள்வான்.
சொல்லப்போனால், நீதனுக்குக் கடவுள் இந்த முகாமில் மிகப்பெரியதொரு கலங்கரை விளக்கு. இருவருக்குமிடையிலான நட்பு இனம்புரியாத விகிதத்திலிருந்தது.
(தொடரும்)