Published:Updated:

`நாங்க என்ன இங்க வெட்டியாக உட்காந்திருக்கோமா?’ - காட்டமான எடப்பாடி பழனிசாமி | சட்டசபை ’காரசாரம்’

சட்டப்பேரவை - எடப்பாடி - துரைமுருகன்

`யாருடைய ஆட்சியில் வேட்டி, சேலை தரமாக இருந்தது?’ என சட்டப்பேரவையில் தி.மு.க - அ.தி.மு.க-வுக்கிடையே காரசார விவாதம் நடந்தது...

Published:Updated:

`நாங்க என்ன இங்க வெட்டியாக உட்காந்திருக்கோமா?’ - காட்டமான எடப்பாடி பழனிசாமி | சட்டசபை ’காரசாரம்’

`யாருடைய ஆட்சியில் வேட்டி, சேலை தரமாக இருந்தது?’ என சட்டப்பேரவையில் தி.மு.க - அ.தி.மு.க-வுக்கிடையே காரசார விவாதம் நடந்தது...

சட்டப்பேரவை - எடப்பாடி - துரைமுருகன்

தமிழக சட்டப்பேரவையில் நேற்று (11.04.2023) ’இளைஞர் நலன் மற்றும் கைத்தறி துறை’க்கான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. அதில் ‘விலையில்லா வேட்டி, சேலை திட்டம்’ குறித்து அ.தி.மு.க - தி.மு.க-வுக்கிடையே பேரவையில் காரசார விவாதம் நடந்தது.

மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, “தரமான நூல் வழங்கப்படாத காரணத்தால் இன்றுவரை வேட்டி, சேலை வழங்கவில்லை” என்னும் குற்றச்சாட்டை மக்கள் சொல்வதாக அ.தி.மு.க உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் காந்தி, ``இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் நிறைய பேட்டி கொடுத்துவிட்டார்கள். அதற்கு நானும் பதிலும் வழங்கியிருக்கிறேன்.

 ராஜன் செல்லப்பா
ராஜன் செல்லப்பா

தொடர்ந்து அ.தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்ட வேட்டி, சேலை தரம் குறித்து விமர்சித்தவர், ``அ.தி.மு.க தவிர வேறு எந்தக் கட்சி கேள்வி கேட்டாலும் அதற்கு நான் பதில் சொல்றேன். 2012-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில்”... எனப் பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அப்போது, துரைமுருகன் எழுந்து ”இப்போ நீங்க எப்படிக் குற்றச்சாட்டு சொல்றீங்களோ. அதுபோல் அமைச்சர் உங்க ஆட்சியில் நடந்ததைச் சொல்றாரு கேளுங்கள்” என்றார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``தொகுதிக்கு போகும்போது மக்கள் கேட்கிறார்கள். கடந்த பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலையை பிப்ரவரி மாதத்துக்குள் தருவதாக அமைச்சர் கூறினார். அதைக் கொடுத்துவிட்டார்களா?’’ என்று கேட்டவர், ``துறை இலாகா அமைச்சருக்கு பதில் சொன்னால் போதும். உங்களுக்கு பதில் சொல்ல முடியாது’’ என துரைமுருகனைச் சாடினார். மேலும் ``எங்கள் ஆட்சிப் பற்றி பேசினால் உங்கள் ஆட்சிக் குறித்து எடுத்து நாங்களும் பேசுவோம்” என்றார்.

கைத்தறித்துறை அமைச்சர்
கைத்தறித்துறை அமைச்சர்

அதற்கு துரைமுருகனோ கூலாக எழுந்து, “எடுப்போம் என சொன்னீங்க... எடுத்துக்கோங்க” என்றார். உடனே அப்பாவு, ``அவை முன்னவர், அமைச்சர் என எல்லா உறுப்பினருக்கும் சொல்றேன். கேள்வி என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். எதிர்க்கட்சியிலிருந்து யாரும் வேட்டி, சேலை தரத்தைப் பற்றி பேசவில்லை. காலதாமதத்தைதான் சொல்கிறார்கள்” என விளக்கினார். அதற்குப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “உங்கள் (அ.தி.மு.க) ஆட்சியிலும் காலதாமதம் இருந்தது என்பதைத்தான் சொன்னார்.வேறு எந்தத் தவறான விதத்திலும் சொல்லவில்லை.  அவர் கூறியதில் உள்நோக்கமில்லை” எனப் பேசி அமர்ந்தார்.

மீண்டும் எழுந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “எந்த வார்த்தையில் உள்நோக்கம் இருந்தது என அனைவருக்கும் தெரியும். பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க-தான். நாங்கள் கேள்வி கேட்போம். எங்களைக் கேள்வி கேட்கக் கூடாது என எப்படிச் சொல்லலாம். அ.தி.மு.க வெட்டியாகவா இங்க சட்டசபையில் உட்காந்திருக்கோம்” என்றார் காட்டமாக... தொடர்ந்து சிறிது நேரம் அமைச்சர் காந்தியின் பேச்சுக்கு அ.தி.மு.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

துரைமுருகன் - எ.வ.வேலு
துரைமுருகன் - எ.வ.வேலு

மானியக் கோரிக்கை மீதான பதிலுரையின்போது பேசிய அமைச்சர் காந்தி, ``பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை தரமாக இல்லை என்னும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இந்த முறை தரமான வேட்டி, சேலை கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஆணையிட்டார். அதன்படி 15 வகையான சேலைகள், ஐந்து வகையான வேட்டிகள் தயார் செய்யப்பட்டன. இதனால், காலதாமதம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால். தி.மு.க-வை குறை சொல்வதற்கு முன்பு உங்களை நீங்களே திரும்பிப் பார்க்க வேண்டும். அ.தி.மு.க ஆட்சியில் 2016 முதல் 2021-ம் ஆண்டுவரை இருந்த வேட்டி, சேலை உற்பத்தி செய்த கைத்தறி நெசவாளர்களுக்கான நிலுவைத்தொகையாக ரூபாய் 49 கோடி 12 லட்சம் இருந்தது. இதையறிந்து ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க, அந்த நிலுவைத்தொகையைச் செலுத்த உத்தரவு போடப்பட்டது’ என்றார். இப்படி, வேட்டி, சேலை விவகாரத்தில் அ.தி.மு.க., தி.மு.க-வுக்கிடையே காரசாரமான விவாதம் நடந்தது.