Published:Updated:

``பாஜக-வின் ஏஜென்ட் அன்னா ஹசாரே!'' - என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்?

அன்னா ஹசாரே

''மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேவைப் புகழ்ந்து பேசுகிறார்கள், காந்தி உருவ பொம்மையைத் துப்பாக்கியால் சுட்டு ரத்தம் வழிந்தோட வைக்கின்றனர்... காந்தியவாதியான அன்னா ஹசாரே இதையெல்லாம் எதிர்த்து வாய் திறக்கவில்லையே... ஏன்?'' என்று கேட்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

``பாஜக-வின் ஏஜென்ட் அன்னா ஹசாரே!'' - என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்?

''மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேவைப் புகழ்ந்து பேசுகிறார்கள், காந்தி உருவ பொம்மையைத் துப்பாக்கியால் சுட்டு ரத்தம் வழிந்தோட வைக்கின்றனர்... காந்தியவாதியான அன்னா ஹசாரே இதையெல்லாம் எதிர்த்து வாய் திறக்கவில்லையே... ஏன்?'' என்று கேட்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Published:Updated:
அன்னா ஹசாரே

பத்து வருடங்களுக்கு முன்பு, ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து அன்றைய காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் பெரும் குடைச்சலை ஏற்படுத்திய அன்னா ஹசாரே, நீண்ட இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் 'உண்ணாவிரத அறிவிப்பு' வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

இந்த முறை அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம், மகாராஷ்டிரா மாநில 'சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்கக் கூடாது' என்ற கோரிக்கையோடு மாநில ஆட்சிப்பொறுப்பில் இருந்துவரும் சிவசேனா - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசை எதிர்த்து நடைபெறப்போகிறது.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

மத்தியில், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்துவந்த '2ஜி ஊழல் குற்றச்சாட்டு'களை எதிர்கொள்ள முடியாமல் காங்கிரஸ் அரசு தவித்தது.

இந்தச் சூழலில்தான் காந்தியவாதியான அன்னா ஹசாரே, 'ஊழல்தான் இந்திய நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு. அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் செய்துவரும் ஊழல்களை ஒழித்துவிட்டாலே இந்தியா வல்லரசு ஆகிவிடும்' என்ற தொனியில் தனது பிரசாரத்தை ஆரம்பித்து மக்கள் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தார்.

அவரின் இந்த ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் தற்போதைய டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலில் ஆரம்பித்து புதுச்சேரி முன்னாள் ஆளுநர் கிரண் பேடி வரையிலாக பல்வேறு வி.ஐ.பி-களும் இடம்பெற்றிருந்தது மக்களிடையே கூடுதல் செல்வாக்கப் பெற்றுத்தந்தது.

இந்த நிலையில்தான், ஊழலை ஒழிக்கும் வலுவான ஆயுதமாக 'லோக் பால்' எனும் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஒட்டுமொத்த மக்கள் கவனத்தையும் ஈர்த்தார் அன்னா ஹசாரே! அவரின் இந்தப் போராட்டம் அரசியல்ரீதியாக காங்கிரஸ் கட்சியின் எதிரணியில் இருந்துவந்த பா.ஜ.க-வுக்குப் பெரும் பலம் சேர்த்தது.

அரவிந்த் கெஜ்ரிவால் - அன்னா ஹசாரே - கிரண் பேடி
அரவிந்த் கெஜ்ரிவால் - அன்னா ஹசாரே - கிரண் பேடி

தொடர்ச்சியாகப் பத்து வருடங்கள் மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்துவந்த காங்கிரஸ் கட்சி, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் அதிருப்தியைத் தாண்டி வெற்றிபெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருந்த சூழலில், அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. அரசியல்ரீதியாக காங்கிரஸ் கட்சிக்கு எதிரணியில் இருந்துவந்த பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு இந்தச் சூழல் பெரும் உத்வேகம் அளித்தது.

இந்த நிலையில், 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க-வினரே எதிர்பாராத வகையில், நாடு முழுக்கப் பெரும் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தனர். பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்றுவிட்ட இந்த ஏழு ஆண்டு காலகட்டத்தில், ஊழல் பற்றிப் பெரிய அளவில் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் அமைதியாகிவிட்ட அன்னா ஹசாரே, இப்போதுதான் 'ஒயின் விற்பனை'க்கு எதிராக மாநில அரசை எதிர்த்து முழக்கமிட ஆரம்பித்திருக்கிறார்.

2014-ம் ஆண்டுக்குப் பிறகான பா.ஜ.க ஆட்சியில், ரஃபேல் ஊழலில் ஆரம்பித்து மதப் பிரிவினைவாத வன்முறைச் சம்பவங்கள் வரையிலாக நாடுமுழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் பிரச்னைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொந்தளித்துவருகின்றன. இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையையே சிதைக்கும் வகையிலாக பா.ஜ.க அரசு அரங்கேற்றிவரும் அதிரடித் திருத்தச் சட்டங்கள், கொரோனா காலகட்டத்தை அலட்சியமாகக் கையாண்டவிதத்தில் ஏற்பட்ட உயிர்ப்பலிகள், பண மதிப்பிழப்பு உள்ளிட்ட திறனற்ற பொருளாதார நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவு என பா.ஜ.க அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பட்டியலிடும் குற்றச்சாட்டுகள் நீண்டுகொண்டே செல்கின்றன.

ஹிஜாப் சர்ச்சை
ஹிஜாப் சர்ச்சை

அண்மையில், கர்நாடகா மாநிலத்தில் மத வெறியாளர்கள் நடத்திவரும் வன்முறைப் போராட்டங்கள் என நாடு தகித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மராட்டிய மாநில அரசு சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பனை செய்ய முயல்வதைக் கண்டித்து அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ப்ரியனிடம் கேட்டபோது, ''அன்னா ஹசாரேவுக்கு வயதாகிவிட்டது... எனவே, செலக்டிவ் அம்னீசியா எனப்படும் மறதிநோய் அவரை ஆட்படுத்திவருகிறது. கடந்த முறை அவர் ஊழலுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை பா.ஜ.க., தங்களது அரசியல் நுழைவுக்குப் பயன்படுத்திக்கொண்டது. அந்த வகையில், அன்னா ஹசாரேவின் இயக்கம் பா.ஜ.க-வின் அரசியலுக்கு மறைமுகமாக உதவி செய்திருக்கிறது.

உண்மையிலேயே ஊழலை ஒழிப்பதில் அன்னா ஹசாரேவுக்கு ஈடுபாடு இருந்தால், பா.ஜ.க ஆட்சியில் பெரிதாகப் பேசப்பட்ட ரஃபேல் ஊழல் வழக்கின்போது ஏன் அவர் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை? இப்போதும்கூட ரஃபேல் விற்பனை குறித்த விசாரணை ஃபிரான்ஸில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதே..!

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை வஞ்சிக்கின்றன எனச் சொல்லி ஒன்றரை வருடங்களாக விவசாயிகள் அறவழிப் போராட்டம் நடத்தினார்கள். போராட்டக் களத்திலேயே நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்துபோனார்கள். போராட்டத்துக்கு ஆதரவாகவோ, பா.ஜ.க அரசைக் கண்டித்தோ அன்னா ஹசாரே ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையே!

ப்ரியன்
ப்ரியன்

குஜராத்தில் கள்ளச் சாராயம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாத அன்னா ஹசாரே, மகராஷ்டிராவில் ஒயின் விற்பனையைத் தடுக்கப்போகிறாரா? இந்த நாடகத்தை யார் நம்பப் போகிறார்கள்?

கர்நாடகாவில், மதக் கலவரம் ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. அதெல்லாம் அன்னா ஹசாரேவின் கண்களுக்குத் தெரியவில்லையா?

ஹரித்துவாரில் சாமியார்கள் மத வெறுப்புப் பேச்சு பேசினார்கள். காஷ்மீரில் கோயிலுக்குள்ளேயே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றார்கள், ஹத்ராஸில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றனர்... அப்போதெல்லாம் எங்கே போனார் அன்னா ஹசாரே?

மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேவைப் புகழ்ந்து பேசுகிறார்கள், கோட்சேவின் பெயரில் விருது கொடுத்துவருகிறார்கள், இன்னும்கூட தீராத வன்மத்தோடு காந்தி உருவ பொம்மையைத் துப்பாக்கியால் சுட்டு, ரத்தம் வழிந்தோட வைக்கின்றனர்... காந்தியவாதியான அன்னா ஹசாரே இதையெல்லாம் எதிர்த்து வாய் திறக்கவில்லையே... ஏன்?

ஆக, பா.ஜ.க ஆட்சிக்கு வந்துவிட்ட பிறகு, செலக்டிவான விஷயங்களுக்கு மட்டுமே குரல் கொடுப்பேன் என்றால், பா.ஜ.க-வின் ஸ்லீப்பர் செல்லாகவும் அன்னா ஹசாரே செயல்பட்டுவருகிறார் என்றுதான் அர்த்தம்'' என்றார் கொதிப்பாக.

காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுடும் இந்து மகா சபை நிர்வாகி
காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுடும் இந்து மகா சபை நிர்வாகி

அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன் ''அன்னா ஹசாரேவை பா.ஜ.க-வின் ஏஜென்ட்டாகத்தான் பார்க்க முடிகிறது. ஊழலுக்கு எதிராக அத்தனை வீரியமாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியவர், பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு எந்தவித செயல்பாடும் இல்லாமல் முடங்கிவிட்டாரே... அப்படியென்றால், நாட்டில் ஊழல் ஒழிந்துவிட்டதா?

ஊழல் ஒழிப்பு இயக்கம் என ஆரம்பித்து அவர் செயல்பட்டதே, பா.ஜ.க-வை மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் கொண்டுவருவதற்கான ஒரு முயற்சிதான் என்பது இப்போது மக்களுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. எனவே, 'ஒயின் விற்கக் கூடாது என்று உண்ணாவிரத இருக்கப்போகிறேன்' என்றெல்லாம் அவர் சொல்லிவருவது மக்களிடம் எடுபடாது. அவருடைய நம்பகத்தன்மை, மரியாதையை அவரே கெடுத்துக்கொண்டுவிட்டார். எனவே, இன்றைய அரசியல் சூழலில், பா.ஜ.க-வின் ஏஜென்ட்டாக மட்டுமேதான் அன்னா ஹசாரே பார்க்கப்படுகிறார்!'' என்றார் அழுத்தமாக.