Published:Updated:

வேளாண் சட்டங்கள்: `சரியான தீர்வு காணப்படவில்லை!’ - அறிவித்த போராட்டத்தை திரும்ப பெற்ற அன்னா ஹசாரே

அன்னா ஹசாரே
அன்னா ஹசாரே

ஊழலுக்கு எதிராகப் போராடிவந்த அன்னா ஹசாரே, மீண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துவிட்டு ஒரே சில மணி நேரத்தில் அதனை திரும்ப பெற்றுக்கொண்டார்.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருந்தபோது சமுக ஆர்வலர் அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ஊழலுக்கு எதிராக அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்தினர். டெல்லியில் அன்னா ஹசாரே நடத்திவந்த ஊழலுக்கு எதிரான போராட்டம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ஹசாரே எந்தவிதப் போராட்டமும் நடத்தாமல் தனது சொந்த கிராமத்தில் வாழ்ந்துவந்தார்.

முந்தைய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஹசாரே
முந்தைய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஹசாரே

முன்னதாக, அவர் அடிக்கடி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துக்கொண்டிருந்தார். ஆனால் எந்த போராட்டமும் அவர் அறிவித்ததை போல் நடைபெறவில்லை. தற்போது விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அது குறித்து கருத்து தெரிவிக்காத அன்னா ஹசாரே, தற்போது திடீரென உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அன்னா ஹசாரே நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ``விவசாயிகளின் கோரிக்கைகாக கடந்த நான்கு ஆண்டுகளாகப் போராடிவருகிறேன்.

ஆனாலும் மத்திய அரசு விவசாயிகள் பிரச்னையில் சரியான முடிவு எடுப்பதாகத் தெரியவில்லை. விவசாயிகள் நலனில் அரசு அக்கறை காட்டவில்லை. எனவே, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30-ம் தேதியிலிருந்து எனது சொந்த கிராமத்தில் காலவரையற்ற உண்ணா விரதப்போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறேன். விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துவருகிறேன். இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களில் பிரதமர் மற்றும் வேளாண் அமைச்சருக்கு ஐந்து முறை கடிதமும் எழுதியிருக்கிறேன். அரசுப் பிரதிநிதிகள் இந்த விவகாரத்தில் விவாதித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், சரியான தீர்வு காணப்படவில்லை. ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. வன்முறையற்ற முறையில் போராட்டம் நடத்துவது அவசியம்.

அன்னா ஹசாரே
அன்னா ஹசாரே

எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தினால் விவசாயிகலின் தற்கொலை நிற்கும். காய்கறிகள், பழங்கள், பால் போன்றவற்றுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். போராட்டத்தை அறிவித்த சில மணி நேரத்தில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் அன்னா ஹசாரேயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது வேளாண் துறை இணையமைச்சர் கைலாஷ் சவுத்ரியும் உடனிருந்தார். இச்சந்திப்பை தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதாக ஹசாரே அறிவித்தார். எங்களது சில கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாகவும், விவசாயிகளின் வாழ்க்கை தரம் மேம்பட தனிக்கமிட்டி அமைப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே போராட்டம் விலக்கிக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு