Published:Updated:

``திமுக விஷமத்தனமான பிரசாரத்தை நிறுத்த வேண்டும்; அதிமுக தலைமையில் மெகா கூட்டணி" - அண்ணாமலை

ஸ்டாலின் - அண்ணாமலை

``இந்த இட ஒதுக்கீடு திட்டத்தில் மத்திய அரசு வெவ்வேறு காலகட்டங்களில் யார் யாருக்கு என்னென்ன இட ஒதுக்கீடு வழங்கியதோ அதில் எதுவும் பாதிக்காது." - அண்ணாமலை

``திமுக விஷமத்தனமான பிரசாரத்தை நிறுத்த வேண்டும்; அதிமுக தலைமையில் மெகா கூட்டணி" - அண்ணாமலை

``இந்த இட ஒதுக்கீடு திட்டத்தில் மத்திய அரசு வெவ்வேறு காலகட்டங்களில் யார் யாருக்கு என்னென்ன இட ஒதுக்கீடு வழங்கியதோ அதில் எதுவும் பாதிக்காது." - அண்ணாமலை

Published:Updated:
ஸ்டாலின் - அண்ணாமலை

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைக் கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், இன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

10% இட ஒதுக்கீடு
10% இட ஒதுக்கீடு

இந்த நிலையில், சென்னை தியாகராயர் நகரில் ஒரு புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, "பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான இட ஒதுக்கீடு வந்தால், இட ஒதுக்கீடு உள்ள மற்ற எல்லோருக்கும் பாதிப்பு எனப் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த இட ஒதுக்கீடு திட்டத்தில் மத்திய அரசு வெவ்வேறு காலகட்டங்களில் யார் யாருக்கு என்னென்ன இட ஒதுக்கீடு வழங்கியதோ அதில் எதுவும் பாதிக்காது, எதுவும் பறி போகாது.

அதேபோல பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், மலைவாழ் பழங்குடியின மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் உள்ஒதுக்கீட்டிலும் எந்த மாற்றமும் இருக்காது. அது தனி. ஆனாலும்கூட இதை எதிர்த்து தி.மு.க தொடர்ந்து விஷமத்தனமான பிரசாரத்தைக் கையில் எடுத்தது. அதற்காக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதில் அவர்களுடைய கருத்துகளையும் விவாதித்தது. இதையெல்லாம் உச்ச நீதிமன்றம் கேட்டதற்குப் பின்னால்தான் இந்தச் சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு எந்த மதமாக, சாதியாக இருந்தாலும், பொருளாதார அடிப்படையில் சிரமங்களில் இருக்கும் சில நபர்களுக்குப் பலன் அளிக்கும். அதற்காகத்தான் மத்திய அரசு கொண்டுவந்த இந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது. இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு பெறுவதற்கான சில நிபந்தனைகளையும் மத்திய அரசு விதித்திருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கக்கூடிய பல சமூகத்தைச் சார்ந்தவர்கள் பயன்பெறுவார்கள்.

10 சதவிகிதம் என்பது இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பார்த்தால் மிகக் குறைவான பகுதிதான். ஆனாலும், அது அவர்களுக்குப் பெரிய ஆறுதலாக இருக்கும் என பா.ஜ.க நம்புகிறது. அதனால், தி.மு.க விஷமத்தனமான தனது பிரசாரத்தை உடனடியாக நிறுத்தி, தமிழகத்தில் இந்தச் சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

`மெகா கூட்டணி அமைக்கவிருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே?’ என்கிற கேள்விக்கு, ``தமிழகத்தில் தேசிய ஜனநாயக  கூட்டணியில் அதிமுக-தான் பெரிய கட்சி, எனவே 2024 ம் ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையில்  மெகா கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்தில் தவறில்லை. தேசிய ஐனநாயகக்  கூட்டணியில் எந்தக் குழப்பமும் கிடையாது. அதிமுக , பாஜக-வினர் ஒரே கூட்டணியில்தான் இருக்கிறோம். குறிப்பிட்ட தொகுதிகளைக் குறிவைத்து இல்லாமல், பாஜக-வினர் அனைத்துத் தொகுதிகளிலும் வேலை செய்கிறோம். பத்து ஆண்டுக்கு ஒரு முறை தொகுதியின் தன்மை மாறும். எனவே, அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வேலை செய்து வருகிறது” என்றவரிடம்,

“தமிழக ஆளுநரைத் திரும்ப பெற வேண்டும் என்று திமுக கடிதம் எழுதியிருக்கிறார்களே?” என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது.

“ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற திமுக-வின் கருத்து அபத்தமானது, கீழ்த்தரமானது. திமுக கடிதம் எழுதிவிட்டு எல்லா தமிழக எம்.பி-க்களும் தங்களுக்கு அடிமை எனக் காட்டியுள்ளனர். தமிழகத்துக்கு விரோதமாக ஆளுநர் இருப்பதாகக் கூறும்  திமுக ஆதாரபூர்வமாக குற்றம்சாட்ட வேண்டும். ஆளுநருக்கு எதிரான மனநிலையில் இருந்து திமுக வெளிவர வேண்டும்” என்றார்.

அண்ணாமலை
அண்ணாமலை

`விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு எதிர்ப்பாக ஒரு லட்சம் மனுஸ்மிருதி வழங்கி இருக்கிறாரே...?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “அண்ணன் திருமாவளவன், வேலை இல்லாமல் மனுஸ்மிருதியை பிரதி எடுத்து வழங்கிவருகிறார். ஆர்.எஸ்.எஸ் குறித்து அம்பேத்கர் கருத்தை திருமாவளவன் படிக்க வேண்டும். திருமாவளவன் பிரதி எடுத்துக் கொடுக்கும் மனுஸ்மிருதியின் மொழிபெயர்ப்பு தவறானது. ஏதோ மதமாற்றத்துக்காக கிறிஸ்தவப் பாதரியார்கள் செய்த அந்த மொழிபெயர்ப்பைச் செலவு செய்து பரப்புவதற்கு பதிலாக அவர்களது கட்சிக் கொள்கையை துண்டுப்பிரசுரம் மூலம் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.