Published:Updated:

கோவை கார் வெடிப்பு விவகாரம்: அண்ணாமலை Vs திமுக, தமிழக காவல்துறை..!

ஸ்டாலின் - அண்ணாமலை

“1998-ம் ஆண்டு நடந்த கோவை குண்டுவெடிப்புக்குக் காரணம் தமிழக உளவுத்துறையின் மெத்தனப் போக்கே.” - அண்ணாமலை

கோவை கார் வெடிப்பு விவகாரம்: அண்ணாமலை Vs திமுக, தமிழக காவல்துறை..!

“1998-ம் ஆண்டு நடந்த கோவை குண்டுவெடிப்புக்குக் காரணம் தமிழக உளவுத்துறையின் மெத்தனப் போக்கே.” - அண்ணாமலை

Published:Updated:
ஸ்டாலின் - அண்ணாமலை

கோவை கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. பொதுவாக, இது போன்ற நிகழ்வுகளுக்குப் பிறகு காவல்துறையிடமிருந்து விசாரணைகள் பற்றிய அறிக்கைகள்தான் எதிர்பார்க்கப்படும். ஆனால், இந்த சம்பவத்துக்குப் பிறகு பா.ஜ.க தரப்பில் பல்வேறு யூகங்களின் அடிப்படையில் கேள்விகளையும், ஆளும் திமுக அரசின் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருவதோடு, காவல்துறை விசாரணையின் தன்மையையும் விமர்சனத்துக்குள்ளாக்கிவருகிறது. இதனால் விசாரணை அறிக்கைகள் தாண்டி, இரு கட்சிகளின் பேச்சுகள், பேட்டிகள், அறிக்கைகள் எனப் பரபரப்பாகியிருக்கிறது தமிழ்நாடு.

அந்த வகையில் இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் தொடர் குற்றச்சாட்டுகள், கேள்விகள் மக்கள் மத்தியில் பேசுபொருளாக ஆவதை உணர்ந்த காவல்துறை தலைமை ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், “பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, காவல்துறைமீது தொடர்ந்து அவதூறு பரப்பிவருகிறார். புலன் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே, அதுவும் வெடித்துச் சிதறிய சிலிண்டர் மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருள்கள் என்னென்ன என்பதை ஆய்வு செய்வதற்கு முன்பே அது என்ன என்று பல கருத்துகளைக் கூறி புலன் விசாரணையை திசைதிருப்ப முயற்சி செய்கிறார். இந்த வழக்கை தாமதமாக என்.ஐ.ஏ-வுக்கு அனுப்பியதாகக் கூறுகிறார். இது போன்ற நிகழ்வுகள் நடந்தவுடன் வழக்கு பதிவுசெய்வதும், விசாரணை நடத்துவதும் உள்ளூர் காவல் துறைதான். எல்லா மாநிலங்களிலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. இதுதான் சட்டம். விசாரணையில் பயங்கரவாத தடுப்பு சட்டப்பிரிவு (UAPA) சேர்க்கப்பட்டலோ அல்லது தேசிய புலனாய்வு முகமை சட்டம் 2008-ல் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலிலுள்ள சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டாலோ, தேசிய புலனாய்வு முகமை சட்டப் பிரிவு 6-ன் படி வழக்கு பதிவுசெய்யப்பட்ட காவல் நிலைய அதிகாரி, மாநில அரசாங்கத்துக்கு உடனடியாக ஓர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையைப் பெற்றவுடன், மாநில அரசு, ஒன்றிய அரசுக்கு விரைவில் தெரியப்படுத்த வேண்டும்.

கோவை கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு

அந்த அறிக்கையைப் பெற்றவுடன், ஒன்றிய அரசு, 15 தினங்களுக்குள், வழக்கின் தன்மைக்கேற்ப, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கும். இதுதான் சட்டம். கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடித்த வழக்கில், இந்தச் சட்ட நடைமுறை, எந்தத் தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு, மாநில அரசு, ஒன்றிய அரசுக்கு முறையாக அறிக்கையை அனுப்பி, அதன் பிறகு, வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த வழக்கில், ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே தமிழக முதல்வர் அவர்கள் கோவை கார் வெடிப்பு நிகழ்வை என்.ஐ.ஏ விசாரிக்கப் பரிந்துரை செய்தார். இதில் எங்கே தாமதம் வந்தது... தற்போது திடீரென்று வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப்போவதாக புதுடெல்லி உள்துறை அமைச்சகம் முன்பாகவே எச்சரித்ததாக புகார் கூறுகிறார். இது அபத்தமானது.

அவர் குறிப்பிடுவது, புது டெல்லி உள்துறை அமைச்சகத்திலிருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கை. இதில் கோவைச் சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை. எனவே, இது போன்ற உண்மையில்லாத மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்குக் களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" என அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு தமிழ்நாடு காவல்துறை எதிர்வினை ஆற்றியிருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

காவல்துறையின் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பல கேள்விகளைத் தொடுத்திருக்கிறார். அதில், “கடந்த 23-ம் தேதி நடந்த விபத்து சிலிண்டர் விபத்து இல்லை. இது ஒரு தீவிரவாத சதிச்செயல் என்றும், இதை மேற்கொண்ட நபருக்கு ISIS என்கிற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது என்றும் நான் பதிவிட்டிருந்தேன். இதை தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு மறுக்க முடியுமா?

அக்டோபர் 21-ம் தேதி ஜமேஷா மூபீன் வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். இதை காவல்துறை மறுக்க முடியுமா... இறந்த ஜமேஷா மூபீன் மற்றும் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததைச் சுட்டிக்காட்டினோம். காவல்துறை இதை மறுக்குமா?

கைதுசெய்யப்பட்ட ஐந்து பேர் மீது UAPA சட்டம் பாயாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம். இந்தக் கேள்வி எழுப்பி சரியாக மூன்று மணி நேரத்துக்குப் பின்பு கோவை மாவட்ட ஆணையர் செய்தியாளர்களைச் சந்தித்து புலன் விசாரணையில் பதியப்பட்ட வழக்கின் பிரிவுகள் மாற்றப்பட்டு, சட்டம் போட்டதாகக் கூறினார். இதிலிருந்து தெரியவில்லையா... தங்கள் தலைமையிலான காவல்துறை எப்படி செயல்படுகிறது என்று.

18-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கிய பொதுவான சுற்றறிக்கை என்றும், இதில் கோவைத் தாக்குதல் பற்றி குறிப்பிட்ட எச்சரிக்கை எதுவும் இல்லை என்ற ஒரு சிறுபிள்ளைத்தனமான வாதத்தை பத்திரிகைச் செய்தி வாயிலாக தமிழக காவல்துறை தலைமை முன்வைத்திருக்கிறது. மேலும் 18-ம் தேதி சுற்றறிக்கை தங்களுக்கு 21-ம் தேதி கிடைத்ததாகவும், அதற்கு பிறகு அதன் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். இது ஒரு பொய். 21-ம் தேதிக்கு முன்பே மத்திய உள்துறையின் சுற்றறிக்கை தமிழக காவல்துறைக்கு வந்துவிட்டது என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

கர்நடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதை காவல்துறை மறுக்குமா?

21-ம் தேதி அனைத்து காவல் ஆணையாளர்களுக்கும் காவல்துறை தலைமை அலுவலகத்திலிருந்து பகிரப்பட்ட அறிக்கையில் அசம்பாவிச்த சம்பவங்கள் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதை சுட்டிக்காட்டி போதிய நடவடிக்கைகளை எடுங்கள் என்று குறிப்பிட்டதை மறுப்பீர்களா?

கோவை கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு

அக்டோபர் 23-ம் தேதிக்கு முன்னரே ஜமேஷா முபீன் பற்றிய தகவல்கள் காவல்துறை தலைமை மற்றும் உளவுத்துறைக்கு காவல்துறையில் இயங்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கியிருக்கிறது. 96 நபர்களுக்கு ISIS இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் தனிநபராக திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளது அந்தத் தனிப்பிரிவு. அதில் ஜமேஷா முபீன் 89-ம் இடத்தில் இருக்கிறார். இந்த வருடம், ஜூலை மாதம் 19-ம் தேதி கொடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைக்குப் பின்னரும் ஜமேஷா முபீனைக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வராமல் கோட்டைவிட்டிருக்கிறது தமிழக காவல்துறையின் உளவுத்துறை.

1998-ம் ஆண்டு நடந்த கோவை குண்டுவெடிப்புக்குக் காரணம் தமிழக உளவுத்துறையின் மெத்தனப் போக்கே. சென்ற வாரம் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலுக்குக் காரணம் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களும்,, டிஜிபி சைலேந்திர பாபு அவர்களும்தான். மிதிவண்டி ஓட்டுவதில் காட்டும் ஆர்வத்தைத் தன் பணியில் காட்டியிருந்தால் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது” என்று தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார் அண்ணாமலை.

தொடர்ந்து திமுக தரப்பில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தி, “தினம்தோறும் தனக்கு அறிக்கை வேண்டும் என்ற முறையில் தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக தினமும் அறிக்கை விட்டுக்கொண்டு ஒரு கோமாளித்தனமான நடவடிக்கையில் அண்ணாமலை இறங்கியிருக்கிறார். கார் வெடிப்பில் அண்ணாமலை அரசியல் செய்கிறார். அவரின் அறிக்கை காவல்துறையைக் களங்கப்படுத்துவதாகவும், காவல்துறையைக் கொச்சைப்படுத்துவதாகவும் இருக்கிறது. கோவையில் 23-ம் தேதி காலை 4 மணிக்கு விபத்து நடந்ததாகச் சொல்லப்படும்போது முதலில் போய் அந்த எரிந்த காரை கைப்பற்றிய காவல்துறை நண்பர் அவர் எந்த சாதி, எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது யாருக்குமே தெரியாது. தன்னுடைய உயிரைப் பணயம்வைத்து தன்னுடைய காவல்துறை வேலையைச் செய்த காவல் அதிகாரிகளை இந்தச் சாதி, இந்த மதம், அதனால் சரியில்லை என்ற உளறல்களை அண்ணாமலை செய்துகொண்டிருக்கிறார்” எனக் கூறினார்.

ராஜீவ் காந்தி - தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர்
ராஜீவ் காந்தி - தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர்

மேலும் ``உண்மையிலேயே மக்கள்மீது அக்கறை இருந்தால் பாபர் மசூதி இடிப்புக்கு பின்பு கோவைப் பகுதி மத அடிப்படைவாதிகளுடைய ஓர் இக்கட்டான நிலைக்கு ஆளான பின்பு ஓர் அரசியல் கட்சியாக ஒரு சம்பவம் நடந்தால், அந்த மக்களிடம் போய் விளக்க வேண்டியதும், மக்கள் சமூக நல்லிணக்கம் பெற இணக்கமான சூழலைக் கொண்டு ருவதுதான் அரசியல் கட்சியின் வேலை. ஆனால் அதற்கு மாறாக கோமாளித்தனமாக பந்த் நடத்துகிறோம், யாரும் தொழில் செய்யாதீர்கள், கடையைத் திறக்காதீர்கள் என்றால், இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில் சென்னைக்கு அடுத்து வளர்ந்து வரக்கூடிய தொழில் நகரமான கோவையில் இனிமேல் யாரும் தொழில் செய்யாதீர்கள் என்பதைப்போல் கோவையை எப்போதும் தங்களது வாக்குவங்கி அரசியலுக்காகப் பதற்றமாக வைத்திருக்கக்கூடிய அண்ணாமலை போன்ற அரசியல் அனுபவம் இல்லாதவர்களுடைய செயல் மிகவும் வெட்கக்கேடானது” என்று விமர்சித்திருக்கிறார். இப்படி, கோவை கார் வெடிப்பு விவகாரத்தில் அண்ணாமலை Vs திமுக, காவல்துறை என விவகாரம் இன்னும் சூடாகவே தொடர்கிறது..!