கடந்த மார்ச் 7-ம் தேதி மதுரை விமான நிலையத்துக்கு வந்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக மட்டும்தான் பாஜக இருக்கிறது, உருவாக்குவதற்கு இல்லை. `பாஜக 420 கட்சி’ எனக் கூறுவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது. ஏப்ரல் 14-ம் தேதி நான் சொன்னபடி தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ரிலீஸ் செய்யப்படும். இரண்டு லட்சம் கோடிக்கு மேல் திமுக அமைச்சர் ஊழல் பட்டியல் வெப்சைட் போடுவோம். அதைப் பார்த்த பிறகு 420 யார் என்பது பற்றிப் பேசுவோம்” என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே ஏப்ரல் 14-ம் தேதி அண்ணாமலை சொன்னபடி பட்டியல் வெளியிட வாய்ப்பில்லை என்கிறார்கள் சிலர். அதன் காரணம் என்ன என்பது குறித்து பாஜக-வின் மூத்த தலைவர்கள் சிலரிடம் பேசினோம். ``கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான இணைப் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதிலிருந்து, பெரும்பான்மையான நாள்கள் தமிழ்நாட்டில் இருப்பதைவிட கர்நாடகாவில்தான் இருக்கிறார். இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மட்டுமே பாஜக வெளிட்டிருக்கிறது. அந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கே பல்வேறு சிக்கல்கள், பலரைச் சமாதானம் செய்யவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. ஏனென்றால், ஏற்கெனவே இருந்த நிர்வாகிகளுக்கு பதில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட புதியவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
அதோடு கர்நாடகாவில் பொம்மை அரசுக்கு எதிராக `ஊழல்’ பெயர் ஏற்பட்டிருப்பதால், இந்தத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் ஊழலற்றவர்களாகவும், துடிப்புடன் செயல்படுபவர்களாகவும், வாரிசு அரசியலில் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்று கவனம் செலுத்தப்பட்டது. இதானாலேயே பிரதமர் மோடி சென்னைக்கு வந்திருந்தபோதுகூட அண்ணாமலை வர முடியாத நிலை ஏற்பட்டது. அடுத்து இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்க வேண்டியிருக்கிறது. அதற்காக தேசியத் தலைமையுடனான ஆலோசனையில் இருக்கிறார் அண்ணாமலை. இதெல்லாம் முடிந்து இன்று மாலை நான்கு மணிக்கு சென்னைக்கு வருவதாக இருந்தார். ஆனால், வரவில்லை...” என்கிறார்கள்.
அண்ணாமலை இன்று மாலை சென்னைக்கு வராததற்கு வேறொரு காரணம் சொல்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில். “முன்னாள் குடியரசுத் தலைவரான வெங்கைய நாயுடு வருடா வருடம் யுகாதியை முன்னிட்டு டெல்லியிலுள்ள தன் இல்லத்தில் விருந்து ஒன்றை நடத்துவார். அதில் பாஜக முக்கியப் பிரமுகர்கள், கூட்டணிக் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பிற கட்சிப் பிரமுகர்களை அழைப்பார். பிரதமர் மோடி முதல் பலர் பங்கேற்றிருக்கிறார்கள். அதே ஃபார்முலாவை இப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பின்பற்றுகிறார். அதன்படி தமிழ்ப் புத்தாண்டு திருவிழாவை ஏப்ரல் 13-ம் தேதி டெல்லி காமராஜர் லேன், எண். 1-ல் அமைந்திருக்கும் தனது இல்லத்தில் நடத்தவிருக்கிறார்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தமிழகத்திலிருந்து சென்று பணியாற்றும் ஆளுநர்கள், முக்கிய பாஜக பிரமுகர்கள், அதிமுக பிரமுகர்கள், எம்.பி-க்கள் எனப் பலருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் எல்.முருகன். அழைப்பின் பேரில் பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா ஆகியோர் நிகழ்வில் பங்கேற்கிறார்கள் எனச் சொல்லப்படுகிறது. சென்னைக்கு மோடி வந்திருந்தபோது அண்ணாமலை இல்லாதது பேசுபொருளாக மாறிய நிலையில், நாளை (ஏப்-13) டெல்லியில் எல்.முருகன் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்கிறார். எனவேதான் இன்று மாலை சென்னைக்கு வருவதாக இருந்த அண்ணாமலை வரவில்லை” என்கிறார்கள்.

“கர்நாடகத் தேர்தல், டெல்லியில் ஆலோசனை என பிஸியாக இருந்தாலும், அண்ணாமலை சொன்னபடி வரும் 14-ம் தேதி கமலாலயத்தில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை நிச்சயமாக வெளியிடுவார்...” என்கிறார்கள் அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம், 14-ம் தேதி வரை.